கல்ஹின்னை ஜாமிஅத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரி தோற்றமும் வளர்ச்சியும்.

கல்ஹின்னை ஜாமிஅத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரி தோற்றமும் வளர்ச்சியும்.

 இக் கட்டுரை கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ் ஷெய்ஹ் : M .S .M . ரஸ்ஸான்  அவற்களினால் 2013-ம் ஆண்டு அறிவுச்சுடர் சஞ்சிகைக்கு எழுதப்பட்ட கட்டுரையிலிருந்தும், வேறு பல நூல்களிலிருந்தும் தொகுத்து எடுக்கப்பட்டதாகும்.  



அமைவிடம் :

 ஈழத் திரு நாட்டின் மத்திய மலை நாட்டில் , மத்திய மாகாணத்தில். கண்டி மாவட்டத்தில், ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் , பூஜாபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அழகிய கிராமமே கல்ஹின்னைக் கிராமமாகும். புவி அமைவின்படி இக்கிராமம் 7. 2434 ° முதல் 7. 4096 ° வரை வட அகலக்  கோட்டிலும், 80. 3400 ° முதல் 80. 5679 வரை கிழக்கு நெடுங்கோட்டிலும் அமைந்துள்ளது . சர்வதேச நேரக்  கணிப்பீட்டின்படி கிரீன்விச் நேரத்துக்கும் ( G M T ) இக்கிராமத்துக்குமான நேர வித்தியாசம்  + 5.30 நிமிடங்களாகும். இக்கிராமம் வெப்பவலயத்தில் அமைந்துள்ளபோதிலும் வருடம் முழுவதும் தொடர்ச்சியான  மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. பிரதான நகரங்களான கண்டி,மாத்தளை,குருணாகலை நகரங்களிலிருந்து முறையே 16 KM , 17.5 KM , 41 KM  தொலைவில் கல்ஹின்னை அமைந்துள்ளது

 

 இக்கிராமம் கடல் மட்டத்திலிருந்து 675 மீட்டர் ( 2215 அடி ) உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கை அழகு மிக்க இக்கிராமத்தில் 18-ம் நூற்ராண்டிலேயே முஸ்லிம்கள் குடியேற ஆரம்பித்தனர். தற்போது அண்ணளவாக 24000 மக்கள் இங்கே வாழ்கின்றனர்.கல்வித்துறையிலும், சன் மார்க்க நெறி தவறாது வாழ்வதிலும் இக்கிராம மக்கள் மேம்பட்டவர்களாகக் காணப்பட்டனர் . 

அன்று வாழ்ந்த எம் முன்னோர்கள் சிறந்த இறை நேசர்களாகவும், இஸ்லாமியப் பண்பாடு தவறாது வாழ்ந்த மேன்மக்களாகவும் காணப் பட்டனர்.மறுமைக்கான விழை நிலமே இவ்வுலகம் என்னும் சித்தாந்தத்தினை அணுவளவும் பிசகாது பின்பற்றினர். இங்கு வாழ்ந்த உலமாக்கள் மக்களை நேர்வழியில் இட்டுச் சென்றனர். இதன் விளைவாக 1892-ம் ஆண்டிலேயே குர்ஆன் மத்ரஸா ஆரம்பிக்கப் பட்டது. சிறந்த இஸ்லாமிய நெறிமுறைகளைப் பரப்புவதிலும். பின்பற்றுவதில் எம் முன்னோர்களும், உலமாக்களும் தீவிரமாக முயற்சி செய்தனர். அதன் விளைவா உருவாக்கப் பட்டதே "மத்ரஸதுல் பத்தாஹ் "எனும் கலாபீடமாகும். 

மத்ரஸதுல் பத்தாஹ் கல்லூரியின் தோற்றம். 

எமதூர்ப் பெருந்தகைகள் பலர் இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்த பல அரபுக்கல்லூரிகளில் கற்று உலமாக்களாக வெளியேறினர். மேலும் பலர் வெலிகமை மத்ரஸதுல் பாரி முதலிய பல்வேறு இலங்கை மத்ரஸாக்களில்  கற்று உலமாக்களாயினர் .  கல்ஹின்னை S .M .M. ஜுனைத் ஆலிம், A .C.M .இஸ்மாயில் ஆலிம் முதலியோர் வெலிகமை மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியில் கல்வி கற்றதால் எமதூருக்கும் மத்ரஸதுல் பாரி அரபிக் கல்லூரியின் அதிபர்  A .R .M .ஸகரிய்யா மௌலவிக்குமிடையே நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவரைப் போன்ற  மார்க்க      அஞர்களின் முயற்சியால் எமதூரில் சன்மார்க்க விழிப்புணர்ச்சியும், எழுச்சியும் உண்டாயிற்று. எமது உலமாக்களும் ஊர் மக்களும் கல்ஹின்னையில் ஓர் அரபுக் கல்லூரி அமைக்கப் படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்தனர். வெலிகமை மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியின் அதிபரும், கல்ஹின்னைக்கு அடிக்கடி வந்து சென்றவருமான A .R .M . ஸக்கரியா ஆலிம் இந்தப் பணியில் எமக்குத் துணையாக 

நின்றார் . இதன் விளைவாக எம்மவர்களின் பெருமுயற்சியால் 1949-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு மத்ரஸதுல் பத்தாஹ் அரபிக் கல்லூரியின் ஆரம்ப விழா நடைபெற்றது. மர்ஹூம்: ஸக்கரியா அவர்களே மத்ரஸாவுக்கான பெயரினை தெரிவு செய்ததோடு, விழாவின் முக்கிய அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். ஏராளமான இஸ்லாமிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள், கொடை வள்ளல்கள், பரோபகாரிகள், ஊர் மக்கள் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

