மீட்டப்பட வேண்டிய கல்ஹின்னையின் வரலாற்றுத் தடயங்கள்!

மீட்டப்பட வேண்டிய கல்ஹின்னையின் வரலாற்றுத் தடயங்கள்!


கண்டி மாவட்டத்தில் ஹாரிஸ்பத்துவத் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள விசாலமான கல்ஹின்னைக் கிராமம் சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.

1880ல் 80 பேர்களை மாத்திரமே கொண்டிருந்த இக்கிராமம், 1901ல்  310 பேர்களையும், 1921ல்  557 பேர்களையும் கொண்டதாக இருந்து, இன்று பல ஆயிரம் பேர்களைத் தன்னகத்தே கொண்டு சகல துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ள கல்ஹின்னைக் கிராமத்தில்,1750களைத் தொடர்ந்த காலப்பகுதியில் ‘உமறு மரைக்கார் அடப்பனார்’ குடும்பத்தவர்களே முதலில் குடியேறியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மாத்தளை உள்பத்தப்பிட்டியிருந்து முஹந்திரம் ஆதம்பிள்ளை மற்றும்  வாப்புக்கண்டு  குடும்பத்தினரும் குடியேறியதாகவும்  அறிய முடிகின்றது.  

வாப்புக் கண்டு அடப்பனார்
கல்ஹின்னை வந்த வரலாறு 

17ம் நூற்றாண்டளவில், அரபு நாட்டிலிருந்து வியாபார நோக்காக இலங்கையில் வந்து, கண்டியில் குடியேறிய நால்வரில் ஒருவரான  உமறு மரைக்கார் அடப்பனார் அக்குறனையில் 'முதுனை' என்னுமிடத்தில் வசித்து வந்தார். 

காலம்செல்ல, இவரின் மூத்த மகன் வாப்புக் கண்டு அடப்பனார் என்பவர் கல்ஹின்னையிலும், அவரது தம்பி இஸ்மாயில் கண்டு அடப்பனார் பக்கத்து ஊரான ரம்புக்எல என்னும் இடத்திலும்  குடியேறியுள்ளனர். 

சில காலத்தின் பின்னர், இஸ்மாயில் கண்டு அடப்பனார்  தனது மூத்த மகன் தம்பி லெப்பையை கல்ஹின்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். 

உமறு மரைக்காரின் நாலு பிள்ளைகளில் மற்ற இருவரும் அக்குரணையிலேயே குடியிருந்து விட்டனர். 

இவர்களில் ஒருவர் அலி உதுமான். அலி உதுமானின் மகன் அஹமது லெப்பை என்பவராவார். 

உமறு மரைக்கார் அடப்பனாரின்  மகன்களில் இன்னொரு மகன், சுலைமான் லெப்பை என்றும் இவர் கசாவத்தை ஆலிம் அப்பா என்று புகழ்பெற்ற மார்க்க மேதையும், இலக்கிய அறிஞருமான ஷெய்க் முஹம்மது லெப்பை அவர்களின் தகப்பனாரான அஹமது லெப்பையின் தந்தையாகும் என்பதை அறிய முடிகின்றது. 

1877ல் பிறந்து,1968ல் மறைந்துள்ள முஹம்மது லெப்பையின் மகனான அப்துல் மஜீத் ஆலிம் எழுதி வைத்திருந்த சரித்திரக் குறிப்புகளில்  இத்தகவல்கள் இருந்ததாக கல்ஹின்னை பற்றிய வரலாற்று நூல் குறிப்பிடுகின்றது.

கானகமாயிருந்த கல்ஹின்னைக்கு  வாப்புக் கண்டு அடப்பனார் வந்து குடியேறியிருக்கக் காரணம் இங்கு, அமைதியாக இருந்து விவசாயம் செய்து முன்னேறலாம் என்ற நோக்கத்துடனாக இருந்திருக்கலாம் என ஊர் வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் குறிப்பிடுகின்றனர். 

இவர் சுமார் 1760ல் பிறந்து 1790 அளவில் கல்ஹின்னையில் குடியேறி 60 வருடங்கள் வாழ்ந்து,1850 அளவில் காலமாயிருக்கலாம் எனவும்  ஊகிக்கப்படுகின்றது. வாப்புக்கண்டு அவர்கள் பெரும் பலசாலி என்றும், ஒருகால் ஊனமாயிருந்ததால்தான்
"நொண்டி அப்பச்சி" என அழைக்கப் பட்டதாகவும் அறிய முடிகின்றது. 

இவர், இக்கிராமத்துக்கு, ஆங்கிலேயர் கண்டி மாநகரை 1815ம் ஆண்டில கைப்பற்றுவதற்கு ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்பே குடியேறி இருந்துள்ளார் என்பற்கு பழைய முதியோரின் கூற்றுகள்  சான்று பகர்கிறதன. 

இவருக்கு ஏழு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் ஐவர் பெண்களாவர்.நான்கு பெண்களை முறையே, வடபுளுவையைச் சேர்ந்த காஸிம் பிள்ளை, கம்மன்ஜை என அழைக்கப்பட்ட உதுமான் பிள்ளை, 'வாத்தியார்' என்று அழைக்கப்பட்ட அப்துல் ஜப்பார், ஹல்கொல்லையைச் சேர்ந்த மீரா  கண்டு என்போர் திருமணம் செய்து கொண்டதன் மூலம்   இக்கிராமத்தைத் தங்களின்  இருப்பிடமாக்கிக் கொண்டனர். 

மற்றப் பெண்பிள்ளையை குருநாகல் பகுதியிலுள்ள 'தோறயாய' என்ற ஊரிலிருந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.   அவர்களின் மகன்களில்  ஒருவரான, பகீர் என்பவர் கல்ஹின்னையில் வந்து திருமணம்   செய்துள்ளார்.
முதற் குடிமகனான வாப்புக்கண்டு அவர்களின் வழித்தோன்றல்களில் முதலாவது ஆண் பிள்ளையான மீராக்கண்டுவின்  சந்ததியினர்தான் இன்று கல்ஹின்னையில் பெருகி வாழ்கின்றனர். 

மற்ற ஆண்பிள்ளை நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்து, திருமணமாகாமலே காலமாகிவிட்டார்! 

வாப்புக்கண்டு பிள்ளையின் இரண்டாவது மருமகனான அப்துல் ஜப்பார் நாகூரைச் சேர்ந்தவர். இவர் கல்ஹின்னையில் வாழ்ந்தவர்களுக்கு, தமிழ் கற்றுக் கொடுத்தபடியால் இவரை வாத்தியார் என அழைத்தபோதிலும்,"வைத்தியலா கெதற" என்ற அடைமொழிகொண்டே இவர்களின் பரம்பரை  அழைக்கப்பட்டு வந்துள்ளது. இவர் "சாவென்னா முதலாளி"யின் பாட்ட,னாராவார் என்று கல்ஹின்னை பற்றிய வரலாற்று நூல் குறிப்பிடுவதால், இவரது தந்தையே முகம்மது அலிபாவா என்று ஊகிக்க முடிகின்றது.

முதலாவது கதீப்: 
அலித்தம்பி
மாத்தளை- உள்பத்தப் பிட்டிய கிராமத் திலிருந்து இங்கு வந்து குடியேறிய உள்பத்தப்பிட்டிய முஹாந்திரம்லாகெதர ஆதம் பிள்ளையின் இளைய மகன் அலித்தம்பி அவர்கள் கல்ஹின்னைப் பள்ளிவாயிலில் முதலாவது கதீபாகக் கடமை புரிந்துள்ளார்.

அல்மனார் தேசியப்படசலை
கல்ஹின்னை அல்மனார் தேசியப்படசலை

1934 ல் “கமாலியா”  என்ற பெயரில் முஸ்லிம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதானது, கிராமத்தின் கல்வி வரலாற்றின் தொடக்கமாகக் கொள்ளப்பட வேண்டிய காலப்பகுதியாகும்.

இப்பாடசாலை பின்னாளில் முஸ்லிம் வித்தியாலயமாக மாறி, அதன் பின்னர் அல்மானார் மகா வித்தியாலயமாக உருப்பெற்று, தற்போது அல்மனார் தேசியப்படசலை”யாக எழுச்சி கண்டு, தனது 90வது வருட நினைவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது!

