என் தாயைக் கண்டேன்!

என் தாயைக் கண்டேன்!

அரசு பள்ளிகளின் சேவையையும், ஆசிரியர்களின் பாசப் பிணைப்பையும் நம் கண் முன் நிறுத்துகிறார், ஆசிரியர் கமல.செல்வராஜ். கன்னியாகுமரி வட்டார மொழி, கொள்ளை அழகு!

அவனை ஒரு நாள் பார்த்து, ஒரு நிமிடம் பேசிப்பழகியவர்கள் நிச்சயமாக அவர்களின் வாழ்நாளில் அவனை மறக்கவே மாட்டார்கள். அவனது இனிமையானப் பேச்சும் சுறுசுறுப்பான செயல்பாடும் மிடுக்கான நடையும் காண்போரைக் கொஞ்சம் கவனிக்கச் செய்யும்.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் குடும்பம். இரண்டு அண்ணண், மூன்று அக்கா இவர்களுக்கு இளையவன் இவன். கடைக்குட்டிப் பிள்ளையானதினால், வறுமையிலும் பெற்றோரின் கனிவும் பரிவும் இவன் மீது இயல்பாகவே பதிந்தது.

ஒருவேளை கும்பியாற கஞ்சி குடிப்பதற்கே வழியில்லாத குடும்பம். அப்புறம் எப்படிப் பள்ளிப்படியேறி பட்டங்கள் பெற முடியும்? அண்ணன்மார் இரண்டுபேரும் எட்டாம் வகுப்புவரைப் படித்து விட்டு ரப்பர் பால் எடுக்கும் தொழிலுக்குப் போகிறார்கள். அக்காமார்கள் ஆறோ, ஏழோ வகுப்புவரைப் படித்து விட்டு அண்டியாபிசிற்குச் (முந்திரி பருப்பு தொழிற்சாலை) செல்கிறார்கள்.

இவனுக்கு மட்டும் அவை எதிலும் நாட்டம் செல்லவில்லை. ‘காலையில் எழுந்து எல்லாப் பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்லும் போது நான் மட்டும் ஏன் பள்ளிக்குச் செல்லக்கூடாது? நானும் பள்ளிக்கூடம் போவேன்’ என்று அம்மாவிடம் அடம் பிடிப்பான்.

‘மக்கா, அவங்கயெல்லாம் பணக்கார வீட்டுப் பிள்ளைங்க; அதனால அவங்கயெல்லாம் பள்ளிக்குப் போறாங்க. நம்ம அப்படியில்ல மக்கா! நாம பாவப்பட்டவிய. அதனால, மக்கள பள்ளிக்கிவிட ஒருவசதியும் இல்ல. நாளையிலிருந்து நீயும் அண்ணன்மாரோடு ரப்பர் தோட்டத்தில கையாளா வேலைக்குப்போ.’ அப்படீன்னு அம்மா அன்பா ஆறுதல் படுத்துவாள்.

சில நேரங்களில் அம்மாவின் ஆறுதலுக்கும் அடங்காமல் அடம் பிடித்ததும் உண்டு. ‘குடிக்கேதுக்குக் கஞ்சியும் உடுக்கதுக்குத் துணியும் இல்லாம இருக்கிய இடத்தில இவனுக்குப் பள்ளிக்கூடம் போணுமாம், பள்ளிக்கூடம்’ அப்படியென்று கோபத்திலும் வருத்தத்திலும் அம்மா அடித்து நொறுக்கிய நாளும் உண்டு.

என்னதான் அடிபட்டாலும், ஏச்சும் பேச்சும் கேட்டாலும் படிப்பு படிப்பு என்கிற ஆசை, அவன் மனதில் தீயாப் பற்றி எரிந்து கொண்டே இருந்தது.

சாணி மெழுகிய தரயில் விரித்துப் படுக்கிறதுக்குப் பாய்கூட கிடையாது. இராத்திரியில் மழை பெய்தால் அவ்வளவுதான், தண்ணி தலைவழியா ஒழுகிப் பாயும். அப்புறம் என்னச் செய்றது? இராத்திரி முழுவதும் உக்கார்ந்து கிழிஞ்ச பாய தலைக்கு மேல பிடிச்சுகிட்டு இருக்க வேண்டியதுதான்.

