நினைவில் நிலைத்தவர்

நினைவில் நிலைத்தவர்


அரை நூற்றாண்டு காலமாக இலக்கிய வானில் சுடர்விட்டு மிளிர்ந்த ஒருவரை, சமுதாயம் என்றென்றும் நன்றியுணர்வுடன் நினைவு கூரும். அவரின் அரிய பெரிய பணிகளைப் போற்றிப் பாதுகாப்பதுடன், இனித் தோன்றவுள்ள பரம்பரையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன், அவற்றைப் பற்றிய விவரங்களையும் பதிவு செய்து வைத்தல் அவசியமல்லவா?

1981ம் ஆண்டு நவம்பர் மாதம் பதினோராம் திகதி கொழும்பு, ஸாஹிராக் கல்லூரி, கபூர் மண்டபத்தில் பெருந்திரளான மக்கள் கூடி, கவிஞர் எம்.சி.எம் சுபைர் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினர். அந்த விழாவில் உரையாற்றிய பிரதானமான ஒருவர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி. அப்பொழுது அவர் பேராதனைப் பல் கலைக்கழக அறபுத் துறைத் தலைவராக இருந்தார். அவரின் உரையில், திருக்குர் ஆனின் ஐம்பத்தைந்தாவது அத்தியாயத்தின் அறுபதாம் வாக்கியத்தை அவர் மேற்கோள் காட்டினார். அந்த வாக்கியம் என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து விட் டது. "நன்மை செய்பவருக்கு (நன்மையேயன்றி) வேறு கூலி யுண்டா?" என்று திருக்குர்ஆன் கேட்கிறது. எனவேதான், நல்லன 
செய்த ஒருவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம் மலர் பிரசுரமாகிறது.

சுபைர் அவர்கள் கல்ஹின்னை அரசினர் தமிழ்ப் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், கல்ஹின்னையில் முதன்முதலில் தமிழ் மொழியில் அச்சாகிய 'சமுதாயம்" எனும் கலை கலாச்சாரச் சஞ்சிகையின் முதல் இதழில், இளம் வாசகரை மனதில் கொண்டு, சின்னஞ் சிறிய கதை ஒன்று எழுதினார். அதுதான் அவரின் முதல் ஆக்கம். அதைத் தொடர்ந்து தினகரன், பாலர் கழகம், ஏனைய சில சஞ்சிகைகள் முதலியவற்றுக்கு சிறு கட்டுரைகள் எழுதினார். 1951ம் ஆண்டில் பிரசுரமான கல்ஹின்னை மாணவர் சங்கத்தின் ஐந்தாண்டு நினைவு மலரில் இயற்கை வனப்பொளிரும் கல்ஹின்னை என்ற நீண்ட கட்டுரை வரைந்தார். அதே சமயம், அவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் அரும்பத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில், கல்ஹின்னை அரசினர் தமிழ்ப் பாடசாலையில் தமிழ் இலக்கியம் படிப்பித்த ஆசிரியர் பண்டிதர் எஸ். குமரேசையா அவர்களும், சுபைரின் இலக்கிய ஆர்வத்தை மோப்பமிட்டு விட்டார். வகுப்பு நேரம் போக, மாலையில் இவருக்கும் வேறு ஓரிருவருக்கும் பாடசாலைக்கு வரும்படி கூறி யாப்பிலக்கணம் படிப்பித்ததோடு, அவர்கள் எழுதிய சிறு சிறு கவிதைகளைப் பார்த்து "இன்னமாதிரிதான் எழுத வேண்டும்" என்று அவர்களை வழிநடாத்திய பண்டிதர் குமரேசையாவை, இறுதிவரை சுபைர் மறந்ததில்லை, அவருக்கு நல்லன செய்த அனைவருக்கும் நன்றியுடையவராகவே கடைசிவரை இருந்தது. அவரின் உச்சமான பண்பு.

அவரின் தமையனார், தம்பி, குடும்பத்தில் ஏனைய பலர் வெளியூர்களில் போய், ஆங்கிலம், படித்த காலமது. அவர் விடாப் பிடியாக கல்ஹின்னையிலேயே தொடர்ந்து தமிழ்ப் பாடசாலையில் படித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் "தமிழ் படிப்பதில் எனக்கு முன்னேற்றமிருக்கிறது" என்பதுதான். உண்மையில், அவர் கூற்று

அவருக்கு வெற்றியே தந்தது. ஆங்கிலம் படித்திருந்தால்,ஒரு சமயம் எங்கேனும் எழுதுவினைஞர் போன்ற பதவியில் அமர்ந் திருக்கக் கூடும் அப்படி நடந்திருந்தால் இத்தனை நல்ல பணிகள் அவரால் நடப்பதற்கு வாய்ப்பேற்பட்டு இராது.

