நாற்பதாண்டுக்கு மேலாக இறை இல்லச் சேவை

நாற்பதாண்டுக்கு மேலாக இறை இல்லச் சேவை

1981ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எம்.ஹனிபா அவர்கள் எழுதிய கட்டுரையை மீள் பதிவேற்றுவதில் பெருமையடைகின்றோம்.
ஆசிரியர்.கல்ஹின்னை டுடே  


அறம் செய விரும்பு என்ற ஒளவையாரின் ஆணையை, நன்றாக உணர்ந்திருந்த முன்னைய கால முஸ்லிம் மக்கள், பள்ளிவாசல்களை அமைப்பதில், அதிக சிரத்தை காட்டினர். 

அவற்றின் பராமரிப்பிற்காக, பல கட்டிடங்கள், காணிகளை அன்பளிப்புச் செய்துள்ளனர். 

இந்தப் பின்னணியில், கண்டிக்கு அருகிலுள்ள கல்ஹின்னையில், சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஓலையால் கட்டப்பட்டிருந்த சிறிய பள்ளிவாசலை, அளவில் பெரிதாக்கி நிரந்தரக் கட்டடமும் அமைப்பதற்கு அரும் பாடுபட்டவர் ஆதம்பிள்ளை மகன் உமர் லெப்பை ஹாஜியார். 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அவர் இந்த அரும்பணியைச் செய்தார்.

அக்குறணையிலிருந்து முதன் முதலில் கல்ஹின்னை சென்று குடியேறிய வாப்புக்கண்டு என்பவரின் மகளை மணமுடித்த முஹம்மது காஸிம் என்பவரின் மகன்தான் ஆதம்பிள்ளை. முஹம்மது காஸிம் என்பவர். 

கல்ஹின்னையில் குடியிருக்கவில்லை. திருமணம் செய்து கொண்ட பின்னர், மீண்டும் கண்டிக்கருகிலுள்ள நித்தவெலயில் அவர் குடியேறினார், அவரின் மகனான ஆதம்பிள்ளை , அங்கிருந்து கல்ஹின்னையை அடுத்துள்ள ரம்புக்எல எனும் கிராமத்தில் வசித்து வந்தவரும் வாப்புக் கண்டுவின் தம்பியுமான இஸ்மாயில் கண்டு அடப்பனாரின் மகள் ஹலீமாவை மணமுடித்தார். இவர்களுக்கு ஆறு ஆண்களும், ஒரு பெண்ணும் இருந்தனர்.

ஆதம் பிள்ளையின் மூன்றாவது மகன் உமர் லெப்பை இவர் 1837ம் ஆண்டளவில், பிறந்தார். மரியம் பீவி என்பவரைத் திருமணம் செய்து, கல்ஹின்னைப் பகுதியில் முதன் முதலில் கடை ஒன்று திறந்ததனால் “கடே முதலாளி'' எனும் சிறப்புப் பெயரும் பெற்று. வாழ்ந்தார். 

முதன் முதலில் 1889ம் ஆண்டில் ஹஜ்ஜுக்குச் சென்றார். இரண்டாவது முறை 1923ம் ஆண்டில் ஹஜ்ஜுக்குச் சென்றபோது, தனது எண்பத்தாறாவது வயதில் மக்காவில் காலமானார்.

ஆதம்பிள்ளையின் முன்றாவது மகனான உமர் லெப்பையின் மூன்றாவது மகன் முஹம்மது ஷரீப், கல்ஹின்னைக்கு அரும்பணி புரிந்த பெருந்தகை இவர் காலமாகி ஓராண்டு பூர்த்தியாகி விட்டது. 
1900ம் ஆண்டில் தந்தை முதல் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்த சமயம் பிறந்த இவர், ஹிஜ்ரி 1400 துல்கஃதா மாதம் 27ம் பிறையன்று (7 10-1980) இறையடி சேர்ந்தார்.