மர்ஹூம் ஸக்கரியா ஆலிம் அவர்களே உள்ளூரைச் சேர்ந்த பத்து மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து மத்ரஸாவை முறைப்படி ஆரம்பித்து வைத்தார்." கல்ஹின்னையின் வரலாற்றில் இன்றைய நாள் ஒரு பொன்னாளாகும். இக்கலாபீடத்தினை உங்கள் கண்கள் போன்று பாதுகாத்துக் கொள்ளுங்கள் . இதன் வளர்ச்சியில் உங்கள் கிராமத்தின் பெருமையும், முன்னேற்றமும் தங்கியுள்ளது. இதன் பொருட்டால் உங்கள் கிராமத்துக்கு அல்லாஹ்வின் அருள்மாரி பொழியும்"என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அந்த உருக்கமான உரையைக் கேட்ட ஏராளமான மக்கள் தமது சொத்துக்களில் ஒரு பகுதியை மத்ரஸதுல் பத்தாஹ் அரபுக் கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்தனர். கடைகள், காணிகள் முதலிய இன்னோரன்ன சொத்துக்கள் இக்கலாசாலைக்கு வக்ப் செய்யப்பட்டன . ஏராளமான தனவந்தர்கள் மாதந்தோறும் பணமாகவும் அன்பளிப்புச் செய்தனர். 1949-ம் ஆண்டு முதல் இன்றுவரை எமதூர் பெருந்தகைகள் இந்த மத்ரஸாவுக்காகத்  தமது அசையும், அசையாத சொத்துக்களையும் , பணத்தை அன்பளிப்புச் செய்து கொண்டே இருக்கின்றனர். மத்ரஸாவுக்கு வக்ப் செய்யப்பட்ட சொத்துகளிலிருந்து கிடைக்கும் வருமானம் இன்றும் கூட அதன் செலவில் ஒருபகுதியை ஈடு செய்கின்றது . இந்த மத்ரஸாவினை ஆரம்பிக்கும் பணியில் கல்ஹின்னை Y M M A  பெரும் பங்கு வகித்தது. ஆரம்ப விழாக் கூட முற்றாக அவர்களின் ஒத்துழைப்புடனேயே நடாத்தப் பட்டது.

கலாசாலையின்  பெயர் : 

ஆரம்பிக்கப்படவுள்ள அரபிக் கல்லூரிக்கான பெயரினை தெரிவு செய்வதற்கான கருத்துக்கள் பெறப்பட்டபோது, வெலிகமை ஸக்கரியா ஆலிம் அவர்கள் பரிந்துரைத்த மத்ரஸதுல் பத்தாஹ் என்ற பெயரை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதனால் ஆரம்பம் முதல் 1985-ம் ஆண்டு வரை எமது மத்ரஸாவின் பெயர் மத்ரதுல் பத்தாஹ் என்றே வழங்கலாயிற்று. M .C .A .திக்ருல்லாஹ் மௌலவி அவர்கள் அதிபராகப் பதவி வகித்த காலப் பகுதியில்,நிருவாக சபைக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி  1985-02-01-ம் திகதி முதல் கல்லூரியின் பெயர் ஜாமிஅத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரி என்று மாற்றியமைக்கப்பட்டது. கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களும் அபிவிருத்தியும் ஏற்பட்டது. அரபு நாடுகளிலுள்ள ஏதாவதொரு இஸ்லாமியப் பல்கலைக்கழகத்துடன் கூட்டிணைப்பினை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப் பட்டு வருகிறது.

மத்திய மாகாணத்தில் முதன் முதல் ஆரம்பிக்கப்பட்ட அரபுக் கல்லூரியாகவும், இலங்கையின் பழம் பெரும் அரபிக் கல்லூரிகளில் ஒன்றாகவும் மத்ரஸதுல் பத்தாஹ் அமைந்திருப்பது நாம் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். கல்ஹின்னையின் ஆன்மீக வளர்ச்சியில் இதன் பங்கு அளப்பரியது.இங்கே கல்வி பயின்ற ஏராளமான உலமாக்கள் நாட்டின் பலபகுதிகளி இஸ்லாமிய பணியில் ஈடுபட்டு கலாசாலைக்குப் 

பெருமை தேடித்தந்து கொண்டிருக்கின்றனர். இக்கலாசாலை ஆரம்பம் முதல் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையில், அல் குர்ஆனினதும் , அஸ்ஸுன்னாவினதும்  வழியில் சுன்னத் வல் ஜமாஅத் கோட்பாடுகளைப் பின்பற்றி வருகுகிறது.  இமாம் ஷாபி அவர்களின் ஷாபி மத்ஹபே இதன் மூலமாக அமைந்துள்ளது. இக் கலாபீடம் புனித அல் குர்ஆன்,  அல் ஹதீஸ் ஆகிய இஸ்லாத்தின் மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பது இதன் யாப்பின் அடிப்படை அமசமாகும். 

இக்கலாசாலை அமைக்கப்பட்டதன் நோக்கம் :

1. அல் குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களை உருவாக்குதல் .

2. நல்லறிவும்,இறையச்சமும் கொண்ட உலமாக்களை உருவாக்குதல்.

3. அரபு மொழி ஆற்றலை விருத்தி செய்தல் .

4. ஒழுக்கமும் பண்பாட்டு விழுமியங்களும் கொண்ட, இஸ்லாமிய வழியில் வாழும் உயர்ந்த சமுதாயத்தை உருவாக்குதல். 

5. சுன்னத் வால் ஜமாஅத் கோட்பாட்டினை ஊக்குவித்துப் பாதுகாத்தல் .

6. இஸ்லாத்தின் ஏகத்துவக் கோட்பாட்டைப் பரப்புவதும் , பிரச்சாரம் செய்ய்வதும் .

7. அல் குர்ஆனின் வழியில் இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையில் பிளவற்ற சமூகமா எமது சமூகத்தைப் பாதுகாத்தல்.

8. முஸ்லிம்கள் எதிர் நோக்கும் மார்க்க,உலக விவகாரங்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு அல் குர்ஆன் , ஹதீஸின் வழியில் தீர்வை வழங்குதல் .

ஜாமிஅத்துல் பத்தாஹ் அரபுக் கல்லூரி தனது குறிக்கோள்களை அடைவதற்குப் பல துறைகளிலும் செயலாற்றிக் கொண்டு வருகிறது . அதற்கான பல்வேறு விழாக்களை நடாத்தி வருகிறது.