ஆனாலும்கூட, அவன் படிக்கும்போது ஏதேனும் ஒரு புத்தகத்தையோ இல்லேண்ணா ஒரு பேப்பரையோ எடுத்து, நெஞ்சிற்கு மேல் வச்சுகிட்டுதான் படுப்பான். அவ்வளவுதூரம் படிப்பு மீது ஆசையென்றால், கொள்ளை ஆசை அவனுக்கு.

ஒரு நாள் சாயங்காலம் அம்மா சொன்னா… ‘மக்கா நேரம் இருட்டப் போவுது, வெளக்கு வைக்க மண்ணண்ண இல்ல, அந்தத் தாய்ப்பாட்டி கடையில போய் அர லிட்டரு மண்ணண்ண வாங்கிட்டு வா’

அவ்வளவுதான்… அவனுக்கு ஆத்திரமும் அழுகையும் ஒண்ணா பொத்துகிட்டே வந்தது. ‘ஆமா… ஆமா… நான் மண்ணண்ண வாங்கப் போணுமாம், மண்ணண்ண. பள்ளிக்குப் போட்டாண்ணு கேட்டா வேலைக்குப் போண்ணு விரட்டுறாங்க. அப்புறம் எதுக்கு நான் மண்ணண்ண வாங்கப் போகணும். நான் ஒண்ணுக்கும் போகமாட்டேன். வேணுமெண்ணா யாராவது போய் வாங்குங்க.’

அப்படி அம்மாவை எதிர்த்துப் பேசிவிட்டு விம்மி விம்மி அழுதுகிட்டே இருந்தான். அப்பொழுதுதான் அவனது வாத்தியாரு மாமா ரெம்ப நாளுக்குப் பிறகு, வீட்டுக்கு வந்தாரு. மாமாவுக்கு இவன் மீது மிகுந்த பாசம். அவன் என்னக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார். இவனுக்கும் அப்படித்தான் மாமாவ ரெம்பப் பிடிக்கும். அவரு வந்தா இவனுக்குக் கொண்டாட்டம்தான்.

ஆனால், இன்று மாமா வந்த பிறகும் அவன், அவர் பக்கத்தில் வராமல் விம்மி விம்மி அழுதுகிட்டே வீட்டுக்குப் பின்னாடி மறைந்து நின்றான்.

மாமா, வீட்டுத் திண்ணையில் இருந்து கொண்டு அங்கும் இங்கும் பார்த்தார். அவனை எங்கேயும் காணவில்லை, அப்புறம் அவர் அக்காவிடம் கேட்டார். ‘அக்கா, இளையவன் எங்க? நான் வந்தா எங்க இருந்தாலும் ஓடி என்கிட்ட வந்திருவான். இண்ணக்கி ஆளையே காணோம்! எங்க போய்ருப்பான்?’

‘ஒரு இடமும் பேகல தம்பி! அவன பள்ளிக்கொடத்துக்கு விடாததினால, கொஞ்சம் நாளா, என்னச் சென்னாலும் அதுக்கு எதிராப் பேசிக்கிட்டு, அழுது புலம்பிக்கிட்டே கிடக்கான். இப்ப, போய் மண்ணண்ண வாங்கிட்டு வரச்சென்னப் பிறகுக்கூட போகாம பள்ளிக்கொடத்துக்கு விடாத வேதனையில அங்க வீட்டுக்கப் பின்னாடிபோய் அழுதுகிட்டு இருக்கான். அவன என்ன செய்யேதெண்ணே தெரியல்ல தம்பி.’

இதைக் கேட்டதும் மாமா திண்ணையிலிருந்து எழும்பி வீட்டுக்குப் பின்னாடி போனாரு. அவ்வளவுதான், மாமாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மீண்டும் ஓ… என அழத்தொடங்கினான்.

‘ஒனக்கு என்ன வேணும்?’- மாமா பரிவோடுக் கேட்டாரு.

‘எனக்குப் பள்ளிக்கூடம் போகணும்; படிக்கணும்.’

