1956ம் ஆண்டில் நான் மாத்தளை சாகிரா கல்லூரியில் ஒன்பதாவது வகுப்பிலே படித்துக் கொண்டிருந்த போது கவிஞர் எம்.சி.எம்.ஸுபைர் அவர்களின் ஆக்கங்களில் ஒன்றான "மலர்ந்த வாழ்வு" எனும் குறுங்காவியத்தை முதன் முதலாகப் படித்தேன். அதனை பெருமளவுக்கு ரசிக்கவும் செய்தேன். அறுபதுகளின் ஆரம்பத்தில். பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது ஸுபைர் வெளியிட்ட "மணிக்குரல்" இதழ்கள் சிலவற்றை வாசித்தேன். அப்போது ஸுபைர் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டிலிருந்து 1970ம் ஆண்டு வரை கவிஞர் ஸுபைர் அவர்களின் சொந்த ஊரான கல்ஹின்னயில் ஆசிரியராகப் பணியாற்றினேன்.
அக்கால கட்டத்தில்தான் ஸுபைரோடும் அவரது குடும்பத் தினரோடும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதுதான் ஜனாப் ஸுபைர் அவர்களின் உயர்ந்த பண்பு களையும் பன்முகப்பட்ட இலக்கியப் பணிகளையும் பெருமளவிற்கு உணர்ந்தேன். ஸுபைரைப் பற்றி ஓர் உயர்வான மதிப்பு என் இதயத்தில் பதிந்து விட்டது.
ஆங்கில. தமிழ் நூல்களை வாசிப்பதில் மாத்திரமே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்த நான், 1993ம் ஆண்டு எழுத்துத் துறைக்குத் தள்ளப்பட்டேன். அவ்வாண்டில் மாத்தளையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவையொட்டி மாத்தளை மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றை எழுதும் பொறுப்பு என் மீது சுமத்தப்பட்டது.
நானும், பெரும் பொறுப்புணர்ச்சியோடு அப்பணியைச் செய்து முடித்தேன். "மாத்தளை மாவட்ட முஸ்லிம்கள்" என்ற எனது முதல் நூல் எனக்குத் தந்த ஆத்ம திருப்தியும் அதற்குக் கிடைத்த பெரும் வரவேற்பும் மேலும் பல நூல்களை எழுத வேண்டும் என்ற ஆவலை என் மனதில் ஏற்படுத்தி விட்டன. எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன் நான் கவிஞர் ஸுபைரைப் பற்றி ஆய்வுகள் செய்ய ஆரம்பித்து விட்டேன். காரணம், அந்தளவு அவரைப் பற்றிய உயர் எண்ணம் ஒன்று என் மனதில் ஏற்பட்டிருந்தது.
Tags:
“ஈழத்துக் கவிமணி" சுபைர்