
உங்களை சுற்றியுள்ளோர் உங்களை காயப்படுத்தினால் அதற்கு நீங்கள் பொறுப்பெடுத்து கொள்ளாதீர்கள். அதற்கு நீங்கள் எதிர்வினை புரியாதீர்கள்.
மக்கள்தான் பிரச்சினை என்றும் மக்களுடன் தள்ளி இருப்பதும் நல்லது எனப் பேசும் பாணி அண்மையில் பரவலாகிக் கொண்டிருக்கிறது. இது போல் மக்களிடமிருந்தும் சமூகத்திடமிருந்தும் டிஸ்கனக்ட் செய்து கொண்டு வாழுதல் சரிதானா?
ஏன் ஒருவர் பிறருடன் தொடர்பறுத்துக் கொள்ள விரும்புகிறார்?
அநேகமாக அவர் நம்பியவர்கள் அவரைப் புறக்கணித்திருக்கலாம். காயப்படுத்தி இருக்கலாம். அவரை மதியாது இருந்திருக்கலாம். புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால் எதுவென்றாலும் அடிப்படை ஒன்றுதான். அவர் பிறர் மீது கொண்டிருந்த எதிர்பார்ப்பு, நம்பிக்கை பொய்த்து போய்விட்டது.
மக்கள் காயம் கொடுப்பார்கள். அது அவர்கள் தப்பு அல்ல. இங்கு எல்லாரும் அவரவர் தேவைக்கான வாழ்க்கைகளைத்தான் வாழ்கிறார்கள். அனைவருக்கும் தேவையான வாழ்க்கையை அல்ல. அவரவர் விருப்பத்துக்கு வாழும் வாழ்க்கை, அடுத்தவரோடு முரண்பட்டு, காயப்படுத்தி, தொடரும் வடிவத்தைதான் கொண்டிருக்கும். தன்முனைப்பு, சுயநலம், லாபவெறி எல்லாம் போற்றி வளர்க்கும் சமூக சித்தாந்தத்தில் இயங்கும் மக்களிடம்தான் வேறென்ன எதிர்பார்த்திட முடியும்?

பொதுவாகவே, மனிதர்களிடம் பெரிய எதிர்பார்ப்புகளை எல்லாம் வைக்க தேவையில்லை. ஆனால் அதற்காக disconnect செய்து கொள்ளவும் வேண்டியதில்லை. தன்னலம் பாராது நிற்கும் மக்களும் இருக்கிறார்கள். மக்களிடமிருந்து நீங்கள் சற்று விலகியிருக்க வேண்டும். ஒரு மாறுதலுக்காக, எந்த எதிர்பார்ப்புமின்றி இல்லாமல் மக்களை அணுகி பாருங்களேன். அவ்வளவு அற்புதமாக இருப்பார்கள். எதிர்பார்ப்பு கொண்டு அணுகும்போதுதான் பிரச்சினை தொடங்குகிறது. அந்த உறவு ஆதாயக்கணக்கு போடத் துவங்கும்.
அதனால் எட்ட நில்லுங்கள். உங்களை சுற்றியுள்ளோர் உங்களை காயப்படுத்தினால் அதற்கு நீங்கள் பொறுப்பெடுத்து கொள்ளாதீர்கள். அதற்கு நீங்கள் எதிர்வினை புரியாதீர்கள்.

Pirates of the caribbean 4 படத்தில் வில்லன் கட்டிப் போட்டிருக்கும் பாதிரியார் ஒருவரை ஜானி டெப் வந்து அவிழ்த்துவிடுவார். அப்போது அந்த பாதிரியார், 'I'm not with you, neither am I against you!' என்பார். அப்போது ஜானி டெப்புடன் இருப்பவர், 'அப்படி இருப்பது சாத்தியமா?' என கேட்பார். ஜானி டெப் அதற்கு, 'He is religious. I believe it's required!' என்பார். அதாவது, ‘அவருக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதால் அப்படி இருப்பது அவருக்குத் தேவைப்பட்டிருக்கலாம்,’ எனச் சொல்வார்.
அது போல் இங்கு பல பேருக்கு பல விஷயங்கள் தேவையாக இருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான். ஒருவர் உங்களை அவமதிக்கிறார் என்றால், புறக்கணிக்கிறார் என்றால் அது அவருக்கு ஏதோவொரு வகையில் தேவைப்படுகிறது. உங்களை புறக்கணிப்பதால் அவருக்கு ஏதோவொரு விஷயம் நடக்கிறது. சந்தோஷப்படுங்கள். உள்ளே சிரித்து கொள்ளுங்கள். அவர் அப்படியிருக்க அவர் அப்படியிருப்பதே காரணம்.
தன்னலம் கருதாமல் உங்களுடன் வந்து நிற்கிறார்களே ஒரு தரப்பு மக்கள், அவர்களுக்கு உழையுங்கள். அந்த உண்மை கொடுக்கும் connect (தொடர்பு) நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.
SOURCE:kalaignarseithigal

Tags:
கட்டுரை