பதுறுமாலை வெளியிட நிதி உதவிய மலையகப் பெருந்தகை சட்டத்தரணி ஏ.ஓ.எம் ஹுஸைன்

பதுறுமாலை வெளியிட நிதி உதவிய மலையகப் பெருந்தகை சட்டத்தரணி ஏ.ஓ.எம் ஹுஸைன்


ஈழத்துக் கவிமணி
எம்.ஸி.எம். ஸுபைர்
நன்றி:  தினகரன் வாரமஞ்சரி
5.03 1989

எழில் மலையகத்தில் தமிழ் தழைத் தொளிரும் கல்ஹின்னையெனும் நல்லூரின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டுழைத்த பெருமகன் சட்டத்தரணி அல்ஹாஜ் எ.ஓ.எம்.ஹுஸைன் அவர்கள்.

அந்த நல்லார், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமது ஆத்மீகச் செழிப்புக்கு வழிகாட்டிய பெரியார் ஒருவர் இயற்றிய அரும் பக்தி நூல் ஒன்றை வெளியிடுவதற்குரிய அத்தனை செலவையும் ஏற்றுதவியவர் ஆவர்.

சட்டத்தரணி ஹுஸைன் அவர்களின் இளமைக்காலம் முதலாகவே, அவர்கள் குடும்பத்தவருடன் அந்த மார்க்க அறிஞரின் ஆத்மீக, அன்புத் தொடர்பு இருந்து வந்தது.

தென்னிந்தியாவின் கோட்டாறு என்ற ஊரைச் சேர்ந்தவர், அப்பெரியார். அவர்கள் மார்க்க மேதையான ஷெய்குல் காமிலியா ஷெய்க் பாவா ஷெய்க் சுலைமானுல் காதிரி அவர் களின் புத்திரர்; ஷெய்க் முஹம்மது அப்துல் காதர் வொலியுல்லாஹ் ஸாஹிபுல் காதிரி என்பவராவர்.

மார்க்க ஞானியான இவர்கள் ஆயிரக்கணக்கான முஸ்லிம் நல்லடியார்களுக்கு மார்க்க ஞானத்தை யூட்டி வழிகாட்டி நெறிப்படுத்தியவர். அல்லாஹ்வை அஞ்சி அவன் வழிநடக்கும் பக்தர்.

இவர்கள் இலங்கைக்கு வரும்பொழுதெல்லாம் கல்ஹின்னைக்குச் சமுகம்தரத் தவறுவதில்லை. சட்டத் தரணி அல்ஹாஜ் ஏ. ஓ. எம். ஹுஸைன் அவர்களின் தந்தையான மார்க்க பக்தரும், சமூக சேவையாளருமான மர்ஹும் அல்ஹாஜ் ஆதம்பிள்ளை உமறுலெப்பை அவர்களின் இல்லத்திலேயே கல்ஹின்னையில் தங்கிச் சமய உபதேசங்கள் செய்துசெல்வது அவர்களது வழக்கமாகும்.

இந்தப் பெரியாரான ஷெய்க் முஹம்மது அப்துல் காதர்வொலியுல்லாஹ் அவர்கள், இஸ்லாம் இந்த உலகத்தின் ஏற்றத்துக்கு வழிகாட்டும் நன்மார்க்கமாக விளங்க அடித்தளமிட்டுக் காத்த பதுறுப் போரில் ஈடுபட்டுழைத்த தியாகச் செம்மல்களான பத்ர்ஸஹாபாக்களின் பேரில் ' பத்று மாலை' என்றதொரு நூலை அறபுத் தமிழில் இயற்றினார்கள்.

இந்த நூல் ஏறத்தாழ எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.
‘ பதுறு மாலை’யிலேயே நூல் இயற்றப்பட்ட காலத்தைக்குறிப்பிடும் போது நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

 “ வாழியிதை முற்றும் சொன்னேன் வருடம் ஹிஜ்ரத் தோராயிரத்தி
வாழி முன்னூற்றி முப்பதுடன் வாழி மூன்றாண்டில் றஜபு மாதம் வாழி பதினாலாம் திகதி வெள்ளி வரிசை ஜும் ஆவின் பின் முடித்தேன்' '
இவ்வாறு எழுதி முடிக்கப்பட்ட இந்தப் பாமாலை கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்கள் கை எழுத்துப் பிரதி யாகவே பயன்படுத்தப்பட்டு வந்தது.

