கவிஞர். கட்டுரையாளர், உரையாசிரியர். பதிப்பாளர், வானொலிக் கலைஞர் எனப் பல்துறைகளிலும் பிரபல்யம் பெற்றுள்ள கல்ஹின்னை கவிமணி நஜ்முஷ் ஷு அறா முஹம்மது காசிம் ஹாஜியார் முஹம்மது ஸுபைர் அவர்களும் நானும் 1963ம் ஆண்டு அறிமுகமானோம்.
அப்போது பேராதனைப் பல்கலைக்கழ கத்தில் பொருளியல் துறை மாணவர்களாயிருந்த தற்போது புருணை தாருஸ்ஸலாம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் ஏ. சீ. எல். அமிர் அலி அவர்களும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரு விடுமுறையின் பொழுது, அமீர் அலியின் தந்தையார் கவிஞர் திலகம் அப்துல் காதர் லெப்பை அவர்கள் அதிபராகக் கடமையாற்றிய குருத்தலாவை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்குச் சென்று, சுமார் ஒரு வார காலம் அங்கு தங்கினோம். இப்பயணத்தின் போதே பண்டாரவளை
ஸாஹிராக் கல்லூரியில் அரும்பணியாற்றிக் கொண்டிருந்த எம்.சீ.எம்,ஸுபைர் அவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியைப் பற்றியும் இலக்கிய முயற்சிகளைப் பற்றியும் பண்டாரவளைப் பிரதேசத்தின் சுத்தமான சுவாத்திய நிலைகளைப் பற்றியும் கலந்துரை யாடியமை இன்றும் பசுமையாக ஞாபகம் இருக்கிறது.
அவ்வேளையில்தான் தான் நடத்திக் கொண்டிருந்த "மணிக்குரல் எனும் சஞ்சிகையில் அமிர் அலியும் நானும் எழுத வேண்டும். என அவர் வலியுறுத்தினார். அதன் விளைவாகவே, 1964 ஜனவரி இதழில் எனது முதலாவது சிறுகதையான 'கடன் தீர்ந்தது வெளிவந்தது. அச்சிறுகதையை இன்றும் சிறந்ததொன்றாகக் கருதி 1989ம் ஆண்டு மார்கழி இதழில் "முனைப்பு" பத்திரிகை மறு பிரசுரம் செய்துள்ளது.
மணிக்குரலின் ஆசிரியராக 30 வருடங்களுக்கு முன்னர் அறிமுகமான கவிமணி அவர்களின் ஆக்கங்கள் அனைத்தையும், அன்றிலிருந்து இன்றுவரை வாசித்து வருகின்றேன். பண்டைய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களுக்கு அவர் உரை எழுதியிருக்கிறார். வானொலி நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தியிருக்கிறார். பலரது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். இஸ்லாம். இஸ்லாமிய வரலாறு. இஸ்லாமிய இலக்கியம் பற்றிய விளக்கக் கட்டுரைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். எனினும், ஒரு கவிஞ ராக, குறிப்பாக குழந்தைக் கவிஞராகவே தாம் அவரைப் பார்ப்பதில் மிகவும் பெருமையடைகிறோம்.
இலக்கியத் துறையில் மிகவும் கரிசனையோடு வளர்க்கப்பட வேண்டியவைகளுள் ஒன்று குழந்தை இலக்கியமாகும்.1950-60களில் தென்னிந்தியாவிலிருந்து குழந்தை இலக்கியப் பிரசுரங்கள் பல இலங்கைக்கு வந்தன. பிரபல சஞ்சிகைகள் கூடச் சிறுவர்களுக்கான ஒரு பகுதியை ஒதுக்கியிருந்தன. அழ. வள்ளியப்பா தமது "பூஞ்சோலை" என்கின்ற சஞ்சிகையை சிறுவருக்காகவே நடத்தியதோடு, தனிப்பாடல் திரட்டுக்களையும் வெளியிட்டார்.
இக்காலத்திலேதான் பாடசாலை மாணவர்களுக்கு உபயோகப்படக் கூடிய வகையில் இலங்கையில் "மணிக்குரல்" வெளி வந்தது. மாணவருக்கான பல விடயங்களை அது கொண் டிருந்ததோடு. அவர்களின் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கான களத்தையும் அமைத்துக் கொடுத்தது.
இவ்வகையில் 1980களின் நடுப்பகுதியில் வெலிகம வாரிஸ் அலி மௌலானா வெளியிட்ட 'கலைச்சுடர்' மாணவ சஞ்சிகையையும் நினைத்துப் பார்க்கின்றேன். கவிமணி சுபைர் பல நூல்களை வெளியிட்டதன் மூலம் இலங்கையின் இலக்கிய வரலாற்றில் தமக்கென நிரந்தர இடமொன்றைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். மலர்ந்த வாழ்வு, காலத்தின் குரல்கள், பிறைத்தேன் (தொகுப்பு). மலரும் மனம். எங்கள் தாய்நாடு, கண்ணான மச்சி என்பன அவரை வரலாற்றில் பதித்து விட்டன.
ஓர் எழுத்தாளனது பங்களிப்பும் நாமமும் நிரந்தரமாக இருக்க வேண்டுமாயின் அவனது ஆக்கங்கள் நூலுருப் பெறல் வேண்டும். அவன் இறந்த சில தசாப்தங்களின் பின்னர், ஆய்வாளர்களினால் தேடிப் பெறக் கூடியது நூல்கள் மட்டுமே ஆகும். பத்திரிகையில் வெளிவரும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள், விமர்சனங்கள் என்பன அவை வெளிவரும் காலத்தில் ஓர் எழுத் தாளனைப் பிரபல்யமாக்கும். சஞ்சிகைகளில், நினைவு மலர்களில் வெளிவருகின்ற கட்டுரைகள் குறுகிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பினும், பத்திரிகையில் வெளிவருவனவற்றை விட ஆயுள் கூடியன. ஆயினும் காலக்கிரமத்தில் அவையும் மறைந்து விடும். நூலுருவில் வெளிவருபவை மட்டுமே பிற்சந்ததியினருக்கு நிரந்தரச் சொத்தாய் இருக்கும். எழுத்தாளர்களின் நாமத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கும். எனவே, எழுத்தாளர் அனை வரும் தமது ஆக்கங்களை நூலுருவில் விட்டுச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளல் மிக அவசியமாகும்.
கலாசார சமய அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர்,
அல்ஹாஜ்.எஸ்.எச்.எம். ஜெமீல்
Tags:
“ஈழத்துக் கவிமணி" சுபைர்