அவர் படித்த காலத்தில், கல்ஹின்னையில் தலைமை ஆசிரி யராயிருந்த திரு. ஏ.எஸ்.நல்லையா, அவரின் தந்தையுடன் மிக நெருக்கமாகப் பழகினார். "பெரியவர், பெரியவர்" என்றே சுபைரின் தந்தையைத் தலைமை ஆசிரியர் அழைப்பார். அடிக்கடி சுபைரின் தந்தையைக் காண அவர்களின் வீட்டுக்குச் செல்வார். இருவரும் நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்கில் கதைத்துக் கொண் டிருப்பர். சுபைர் இங்கேயே தொடர்ந்து படிக்கட்டும் என்று திரு. நல்லையா அவரிடம் கூறியிருக்க வேண்டும். அது போக அவருக் குப் பண்டிதர் குமரேசையாவுடன் ஏற்பட்ட பிடிப்பும் கல்ஹின்னைப் பாடசாலையை விட்டுப் போக மனதில் இடமளிக்கவில்லை போலும்.

மேலும் அவரின் சித்தப்பா அல்ஹாஜ் ஏ.ஓ.எம்.ஹுஸைன் புரக்டர் அவர்கள் அவர் பாலகனாய் இருந்த காலத்தில் (1934ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி) வித்திட்டு வளர்த்த பாட சாலையில் தொடர்ந்து படித்து மேன்நிலை அடைவது தனக்கு நலன்தரும் என்றும் அவர் கருதினார்.

சின்னஞ் சிறிய வித்தொன்று பின்னர் பெரிய மரமாகிக் கிளை விட்டு வளர்வது போல, இன்று அல்மனார் தேசியக் கல்லூரி என ஓங்கி வளர்ந்துள்ள கலைக்கூடம் அன்று கமாலியா முஸ்லிம் பாட சாலை எனப் பெயரிட்டு ஏ.ஓ.எம். ஹுஸைன் புரக்டர் அவர்கள் நட்ட வித்துத்தான். இதுபற்றி சுபைர் மனமகிழ்ந்தார். ஏன்,கல்ஹின்னையினர் எல்லோரும் அதுபற்றி அகமகிழலாம். கடைசி காலம் வரை அவர் சித்தப்பாவை மிக்க நன்றியுணர்வுடனேயே நினைவு கூர்பவ ராயிருந்தார். புரக்டர் அவர்களின் அரிய பெரிய பணிகள் பற்றிப் பேசுவதில் அவருக்கு என்றும் இன்ப உணர்வு இருந்தது. கவிஞரின் நன்றியுணர்வை அவர் பற்றி மாத்தளையின் கல்விமான் அல்ஹாஜ்.ஏ.ஏ.எம்.புவாஜி அவர்கள் 1994ம் ஆண்டில் எழுதிய கவிமணி எம்.சி.எம்.ஸுபைர் எனும் நூலைப் படிப்பவர் தெளிவாக அறியலாம்.

1981ம் ஆண்டில் நடந்த விழாவையொட்டி. அருட்கவி பேராசிரியர், கா. அப்துல் கபூர் அவர்கள் அனுப்பிய பாராட்டுக் கவிதை. யுடன் இம் மலர் ஆரம்பமாகிறது. பேராசிரியர் சு. வித்தியானந்தன் அன்று நிகழ்த்திய உரை மௌலவி எம். எச். எம். புஹாரி அவர்க ளின் வாழ்த்துப்பா,வேறும் ஓரிரு கவிதைகளும் இம்மலரில் இடம்பெறுகின்றன.

அவரிடம் "மலர்ந்த வாழ்வு" பிரதி தரும்படி பலர் கேட்டதாக என்னிடம் பலமுறை கவிஞர் கூறினார். என்னிடமும் பலபேர் பிரதி கேட்டனர். பிரதிகள் இருக்கவில்லை. 1956ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பதிப்பு பிரசுரமானது. இரண்டாம் பதிப்பும், அதே ஆண்டு மே மாதம் வெளிவந்தது. நாலைந்து மாதங்களிலேயே அனைத்துப் பிரதிகளும் விற்பனையாகி விட்டன. அதன் பின்னர்,பிரசுரிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அப்பொழுது நூலின் தனிப் பிரதி விலை ஒரு ரூபாதான். இன்று, அதுபற்றி நினைத்துப் பார்க்கவும் இயலாது. இலக்கிய ஆர்வலர் நூற்றுக்கணக்கான பேரின் ஆவலைப் பூர்த்திசெய்யும் நோக்குடன், மலர்ந்த வாழ்வு பழைய பதிப்பு இம் மலருடன் பிரசுரமாகிறது.

கவிஞர் சுபைர் அவர்களின் அரிய நற்குணம், மகத்தான பணிகள் பற்றி பல்வேறு கோணங்களிவிருந்து பல நல்ல உள்ளங்கள் மதிப்பிட்டிருப்பதை இனிக் காணுவாம்...


Post a Comment

Previous Post Next Post