
கல்வியின் சிறப்பு
“மன்னரும் மாசறக்கற்றோரும் சீர்தூக்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் மன்னனிற்கு தன் தேசமல்லால் சிறப்பில்லை, கற்றோர்க்குச் கென்ற இடமெல்லாம் சிறப்பு” கல்வியின் பெருமையை மூதுரை இவ்வாறு குறிப்பிடுகின்றது.
அதாவது ஒரு நாட்டின் மன்னனையும், நன்றாக கற்றறிந்த ஒருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மன்னனை விட கற்றவரே சிறப்புடையவராக கருதப்படுவார்.
ஏனென்றால் மன்னரிற்கு தனது நாட்டை விட வேறு இடத்திற்கு சென்றால் சிறப்பில்லை. கற்றறிந்த ஒருவரிற்கு செல்கின்ற இடமெல்லாம் சிறப்பே ஆகும். இதுவே கல்வியின் சிறப்பு ஆகும்.
படிக்காமல் இருப்பதனை விட பிறக்காமல் இருப்பதே மேல் என்கின்றார் பேரறிஞர் பிளாட்டோ. ஒரு மனிதன் கல்வியை கற்காமல் இருப்பானானால் அவனது பிறப்பிற்கே எந்த வித அர்த்தமும் இல்லை.
கற்றவர்கள் எப்போதும் சமூகத்தில் உயர்ந்த இடத்திலேயே மதிக்கப்படுகின்றனர். ஒருவரிடம் எவ்வளவுதான் செல்வங்கள் கொட்டிக்கிடந்தாலும் கல்விச் செல்வம் இல்லையேல் அவரிடம் உள்ள ஏனைய செல்வங்களிற்கு மதிப்பில்லை.
கல்வியின் அவசியம்
“பிச்சை புகினும் கற்கை நன்றே” என்கின்றார் ஒளவையார். எவ்வளவு கடினப்பட்டாவது கல்வியைப் பெற்று விட வேண்டும் என்ற கருத்து ஆதிகாலம் தொட்டே வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
ஒருவரிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அதனை கணக்கு வைத்து கொள்ளவும், நல்ல காரியத்திற்கு பயன்படுத்தவும் கல்வி அறிவு மிக அவசியமாக கொள்ளப்படுகின்றது. ஒரு வீட்டில் உள்ள வறுமையை போக்கவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும் கல்வி அறிவு மிகவும் முக்கியம்.
இதனையே “இன்று உலகத்தை மாற்றக் கூடிய ஒரு ஆயுதம் உள்ளது, அதன் பெயர் கல்வி” என்று நெல்சன் மண்டேலோ குறிப்பிடுகின்றார்.
கல்வியால் உயர்ந்தவர்கள்
சிறந்த கல்வி ஒரு மனிதனை உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். இந்த உலகத்தில் கல்வியால் உயர்ந்தவர்கள் பலரை உதாரணமாக குறிப்பிடலாம்.
அவர்களுள் டாக்டர் அப்துல்கலாம், அரிஸ்டாட்டில், அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், பிளாட்டோ மற்றும் சாக்கிரட்டீஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவார்.
உலகின் முதலாவது தத்துவஞானியாக போற்றப்படுகின்ற சாக்கிரட்டீஸ், அவர் நஞ்சூட்டப்படும் வரை புத்தகங்களை படித்துக் கொண்டுதான் இருந்திருக்கின்றார். அவர் கற்ற கல்விதான் அவரை அறிவியலாளராக மாற்றியது.
அப்துல் கலாம் சிறுவயதில் இருந்தே கல்வி மேல் கொண்ட ஆர்வம் தான் அவரை விஞ்ஞானியாக உருவாக்கி, உலகம் கொண்டாடும் மனிதராக மாற்றியது.
பழம்பெரும் புலவரான ஒளவையார் தமிழ் கல்வி மீது புலமை கொண்டமையே அவரை இன்றளவும் தமிழ் உலகம் நினைவு வைத்திருக்க காரணமாகியது.
கல்வியின் பயன்கள்
கல்வி ஒரு மனிதனை முழுமையானவன் ஆக்குகின்றது. கல்வியானது கள்வர்களால் திருட முடியாத, நிலையாக வாழ்க்கை முழுவதும் தொடர கூடிய ஒரு செல்வமாகும்.
“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்கின்றது ஆத்திசூடி. அதாவது இளமையில் கல்வியை நன்றாக கற்கும் போது அக்கல்வியானது நம்மை உயரிய இடத்திற்கு இட்டுச் செல்லும். உயர்ந்த பதவிகளை பெற்றுத் தரும்.
ஒருவர் சிறந்த கல்வியைப் பெற்று உயர்ந்த பதவிகளை பெறும் போது பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவரது வாழ்க்கைதரம் உயர்வடைகின்றது.
“கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக” என்கின்றுது திருக்குறள். நாம் வெறுமனே கல்வியை கற்றல் மட்டும் போதுமானது அல்ல. கற்ற கல்விற்கேற்ப வாழ்க்கையில் நாம் ஒழுக வேண்டும்.
நாம் பெற்ற கல்வியை அனைவருடனும் பகிர்ந்து மற்றவர்களும் வாழ வழிவகை செய்ய வேண்டும். கல்வியினை பெறுதல் ஒவ்வொருவரினதும் பிறப்புரிமை ஆகும்.
அந்த கல்வியை மேம்போக்காக கற்காமல் அதிக சிரத்தை எடுத்து கற்றால் மாத்திரமே வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
எனவே கல்வியை ஜயம் திரிபுற கற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக.
நன்றி;quotesloop
Tags:
கட்டுரை