தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது ஐ.டி, இரண்டில் சிறந்தது எது? எந்த படிப்பதற்கு எளிதானது?
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வி கணினி அறிவியல் என்ஜினியரிங் (Computer Science Engineering) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (Information Technology) இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பது தான்.
தற்போது ஐ.டி (IT) துறையில் நல்ல வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் இருந்து வருவதால், மாணவர்கள் பொறியியல் சி.எஸ்.இ (CSE) மற்றும் ஐ.டி (IT) படிப்புகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பினும் இரண்டு படிப்புகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எந்த படிப்பு படிக்க எளிதானது? எந்த படிப்பிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது? என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த கேள்விகளுக்கு கல்வியாளர் ரமேஷ்பிரபாவின் யூடியூப் சேனலில், கிண்டி பொறியியல் கல்லூரி பேராசிரியர் சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி (IT) இரண்டு படிப்புகளும் ஒரே மாதிரியாக தெரிந்தாலும், இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு.
கணினி அறிவியலின் தொடர்ச்சியாக, தகவல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது, ஆனால், இது கணினித்துறையில் அதிகரித்து வரும் மனிதவளத் தேவையை கருத்தில் கொண்டும், தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்கும் முதலில் ஐ.டி படிப்புகள் உருவாக்கப்பட்டது. பின்னர், ஐ.டி படிப்புகளை படிப்பவர்கள் கணினி அறிவியல் சார்ந்த எந்த விஷயங்களையும் தவற விடக்கூடாது என்ற அடிப்படையில், இரண்டின் பாடத்திட்டமும் கிட்டதட்ட ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டில் அனைத்து பிரிவு பொறியியல் மாணவரகளும் கிட்டத்தட்ட ஒரே பாடங்களை படிப்பார்கள். இரண்டாவது செமஸ்டரில் ஓரிரு பாடங்கள் வேறுபாடலாம்.
கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப படிப்புகளைப் பொறுத்தவரை 2 ஆம் ஆண்டிலும், பாடங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும். இரண்டு படிப்புகளிலும் Programming language அறிமுகப்படுத்தப்படும். கூடுதலாக, தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் IT Essentials, அதாவது அடுத்த செமஸ்டர்களில் என்ன படிக்கப் போகிறார்கள் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வார்கள்.
கணினி அறிவியல் படிப்புக்கும் தகவல் தொழில்நுட்ப படிப்புக்கும் உள்ள பெரிய வித்தியாசம், கணினி அறிவியல் மாணவர்கள் வன்பொருள் (Hardware) சார்ந்து அதிகமாக படிப்பார்கள். அதாவது Microprocessor, Microcontroller போன்றவற்றை கணினி அறிவியல் மாணவர்கள் படிப்பார்கள்.
இந்த பாடங்களை தகவல் தொழிநுட்ப மாணவர்களும் படித்தாலும், கணினி அறிவியல் மாணவர்கள் அட்வான்ஸ்டு ஆக படிப்பார்கள். ஐ.டி மாணவர்கள் கூடுதலாக படிக்க விரும்பினால், விருப்ப பாடங்களாக எடுத்துப் படிக்கலாம். அதேநேரம் தகவல் தொழில்நுட்ப மாணவர்கள், மென்பொருள் (Software) சார்ந்து அதிகமாக படிக்கிறார். இதில், Application development, communication, Internet of Things சார்ந்து அதிகமாக படிக்கிறார்கள்.
படிப்பதற்கு எளிதான படிப்பாக தகவல் தொழில்நுட்பம் உள்ளது. ஏனெனில் கணினி அறிவியல் மாணவர்கள் அடிப்படை பாடங்களை அதிகமாக படிக்கிறார்கள். அதேநேரம் ஐ.டி மாணவர்கள் மென்பொருள் உருவாக்கம் சார்ந்து அதிகம் படிக்கிறார்கள். இவ்வாறு அவர் விளக்கியுள்ளார்.
SOURCE:indianexpress
galhinnatoday@gmail.com
Tags:
கட்டுரை