பதுறு ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் மீது கொண்டிருந்த அசையாத   நம்பிக்கையையும் ஆழமான பக்தியையும் அவர் தம் அயராத முயற்சியையும் அதன் பயனாக அண்ணலாரெம் கண்மணியின் அருந்தலைமையிலே அவர்கள் பெற்ற அற்புதமான  வெற்றியினையும் நினைவு கூர்ந்து  அந்ததத்தூயவர்கள் பொருட்டால்; அவர்களுடைய புகழ்பாடும் மக்களுக்கு
வரும் துயர் அனைத்தையும் நீக்கும் பேரருள் புரிய வேண்டும் என்று அருள் முதல்வனான அல்லாஹ்வைப் பிரார்த்திக்கும் இந்தப் பாமாலை இசைப்போர் நெஞ்சை நெகிழவைக்கும்: இறைவன் மீது நிறை பக்தியை நிலைக்க வைக்கும்.

நல்ல பதுரீன்கள் திருநாமங்கள் பறக்கத்தினால்
பொல்லா பலாய்களதைப் போக்கிவைப்பாய் ஆண்டவனே.
வல்ல முஸீபத்துகளும் வந்தெங்கள்மீது அணுகாமல்
அல்லாஹு காத்தருள்வாய் ஆண்டவனே ரஹ்மானே.
காரணமாம் பதுரீன்கள் காவலிலே எங்களையும்
தாரணியில் காத்தருள்வாய் தனியோனே யெங்கோனே
பூரணனே பூவுலகில் புந்தி கலக்கங்களற
ஆரணனே ஆபத்தெல்லாம் அகற்றிவைப்பாய் றஹ்மானே.

இத்தகைய நெஞ்சுருக்கும் பிரார்த்தனைகள் அடங்கிய பதுறு மாலையை ' பாவா' அவர்கள்) தங்கும் இடங்களில் அவர்கள் தலைமையிலேயே பலரும் சேர்ந்து பக்தி சிரத்தையோடு ஓதி வருவது அன்றைய வழக்கம்.

சட்டத்தரணி ஏ. ஓ. எம். ஹுஸைன் அவர்கள் இல்லத்திலும், அவர்களுடைய சகோதரர்கள் இல்லத்திலும், இந்த பதுறு மாலைப் பாராயணம் தொடர்ந்து நடந்து வந்தது.கையெழுத்துப் பிரதியிலேயே பார்த்து ஓதப்படும் இந்தப்
பாமாலை, அச்சிடப்பட்டால், பலகாலம் பாதுகாத்து வைக்கப்படுவதுடன்; பாடியும் பயன் பெறப்படுமே என்று கருதினார் சட்டத்தரணி ஹுஸைன் அவர்கள்.

தமது ஆத்மீக குருவான பாவா அவர்களிடம், தம் இதயத்தெழுந்த எண்ணத்தைத் தெரிவித்தார்.

 " பாவா அவர்களே; நீண்ட நாட்களாக இந்த அருமையான பாமாலையைக் கையெழுத்துப் பிரதியாகவே வைத்திருக் கிறீர்களே; இதனை அச்சிட்டால் என்ன? ` என்று கேட்டார்.

' ' நல்ல யோசனைதான். அல்லாஹ் அதற்கான நிதியத்தை எப்பொழுது தருகிறானோ அப்பொழுது அச்சாக்கு வோமே” என்றார்கள் பாவா அவர்கள்,

 “ பாவா அவர்களே, தாங்கள் திருவுளம் நாடினால் ‘ இன்ஷா அல்லாஹ்' நானே இந்த நூலை அச்சாக்கும் முழுசெலவையும் ஏற்றுக் கொள்கிறேன்; நாங்கள் உடனடியாக அச்சுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தல் நலமல்லவா '"
என்றர் ஹுஸைன்.

‘ அல்ஹம்து லில்லாஹ் ' என்றார்கள் பாவா அவர்கள்,

பத்று மாலை, அல்லாஹ் அருளால், அழகிய தோற்றத்துடன் நூல் வடிவில் அச்சாகி வெளிவந்தது.

"அருமையுள்ள பிள்ளை புறக்டர் ஹுஸைன்
அன்பாக இதைப் படித்துக் கேட்டுக்
குருவின் சொல்லிதை அச்சிடவே
கூடிய பொருள் உதவி செய்தார்
ஒருவனே இவர் கூட்டத்தோர்க்கும்
உதவி செய்தருள் ஆமீன்; ஆமீன்;
உலகத்தில் இதைப் படித்தோர் கேட்டோர்க்கு
உனது கிருபை செய் ஆமீன்; ஆமீன்."