1. உலமாக்கள்,குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களுக்கான பட்டமளிப்பு விழா.

2. ஹஜ்,உம்றா கடமைகளை நிறைவேற்றச் செல்பவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடாத்துதல் . 

3. நான்கு மாதங்களுக்கொருமுறை மாணவர்களின் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகளை நடாத்துதல் .

4, இஸ்லாமியப் பத்திரிகைகள், நூல்களைப் பிரசுரித்தல்.

5. கலாசாலை மட்டத்திலும், தேசீய மட்டத்திலும் கலாச்சாரப் போட்டிகளை நடாத்துதல்.

6. வருடாந்த ரமழான் மாதச் சொற்பொழிவுகள், ஹதீஸ் மஜ்லிஸுகளை நடாத்துதல்.

7. உலமாக்களுக்கும்,மாணவர்களுக்கும் இஸ்லாம், அரபு மொழி முதலியவற்றில் பயிற்சி நெறிகளை நடாத்துதல்.

8. மக்களின் தேவைக்கேற்ப மார்க்க வழிகாட்டல் வகுப்புகளை நடாத்துதல்.

கலாசாலையின் பதிவு ( Registration )விவரம் :

இக் கலாபீடம் இலங்கை மக்கள் அனைவரினதும் அங்கீகாரத்தையும் நன் மதிப்பையும் பெற்ற ஓர் இஸ்லாமியக் காலநிலையமாகும். அத்தோடு அரச நிறுவனங்களில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1.இலங்கை முஸ்லீம் சமய, கலாச்சார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் : Registration No: MRCA /13 /1 /AC /25

2.அகில இலங்கை அரபுக் கல்லூரிகளின் ஒன்றியன்      Registration No: FSAC/ CP /KY /B /HS /105

3.இலங்கைக் கல்வியமைச்சு Registration No: PS /20 /2 /451

படிப்படியான உட்கட்டமைப்பின் அபிவிருத்தி 

மத்ரஸத்துல் பத்தாஹ் அரபிக் கல்லூரி 1949-11-20-ம் திகதி 10 மாணவர்களுடன் ஆரம்பித்தபோது அதற்குப் பிரத்தியேகமான கட்டிடம் எதுவும் இருக்கவில்லை. கல்ஹின்னை ஜும்ஆப் பள்ளியின் மேல் மாடியிலேயே மத்ரஸா இயங்கியது. ஓராண்டு காலத்துக்குள் அதற்குத் தனியான கட்டிடம் ஒன்று அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. மர்ஹூம்களான : M .A .M . காஸீம் ஹாஜியார் , அல்ஹாஜ்:  A .O .M . அப்துல் ஹமீத் ஆலிம் ,  A .O .M. சாலிஹ் ஹாஜியார் ஆகிய மூவரினதும் முயற்சியினாலும், அவர்களின் அன்பளிப்புக்களினாலும், ஊர் மக்களின் நன்கொடைகளினாலும் ஓராண்டு காலத்துக்குள் ஜும்மாப் பள்ளியோடு இணைந்துள்ள காணியில் மத்ரஸாவுக்கெனத் தனியான கட்டிடம் ஒன்று உருவாக்கப்பட்டது. அடுத்த 30 வருட காலத்துக்கு அந்தக் கட்டிடத்திலேயே எமது கலாசாலை இயங்கியது. 

காலம் செல்லச் செல்ல உள்ளூர்,வெளியூர் மாணவர் தொகை படிப்படியாக அதிகரித்தது. அதனால் புதிதாகக் கட்டிடங்கள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 50 மாணவர்கள் தங்கி நின்று கற்கக் கூடிய வசதியுள்ள  70' X  20' அளவு கொண்ட மூன்று மாடிக்கு கட்டிடம் ஒன்றும், 25' X  21' அளவு கொண்ட இரண்டு மாடிக்கு கட்டிடம் ஒன்றும் அமைக்கப் பட்டு  1981-ம் ஆண்டில் திறந்து வைக்கப் பட்டு மாணவர்களின் பாவவனைக்காக ஒப்படைக்கப் பட்டது. அக் காலப் பகுதியில் கடமையாற்றிய மத்ரஸா நிர்வாகக் குழுவின் முயற்சியே இந்தக் காரியம் வெற்றி பெற உதவியாக இருந்தது. தொடர்ந்து மத்ரஸாவுடன் இணைந்த 35 பேர்சஸ் காணி மத்ரஸாவுக்கு வக்பு செய்யப்பட்டது. இதன் மூலம் மத்ரஸாவை மேலும் விஸ்தரிப்பதற்கு வழி ஏற்பட்டது . குர்ஆன் மனனம் செய்வதிலும் , மார்க்கக் கல்வியைப் பெறுவதிலும்  மக்களுக்கு மேலும் மேலும் ஆர்வம் ஏற்பட்டதால் மத்ரஸாவின் மாணவர் தொகையில் அதீத அதிகரிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக 2009-ம் ஆண்டு மேலும் கட்டிடங்களை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. புதிய கட்டிட நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதற்காக மத்ரஸாவின் ஷரீஆப் பிரிவும், ஹிப்ழ்  பிரிவும் தற்காலிகமாக அல் ஹாஜ் : A .R . அப்துஸ்ஸமீஹ், அல் ஹாஜ் :N .M . நசார் ஆகியோரின் வீடுகளின் ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டது. 

அல் ஹாஜ் : M .H .அப்துல் ரஹீம் அவர்களின் நினைவாக அவர்களின் பிள்ளைகளால் , 200 மாணவர்கள் தங்கித் தமது மார்க்கக் கல்வியைக் கற்கக்  கூடிய வசதிகளுடன் 29000 சதுர அடி  பரப்பளவினை கொண்ட நவீன ஆறு மாடிக்கட்டிடம் அமைக்கப் பட்டது.ஏற்கனவே இருந்த கட்டிடங்கள் புனர் நிர்மாணம் செய்யப் பட்டன. 