இந்தத் தொண்ணூறு வருடங்களில், பாடசாலையானது துறைசார் நிபுணர்கள் பலரையும், அறிஞர்களையும், இலக்கியவாதிகளையும், வர்த்தக ஜாம்பவான்களையும்  உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், கிடைக்கப்பெற்ற தகவல்களைக்கொண்டு, கல்ஹின்னையில் முதலாவது அடைவைப் பெறுகின்றவர்கள் பற்றிய தொகுப்பு இதுவாகும்!

மத்ரஸத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரி

1949ல் “அல் - மத்ரஸத்துல் பாத்தாஹ் என்ற பெயரில் கல்ஹின்னையில் ஆரம்பிக்கப்பட்ட அரபுக் கல்வி நிறுவனம், கிராமத்தின் அரபு - இஸ்லாமியக் கல்விக்கான அடித்தளமாகக் கொள்ளப்படுவதோடு, இன்றுவரையும் இக்கல்வி நிறுவனம்  பலநூறு மார்க்க அறிஞர்களை  உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்!  

முதலாவது கல்விமான்
காலஞ்சென்ற  A. O. M. ஹுசைன்
கல்ஹின்னையின் முதலாவது கல்விமானாக 1907ல் பிறந்து 1990ல் காலஞ்சென்ற  A. O. M. ஹுசைன் அவர்கள் கொள்ளப்படுகின்றார். இவர் தனது ஆரம்பக் கல்வியை அங்கும்புறை  சிங்கள மொழிப்பாடசாலையில் கற்று, 1921ல் ஆங்கில மொழி மூலக்கல்வியைப் பெரும் நோக்கில் புனித தோமையர் கல்லூரிக்குச் சென்றுள்ளார். 1928ல்  பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான கல்ஹின்னையின் முதல் மாணவர்  இவரேயாவார். அதன் பின்னர் சட்டக்கல்லூரியில் இணைந்து கற்ற அவர், 1933ம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அன்னாரைத் தொடர்ந்து காலத்துக்குக் காலம் துறைசார் கல்விமான்கள் பலரை கல்ஹின்னை மண்  உருவாக்கி வந்துள்ளது!

பெண் சட்டத்தரணி
ஜனாபா ஸஸ்னி நசீர்
தொடர்ந்து வந்த காலங்களில்  சட்டத்தரணிகள் பலர் கிராமத்தில் உருவானபோதிலும், ஜனாபா ஸஸ்னி நசீர் கடந்த 2019ல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் கல்ஹின்னையின்  முதல் 'பெண் சட்டத்தரணி' என்ற பெருமையைப் பெறுகின்றார்!

இவர் ஆரம்ப வகுப்பு முதல் உயர்தரம் வரை  கல்ஹின்னை அல்மனாரிலேயே கற்றவர்  என்பதும்; அல்மனாரில்  கற்று, திறமையாகச் சித்தியடைந்து, பல்கலைக்கழகம் நுழைந்து, கணக்காளர்களாகி, தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்துவரும் முகம்மது சப்ராஸ், முகம்மது சப்ரான்  ஆகியோரின் சகோதரியுமாவார்.

வைத்தியக் கலாநிதி 
 M.C.M. ஸுபைர்
கல்ஹின்னையின் முதலாவது வைத்தியக் கலாநிதிப் பட்டம் பெற்ற ஜனாப்
M. C. M. ஸுபைர் அவர்கள், பிரசித்தி பெற்ற மகப்பேற்று வைத்திய நிபுணராவார்.

1935ல் பிறந்த இவர், பிரித்தானியாவில் வைத்தியக் கலாநிதிப்பட்டம் பெற்ற பின்னர் அங்கேயே சில காலமும், லிபியாவில் சிலகாலமும் பணியாற்றிவிட்டு   இலங்கை வந்து, தான் மரணிக்கும் வரை கண்டி “சுவசெவன”வில் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.  

கல்ஹின்னையின் முதலாவது 
இரசாயனப் பொறியியலாளரும்,
முதலாவது கலாநிதியுமான 
முஹம்மது அமீர் செய்னுதீன்!


கல்ஹின்னைத் தமிழ் வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கிய ஜனாப் அமீர் செய்னுதீன், மாத்தளை ஸாஹிராக்கல்லூரி, கட்டுகஸ்தொட்டை புனித அந்தோனியார் கல்லூரி போன்றவற்றிலும் கற்று, இறுதியாகக் கொழும்பு சாஹிராக் கல்லூரியில்  கற்று உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தினார்.

1967, செப்தெம்பர் மாதம் ஐக்கிய இராஜியம் நோக்கி தனது கல்விப்பயணத்தை மேற்கொண்ட  முஹம்மது அமீர் செய்னுதீன், அக்காலை  கல்ஹின்னையிலிருந்து ஐக்கிய இராஜியம்  நாடிச்சென்ற விரல்விட்டெண்ணக் கூடியவர்களுள் ஒருவராகவிருந்தார்.

ஒக்டோபர் மாதம் பெர்க்கென்ஹட் தொழில் நுட்பவியல் கல்லூரி (Birkenhead College of Technology) யில் சேர்ந்து தனது  கற்கை நெறியைத் தொடர்ந்த முஹம்மது அமீர் அவர்கள், இரசாயனப் பொறியியலில் பட்டத்தைப் பெற்றுக்கொண்டதன்  மூலம் கல்ஹின்னையின் முதலாவது இரசாயனப் பொறியியலாளரானார்!

பின்னர் பர்மிங்ஹாம்  பல்கலைக் கழகத்தில் (University of Birmingham) தனது கல்விப்பயணத்தைத் தொடர்ந்த அவர், 1972ல் உயிரியல் இரசாயனத்தில் (MSc. In Bio-Chemical Engineering) தனது முதுமானிப் பட்டத்தைப் பெற்றார். 

அதன் பின்னர், ஐக்கிய இராஜியத்தில் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் 
(University of Manchester Institute of Technology- UMIST) இணைந்து ஈராண்டுகால கடுமையான ஆய்வில் ஈடுபட்ட அவர், 1974 திஸம்பர் மாதத்தில் பொறியியல்துறையில் “கலாநிதி”ப் பட்டத்தைப் பெற்றார்.

கலாநிதி மொஹமத்  அமீர் செய்னுதீன் ஐக்கிய இராஜியம், பஹமாஸ்,  ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலுள்ள பல்தேசிய மருந்து தயாரிப்புக் கம்பனிகளில் ஆய்வு மற்றும் அபிவிருத்தித்துறைகளில் முகாமைத்துவ நிலையில் பணிபுரிந்துள்ளார்.

அவரது தூரதிருஷ்டியான கல்விப்பயணம், நீண்டகால துறைசார் அனுபவம், அர்ப்பணிப்புடனான தொழில்சார் பங்களிப்பு காரணமாக, அவர்  2000ம் ஆண்டில் ஐக்கிய இராஜியத்தின்  இரசாயனப் பொறியியல் நிறுவகத்தில் (FIChemE) கௌரவ உறுப்பினராகத் தெரிவானார்.

தனது 34 வருடகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின்னர், 2001ல் தாய்நாடு திரும்பிய அவர், இலங்கைப் பொறியியலாளர் 

நிறுவனத்தில் (FIE) கௌரவ உறுப்பினராகத் தெரிவானதோடு, ஐக்கிய அமெரிக்காவின் பல்தேசிய நிறுவனமான Honeywell மருந்தகப்பிரிவின் நிபுணத்துவ ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

2002 நவம்பர் மாதத்தில் அவர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினராக அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக அம்மையாரால் நியமனம் பெற்றார்! 2006ம் ஆண்டுவரை அப்பணியைத் தொடர்ந்த அவர்,  இந்திய , நைஜீரிய, வட அயர்லாந்து, தாய்லாந்து, பீஜி போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் இலங்கை மனித ஆணைக்குழுவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார். 

