ஷஹீத் ஜனாஸாக்கள் மலக்குகளினால் குளிப்பாட்டப்பட்டு சுவர்கத்தின் கபனினால் சுற்றப்பட்டவர்கள். அவர்களின் உயிர்கள் சின்ன பறவைகளாக மாற்றப்பட்டு சுவர்கத்தில் பறக்க விடப்பட்டுள்ளன அந்த உயிரிற்கு சொந்தமான உடல்கள் மஜ்மா நகரில் விதைக்கப்பட்டுள்ளது . ஷஹீதுகள் மரணிப்பதில்லை என்பது ஹதீஸ்.
கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாமே குளிப்பாட்டப்படாத கபனிடாத ஷஹீதுகள்.
கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ஒரு கும்மிருட்டு.
▪️ இடை விடாது கபுர்களை தோண்ட கண்ணுக்கு தெறிபடாத சிறிய வெளிச்சத்தில் 2 பெக்கோ (Backhoe) வாகனங்கள்
▪️ Torch 🔦 வெளிச்சத்தில் பத்து அடிக்கு ஒரு பாதுகாப்பு வீரர்
▪️ ஷஹீதுகளை அடக்கம் செய்யும் பத்துக்கு மேற்பட்ட (பாதுகாப்பு உடை அணிந்த) எமது சகோதர்கள்
▪️ கபுரடிக்கும் Main Gate டிற்கும் மாறி மாறி ஓடிக்கொண்டிருக்கும் முஃமீனுக்குறிய பொறுமையை கொன்ட ஒரு மௌலவி (அவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக)
▪️ கிப்லாவை முன்னோக்கி நிறுத்தப்பட்ட எமது அன்புக்குறியவர்களை சுமந்து நிற்கும் Containers
▪️ அந்த container களில் எந்த இடத்தில் எமது சொந்தங்கள் இருக்கும் என்று ஆவலுடன் தடுமாறிக் கொண்டிருக்கும் நாங்கள்
ஒவ்வொரு கபுரிலும் ஜனாஸா வைக்கப்படும் போதும் அந்த மௌலவியின் உரத்த குரல் "துஆ" எங்களை மெய்சிலிர்க்க செய்கிறது.
ஜனாஸா நல்லடக்கத்தை பார்ப்பதற்கு கண்ணீருடன் இருந்த எங்களிடம் உங்கள் உறவினர் அடக்கப்பட்டு விட்டார் இதோ அவர்களின் இலக்கம் என்று அந்த மௌலவி தரும் போது எங்கள் அன்புக்குறியவர்களை உயிரோடு எங்களிடம் திருப்பித் தருவது போல் ஒரு உணர்வு, நாங்கள் ஓடிப்போய் அந்த இலக்கத்தை பெற்றுக் கொள்ளும் சங்கடமான ஒரு நிலை.
"எல்லாம் சரி நீங்கள் போகலாம்" என்று அந்த மௌலவி எங்ளை பார்த்து சொல்லும் போது தான் எங்களுடன் அன்பாக இருந்தவர்கள் 4 இலக்கங்களுக்குள் அடக்கி விட்டு போகின்றோமே என்ற கவலை ஆரம்பிக்கின்றது. அங்கிருந்து வர ஆரம்பிக்கும் போது தான் நெஞ்ஜில் ஒரு பாரம். அந்த இடத்தில் இருந்து வெளியேர வேண்டிய கட்டாயம்.
அதை விடவும் எமது உறவுகளை நெருப்பில் போட்டு விடாமல் அழகிய முறையில் நல்லடக்கம் செய்து விட்டோமே என்ற மன நிம்மதி!
இது தான் நான் கண்ட மஜ்மா நகர்.......
கிழக்கு மாகாணம் ஓட்டமாவடி - மஜ்மா நகர் நான் கண்ணால் கண்ட ஜன்னதுல் பிர்தௌஸின் [الجنة الفردوس] பூஞ் சோலை...............
நன்றி;மஸாஹிர் (மாவனல்ல)