இவ்வாறு அமைக்கப்பட்ட கண்கவரும் ஆறு மாடிக்கு கட்டிடம் 2012-02-04-ம் திகதி மீலாத் தினத்தில், மக்காவிலுள்ள ஹரம் சரீபில் வைத்து மத்ரஸாவுக்கு வக்ப் செய்யப் பட்டது. சகல வசதிகளும் கொண்ட, அனைவரையும் வியப்படைய வைக்கும் அந்த நவீன கட்டிடம் 2012-02-05- ம் திகதி மிகவும் எளிய முறையில் திறந்து வைக்கப்பட்டது. அல்லாஹ் அவர்களுடைய வக்பினை ஏற்றுக் கொண்டு அதன் பிரதிபலனை அவர்களுக்கு வழங்குவானாக . இந்த விதத்தில் ஒரே இடத்தில் சகல வசதிகளும் கொண்ட பிரமாண்டமான ஒரு அமைப்பாக ஜாமிஅதுல் பத்தாஹ் மாறிற்று. இலங்கையிலுள்ள பழமையான, சகல வசதிகளும் கொண்ட ஓர் மிகப் பெரும் கலா நிலையமாக எமது ஜாமிஅத்துல் பத்தாஹ் தோற்றமளிப்பது எமக்குப் பெருமையாகும். இப்போது பாடசாலையில் கற்பிக்கப்படும் பாடங்களும் இக்கலா நிலையத்தில் கற்பிக்கப்படுவது ஒரு சிறப்பு அமச்சமாக்கும்.  

கலா நிலையத்தின் அதிபர்கள் :

1. அல் ஹாஜ் : A .L . யூசுப் (பஹ்ஜி ) 1949 முதல் 1965 வரை 
2. அல் ஹாஜ் : N .M .M .ஹாஷீம் ( பாகவி )1966 முதல் 1976 வரை 
3. அல் உஸ்தாத்: M .I . அப்துஸ்ஸமத் ( பஹ்ஜி )1976 முதல் 1978 வரை 
4. அல் ஆலிம்: M .A .C .திக்ருல்லாஹ்  ( பத்தாஹி ) 1981 முதல் 1988 வரை 
5. அல் ஹாஜ் : M .O .பத்ஹுர் ரஹ்மான் ( பஹ்ஜி )1988 முதல் 1989 வரை 
6. அல் ஆலிம்: M .N .M . இஸ்ஹாக்  ( பஹ்ஜி )1990 முதல் 1998 வரை 
7. அல் ஆலிம்: M .S .M . ரஸ்ஸான் ( ஹசனி) 1998 முதல் இன்று வரை 

ஷரீஆப் பிரிவின்வளர்ச்சி: 

2013-ம் ஆண்டுவரை 69 பேர் இக்கலாசாலையில் கற்றுத்தேர்ந்து மௌலவிகளாக வெளியேறியுள்ளனர்.இவர்கள் பலர் அரபு மொழிக்கவிஞர்களாகவும், அறிஞர்களாகவும் காணப்பட்டனர். இவர்கள் பல்வேறு நாடுகளில் இஸ்லாமியச் சர்வகலாசாலைகளில் கற்றுத் தேறியுள்ளனர் . மேலும் பலர் பாடசாலைகளில் ஆசிரியர்களாகவும் , அரபுக் கல்லூரிகளில் முக்கிய பொறுப்பாளர்களாகவும்,பள்ளிவாயில்களில் இமாம்களாகவும் சேவை செய்கின்றனர்.

மத்ரஸதுல் பத்தாஹ் அரபிக் கல்லூரியின் ஆரம்ப  அதிபர்களாகக் கடமையாற்றிய அல் ஹாஜ் : A .L .M .யூசுப் ,  அல்  ஹாஜ் : N .H .M .ஹாஷீம் ( முன்னாள் அமைச்சர் அல் ஹாஜ் : M .H .A . ஹலீம் அவர்களின் தந்தை ) முதலியோர்  கலாசாலையின்  

வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு உழைத்தனர்.1976 முதல் 1978 வரை இக்கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய பேரறிஞர், உஸ்தாத் M .I . அப்துஸ்ஸமத் அவர்களின் காலப் பகுதியில் கலாசாலையின் கல்வித்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. இதுவரை எமது கல்லூரி மாணவர்கள் இங்கே கல்வி கற்றாலும் இறுதியில் வேறு அரபிக் கல்லூரிகளில் சேர்ந்தே தமக்கான மௌலவிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டனர். காரணம் இக்கல்லூரி அரசாங்கத்தில் முறையாகப் பதிவு செய்யப்படாமையாகும். இதனை மாற்றியமைத்து எமது கலாசாலையை முறையாகப் பதிவு செய்து 1978-ம் ஆண்டில் முதலாவது அல் ஆலிம் மௌலவிகளுக்கான பட்டமளிப்பு விழா மத்ரஸதுல் பத்தாஹ் அரபிக் கல்லூரியில் வெகு விமரிசையாக நடாத்தப்பட்டது. இக்காலப் பிரிவில் மத்ரஸா கல்வியில் புரட்சிகரமான மாற்றங்கள் செய்யப்பட்டன . அதன் விளைவாக மாணவர் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டதோடு ,எமது பாடசாலை மாணவர்கள் மாலை நேரவகுப்புகளில் சேர்ந்து ஷரீஆ கல்வியைக் கற்க ஆரம்பித்தனர். 

எமதூரைச் சேர்ந்த உலமாக்களான அல் ஹாஜ் : A .C .M .இஸ்மாயில்.அல் ஹாஜ் :M .H .M .ஷரீப் போன்றோருடன் அல் ஆலிம்களான M .M .M .நூருல்லாஹ்,,  M .Y .M . மகீன் முதலியோரும்  கலாசாலைன் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றினார். அப்துஸ்ஸமத் அவர்களைத் தொடர்ந்து உஸ்தாத், M .A .C. திக்ருல்லாஹ் கலாசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றார்.இவரது காலம் கலாசாலையின் வரலாற்றில் பொற்காலமாகக் கருதப் படுகிறது. கலாபீடத்தில் ஏற்பட்ட கல்வி விழிப்புணர்ச்சியின் காரணமாக அயலூர்களிலுள்ள மதரஸாக்களில் கல்வி கற்ற மாணவர்கள் வியாழன் வெள்ளி ஆகிய தினங்களில் இங்கே வந்து பயின்றதோடு கல்விப் பரிமாற்றம் ஏற்பட வழி  செய்தனர். ஜாமிஅத்துல் பத்தாஹ்வின் இரண்டாவது அல் ஆலிம் பட்டமளிப்பு விழா 1986/04/27-ம் திகதி நடைபெற்றது. காலிக் கோட்டை அல்  பஹ்ஜதுல் இப்ராஹிமிய்யா  அரபுக் கல்லூரியின் அதிபர் H .M .அஜ்வாத் மௌலவி  பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். கலாசாலையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்த அதிபர் திக்ருல்லாஹ் அவர்கள் 1988-06-04-ம் திகதி கல்லூரியிலேயே இறையடி சேர்ந்தமை எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். 