தான் இங்கிலாந்தில் வாழ்ந்த காலத்தில் 1988ல் Lions Clubல் இணைந்துகொண்ட அவர், பஹாமாஸ் நாட்டில் வாழ்ந்த காலத்திலும் (1997-1998) பஹாமாஸ் பிரீபோர்ட் அரிமா சங்கத்தின் (Bahamas Freeport –Lion’s Club) தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். 

கொழும்பு Lion’s Clubஇல் தலைவராகப் பணிபுரிந்துள்ள அவர், தான் பணிபுரிந்த காலகட்டத்தில் கல்ஹின்னைக் கிராமத்தில் பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியிலும் அவர் மேற்கொண்ட இரண்டு பாரிய வைத்திய முகாம்களில் (2004,2009) சுமார் ஆயிரம் பேர்கள் கலந்து கொண்டு பலன்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது!

தற்போது 76 வயதைத் தொட்டுள்ள மூன்று பிள்ளைகளின் தந்தையான  கலாநிதி அமீர் அவர்கள், கொழும்பில் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது!

வக்ப் சபைத் தலைவர் 
S. M. ஹலீம்தீன்

கல்ஹின்ன
யிலிருந்து முதலாவது தெரிவான வக்ப் சபைத் தலைவராக ஜனாப். S.M. ஹலீம்தீன் கொண்டாடப்படுகின்றார். 
'எட்வகேட்' பரீட்சையில் முதற்பிரிவில் தேரிய முதல் முஸ்லிம் இவரேயாவார்.

“ஹாபிளுள் குர்ஆன்”
மௌலவி M. J. M. முனவ்வர்
கல்ஹின்னையில் முதலாவது “ஹாபிளுள் குர்ஆனா”னவர் மௌலவி M. J. M. முனவ்வர் ஆவார்.

தலைமை ஆசிரியர்/ ஆசிரியர்
ஜனாப் Y. L. M. அசீஸ்
ஜனாப் Y. A. மஜீத்
ஜனாபா ஆயிஷா நாகூர்
ஜனாபா யூ. எல். குறைஷா

கல்ஹின்னையின் முதலாவது தலைமை ஆசிரியர் என்ற பெருமை ஜனாப் Y. L. M. அசீஸ் அவர்களைச் சாரும். முதலாவது ஆசிரியராக ஜனாப் Y. A. மஜீத் அவர்களும், ஆசிரியையாக ஜனாபா ஆயிஷா நாகூர், ஜனாபா யூ. எல். குறைஷா அவர்களும்  கல்ஹின்னை வரலாற்றில் இடம்பெறுகின்றனர்!

வெளிநாட்டுத் தூதுவர் 
 அல்ஹாஜ் H. M. பாரூக்
கல்ஹின்னையின் முதலாவது வெளிநாட்டுத் தூதுவராகக் கடமை புரிந்த பெருமையை அல்ஹாஜ் H. M. பாரூக் அடைகின்றார். 1943ல் பிறந்த இவர், 1983ல் சட்டக்கல்லூரியில் நுழைந்து, 1986ல் அங்கிருந்து சட்டத்தரணியாக வெளியானார்.

2001ல் கென்யாவுக்கான தூதுவராக நியமனம் பெற்றுச் சென்ற இவர்,  அங்கு  நான்கு வருடங்கள்  சேவை செய்துவிட்டு, 2005ல் இலங்கை வந்தார்.
கல்ஹின்னையின் கல்வி, சமூக அபிவிருத்தியில் அதிஈடுபாடு கொண்டு செயற்பட்டுவரும் இவர், தொடர்ந்தும் கண்டி நகரில் சட்டத்தரணியாகப் பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

"தேசகீர்த்தி” 
அல்ஹாஜ் H. சலாஹுதீன்
கல்ஹின்னையின் முதலாவது “தேசகீர்த்தி” விருது பெற்றவர் அல்ஹாஜ் H. சலாஹுதீன் அவர்களாவார். மார்க்க அறிஞரான இவர்  பலநூறு மார்க்க நூற்கள் வெளியிட்டுள்ளார்.

நீண்டகாலமாக கண்டி நகர்  “ஹனபி மஸ்ஜித்”தில் பணியாற்றிய இவர், தற்போது இங்கிலாந்தில் வசித்துவருபவரும் அல்ஹாஜ் கே. அமானுல்லாஹ் அவர்களின் மாமனாரும், கல்ஹின்னையின் அபிவிருத்திக்கு நல்லுதவிகள்  புரிந்துவரும் பிரபல வர்த்தகரான  முஸ்லிம் ஹாஜியாரின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது! 

கணக்களர் 
ஜனாப் H. M. ஹுசைர் 
தனது ஆரம்பக் கல்வியை கல்ஹின்னை அல்மனாரில் கற்று  கல்ஹின்னை வரலாற்றில்  முதலாவது கணக்களராக ஜனாப் H. M. ஹுசைர் இடம் பெறுகின்றார். 

'பெண் பட்டயக்கணக்காளர்' 
ஜனாபா சீனத் நசீம்.
தற்போது கல்ஹின்னை வரலாற்றில் முதலாவது 'பெண் பட்டயக்கணக்காளர்' என்ற பெருமையை   ஜனாபா சீனத் நசீம் பெறுகின்றார்.

கல்ஹின்னை அல்மனாரில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கிய  இவர், கண்டி பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரியில்  உயர்தரக் கல்வியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனமொன்றில்  பணிபுரிந்து வரும்  இவர், கல்ஹின்னையைப்  பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட காமிலா - நசீம் தம்பதியினரின் புதல்வி என்பதோடு, கல்ஹின்னை ஜும்ஆப் பள்ளிவாசல்  இயக்குனர் குழுவில் ஒருவராக குறிப்பிட்ட சிலகாலம் பணிசெய்து மறைந்த ஜவாத் ஹாஜியாரின் பேத்தியுமாவார். 


கல்ஹின்னையின்
முதலாவது  உப தபால் அதிபர் 
மர்ஹூம் எம்.சீ.எம். சஹாப்தீன்
1952-ம் ஆண்டில் கல்ஹின்னையில்  தபால் நிலையம் திறந்து வைக்கப்பட்டபோது அதன் முதல் உப தபால் அதிபராக  மர்ஹூம் எம்.சீ.எம். சஹாப்தீன் அவர்கள் பதவியேற்றார்கள்.

01.06.1929ல் பிறந்த இவர், மாத்தளை  புனித தோமையர் கல்லூரியில் ஆங்கில மொழியில் கற்றவராவார். இவர் உப தபால் அதிபராகப் பணி புரிந்த காலப்பகுதியில் ஏனைய ஊர்களில் உப தபால் அதிபராகப் பணி புரிந்தவர்கள் சிங்கள மொழியில் தமது அரச அலுவல்களை மேற்கொண்டபோது கண்டி மாவட்டத்திலேயே ஆங்கில மொழியில் தமது கடமைகளைச் செய்தவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 45 வருடங்கள் உப தபால் அதிபராக பணியாற்றிய இவர்,  1994ம் ஆண்டு தனது  பணியிலிருந்தும் ஓய்வு பெற்றார்.

இலங்கையில் தொலை தொடர்பு வசதிகள் மிகவும் அரிதாகக் காணப்பட்ட ஒரு காலகட்டத்தில், கல்ஹின்னைக் கிராமத்திற்கான தொலைபேசிச் சேவை தபாலகத்துக்கு மட்டுமே இருந்த நிலையில், பிற இடங்களிலிருந்து தபாலகத்துக்கு வரும் அவசரமானதும், முக்கியமானதுமான  செய்திகளை எந்த சிரமமும் பாராமல், தனது அலுவலக நேரம் முடிந்ததும் குறிப்பிட்ட வீடுகளைத் தேடிப்பிடித்து ஒப்புவிக்கும் நல்லுள்ளம் அன்னாரிடம் இருந்ததை கிராமத்தில் அனைவரும் அறிவர். குறிப்பாக ஜனாஸா செய்திகள் நடுநிசி வேளையில் கிடைத்தாலும் கும்மிருட்டு வேளையிலும் உடனடியாக உறவினர்களுக்கு வீடு தேடிச்சென்று அறிவிக்கும் உயர் பண்பு இவரிடம் இருந்தது.