‘அவ்வளவுதானே! அழுகய நிறுத்து. நான் உன்ன இண்ணைக்கு என்கூட கூட்டிகிட்டுப் போறேன். நாளைக்கே நம்ம ஊரில இருக்க அரசாங்கப் பள்ளிக்கூடத்தில படிக்க வைக்கிறேன்.’

அவ்வளவுதான்! அவன் துள்ளிக்குதிக்க ஆரம்பித்துவிட்டான். வீட்டுக்குள் ஓடிப்போனான்; போட்டிருந்த கிழிந்த நிக்கரைக் கழற்றிப் போட்டுவிட்டு அவனுக்கென்றிருந்த ஒரேயொரு ஜோடி நல்ல நிக்கரையும் சட்டையையும் எடுத்துப் போட்டுக்கிட்டு, துள்ளிக்குதித்துக் கொண்டு மாமா முன்னாடி வந்து நின்றான்.

‘வாங்க மாமா, நமக்குப் போவோம்; இனி இந்த வீட்டில இவங்க முன்னாடி நான் நிக்கவே மாட்டேன். மாமா வாங்க மாமா என்னக் கூட்டீட்டுப் பள்ளிக்குப் போங்க மாமா.’ அவனின் கெஞ்சல் வாத்தியார் மாமாவின் மனதைக் கொஞ்சம் வருடத்தான் செய்தது.

‘சரியக்கா நேரம் இருட்டுது, நான் இவன கூட்டீட்டுப் போறேன். நாள மஞ்சாலுமூடு அரசாங்கப் பள்ளிக்கூடத்துல கொண்டுபோய் சேத்துடுதேன். இவன் ஒருத்தனாவது படிக்கிறான்னாப் படிக்கட்டும். இவனப்பற்றி நீ கவலைப்படாதே! நான் எல்லாம் பாத்துக்கிடுறேன்.’

அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார் மாமா. பயங்கர இருள், ஒற்றையடிப் பாதை வழியாக குளமும் வயலும் ஓடையும் தாண்டி மாமாவின் வீட்டுக்கு இருளோடு இருளாகப் போய் சேர்ந்தார்கள் இருவரும்.

மாமாவின் வீட்டில் எல்லாமே வித்யாசமாக அவனுக்குப்பட்டது. மண்ணெண்ணை விளக்கிற்குப் பதில் கரண்டு விளக்கு, தரையில் படுப்பதற்குப் பதில் கட்டில், வீட்டில் கஞ்சிக்குப் பதில் இங்கே நல்ல மீன் சாப்பாடு. இப்படி எல்லாமே அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.

ஆனால், இதுவரை அம்மாவோடு படுத்து உறங்கிவந்த அவனுக்கு, இன்று தனியாகப் படுத்துத் தூங்க வேண்டும் என்பது சற்றுப் பயத்தை ஏற்படுத்தியது. ஆனால், இரவு விடிந்ததும் பள்ளிக்குப் போகலாம் என்ற கனவு, அவனை பயத்திலிருந்து காப்பாற்றியது.

‘நாளைக்கு நான் பள்ளிக்குப் போவேன். . . நாளைக்கு நான் பள்ளிக்குப் போவேன்…’ தூக்கத்தில் அவன் முணுமுணுத்தது வாத்தியார் மாமா காதில் ஒலித்தது. அது அவரை ஆச்சரியப்பட வைத்தது.

‘இதற்குப் பிறகும் இந்தப் பையன பள்ளிக்கு அனுப்பாம இருந்தா அது பெரும் பாவமாகவும் பாதகமாகவும் மாறும்’ அப்படியென்று வாத்தியார் மாமா தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்.

காலையில் நேரம் விடிந்ததும், அது அவன் மாமா வீடென்றுகூட நினைக்காமல் அவனாகவே எழுந்து, குளித்து நிக்கரும் சட்டையும் போட்டுக்கிட்டு தயாராகி விட்டான். காலை பத்து மணி. வாத்தியார் மாமாவும் அவனுமாகப் பள்ளிக் கூடத்திற்கு யாத்திரையானார்கள்.