திக்ருல்லாஹ் அவர்களின் மறைவைத்தொடர்ந்து அல் ஆலிம் M .O .பத்ஹுர்ரஹ்மான் அவர்கள் 1988 முதல் 1989 வரை ஜாமிஆவின் அதிபராகக் கடமையாற்றினார். 1989-ம் ஆண்டில் கல்லூரியின் மூன்றாவது பட்டமளிப்புவிழா நடைபெற்றது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் முதன் முறையாக கல்ஹின்னையைச் சேர்ந்த A .R . அப்துஸ் சமீஹ் என்பவர் அல் ஆலிம் பட்டம் பெற்றது விஷேட அமச்சமாகும் . தொடர்ந்து அல் ஆலிம்  M .M .இஸ்ஹாக்  1990 முதல் 1998 வரை அதிபராகக் கடமையாற்றினார். இக்காலப் பிரிவில் அல் ஆலிம்களான   M .H .ஸியாத் , M .H .M .கலீல் ,   M .M .A .இம்தியாஸ்,M .Y .M .மில்ஹான் ,H .M .M .ரியால் முதலியோர் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றினார். சுகவீனம் காரணமாக  அதிபர்   M .M .இஸ்ஹாக்  அவர்கள் பதவி விலகிக் கொள்ளவே முதன் முறையாக கல்ஹின்னையைச் சேர்ந்த அல் ஆலிம் M .S .M . ரஸ்ஸான்  1998-08-20- ம் திகதி அதிபராகப் பொறுப்பேற்றார். அன்று முதல் இன்றுவரை அவரே அதிபராகக் கடமையாற்றிக் கலாநிலையத்தைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். 

அல் ஆலிம்களான J .M . கப்யான், J .M .ரஸீன் .M .G .M .ஹுஸைன் முதலியோர் வெவ்வேறு காலப் பகுதிகளில் விரிவுரையாளர்களாகவும், அல் ஆலிம்களான M .M . ஸிராஜுதீன் M .N .M .றிபாத் , A.A .M .காமில் முப்தி முதலியோர் பகுதி நேர விரிவுரையாளர்களாகவும் கடமை புரிந்தனர் . M .S .M .ஸலாஹுதீன் ஆசிரியர் கலாபீடத்தின் கணக்காளராக பதினொன்றரை வருடங்கள் பணி புரிந்தார் .

கலாபீடத்தின் கல்விப் பிரிவுகள் .

1.  ஷரீஆ, அரபு மொழிப்பிரிவு 
2.  அல் குர்ஆன் மனனப் பிரிவு
3.தேசியக்  கல்வித் பிரிவு  

01 ஷரீஆ அரபு மொழிப்பிரிவு :

இக்கலாபீடத்தில் காணப்படும் கல்விப் பிரிவுகளில் மிகப் பெரியதும் , முக்கியமானதும் ஷரீஆ, அரபு மொழிப்பிரிவாகும். இப்பிரிவின் கற்கை நெறிக்காலம் ஏழு வருடங்களாகும். இக்காலம் பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளது.

முதல் நிலை       - ஒரு வருடம் 
நாடு நிலை         - இரண்டு வருடங்கள் 
உயர் நிலை        - இரண்டு வருடங்கள் 

கல்லூரி நிலை   - இரண்டு வருடங்கள் 

இந்த நான்கு கால கட்டங்களிலும் பூர்த்தியான பாடவிதானத்தின் கீழ் புனித அல் குர்ஆன் விரிவுரை, தொனி , சாஸ்திர அறிவு, புனித அல் குர்ஆனின் அடிப்படை அறிவு, அல் ஹதீஸ், அல் ஹதீஸ் அடிப்படை அறிவு , இஸ்லாமியச் சட்டக்கலை .சட்டக்கலை அடிப்படை அறிவு, இஸ்லாமியச் சட்டக்கலையின் பொது விதி, அனந்தர அறிவு, நிலவியல், விண்ணியல், இஸ்லாமிய வரலாறு,நபி (ஸல் ) அவர்களின் சரிதை, ஏகத்துவக் கொள்கை,ஒழுக்கவியல், அரபு மொழி, பாடல் புனைதல் , தர்க்க சாஸ்திரம், சொல்வன்மைக் கலை, அரபு இலக்கணம், அரபு சொல் இலக்கணம், அரபு இலக்கியம் போன்றவற்றை உள்ளடக்கியதாக  மற்றும் அறிவிப்புச் சார்ந்த அனைத்து அறிவும் போதிக்கப்படுகின்றன.  