அக்காலப் பகுதியில் எமதூரிலிருந்தும், அயற்கிராமங்களில் இருந்தும், தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட வெளிநாடுகளுக்கு அதிகமான இளைஞர்-யுவதிகள் தமது உறவுகளைப் பிரிந்து சென்றனர். தற்போது இருப்பதுபோல் ஆளுக்கொரு கைத்தொலைபேசி அக்காலத்தில் இருந்ததில்லை. கல்ஹின்னைக் கிராமத்துக்கான தொலைபேசி இவரின் வீட்டிலேயே இருந்தது. இரவு நேரங்களில் சில நாட்களில் நள்ளிரவு தாண்டியும் சில நாடுகளில் இருந்து தமது உறவுகளின் அழைப்பு வரும் வரை இவரது வீட்டிலேயே பலரும் காத்துத் தவம் கிடப்பது வழமையான காட்சியாகும்!

இவர் கல்ஹின்னையில் ஹுஸைன் ஆரச்சியாரின் மகளான சௌதூன் பீவி என்பவரை மணந்து அழகிய இல்லறம் நடாத்தி வந்தார். முஹம்மத் இம்தியாஸ், முஹம்மத் றிலாஹ், பாத்திமா ஜுமானா ஆகியோர் இத்தம்பதிகளது பிள்ளைச் செல்வங்களாவர்.

இவரது மூத்த மகனான இம்தியாஸ் சில காலம் கண்டி மாவட்ட செயலாளர் அலுவலகத்திலும் மற்றும் அக்குரணை, மினிப்பே, லக்கல பள்ளேகம பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும் பணிபுரிந்து, தற்போது அரச பணியிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.  ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக கல்ஹின்னைக்  கிராமத்தில் கல்விப்பணிபுரிந்து ஓய்வு பெற்ற  மாவனல்லை-உயன்வத்தையைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஷிம் அவர்களின் மகளான ஆசிரியை மர்ஹூமா ஸஹ்தியா  அவர்கள் இவரது துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது!

மர்ஹூம் சஹாப்தீன் அவர்களின் இளைய மகன் முஹம்மத் றிலாஹ் 1999ம் ஆண்டில்,  தொழில் நிமித்தம் சவூதி அரேபியா சென்றிருந்தபோது, விபத்தொன்றில் சிக்கி, தனது இளவயதிலேயே காலமானார். இவரது ஜனாஸா மக்காவில் ஜன்னத்துல் முஅல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இன்னா லில்லஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்!

இவர் கல்ஹின்னையில் பிரசித்திபெற்று விளங்கிய ஒமர் லெப்பை ஹாஜியாரின் மூத்த புதல்வரான  'கடே முதலாளி'  என அறியப்பட்ட காசீம் லெப்பை அவர்களின் மூத்த புதல்வரும், மர்ஹூம் கவிஞர் எம். சீ. எம். ஸுபைர்,  ஆசிரியர் எம்.சீ.எம்.ஜெலீல் மற்றும் எம்.சீ.எம். சமீம் ஆகியோர்களின் மூத்த சகோதரருமாவார்.

1996ஆம் ஆண்டு புனித ஹஜ் கடமையைத் தனது துணைவியாருடன் நிறைவேற்றிய மர்ஹூம் சஹாப்தீன் அவர்கள்,  தனது 76ம் வயதில் 2005ம் ஆண்டு இறை அழைப்பை ஏற்று, இம்மை வாழ்வை நிறைவு செய்தார்!

ஆடம்பரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் அமைதியாகவே வாழ்ந்த இவர், சகல இன மக்களுடனும் நல்லுறவைப் பேணி வாழ்ந்தவராவார். குறிப்பாக அயல் கிராமங்களான அலவத்தை, உடகம, கல்கந்த, பல்லேகம, ராமாக்கொட்டுவை போன்ற இடங்களில்  வாழ்ந்த பெரும்பான்மை இன மக்களுக்கும் இன,மத பேதமின்றி சேவை செய்து, அப்பகுதி மக்களினதும் அன்பையும் ஆதரவையும் பெற்றுக்கொண்டார்.
அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக!

திடீர் மரண விசாரணை அதிகாரி
 அல்ஹாஜ் A. L. M. மஹ்ரூப்.
கல்ஹின்னை அல்மனாரில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, மாவனெல்லை சாஹிராக் கல்லுரியியில் உயர் கல்வியைப் பெற்றுக்கொண்ட அல்ஹாஜ் A. L. M. மஹ்ரூப் அவர்கள் ஒரு சட்டத்தரணியாவார்.

கல்ஹின்னை மண்ணில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது கொழும்பு பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரியாகச் செயல்பட்டு வருகின்றார். 

உயர் கல்வி நோக்கில் ஜப்பான் சென்றவர் 
அல்ஹாஜ் ஸரூக் முஹம்மத்
கல்ஹின்னையிலிருந்து கல்வி நோக்கில் முதலாவது ஜப்பான் தேசம் சென்ற பெருமையை அல்ஹாஜ் ஸரூக் முஹம்மத் பெறுகின்றார். 

1988 ஜனவரி, 15ம் திகதி ஜப்பானில் அடியெடுத்து வைத்த இவர், 1994ல் அங்குள்ள டோகாய் (Tokai University) பல்கலைகழகத்தில் வர்த்தக முகாமைத்துவப்பட்டம் பெற்றார். 

தற்போதும் ஜப்பானில் குடும்பத்தாருடன் வாழ்ந்துவரும் இவர், இந்தியாவிலும் தனது கிளை நிறுவனத்தைக் கொண்டு இயங்கிவரும் IT நிறுவனமான  Inaho Digital Solutions -Tokyo வின்  பங்குதாரராகவும், இயக்குனராகவும் செயற்பட்டு வருவதோடு, SAUDEE International Inc. நிறுவனத்திற்குச் சொந்தக்காரருமாவார்.

சௌதீ இன்டர்னஸனல் நிறுவனம், ஜப்பான்வாழ்  முஸ்லிம்களுக்கான 'ஹலால்' உணவுப்பதார்த்தங்களை  இறக்குமதி செய்து விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது!

ஜப்பானிய மொழியில் அதிக பரிச்சயம் கொண்டுள்ள  அல்ஹாஜ் ஸரூக் அவர்கள் ஆர்வத்துடன்  சமூகசேவைகளில் ஈடுபட்டுவருவதோடு, ஜப்பானிய முஸ்லிம் வர்த்தக சம்மேளனத்தின் ( Japan Muslim Chamber of Commerce) பொருளாளராகவும் பணிபுரிந்துவருகின்றார்.

அச்சகத்துறை முன்னோடி
மர்ஹூம் எஸ்.எச். நிலாப்தீன்
கல்ஹின்னையின் அச்சகத்துறை முன்னோடியாக மர்ஹூம் எஸ்.எச். நிலாப்தீன் கருதப்படுகின்றார்.

அன்னார் தனது ஆரம்பக்கல்வி முதல் உயர்தரக்கல்வி வரை கல்ஹின்னை அல்மனார் மஹா வித்தியாலயத்தில் கற்றுத்தேர்ந்த பின்னர், அக்காலை கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் இயங்கிவந்த “அல்பியன்” அச்சகத்தில் சேர்ந்து தனது தொழிலை ஆரம்பித்தார்.

பின்னர் கொழும்பு – தெமட்டகொடையில் நிறுவன ரீதியாக செயல்படத்தொடங்கிய அச்சகத்தின் நிருவாகியாகி, சிலகாலம் அதில் சிறப்பாகத் தனது ஈடுபாட்டைகாட்டி வந்தார். அங்கிருந்தே “அல்ஹஸனாத்” என்ற சஞ்சிகை பதிப்பானமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் சொந்தமாக அச்சகமொன்றை  நிறுவும் பணியில் தனது எண்ணக்கருவைச் சிதறவிட்ட அவர்,  கொழும்பு – மருதானையில் அச்சகமொன்றை நிறுவி, சிலகாலம் அதனைச் சிறப்புற நடாத்திவந்தார். ஜாமிஆ நளீமிய்யாவின் “இஸ்லாமிய சிந்தனை”  ஆரம்ப காலத்தில் இங்கேயே அச்சிடப்பட்டது!