வீட்டிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் பள்ளிக் கூடம். நடந்தே போய்வரலாம். இரண்டுபேரும் போய்க் கொண்டிருக்கும் போதே அவன் தன் மாமாவிடம், ‘பள்ளிக்கூடத்துல யரெல்லாம் இருப்பாங்க, என்னவெல்லாம் சொல்லித் தருவாங்க, அங்கேயிருந்து எனக்கு என்னவெல்லாம் தருவாங்க’. இப்படியெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்டு மாமாவை குடைந்து எடுத்துவிட்டான்.

மாமாவும், அவன் கேட்டதற்கெல்லாம் பொறுமையாகப் பதில் கூறிக்கொண்டே வந்தார். பள்ளிக் கூடம் வந்ததும், ஆறடி உயரத்தில், கம்பீரமானத் தோற்றத்தில் ஆறுமுகம் சார் பள்ளி வராண்டாவில் நடந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்தும் இவனுக்கு ஒரு வித பயம் ஏற்பட்டது. இவ்வளவு உயரமான ஒரு மனிதனை அவன் இதுவரை பார்த்ததேயில்லை.

ஆறுமுகம் சார்தான் அப்பள்ளியின் தலைமையாசிரியர். அவரது உடம்பு மட்டுமல்ல உயரமானது; மனமும் மிகவும் உயர்ந்தது. மாணவர்களிடம் மிகவும் கனிவாக நடந்துகொள்வார். அதே நேரத்தில் ஆசிரியர்களிடம் மிகவும் கண்டிப்புடன் வேலை வாங்குவார். அவர் தலைமை ஆசிரியராக வந்த பிறகு பள்ளியில் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்தார்.

அரசாங்கப் பள்ளிக் கூடமானாலும் இவருடைய சாமர்த்தியத்தால் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திவிட்டார். அதனால் அவருக்கு அந்த ஊரில் பெற்றோர்கள் மற்றும் பொது மக்களிடையே நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது.

வாத்தியார் மாமாவுக்கு ஏற்கனவே ஆறுமுகம் சாரிடம் நல்ல பரிச்சயம். அதனால் பள்ளிக்கூடம் திறந்து ஏற்கனவே ஒரு மாதம் கடந்திருந்த போதும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல், அவனுக்கு அட்மிஷன் போட்டுக்கொடுத்தார்.

‘ஆமா! பையன் உங்களுக்கு யாரு? என்ன உறவு? எதுவும் சொல்லல்ல’ ஆறுமுகம் சார் மாமாவிடம் ஓர் உரிமையோடு கேள்வி கேட்டார்.

‘அது வந்து சார், அவன் என்னோட சொந்த அக்கா பையன். வீட்டில் ரெம்பக் கஷ்டம். அதனால பள்ளிக்கு அனுப்பாம வீட்டிலையே வைத்திருந்தார்கள். நேற்றைக்கு நான் அங்குப் போனபோதுதான் தெரிந்தது, இந்தப் பையனுக்குப் பள்ளியில் படிக்கிறதுக்கு ரொம்ப ஆசை இருக்கு என்பது. அதனால், நான் இவனை என் வீட்டிற்கே அழைத்துக் கொண்டு வந்தேன். இனிமேல் இவன் என் வீட்டிலிருந்துதான் பள்ளிக்கு வருவான். நீங்க கொஞ்சம் அதிகமா இவன் மேல் கரிசனம் காட்டினா ரெம்ப நல்லா இருக்குமென்று நினைக்கிறேன்.’

‘அதுக்கென்ன! நீங்க எதுவுமே கவலப்பட வேண்டாம். எல்லாம் நானே பாத்துக்கிறேன். அவன ஒரு சூப்பர் பையனா மாற்றிக்காட்டுகிறேன்.’ அப்படியென்று கூறிக்கொண்டே அவனை வலப்பக்கமா இழுத்து அவன் கன்னத்தில் செல்லமா ஒரு கிள்ளு கிள்ளி விட்டு, ‘என்னடா கண்ணா உன் பேரு?’ என்றாரு. அவன் பயந்து நடுங்கி, ‘விஜயன்’ அப்படியென்று தன் பெயரை அரைக் குரலில் சொன்னான்.

‘ஓ… விஜயனா? நீ எதிலும் விஜயனா மாறணும்!’ அப்படியென்று குறும்பாகவே கூறிவிட்டு தன் உடம்போடு கட்டி அணைத்துக் கொண்டு வாத்தியார் மாமாகிட்ட மீண்டும் பேசத் தொடங்கினார்.