02. புனித அல் குர்ஆன் மனனப் பிரிவு  :

நீண்ட வரலாற்றைக் கொண்ட இக் கலாபீடத்தில் புனித அல் குர்ஆன் மனனப் பிரிவானது 2003-01-20 - ம் திகதி நான்கு மாணவர்களைக் கொண்டு, அதிபர்  M .S .M . ரஸ்ஸான் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 2013-ம் ஆண்டுவரை 23 மாணவர்கள் அல்  குர் ஆனை மனனம் செய்து முடித்தனர். 2013 பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 37 மாணவர்களுடன் சேர்த்து இவ்வெண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. தற்போது இலங்கை முழுவதையும் சேர்ந்த 90 மாணவர்கள் இப்பிரிவில் கல்வி பயில்கின்றனர். இப்பிரிவில் கற்பித்தல் வழிகாட்டல் பிரிவில் 05 உஸ்தாதுமார்கள் 

கடமைபுரிகின்றனர். எமது கலாபீடத்தின் ஷரீஆ ,மற்றும் அரபு மொழிப்பிரில் கல்வி கற்கும் மாணவர்களில் அதிகமானவர்கள் இக்கலாபீடத்திலேயே அல் குர்ஆனை மனனம் செய்து முடித்து ஹாபிழ்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களுள் முதலாவது ஹாபிழ் கல்ஹின்னையைச் சேர்ந்த M .N .M . முஸம்மில் என்ற மாணவராவார். அவர் 2005-05-01-ம் திகதி  அல் குர்ஆனை மனனமிட்டு முடித்தார். இப்பிரிவு துவங்கப்பட்டது முதல் கண்டியைச் சேர்ந்த அல் ஹாபிழ் A .C .M . ஸகீ, கல்ஹின்னையைச் சேர்ந்த அல் ஹாபிழ் M .N .M . இம்ரான். திகனையைச் சேர்ந்த அல் ஹாபிழ்  M .S .M .பர்ஹான், கலேவெலை அல் ஹாபிழ் M .T .M . இக்ரம், உளப்பனை அல் ஹாபிழ்  M .Z .M . அஸ்ஹர் ஆகியோர் பல்வேறு காலப் பகுதிகளில் உஸ்தாதுமார்களாகக் கடமையாற்றினர்.

மேலும் இப்பிரிவு மாணவர்கள் தேசிய,சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டிகளில் கலந்து இக்கலாபீடத்துக்கும், நாட்டுக்கும் கௌரவத்தையும், பெருமையையும் தேடித் தந்துள்ளனர். குறிப்பாக 2009-ம் ஆண்டு எகிப்திலும், 2010-ம் ஆண்டில் டுபாயிலும்  நடைபெற்ற போட்டிகளில் கலந்து கலாசாலைக்குப் பெருமை தேடித்தந்தனர்.

03. தேசிய கல்வித் பிரிவு :

இப்பிரிவானது மாணவர்கள் அல் குர்ஆன் மனனப் பிரிவிலும், ஷரீஆ மற்றும் அரபு மொழிப்பிரிவிலும் இக்கலாபீடத்தில் தங்கிக் கற்கும் காலத்தில் இலங்கை அரசின் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் நான்கு பரீட்சைகளுக்கும் அவற்றுக்கான பாடத்திட்டத்தினைக் கற்பித்து ,வழிகாட்டி அவர்களை அப் பரீட்சைகளுக்குத் தயார்படுத்துவதாகும்.

பரீட்சைகளாவன :    

1. அல் ஆலிம் நடுநிலைச் சான்றிதழ் பரீட்சை.
2. அல் ஆலிம் உயர் நிலைச் சான்றிதழ் பரீட்சை 
3,க.பொ. த. ப (  சாதாரண தர ) பரீட்சை 
4. க.பொ .த .ப ( உயர் தர ) பரீட்சை 

மேலும் மாணவர்கள் தமது சமூகத்திலும்  தேசிய, சர்வதேசி தஃவாக் களத்திலும் அத்தியாவசியமாக உணரப்படும்  அரபு, ஆங்கிலம், உருது, சிங்களம், தமிழ் மொழிகளின் அறிவினை முழுமையாக வளர்த்துக் கொள்ளவும் இப்பிரிவு பயிற்சி அளிக்கும்.  

இப்பிரிவின் கற்கை நெறியானது, அல் குர்ஆன் மனனப் பிரிவிலிருந்து ஆரம்பமாகி , ஷரீஆ மற்றும் அரபு மொழிப்பிரிவின் இறுதி வருடம்வரைத் தொடரும். அரசப்  பாடசாலைகளின்  தரம் 05 தொடக்கம் தரம் 07 வரைக்குமான மூன்று வருடங்களுக்குரிய கலைத் திட்டம் புனித அல் குர்ஆன் மனனப் பிரிவிலும், தரம் 08 தொடக்கம் தரம் 11 வரைக்குமான நான்கு வருடங்களுக்குரிய பாட விதானம் ஷரீஆ மற்றும் அரபு மொழிப்பிரிவிலும் போதிக்கப்படும் . 

ஷரீஆ மற்றும் அரபு மொழிப்பிரிவு மாணவர்கள் 4-ம் வகுப்பில் க.பொ .த .ப . சாதாரண தரப்பு பரீட்சைக்குத் தோற்றுவர் . இப் பரீட்சையில் போதுமான தராதரத்தைப் பெற்றுச் சித்தியடைந்தால் 5-ம், 6-ம் வகுப்புகளில் க .பொ .த. ப . உயர்தரப் பரீட்சைக்குரிய பாடத் திட்டத்தைப் படித்து முடித்து 06-ம் வகுப்பில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற வழி செய்யப்படும். 2011/2012 க. பொ .த .ப . சாதாரண தரப் பரீட்சைகளில் முறையே 87%   மும் 100% மும் சித்தியடைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க அமச்சமாகும். அல் ஹம்துலில்லாஹ் .

அல் ஆலிம் நடுநிலை, மற்றும் உயர்நிலைச் சான்றிதழ் பரீட்சைகளுக்குரிய பாடவிதானங்களில் பெரும்பாலானவை கலாபீட பாடவிதானத்தில் இடம் பெறுவதாலும் , தேவைப்படும்போது  கௌரவ உஸ்தாதுமாரின் வழிகாட்டல், உதவிகள் மாணவர்களுக்கு கிடைக்கப் பெறுவதாலும் அவர்கள் மேற்படி இரு பரீட்சைகளுக்கும் சுயமாகவே ஆயத்தமாவார். அதற்கமைய அல் ஆலிம் நடுநிலைச் சான்றிதழ் பரீட்சைக்கு 05-ம் வகுப்பிலும், அல் ஆலிம் உயர்நிலைச் சான்றிதழ் பரீட்சைக்கு 07-ம் வகுப்பிலும் தோற்றுவர் . புனித அல் குர்ஆன்  மனனப் பிரிவு, ஷரீஆ மற்றும் அரபு மொழிப்பிரிவு , தேசிய கல்வித் பிரிவு ஆகியவற்றின் பூரண பாட விதானத்தின் மூலம் மாணவர்கள் சம காலத்தில் ஆத்மீக, லௌகீக  கல்விகளைப் பெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