பின்னர் ஜப்பான் சென்ற மர்ஹூம் நிலாப்தீன், அங்கு ஐந்து வருடங்கள் பணிபுரிந்துவிட்டு தாய்நாடு வந்து,  தனது பிறந்தகமான கல்ஹின்னையில் அச்சகமொன்றை நிறுவி, அதற்கு “Wins Graphics” என்று பெயரிட்டுக்கொண்டார்.

பிரபல எழுத்தாளரும், உலமாப் பெரு மகனுமான மர்ஹூம் அல்ஹாஜ் எச். ஸலாஹுதீன் அவர்களின் நூல்கள் இவரது அச்சகத்தில் அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது!

எப்பொழுதும் கல்ஹின்னைக் கிராமத்தின் மீது பற்றுக்கொண்டிருந்த அன்னார், உறவினர்களையும், நண்பர்களையும் அணுசரிப்பதில் அதிஈடுபாடு கொண்டவர். 

ஜாமிஆ நளீமிய்யாவில்  பணியாளராக நுழைந்த 
கல்ஹின்னையின் முதலாமவர்.
ஐ. ஏ. ஸத்தார்
"ஜாமிஆ நாளீமிய்யா" என்பது இலங்கை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றில் ஆரம்பிக்கப்பட்ட  அதிஉயர் கல்விப் பீடமாகும். பிரபல மாணிக்கக்கல் வர்த்தகரும் கொடைவள்ளலுமான மர்ஹூம் எம்.ஐ.எம். நளீம் ஹாஜியார் அவர்களின் எண்ணக் கருவில் உருவான இக்கல்விப்பீடம், 1973ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இக்கல்வி பீடத்தின் வெளியீட்டுப் பணியகத்தில்  உதவி வெளியீட்டுப் பணியாளராக   ஜனாப்     
ஐ. ஏ. ஸத்தார்அவர்கள்,  1978ம் ஆண்டில் உள்வாங்கப்பட்டதன் மூலம்  இவரே கல்ஹின்னையிலிருந்து ஜாமிஆ நாளீமிய்யாவுக்குள் நுழைந்த முதலாமவராகின்றார்.

 "இஸ்லாமிய சிந்தனை" சஞ்சிகையின் வெளியீட்டுப் பணி, இவரது காலத்திலேயே ஆரம்பமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாமிஆ நாளீமிய்யாவில் கல்வியைப் பூர்த்தி செய்த முதலாமவர். 
 அல்ஹாஜ் எம்.எச்.எம். சமீல்  
கல்ஹின்னை அல்மனார் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக ஆசிரியப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற,  மர்ஹூம் யூ. எல். எம். ஹனிபா மற்றும் எஸ். எல். குறைஷா பீவி ஆசிரியை ஆகியோரின் மூன்றாவது புதல்வரான, அல்ஹாஜ் எம். எச். எம். சமீல்  1966ம் ஆண்டு பிறந்தவராவார்.

க.பொ.த சாதாரண தரம் வரை அல்மனாரில் கற்ற இவர், 1981ம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்து,  தனது கற்கைநெறியைத் தொடங்கினார்.

1987ம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கலைத்துறைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர், 1988ம் ஆண்டில் நளீமியாவிலிருந்து வெளியாகி, 1989 முதல் 1998 வரையிலான ஒன்பது வருட காலப்பகுதியில் உதவியாசிரியாராகப் பணிபுரிந்தார்.

அதன் பின்னர் நிர்வாக சேவை பரீட்சையில் (SLAS) 1998ல்  சித்தியடைந்து கல்ஹின்னைக் கிராமத்தின்  முதலாவது நிர்வாக சேவை அதிகாரியானார்.

1998 முதல் 2000 ஜுலை வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகப் பணிபுரிந்த இவர், அதனைத் தொடர்ந்து, 2003ம் ஆண்டு வரை பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் கல்விச்சேவைக் குழுவின் உதவிச்செயலாளராகப் பணியாற்றி வந்தார். 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு செப்டெம்பர் வரை பொதுச்சேவைகள் ஆணைக்குழுவில் உதவிச்செயலாளராகவும் பிரதிச்செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

2004/2005ம் ஆண்டுகளில் புதுடில்லி குருகோபிந் இந்திரப்பிரசாத் பல்கலைக்கழகத்தில், மனிதவள திட்டமிடல் மற்றும் அபிவிருத்தித்துறையில் முதுமாணி பட்டம்  பெற்றுக்கொண்டுள்ள இவர் தொடர்ந்து அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, சமூக சேவை திணைக்களம் மற்றும் சமூகசேவை அமைச்சு என்பவற்றில் பிரதி செயலாளர், மேலதிக பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார் 2013 ஆண்டு முதல் 2017 பெப்ரவரி வரை இலங்கை முஸ்லிம்களுக்கான  அரச நிறுவனமான, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும்  பணிபுரிந்துள்ள  
இவர்,  2017 பெப்ரவரி முதல் இன்று வரை இலங்கை நிதி அமைச்சின் கீழ் காணப்படும் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பணியாற்றி வருகின்றார்.

1980களில் கல்ஹின்னையில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் ஒன்றியத்தின் கிளையில் ஆரம்பகால அங்கத்தவராகவும் பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கிராமத்தில்  உருவாகிய சமூக முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக  ஏற்படுத்தப்பட்ட சமாதானக் குழுவின் தலைவராக இருந்து  வழிநடாத்தியுள்ளார். ஊரில் உருவாக்கப்பட்ட கல்வி முன்னேற்றம்சார் பல்வேறு அமைப்புகளில் முக்கிய அங்கத்தவராகவும் பணியாற்றிய இவர், 
தற்போது அல்மனார் பழைய மாணவர் சங்கத்தில் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்து கிராமத்தின் கல்விசார் அபிவிருத்திக்காக அதிகளவான பங்களிப்புக்களையும் ஆற்றி வருகின்றார்.
 
மின்னிதழ் முன்னோடி
எஸ்.எச்.எம். நயீம்
கல்ஹின்னை அலவத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.எச்.எம்.நயீம் 
என்ற தனியொருவரால்   துவங்கப்பட்ட "வேட்டை"கல்ஹின்னை டுடே .சிதிஜயா மின்னிதழ், கல்ஹின்னை வரலாற்றில் முதலாவது மின்சஞ்சிகையாகும். இது உலகளாவிய ரீதியில் சிறந்த பல எழுத்தாளர்களின்  ஆக்கங்களைக் கொண்டு, கடந்த ஏழு  வருடகாலமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றது. 

"குட்டித்தமிழகம்"  என வரலாற்றில் பெயர் பதித்துள்ள கல்ஹின்னை, கவிஞர் ஸுபைர் அவர்களின் "மணிக்குரல்" சஞ்சிகை மூலம்  தமிழ் வளர்த்த கிராமமாகும்.

ஏழு வருடங்களாக கல்ஹின்னைக் கிராமத்தில் ஆங்காங்கே நடக்கும் விரும்பத்தகாதவற்றைத் தட்டிக்கேட்டும், நல்லனவற்றைத் தட்டிக்கொடுத்தும் வருவத்தில் பின்வாங்காத ஒரு சஞ்சிகை "வேட்டை"யாகும். 

தமிழகத்தின் பிரபல்யமான சஞ்சிகைகளுக்கு நிகராகத் தனித்துவம் பெற்று விளங்குவது இதன் சிறப்பாகும்.

எஸ்.எச்.எம்.நயீம்,  கல்ஹின்னை வாழ்  மக்களால் "அலவத்தை  அப்பச்சி" என அன்போடு அழைக்கப்பட்டுவந்த  ஷாஹுல் ஹமீத்  அவர்களின் மகன்மார்களில் ஒருவராவார். 