‘என்ன சார் நம்ம ஜனங்க அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் இப்ப எல்லாமே இலவசமாக் கொடுக்கிறாங்க. யூனிபஃம், பாடபுத்தகம், புத்தகப்பை, மத்தியானம் முட்டையோடு சத்துணவு, உதவித்தொகை, ஆங்கில மீடியம் பள்ளியில் படிப்பிக்கிறது மாதிரிச் சமச்சீர்க் கல்வி இப்படி எல்லா வசதிகளுமே செய்துக் கொடுக்கிறார்கள். ஒரு காசுகூட செலவில்லாம ஒண்ணாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை இலவசமா படிக்கலாம்.

இதெல்லாம் நம்ம ஜனங்க புரிஞ்சிக்காம ஏழை ஜனங்க வறும வறும எண்ணு பிள்ளைங்கள படிக்க விடாம குழந்தைப் பருவத்திலையே வேலைக்கு விடுறாங்க. கொஞ்சம் வசதி படைச்சவங்க ஆங்கிலம் மீடியம் பள்ளியில் பணத்தையெல்லாம் கொட்டியிறச்சு பிள்ளைங்கள படிக்க வச்சு ஏழைகளாகிறாங்க. நம்ம ஜனங்க எதையும் அறிந்து, தெரிந்து, புரிந்து செய்றதில்ல.

ஒரு பாதி ஜனங்க எதுவுமே தெரியாம அழிஞ்சு போறாங்க, இன்னொருப் பாதி ஜனங்க தங்களின் சுய கௌரவத்தைப் பார்த்துப் பார்த்தே கெட்டுப் போறாங்க. இந்த ஜனங்க எப்பத்தான், எப்படித்தான் திருந்தப் போறாங்களோ அந்தக் கடவுளுக்குத்தான் எல்லாம் வெளிச்சம்.’

ஆறுமுகம் சார், இப்படி, தன் உள்ளக் குமுறலயெல்லாம் வாத்தியார் மாமாவிடம் கொட்டித்தீர்த்துக் கொண்டு இருக்கும் போதே புஷ்பம் டீச்சர், தலைமையாசிரியர் அறைக்குள்ளே வந்தார். அவங்கதான், அந்தப் பள்ளிக்கூடத்தில், நம்பர் ஒன் டீச்சர்.

‘டீச்சர், இதோ இந்தப் பையன் இண்ணக்கி நம்ம பள்ளிக் கூடத்தில் புதுசா சேர்ந்திருக்கான். இவன் பேரு விஜயன். இவன எதிலையும் விஜயனா ஆக்கிக் காட்டிறது ஒங்கப் பொறுப்பு. இவன் நம்ம வாத்தியாரோட மருமகன் வேற. அவரு நம்மள நம்பி இங்கிலீஷ் மீடியம் பள்ளிக் கூடத்தில விடாம, நம்ம அரசாங்கப் பள்ளிக் கூடத்துக்கே அழச்சு வந்திருக்காரு. அதனால இன்னும் கொஞ்சம்கூடப் பொறுப்பா கவனிச்சுக்குங்க!’

அப்படிக் கூறிக் கொண்டே தன் உடம்போடு அணச்சு வச்சிருந்த விஜயனை, மகாபாரத விஜயனைப் போல் நினைத்து, மனதிற்குள் ஆசி வழங்கி புஷ்பம் டீச்சரின் கைகளில் ஒப்படைத்தார்.

புஷ்பம் டீச்சரின் கை, அவன் உடம்பில் பட்டதும் விஜயன் தன் அம்மாவின் கைப்பிடியில் இருப்பது போன்ற ஓர் உணர்வுக்குள்ளானான். ஒரு புது ஞானோதயம் அவன் கண்களில் பளிச்சிட்டது.

கமல. செல்வராஜ்
SOURCE;Tamilindianexpress
(சிறுகதை ஆசிரியர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர்! இவரது கவிதைகள், கட்டுரைகள் பலவும் பொதுவெளியில் கவனம் ஈர்த்தவை! பேச: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

Post a Comment

Previous Post Next Post