என்று நூல் வெளிவரப் பொருளுதவி செய்த தமது ஆத்மிக சீடரான கொடை நாயகரைக் குறிப்பிட்டுப் பிரார்த்தனை புரிகிறார்கள் பாவா அவர்கள். இனிய பயன் தரும் பத்ர்மாலையை ஈழத்திலும், தமிழகத்திலும். ஓதத் தெரியாதவர்கள் ஓதக் கேட்டும்உவகை பூக்கின்றனர்.உண்மை இறையின் மீது உவப்போடு ஓதிப் பயன் பெறுகின்றனர்.

இயற்றிய பின் ஏறத்தாழ இருபத்தைந்து வருஷங்கள் கையெழுத்துப் பிரதியாகவே இருந்த பதுறு மாலையைத் தாமாகவே முன் வந்து பணமீந்து அச்சியற்ற உதவிய சீடர் ஹுஸைன் அவர்களைப் பாராட்டிப் ' பஞ்சரத்தினம்' என்ற தலைப்பில் ஐந்து பாமலர்களை உருவாக்கி நூலிற் சேர்த்துள்ளனர் பாவா அவர்கள்,

நல்ல நூல் ஆக்குபவரை நாடிச் சென்று உதவும் பாரம்பரியத்தை உடையது மலையகம் என்பதற்கு பதுறுமாலை அச்சாவதற்கு நிதியுதவி அளித்த கல்ஹின்னையைச் சேர்ந்த சட்டத்தரணி ஹுஸைன் அவர்கள் உதாரணமாகத் திகழ்வது பற்றி எண்ண இனிய செய்தியாகும்.

சட்டத்தரணி ஹுஸைன் அவர்கள், கொழும்புஸாஹிறாக் கல்லூரியில் படித்த காலத்திலேயே தம் பிறந்தகமாகிய கல்ஹின்னையின் மலர்ச்சிக்கும் அயலூர்களின் வளர்ச்சிக்கும் திட்டமிட்டுச் செயலாற்றியவர்.
அவர் திட்டத்தில் கல்ஹின்னைக்கும் அயலூர்களுக்கும் பயன் தரும் ஒரு பாடசாலை, கல்ஹின்னை ஊடாகக் கண்டியையடையச் செய்யும் ஒரு பாதை, கல்ஹின்னைக்கு ஒரு தபாற் கந்தோர், கல்ஹின்னைக்கும் அயலூர்களுக்கும் பயன் தரும் ஒருவைத்தியசாலை ஆகியவற்றைப் பெறும் முயற்சிகள் முக்கியமாக இடம் பெற்றிருந்தன. 

தமது அதிபர், கொழும்பு ஸாகிறாக் கல்லூரியின் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் ரி. பி. ஜாயா அவர்களிடம் அவசியமான ஆலோசனைகளையும், அரிய வழி
காட்டளையும் பெற்று, அவ்வழி அயராது உழைத்து, இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதில் வெற்றி கண்டார் ஹுஸைன் அவர்கள், 

அதே உணர்வோடு சமய, கலை, இலக்கியமலர்ச்சிக்கும் தனது பங்களிப்பைத் தாமாகவே உணர்ந்து செய்த பணிதான் பதுறு மாலை அச்சியற்றப் பொருளுதவிஈந்ததுமாகும்.

கற்கும் இளைஞராக இருக்கும்போதே தமது பிறந்தகமாம்கல்ஹின்னையின் உயர்ச்சிக்கும், அயலூர்களின் கல்வி, கலாச்சார வளர்ச்சிக்கும் திட்டமிட்டு உழைத்து, இன்றைய இளைஞர்களுக்கும் முன்மாதிரி காட்டிய சட்டத்தரணி  ஹுசைன் அவர்கள் இன்று தமது முயற்சிகளாள் மக்கள் பெறும் நன்மைகளைக் கண்டு களித்து அல்லாஹ்வைப் புகழ்ந்து  அகம் நிறைந்து நிம்மதியோடு அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

மலையகம் அதற்கு அணி தரும் மணியகம் கல்ஹிண்ணை அதனை பிறந்தகமாகக் கொண்ட சட்டத்தரணி அல்ஹாஜ் ஹுசைன் அவர்கள் தமது தொழில் வசதி குறித்து கண்டி மாவில் மட என்னும் ஊரில் குடியிருக்கிறார். சிறந்த பணிகளால் தமது வாழ்வை அணி செய்து கொண்ட அன்னாரின் சேவைகளால் பயன் பெற்றவர்களும், நற்பணி புரிவோரை மதித்து போற்றும் அரசும் சட்டத்தரணி ஹுசைன் அவர்களை மதித்து பாராட்டும் நடவடிக்கை  பற்றி எண்ணாமல் இருப்பது ஆச்சரியமே.

நன்றி:  தினகரன் வாரமஞ்சரி
5.03 1989
 அல்ஹம்துலில்லாஹ்

Post a Comment

Previous Post Next Post