கல்ஹின்னையின் பாடசாலை, பள்ளிவாயில், கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் பிரதான பாதை அபிவிருத்திப்பணிகளில் அதிகரிசனை காட்டிவந்துள்ள காலஞ்சென்ற எஸ்.எச்.ஜுனைதீன் மற்றும் எஸ்.எச்.தாஜுதீன் ஆசிரியர் ஆகியோர்களின் இளைய சகோதரரான இவர், கவிஞர் எம்.ஸி.எம். சுபைர் அவர்களின் இலக்கியப் பாசறையில் வளர்ந்தவராவார். 

தனது இளமைப் பிராயமுதல் பத்திரிகைகளுக்கு எழுதுவதைப் பொழுது போக்காகக் கொண்டிருந்த இவர், 1980களில் மாதாந்த சஞ்சிகை ஒன்றை அச்சிட்டு வெளியிட்டு வந்துள்ளார். சிந்தாமணி, தினகரன் பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் பல இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது!

19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பிறந்துள்ள இவரது தந்தை ஷாஹுல் ஹமீத் அவர்கள், 1958ம் ஆண்டு காலமானார். இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்! 

1815ல்  பத்து வயதாக இருந்த அலவத்தை அப்பச்சி,  ஆங்கிலேயர் கண்டியைக் கைப்பற்றியது சம்பந்தமான நிகழ்வுகள் தமக்கு நினைவிலிருப்பதாக, கல்ஹின்னையின் மூத்த மார்க்க அறிஞர்களுள்  ஒருவரான மௌலவி ஷரீப் ஆலிம் அவர்களிடம் குறிப்பிட்டுக் கூறியுள்ளதை கல்ஹின்னை பற்றிய வரலாற்று நூல் குறிப்பிடுகின்றது. 

கல்ஹின்னைக் கிராமத்தில் ஆரம்ப காலத்தில் குடியேறிய நான்கு குடும்பங்களுள் 'வாப்புக்கண்டு' குடும்பமும் ஒன்றாகும்.முகம்மது நயீம் அவர்களின் தந்தையான 'அலவத்தை அப்பச்சி', வாப்புக்கண்டுவின் பேரன்மார்களில் ஒருவரான ஹபீபு முஹம்மதின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது!
இலங்கையில் முதல் AI செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்த பெருமையும் நயீம்(வேட்டைAI NEWS) அவர்களையே சாரும். (Mr. Naeem is also credited with introducing the first ai news reader in Sri Lanka)
கல்ஹின்னையில் முதன் முதலாக  AI தொழில்நுட்பத்தின் மூலம் பாடலை உருவாக்கியவர் நயீம் அவர்கள்.https://youtu.be/ByXZcDStZD4

கிராமத்தின் அரசியல் பிரவேசம் 
"வீசீ ஹாஜியார்" 
1970ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதி, கல்ஹின்னையின் சமூக அமைப்பு, மக்கள் அரசியலிலிருந்தும் தூரநின்ற  நிலையில்  வாழ்ந்துவந்த ஒரு காலப்பகுதியாகும்.

அவ்வாறிருந்த சமூக அமைப்பிற்கு உந்துதல் சக்தி வழங்கி, விடியலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரும்பாடுபட்டவராகக் கருதப்பட்ட, கல்ஹின்னை மக்களால் "வீசீ ஹாஜியார்" என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த ஷரீப் ஹாஜியாராவார்.

அவரது  எழுச்சிக்கு முன்னர்,  கல்ஹின்னைச் சமூகம் எதுவித அரசியல் - நிர்வாகத் துறைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாது, வர்த்தகத்துக்குள் தலைபுதைந்து வாழ்ந்து கொண்டிருந்தது.  எவரும் அரசியலிற்குள்  நுழைவதற்குப் பின்வாங்கியவர்களாகவே காணப்பட்டனர். அதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்வதில் சமூகம், இதுவரை கூட  கரிசணை  காட்டவில்லை என்பதுதான்  யதார்த்தமாகும்!

சகல சவால்களையும் தகர்த்தெறிந்தவராக, ஷரீப் ஹாஜியார் அபாரத்துணிச்சலுடன்  கிராமசபைத் தேர்தலில் போட்டியிட்டார். அவரது  வெற்றியே கல்ஹின்னைச் சமூகத்தை அரசியல் நீரோடைக்குள் சங்கமமாக்கியதெனலாம்!

அக்காலை அவரோடிணைந்து  செயல்பட்டவர்களுள்   மர்ஹூம்களான; அலவத்தை எஸ். எச். ஜுனைதீன், "றாலஹாமி" என்று அழைக்கப்பட்டுவந்த
ஜமால்தீன், எச். எம். எம். ஹுசைன் ஹஜியார், ஒளியூட்டு எச். எம். பாரூக், ஆசிரியர் மாமா ஹனீபா, ஆசிரியர் எச். இஸட். எம். ஸுபைர் மற்றும் அலவத்தை  ஜனாப் எஸ். எச். தாஜுதீன், ஜனாப் எச். எம். ஹனீபா என்போர் முக்கியமானவர்களாவர். 
அவரது தேர்தல் வெற்றிக்குப் பின்னரான காலப்பகுதியில், அவர் முன்னெடுத்த முக்கியமான ஒன்றாக, கல்ஹின்னையை ஊடறுத்து மிஹிரிஎலை  வரை செல்லும் பாதை அபிவிருத்தியைக்  குறிப்பிட வேண்டும்.

மூஸாமுனை முகம்மது அலிபாவாவின் பரம்பரையில் வந்த, "சாவன்னா முதலாளி" என்றழைக்கப்படும், ஷாஹுல் ஹமீத்  என்பவர் தொடங்கி வைத்து, கல்ஹின்னை ஜும்ஆப் பள்ளிவாசல் வரை  அபிவிருத்தி செய்யப்பட்டிருந்த இப்பாதை, அதனைத் தொடர்ந்து  வெறும் நடைபாதையாகவே இருந்து வந்தது! 

இதனை ஊர் மக்களோடிணைந்து,   "சிரமதானம்" மூலம்  மிஹிரிஎலை வரை  வாகனம் செல்லக்கூடிய பாதையாக செப்பணிட்டச் செய்த  பெருமை  "வீசீ ஹாஜியாரை"யும், அவரோடிணைந்து  அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர்களையுமே சாரும்.

அக்காலை சிரமதானப் பணி  நள்ளிரவு வரை  நடந்து வந்துள்ளது. பணியில் கலந்து கொள்வோருக்கு டின்மீன், கோதுமை மாவு என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன.  இவற்றைக் களஞ்சியப்படுத்தி, விநியோகிப்பதற்காக, 
தற்போதைய  ஒன்றியத் தலைவரின் வீட்டின் ஒரு பகுதி உபயோகிக்கப்பட்டமையும், அவர்களால்  அவ்வப்போது பணியில் ஈடுபட்டவர்களுக்குத் தேனீர் வழங்கி அணுசரித்தமையும்,   கிராமத்தின்  அபிவிருத்தியில் ஆரம்ப முதலே அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கின்றது என்பதற்கான சான்றாகும்!

பாதை அபிவிருத்திப் பணியில் ஆர்வத்தோடு ஈடுபட்டவர்கள் டின்மீன், கோதுமை மாவு பெற்றுக் கொண்டதன்  மூலம், வறுமைக் கோட்டிலிருந்த அதிகமானோர் அக்காலத்தில் பிரயோசனமடைந்தனர். 

இவ்வபிவிருத்திக் காலப்பகுதியில்   கல்ஹின்னையில் மின்சார வசதி இருக்கவில்லை. "பெற்றோல்மெக்ஸ்" "லந்தர்" போன்ற வெளிச்சக்கருவிகளே  இரவு நேரங்களில் சிரமதானத்தின்போது உபயோகப்படுத்தப்பட்டு வந்தன. 

கிராம சபைத் தேர்தலின்போது, ஷரீப் ஹாஜியார் அவர்களோடு போட்டியிட்டு, நூலிழையில் தோல்வி கண்டவர்,  பெபிலகொல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட "அப்பா முதலாளி" என்று கிராம மக்கள் மட்டுமன்றி, சுற்றுவட்டாரத்துப் பெரும்பான்மை மக்களும்  அன்போடழைத்து வந்த, மர்ஹூம் எம். கே. எஸ். அஹமட் ஆவார்.  இவர் மூஸாமுனை ஹபீபு முகம்மது- ஸல்ஹா உம்மாவின் மூத்தமகளின் மூத்தமகளை  மணந்தவராவார். 