" யார் தனது காலத்தையுடையவர்கள்  பற்றி அறியவில்லையோ அவர் அறிவீனர் ஆவார் " என்ற மார்க்க அறிஞர்களின் கூற்றுக்கு அமைய மேற்படிப் பரீட்சைகளுக்குரிய பாடங்களை  இக் கலாபீடம் தனது மாணவர்களுக்குச் சேர்த்து வழங்குவதானது, உயிரோட்டமுள்ள மார்க்க அறிவினையும், தற்காலத்துக்கான நவீன அறிவினையும் சுமந்தவர்களான இஸ்லாமிய அழைப்பாளர்களை உருவாக்குவதற்காகும்.இதனால் அவர்கள் தாம் வாழும் காலத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்வர். இப்பிரிவில் கற்பிப்பதற்காககப் பயிற்றப்பட்ட எட்டு ஆசிரியர்கள் ஒவ்வொரு வாரமும்  கலாபீடத்திற்குச் சமூகமளிக்கின்றனர்.

04. புனித அல் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படைக்                                
கற்கைகளுக்கான நிறுவனம் :

இது கிழமை நாட்களில் பி.ப. 3.00 மணிமுதல் 5.15 மணிவரை நடைபெறும். இரு வருடங்களை உள்ளடக்கியதான பகுதி நேர மாலை வகுப்புகளைக் கொண்ட நிறுவனமாகும். புனித இஸ்லாத்தின் போதனைகளை வாழ்வில் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பின்பற்றி நடக்கும் முன்மாதிரியான இறையச்சமுள்ள சிறார்களை, மாணவர் சமுதாயத்தையும் உருவாக்கி அவர்களினூடாக குடும்பங்களில் இஸ்லாமியப் பண்பாட்டினை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்த்து 09 வயதினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கென 2011-01-27-ம் திகதி இந்நிறுவனம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த காலத்தில் பூர்த்தியானதொரு கலைத்திட்டத்தின் கீழ் புனித அல் குர்ஆனைச் சரியாக ஓதுதல், தஜ்வீத் , இஸ்லாமிய அடிப்படை அறிவுகள் ,நபி மொழிகள், இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கை, இஸ்லாமிய சட்டக்கலை,நபிகளின் வரலாறு போன்றவை இவர்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன் புனித அல் குர்ஆனில் தெரிவு செய்யப்பட்ட முக்கிய சில சூறாக்களை மனமிட வைக்கப்படுகின்றனர் . தற்போது சுமார் 50 மாணவர்கள் இதில் கற்கின்றனை

05 . பெண்களுக்கான தஃவா அகடமி :

இது ஊரிலுள்ள தாய்மார், சகோதரிகளின் இஸ்லாமிய அறிவை விருத்தி செய்து, இறையச்சமுள்ள  பண்பான குடும்பங்களைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு 2009-10-28-ம் திகதி உருவாக்கப்பட்டது. ஒரு வருடப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இங்கு குர்ஆன், தஜ்வீத் , அகீதா, பிக்ஹ் , நபி வரலாறு உள்ளிட்ட பாடங்கள் நடாத்தப்படுகின்றன. இப்பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்களுக்கு நிறைவில் தராதர பாத்திரமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்காலப் பகுதியில் இரு மாதங்களுக்கொருமுறை தலைசிறந்த உலமாக்கள் அழைக்கப்பட்டு தர்பியா முகாம்களும் நடாத்தப்படுகின்றன. தற்போது இந்த அகடமியில்  80 பேர் கற்றுக்கொண்டிருக்கின்றனர். வாரத்தில் ஒரு நாள் திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் 11.30 வரை இவர்களுக்கான பாட நேரமாகும். 2010,2011,2012  - ம் வருடங்களில் முறையே110,104,85 பேர் இக்கற்கை நெறியினைப் பூர்த்தி செய்துள்ளனர்.

06 கணணிப் பிரிவு :

மாணவர்கள் தமது கணனி அறிவினை மேம்படுத்திக்கொள்ளத்  தேவைப்படும் அதி நவீன உபகரணங்களுடன் இப்பிரிவு 2012-05-12-ம் திகதி அல்லாஹ்வின் பேருதவியால் நிறுவப்பட்டது. இப்பிரிவில் கற்பதற்கான  வாய்ப்பு  ஷரீஆ மற்றும் அரபு மொழிப்பிரிவு 5, 6, 7 - ம் தரங்களில் கற்கும் மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது.  இப்பிரிவுக்கான பாட நெறியானது பிரதி வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் இரண்டு மணித்தியாலங்கள் நடத்தப்படுவதுடன், வாரத்தில் இரண்டு நாட்கள் குறிப்பிட்ட நேரம் பயிற்சிகள் பெறுவதற்கான சந்தர்ப்பமும் கணனிப்பிரிவி உஸ்தாதின் கண்காணிப்பில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்காக வழங்கப்படும் கணனிக் கற்கை நெறிகள் பின் வருமாறு அமையும்

Diploma in Information Technology ( DIT )

Diploma in Desktop Publishing & Graphic Designing ( DICA )

Diploma in Computerized Accounting and Bookkeeping ( DICA )

இக்கற்கை நெறியின் இறுதியில் நடாத்தப்படும் எழுத்துப் பரீட்சையிலும்  செயல்முறைப் பரீட்சையிலும்  மாணவர்கள் சித்தியடையும்போது இக்கற்கை நெறிக்கென சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட டிப்ளமோ சான்றிதழ் அவர்களுக்கு வழங்கப்படும்.  

