ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடு தோல்வியடைந்துள்ளமைக்கு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான கொரோனா தடுப்பு செயலணியே பிரதான காரணம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டுமெனின், கொரோனா செயலணியிடம் இருந்து அந்த கடமைகளை அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,டெல்டா இன்று உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இன்று நாம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளோம்.
மக்கள் இன்று வைத்தியசாலைகளில் இருக்கின்ற நிலை கவலைக்குரியது. கொரோனா தொற்று தடுப்பு செயலணி இருக்கும் வரையில் நாம் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்.
ஆகவே அமைச்சரவை இதனை பொறுப்பேற்று குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்த குழுவிற்கு நாமும் உதவுகின்றோம்.
எமக்கு கொரோனாவிற்கு சிகிச்சையளிப்பதற்காக புதியதொரு ஒதுக்கீடு ஒன்றை மேற்கொள்ள முடியாதா? கொள்முதல் கொள்கையொன்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
இறுதியில் அரச கணக்கு குழுவே இது தொடர்பில் ஆராயும். தாமதிக்காது மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். இறுதியில் வந்து ஒதுக்கீடு தொடர்பில் பேச வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.