மர்ஹூம் எம். கே. எஸ். அஹமட் மர்ஹூம்களான ஷரீப் ஹாஜியாரும், எம்.கே.எஸ். அஹமத் அவர்களும் தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்டார்களே தவிர, அவர்கள் ஒருவருக்கொருவர் எதிரியாக இருந்ததில்லை. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது, தோல்வி கண்டவர், வெற்றி பெற்றவரை ஆசீர்வதித்தது மட்டுமல்லாது, பாதை அபிவிருத்திப் பணிகளின்போதும், இருவரும் தோளோடு தோள் நின்று பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது!

பொதுவாசிகசாலை
ஜனாப் எம்.ஸீ. ஹலீம்தீன்
மர்ஹூம் எம்.கே.எஸ். அஹமத்  அவர்களின் சகோதரரான ஜனாப் எம்.ஸீ. ஹலீம்தீன்  நீண்ட காலமாக பெபிலகொல்லைப் பட்டினத்தில் வியாபாரஸ்தளம்  நடாத்தி வந்தவராவார். பொதுச்சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்த ஜனாப் ஹலீம்தீன், அக்காலை தனது வியாபாரஸ்தளத்தின் ஒருபகுதியைப் பொதுவாசிகசாலையாக நடாத்தி வந்தார்!

சொந்தப்பணத்தில்  பத்திரிகைகள் வாங்கி வாசித்தித்துக்கொள்ள முடியாதிருந்த அக்காலத்து மாணவர்களுட்பலர் இவ்வாசிகசாலையினால் அதிக பிரயோசனம் அடைந்தனர் என்பது நிதர்சனம். 
தற்போதும் திடகத்திரத்துடன்  வாழ்ந்துவரும் ஜனாப் ஹலீம்தீன் அவர்களுக்கு,  கல்ஹின்னையில் நிரந்தரமாக வாசிகசாலை ஒன்றை நிறுவ வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது!

சமூக சேவைத்துறையில் ஈடுபாடு கொண்டுள்ள அவரது மகனுக்கு, தனது தந்தையின் ஆசையை  நிறைவேற்றி வைக்கும் பாக்கியம்  அதிகமாகவே உள்ளது!


ரபாய் ராத்தீபை' கல்ஹின்னையில் அறிமுகம் செய்தவர் 
1885ம் ஆண்டு உதுமான் அலியார் என்பவருக்கு மகனாக பரகஹதெனியில் பிறந்துள்ள  நாகூர் பிச்சை லெப்பை என்றழைக்கப்பட்டுவந்த, ஸதக் முஹம்மது   அவர்கள் தனது உறவினரான ஹபீப் முகம்மது என்பவரின் மகள் ஸபிய்யா உம்மாவைத் திருமணம் செய்து, கல்ஹின்னையைத் தமது இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். 

ஒல்லியான உருவம் கொண்ட இவர், அக்காலை கல்ஹின்னைக் குர்ஆன் மத்ரஸாவில் ஓதிக்கொடுத்து வந்தவராவார். சொற்செயலில்  நேர்மையும், கடமையைச் சீராகச் செய்வதில்  அலாதி அக்கறையும் கொண்ட இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்துள்ளனர். 

ரபாய் ராத்தீபை  கல்ஹின்னையில் அறிமுகம் செய்த "நாகூர் பிச்சை லெப்பை" அவர்கள், சுமார் முப்பது வருடங்களாக கல்ஹின்னை மக்களுக்கு குர்ஆன் ஓதிக்கொடுத்து வந்துள்ளார். 

முறைப்படி குர்ஆன் ஓதிக்கொடுப்பதில் தன்னிகரற்று விளங்கிய  அன்னார், கண்டிப்பு, கட்டுப்பாடு, அடக்கம், ஒழுக்கம் இவைகளை முக்கியமாகக் கருதி வந்தவராவர்.   

அக்காலத்தில் இயங்கிய கமாலியாப் பாடசாலை மாணவர்களுக்குத் தமிழ்மொழி கற்றுக்கொடுப்பவராகவும் கடமையாற்றியுள்ள இவர், 1947ம் ஆண்டு மக்கா சென்று வந்த பின்னர், 1953ல் ஹாஜியாக இறையடி சேர்ந்தார். 

"நாகூர் பிச்சை லெப்பை'யின் ஒரே மகனான அல்ஹாஜ் முஹம்மது பரீத் லெப்பை அவர்கள் ஏறக்குறைய ஆறு வருடங்கள் கல்ஹின்னை ஜுமாப் பள்ளிவாசலில் கதீபாகவும், சுமார் பத்து வருடங்கள்  குர்ஆன் மத்ரஸாவில் முஅல்லிமாகவும் கடமை புரிந்தவராவார். 

நற்பண்புகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்த பரீத் லெப்பை அவர்கள், தந்தையைப் போன்றே கல்ஹின்னையில்  ‘ரபாய் ராதீபு' வைபவங்களைச் சிறப்பாக நடத்தி வந்துள்ளார். 

1917ம் ஆண்டு பிறந்த இவர் 'மெதில்லே அப்பச்சி" என அழைக்கப்படும் மர்ஹூம் முஹம்மது லெப்பையின் மகள் உம்மு அஸீஸாவை விவாகம் செய்து,ஏழு புதல்வர்களுக்கும், மூன்று புதல்வியர்களுக்கும் தந்தையானார்.   தனது தந்தையிடத்தில் அவர் கொண்ட அலாதிப் பிரியத்தின் காரணமாகத் தனது மகன்  முகம்மது இல்யாஸ் என்பவரை 'ஸதக்' என்றே அழைத்து வந்துள்ள  அன்னார், 1973ம் ஆண்டு புனித ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றியுள்ளமை  குறிப்பிடத்தக்கது!

இலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய பரிணாமம் செய்த
ரிலெக்ஸ்டைம் ரியாஸ்!
ரியாஸ் ஹனீபா 
சக்திT Vக்குள் நுழைந்தவர் என்ற பெருமை பெற்ற ஒரே ஒருவராக ரியாஸ் முஹம்மத் கல்ஹின்னை வரலாற்றில் இடம் பெறுகின்றார்.

1979ல்  பிறந்துள்ள இவர், தனது ஆரம்பக் கல்வியை அல்மனார்  தேசியக் கல்லூரியில் பெற்றுக்கொண்ட பின்னர், மாத்தளை  ஸாஹிராக் கல்லூரியில்  இணைந்து கற்றார்.

தனது பதினேழாவது வயதில்  மாத்தளையில் நடைபெற்ற சாஹித்திய "கலாபிரஷாதினி"  கலாசார நிகழ்ச்சியின் போது, அறுபதுக்கும் மேற்பட்ட பிரபலங்களின்  குரல்களை 'மிமிக்கிரி' செய்ததன் மூலம் பிரதேச மக்களிடையே பிரபல்யமடைந்தவராகத் தனது கலைப்பயணத்தைத் தொடர்ந்தார்.

கனீரென்ற குரல்வளம் மிக்க இவர்,தனது 18வது வயதில்  ஒலிபரப்புத்துறை அனுபவத்தைத்  தொடங்கினார்.

1995ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குள் நுழைந்த இவர்,   1998 வரை அங்கு பணிபுரிந்து ஒலிபரப்புத்துறையில் தன்னை வளப்படுத்திக் கொண்டார்.

தனது தொலைக் காட்சித் துறைக்கான நுழைவினை, 1998ம் ஆண்டில் "YOUNG ASIA TV அமைப்பினூடாக ஆரம்பித்த இவர், YaTVயின் உதவித் தயாரிப்பாளராக சிலகாலம்  பணிபுரிந்து வந்து, அதனைத் தொடர்ந்து,  TNL தொலைக்காட்சிக்குள் உள்வாங்கப்பட்டு, "விழிப்பு" என்ற நிகழ்ச்ச்சியைத் தொகுத்தளித்ததன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமானார்.

