ஒரு நல்ல மனிதரை இழந்த கல்ஹின்னை மக்கள்

ஒரு நல்ல மனிதரை இழந்த கல்ஹின்னை மக்கள்

 

நல்ல மனிதர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து செல்லும்போதுதான் அவர்களின் பெறுமதியை உணருகின்றோம்.

கல்ஹின்னை மக்களோடு எந்த அளவுக்கு சுமூகமாக பழகியிருக்கின்றார் என்பதை WHATSAPP பதிவுகளைப் பார்க்கும்போது உணர முடிகின்றது.

நல்ல நண்பர்,பொறுப்பான குடும்பஸ்தர்,பொறுப்புவாய்ந்த ஒரு டாக்டராக இருந்து பொறுமையாக சேவையாற்றிய ஒரு மனிதர் என்றால் மறைந்த ரிபாய்தீன் டாக்டரை  சொல்லலாம்.

டாக்டர் ரிபாய்தீன் அவர்களின் இழப்பு கல்ஹின்னைக்கு மிகப்பெரும் இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.எவருக்கும் அநியாயம் இளைக்காத அந்த மனிதருக்கு எமதூரில் ஒரு சில அநியாயங்கள் நடந்ததை நினைத்துப் பார்க்கின்றேன்.மிகவும் வேதனையாயிருக்கின்றது.அதை இப்பொழுது நினைவு படுத்த விரும்பவில்லை என்றாலும் அந்த கருப்பு நாட்கள் என் நினைவுகளில் மீண்டும் வருகின்றதை என்னால் தடுக்க முடியவில்லை.

அந்த நிகழ்வுகளைப் பற்றி ஒருமுறை அவரிடம் கேட்டேன்.அதற்கு அவர் சொன்ன ஒரே வார்த்தை என்ன தெரியுமா?"மச்சான் தப்பு நடக்கிறது சகஜம்,அதப் பத்தி நான் பெரிசா நினைக்கிறதில்ல .தவறுதலாக நடந்ததுதான் .அத மன்னிச்சி மறந்திட்டேன்"என்றார்.

மன்னிப்பின் மகத்துவத்தை புரிந்துகொண்ட மனிதர்.

நான் படிக்கும்போது அவரும் என்னோடு படித்தார்.நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றாலும் சொந்தமும் கூட. என்னைக்க் கண்டால் "மச்சான் ,,மச்சான் "என்று சிரித்துக் கொண்டே அன்பாக அழைப்பார்.அந்த சிரித்த முகம் உண்மையான அன்பை காட்டும். அதில் துளிகூட போலியில்லை என்பதை புரிந்துகொள்ள முடியும்,

கல்ஹின்னை அல்மனாரில் படிக்கும் காலத்தில் நான் கிரிகெட் விளையாடும்போது மிகவும் ஆர்வத்தோடு மைதானத்தில் இருப்பார்."மச்சான் சிக்ஸ் அடிடா...."என்று அவர் போட்ட கரகோஷம் மீண்டும் என் காதுகளில் ஒலிக்கின்றது.

படிக்கும்போது நான் முதன் முதலாக ஒரு சிறுகதை எழுதி அவரிடம் கொடுத்து கருத்துச் சொல்லும்படி கேட்டேன்."மச்சான் நீ கதை எழுதுவாயா" என்று புன்னகையோடு கேட்ட அந்த ரிபாய்தீன் இன்று எம்மோடு இல்லை.

பாடசாலையிலிருந்து வெளியேறிய பின்பு , "மாணிக்கம்" என்ற சஞ்சிகையில் என் கதை பிரசுரமாகியிருந்தது.அதையும் அவரிடம் காட்டினேன் 

.மீண்டும் அதே புன்னைகை "மச்சான் சுப்பராயிருக்குது .தொடர்ந்தும் எழுது  மச்சான்" என்று சொன்னதும் என்னால் மறக்க முடியவில்லை.  

இப்படி பல பசுமையான நினைவுகள் என்னுள் எழுந்தாலும் .....துக்கம் அலை அலையாக ஆர்ப்பரித்தாலும்,ஈமான் கொண்ட ஒவ்வொருவரும் கடைசிப் பயணமான "மெளத்தை"சுவைப்பது நிச்சியம் .

."அல்லாஹ்விடமிருந்து வந்தோம் அவனிடமே போகின்றோம்"  .

"இன்னாளில்லாஹி வயின்னா இலைஹி ராஜுஹூன்"

கல்ஹின்னை நயீம் 

Post a Comment

Previous Post Next Post