கல்ஹின்னையிலிருந்து இரண்டரை மைல் தூரத்தில் உள்ள அங்கும்புரை சிங்களப் பாடசாலையில் தனது தம்பிகளான ஸாலி லெப்பை, ஹுஸைன் லெப்பை ஆகியோருடன் 1916ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதியிலிருந்து சிங்களம் படித்தார். 

நாலைந்து வருடகாலம் சிங்களம் படித்த பின்னர் பாடசாலைக்குப் பிரியா விடை சொல்லி விட்டு, வியாபாரத்தில் இறங்கினார்,

கல்ஹின்னையில் அக்காலத்தில் தமிழ்ப் பாடசாலை இருக்கவில்லை. குர்ஆன் ஓதுவதற்கு மாத்திரம் சில பெரியார்கள், தமது வீடுகளில் பாடம் சொல்லிக் கொடுத்து வந்தனர். 

அத்துடன், மார்க்க அறிவையும் போதித்தனர். தமிழ் படிக்க விரும்பியவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டுப் படிக்க வேண்டிய நிலை அப்பொழுதிருந்தது. 

இவர், தனது மூத்த சகோதரரானஏ, ஓ. எம். காஸிம் லெப்பை ஹாஜியார் அவர்களிடம் கேட்டு தமிழைப் படித்தார்.

வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், மார்க்கத்தின் முறைப்படி நடப்பதில் அதிக கவனம் செலுத்திய இவரை, சிறிய தந்தையான அலி உதுமா லெப்பை பல காலமாக அவதானித்து வந்தார்.

கல்ஹின்னையின் முதலாவது கிராமத் தலைலர் (ஆரச்சியார்) பதவியை வகித்துவந்த அலி உதுமா லெப்பைதான், ஊர்ப் பள்ளிவாசலின் நம்பிக்கைப் பொறுப்பாளர் (மத்திசம்) ஆகவுமிருந்தார். 

தனக்கு வயதாகி வருவதால் இந்தப் பொறுப்பைக் கொடுப்பதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேடுவதில் அவர் கவனம் செலுத்தியபோது, ஷரீப் லெப்பையின் சமய ஈடுபாடு அவரைக் கவர்ந்தது . 

1936ம் ஆண்டின் மிஹ்ராஜ் கந்தூரியைப் பள்ளிவாசலில் நடத்தும், பொறுப்பையே முதலில் இவருக்குக் கொடுத்தார். 

அதன் பின்னர், இவரின் திறமையைக் கண்ட சிறிய தந்தை, சற்றுச் சற்றாகப் பொறுப்புகளை அவரிடமே சாட்டினார். 

இறுதியில் 1958ம் ஆண்டு, முழுப் பொறுப்பையும் இவருக்குக் கொடுத்து விட்டு, சிறிய தந்தை ஓய்வெடுத்தார். அதே ஆண்டில் கல்ஹின்னையின் முஸ்லிம் விவாகப் பதிவுகாரராகவும் நியமனம் பெற்ற ஷரீப் லெப்பை, ஊர் மக்களால் ‘காதியார்' என அழைக்கப்பட்டார். 

அன்றிலிருந்து, இன்றுங் கூட அவர் வீடு 'காதியார் வீடு' என்றும் அவரின் பிள்ளைகள் 'காதியார் மகன் அல்லது மகள்' என்றும்தான் அழைக்கப்படுகின்றனர். விவாகப் பதிவுக்காரர்தான் காதியார் வேலை பார்ப்பவரும் என்ற தப்பு அபிப்பிராயத்தினால், மக்கள் அவருக்கு இந்த கௌரவமான பட்டத்தைச் சூட்டினர்.

இரு பதவிகளையும் பொறுப்பேற்ற நாளிலிருந்து, காலமாகும் வரை அவர் மிகத் திறம்படச் செய்து வந்தார். 