இந்நிகழ்ச்சி, சமாதானம் - சகவாழ்வு  என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, பிரதி செவ்வாய் தோறும் இரவு 7.30 முதல் 8.00 மணிவரை ஒளிபரப்பாகி வந்தது.  நிகழ்ச்சித் தொகுப்பில் தனித்துவ ஆளுமை கொண்ட  இவர்,  தொகுத்தளித்தமையால், அந்நாட்களில் மக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது!

இளம் இசையமைப்பாளர் இர்பான் நடாத்தி வந்த  "மாஸ்டர்ஸ்" இசைக் குழுவிலும் இணைந்து செயல்பட்டுள்ள ரியாஸ் முஹம்மத்,  மிகவும் குறுகிய காலத்திற்குள் வானொலி - தொலைக்காட்சித் துறைகளுக்குள்  புரிந்துவந்த  சாதனைகளினாலும், பெற்றுக்கொண்ட  அனுபவத்தினாலும் "ஸ்வர்ணவாகினி" போன்ற தொலைக்காட்சிச் சேவைகள் இவரைப் பேட்டி கண்டன.

இவர், 1999ல் 'சுவர்ண ஒலி' வானொலியில் ஒலிபரப்பாளராகி, தனக்கிருந்த குரல் வளத்தால் வானொலி நேயர்களைக் கவர்ந்தார்.

2000 முதல் 2006 வரை சக்தி TVயில் நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளராகத் தெரிவான இவர், ரிலெக்ஸ்டைம், ஹிட்லிஸ்ட், இப்படிக்கு நீங்கள், சனிதாபனி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ, அன்பு மடல் போன்ற வேறுபட்ட பல  நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

இவற்றுள், ரிலெக்ஸ்டைம் நிகழ்ச்சியே இவருக்குப் பெரும் பாராட்டையும், புகழையும் தேடித்தந்தது. அந்த  நிகழ்ச்சிக்குப் பின்னரே  இவர், "ரிலெக்ஸ்டைம் ரியாஸ்" என்று அழைக்கப்படலானார்.

"நீரு பூத்த நெருப்பு" என்ற திரைப்படமொன்றிலும் இவர் பிரதான பாகமேற்று நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரியாஸ் முஹம்மத், சக்தி TVயில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது,
உப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் இயக்குனரான  அல்ஹாஜ் எம்.எச்.எம். நியாஸ் அவர்களோடு ஏற்பட்ட திடீர் சந்திப்பு, ரியாஸ் முஹம்மதை ஒரு குறுகிய காலப்பகுதிக்கு அரசியலுக்குள் உள்வாங்க வைத்துவிட்டது.

அல்ஹாஜ் எம்.எச்.எம். நியாஸ் அவர்களின் பரிந்துரையின் பேரில், 2004ம் ஆண்டில் ஜனநாயக ஐக்கிய முன்னணி என்ற கட்சிக்குள் நுழைந்த ரியாஸ் முஹம்மத்,   மாகாணசபைத் தேர்தலின்போது, கொழும்பு மாவட்டத்தில் 13ம் இலக்க இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோதிலும், கலைத் துறையில் இவருக்கிருந்த ஆர்வம் அரசியலிலிருந்தும் இவரைத் தூரப்படுத்தி  விட்டது!

அதன் பின்னர்  இவர், 2009 முதல் 2013 வரை ஜே FM Dubaiயின் நிகழ்ச்சி நிர்வாகியாகவும், 2014ல் லண்டன் தீபம்TV நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்  பணிபுரிந்து வந்தார்.


தற்போது நெதர்லாந்துப் பிரஜா உரிமையுடன் வாழ்ந்து வரும் ரியாஸ் முஹம்மத், கலைத்துறையில் தனக்கிருக்கும்   ஆர்வத்திலிருந்து சற்றேனும் விலகிக்கொள்ளா நிலையில், தனியொருவராக RTV என்ற இணையத்தள வீடியோ  மூலம்  ரசனைமிக்க நிகழ்ச்சிகளை  சர்வதேசத்திற்கு வழங்கி வருவது மகிழ்ச்சியைத் தருகின்றது!

பதிப்பகம் "கலாநிலையம்" 
மர்ஹூம் என். எம். ஹனிபா
மர்ஹூம் என். எம். ஹனிபா அவர்களின் கலா நிலையமே கல்ஹின்னையின் முதற்பதிப்பகமாகும். "மாமா" என்ற புனைப்பெயரில் மர்ம நாவல்கள் எழுதி வந்த இவர், தனது பதிப்பகத்தின் மூலம் - ஏமாற்றம், இலட்சியப்பெண், பகற்கொள்ளை, மர்மக்கடிதம், குடும்பவிளக்கு, பாவை பெற்ற பரிசு போன்ற பல நாவல்களை வெளியிட்டுள்ளார்.

"இவருடைய நாவல்களின் பெயர்கள் ஏதோ மர்ம நாவல்கள் போலத் தோன்றினாலும் சமூகப் பிரச்சினைகளைத் துல்லியமாக விளக்கிச் சிந்தனையைத் தூண்டுபனவாக அமைந்துள்ளதை வாசிப்போர் உணரலாம்" என்று யாழ்ப்பாணப்    பல்கலைக்கழகத்தின் அப்போதைய  துணைவேந்தர்  கலாநிதி சு. வித்தியானந்தன்  குறிப்பிட்டுள்ளார்.   

இவரது "ஏமாற்றம்" என்ற நூல்  கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களால்  1963ம் ஆண்டு மார்ச்சு மாதம் 24ம் திகதி கண்டி, திருகோணமலை வீதியிலுள்ள ஜின்னா மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அன்றைய அதிபராயிருந்த மர்ஹூம் ஐ. எல். எம். மஷ்ஹூர் தலைமையில் நடந்த இவ்விழாவில் 'பள்ளிவாசல்களில் வழங்கும் புனித மொழிகளுள் ஒன்று தமிழ்’ என்ற தலைப்பில் கலாநிதி சு. வித்தியானந்தன் உரை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டகொள்ளாதெனிய '
ஜமாலிய்யா'வின் முதலாவது  
பட்டயக்(Charted Accountant)
கணக்காளர் முஹம்மது அஸ்லம்
மூஸாமுனை முகம்மது அலி பாவா அவர்களின் மகனான  ஹபீபு முஹம்மது லெப்பை அவர்களின் மூத்த வாரிசான, 'நூத்திமூணப்பச்சி' என்று அழைக்கப்பட்டுவந்த  காஸிம் லெப்பையவர்களின் மூத்த மகனான  காலஞ்சென்ற முஹம்மது தவ்பீfக்,
பட்டகொள்ளாதெனியவைச் சேர்ந்த மஸூதா உம்மா  என்பவரை  மணமுடித்துள்ளார். 

அவர்களின் மகனான முஹம்மது அஸ்லம்,    ஜமாலிய்யா மகா வித்தியாலயத்தில்  சாதாரண தரம்வரை கற்று,  அல்மனார் தேசியக் கல்லூரியில் உயர்தரத்தில்தேறி, ஜமாலியாவில் கற்று, பட்டயக் கணக்காளர் (Charted Accountant) பட்டம் பெற்ற முதலாமவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.

1979ல் பிறந்துள்ள இவர், 2004ல்  பட்டயக் கணக்காளரானார். 2008ம் ஆண்டு Chartered Institute of Management Accountant of Sri Lanka வில் இணைந்துகொண்ட இவர்,  2012ம் ஆண்டு Bahamas, Galileo 
Collageல் கணக்கியல் துறை  BSc பட்டத்தைப் பெற்றார். 

இவர் தற்போது ஸு ஊதி  நாட்டின் ரியாத் நகரை மையமாகக் கொண்டுள்ள Al-Rajhi United Investment Holding Group இல் Group Financial Controller ஆகப் பணி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது



குறிப்பு; இக்கட்டுரையில் சேர்த்துக் கொள்ளக்கூடிய வகையிலான  வரலாற்றுத் தகவல் இருப்பின், vettai007@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்


 



Post a Comment

Previous Post Next Post