ஊர் நிர்வாகம் அவர் ‘மத்திசம்' வேலை பார்த்த காலத்தில் எவ்வளவு சிறப்பாக நடந்தது என்பதை மதிப்பிடுவதற்கு. ஊர் மக்களின் கூட்டம் ஒன்றில் ''அவரே ஆயுள்கால நம்பிக்கைப் பொறுப்பாளராய் இருத்தல் வேண்டும்" என்று தீர்மானிக்கப்பட்டதொன்றே போதும்.

'பள்ளிவாசலின் வருமானம் போதாது, அங்கே குறை, இங்கே குறை! என்றெல்லாம் சிலர் சில சமயங்களில் அவர் மீது பழி சுமத்திக் கொண்டிருந்தனர். அப்படிக் குறை கூறிய கோஷ்டியில் ஒருவரே கூட்டத்தில் எழுந்து, “ஷரீப் ஹாஜியார்தான் ஆயுள்காலத் தர்மகர்த்தாவாய் இருத்தல் வேண்டும். அவரைப்போல், எங்கள் ஊர் நிர்வாகத்தில் யாருமே அளப்பரிய சேவை செய்தவர்கள் இல்லை'' என்று உரத்த தொனியில் கூறியபோது, சபையிலிருந்த பலரின் 
கண்களில், (நானுட்பட) கண்ணீர் மல்கியதை நான் கவனித்தேன். 

இறுதிக் காலத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சமயம் அவரின் கடமைகளைச் சரிவரச் செய்வதற்கு மூத்த மகன் டாக்டர் எம். எஸ். எம். ஜுனைதீன், இரண்டாவது மகன் எஸ். எம். தாஜிதீன் ஹாஜியார், ஆகிய இருவரும் பக்க பலமாய் இருந்து உதவினர். 

அவர் காலமாவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு பள்ளிவாசல் கடமைகளைப் பார்ப்பதில் கவனம் செலுத்திய மூன்றாவது மகனான அல்ஹாஜ் அப்துல் அஸீஸ், தொடர்ந்து தந்தையைப் போல் பள்ளி வாசல் நிர்வாகத்தைச் செய்து வருகிறார்.

முதலில், 1948ம் ஆண்டில் ஹஜ்ஜுக்குப் போன மர்ஹூம் ஏ ஓ. எம். ஷரீப் லெப்பை, இரண்டாவது முறை 1978ம் ஆண்டில் பாரியாருடன் சென்றார். 

1961ம் ஆண்டில் சமாதான நீதவானாக அவர் நியமிக்கப்பட்டார். எல்லா நிலைகளிலும் அவர் ஊர் மக்களுக்கு உதவிகள் செய்து, தவறான வழிகளில் செல்ல முனைபவர்களை நல்வழிப்படுத்தி வந்துள்ளார், 

வெளியூர்களில் இருந்து, “குமர் காரியம்” என்றும் ஏனைய காரணங்களைச் சொல்லிக் கொண்டும் வந்த அனைவரும், அவரைக் 
கண்டு உதவி பெற்று. திருப்தியுடனேயே செல்வர். 

அப்படியான காரணங்களுக்காக அவர் ஊர் மக்களுக்கும் பண உதவி செய் துள்ளார். கல்ஹின்னைக்கு வெளியில் அவர் பெற்றிருந்த செல்வாக்கிற்குச் சான்று பகரும் வகையில், அவரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்கு கண்டி, மாத்தளை, அக்குறணை, குருநாகல் போன்ற பற்பல இடங்களைச் சேர்ந்தவர்கள் கூடி, கல்ஹின்னையில் என்றுமே காணாத பெருந்தொகையான மக்கள் 
திரண்டிருந்தனர். 

அவரின் அரும்பணிகளை அங்கீகரித்து, அவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக 

(நன்றி . தினகரன் 25-10-1981)


Post a Comment

Previous Post Next Post