07 சிறார்களுக்கான மக்தப் கற்கை நெறி  :

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  சிறார்களுக்குப் புனித அல் குர்ஆனை ஓதக்  கற்றுக் கொடுக்கவும், இஸ்லாமிய அடிப்படைக் கற்கை நெறியை வழங்கவும் " மக்தப்" எனும் பெயரில் புதிய பாடவிதானமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பிரதிகள் மதீனா, லண்டன் , தாய்லாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கும் மேலும் சில இஸ்லாமிய நாடுகளுக்கும் விஜயம் செய்து அங்கு சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படும் பாடவிதானங்களை நன்கு அவதானித்து வந்து ஐந்து பாகங்களில் இப்புதிய பாடவிதானத்துக்குரிய பாடப் புத்தகத்தைத் தயாரித்தது அறிமுகப்படுத்தினர்.

" மஆரிபுல் வஹி " எனும் பெயர் கொண்ட  குறித்த பாட நூல் இஸ்லாமியச் சிறுவர்களுக்குத் தேவையான அடிப்படை இஸ்லாமிய அறிவுகளான புனித அல் குர்ஆனை ஓதுதல், அரபு எழுத்துக்களைச் சரியாக உச்சரித்தல்,  தஜ்வீத் , பரிசுத்த ஹதீஸ், அன்றாடம் ஓதவேண்டிய துஆக்கள் , இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கை,            நபி ( ஸல் ) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாமியப் பொது அறிவு, அரபு மொழி உள்ளிட்ட இன்னும் பல அம்சங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.

அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்களுக்குச் சேவையாற்ற விரும்பும் எமது கலாபீடம் 2013 -ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஐந்து வயது நிரம்பிய கல்ஹின்னைக் கிராமச்  சிறார்களுக்கு அல்லாஹ்வின் பேருதவியால், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மேற்பார்வையின் கீழ், அதன் உயர்ந்த எதிர் பார்ப்புக்களை நோக்காகக் கொண்டு இந்த மக்தபை நடாத்தத் தீர்மானித்தது. திங்கட் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை ஒன்றரை மணித்தியாலம் நடாத்தப்படும் இக்கற்கை நெறி ஐந்து ஆண்டுகளைக்  கொண்டதாகும். தற்போது எமதூரின் பல பகுதிகளையும் சேர்ந்த சுமார் 60 சிறார்கள் மூன்று வகுப்புகளில் கற்று வருகின்றனர்.

ஆசிரியர் குழாம் :

மாணவர்களுக்குக் கல்வி வழிகாட்டல்களையும், தர்பியாக்களையும் கிடைக்கச் செய்வதில்  இக்கலாபீடம் அனுபவங்களும்,  அறிவியல் திறன்களும் கொண்ட தூய்மையான தமது முழு முயற்சியையும் , அதற்கென வழங்கிப் பாடுபடும் உஸ்தாதுமார்களையும்  கொண்டுள்ளது. இக்கலாபீடத்தைத் தேசிய, சர்வதேச ரீதியில் உயர்த்துவதற்காக அவர்கள் அதிபருக்குத்  தோள்கொடுத்துத் துணையாகவிருந்து  உழைக்கின்றனர்.விடா முயற்சி செய்கின்றனர். 

கலாபீடக் கல்வித்துறை ஆசிரியர் குழாமின் விவரம் பின் வருமாறு :

இஸ்லாமிய ஷரீஆ மற்றும் அரபு மொழிப்பிரிவு :

அல் ஆலிம் : M .S .M . ரஸ்ஸான் ( அதிபர் ), 

அல் ஆலிம் : M .H .M . ரிஸான் ,                                       

அல் ஆலிம் : M .M .M . ரிழ்வான்,    

அல் ஆலிம் : M .H .M . அன்பாஸ் ,                                                  

அல் ஆலிம் : M .H .M . ரிமாஸ்  

அல் ஆலிம் : M .F.சப்ரான்

புனித அல் குர்ஜனாப் : ஆன் மனனப் பிரிவு :

அல் ஹாபிழ் : M .T .M.யாஸிர் , 

அல் ஹாபிழ் : M .K .M.இர்ஷாத் ,                                                              

அல் ஹாபிழ்: M .R . இன்ஆமுல் ஹஸன்,         

அல் ஹாபிழ் : M .S .M.சியாஸ் 

புனித அல் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படை கற்கைகளுக்கான நிறுவனம் :

அல் ஆலிம் : M .F .M . ரஸான்   

தேசிய கல்வித் பிரிவு :

அல் ஆலிம்: A .W .M .ரஸீன் , 

ஜனாப் : A .A .M .இக்ரம் .

 ஜனாப் : A .R .M . முர்ஷித் ,                             

ஜனாப் : A .M . அனஸ் ,    

 ஜனாப் : A .L .M ரிஸ்மின்,

 ஜனாப் :  M .H .M.ஸியாத் ,                   

ஜனாப் : M .M.M.யாஸீன்

கணனிப் பிரிவு :

ஜனாப்: M .T .M .நளீம் 

மார்க்கத் தீர்ப்பு மற்றும் இஸ்லாமிய ஆய்வு ஆராய்ச்சிக்கான மையம் :

அல்லாஹ்வின் உதவியினால் இம்மையம் 2004 -ம் ஆண்டு கலாபீட 

அதிபர் அல் ஆலிம்: M .S .M . ரஸ்ஸான் அவர்களினால் ஸ்தாபிக்கப்பட்டது.

இஸ்லாமிய அறிவியல் துறைகளில் குறிப்பாகவும், முஸ்லிம் சமூகமத்தேவை காணும் இதற துறைகளில் பொதுவாகவும், காலத்தின் கட்டாயத் தேவையாகக் கருதப்படும் அறிவுசார் ஆய்வுகளைத் தயாரித்தலும், பிரசுரித்தலும் அதன் முக்கிய சிறப்புப் பணிகளில் உள்ளதாகும். இக்கலாபீடத்தின் உஸ்தாதுமார்கள் அதன் பட்டதாரி மாணவர்களின் திறமைகளை ஆய்வு, மற்றும் எழுத்துத்  துறைகளில் வெளிப்படுத்துவதற்குரிய வசதியான மைதானமாக கருதப்படும் இம்மையத்தின்மூலம் பல நூல்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் மேலும்  பல நூல்கள் பிரசுரிக்கப்படவுள்ளன.  

கலாபீடத்தின் நூலகம் :

கலாபீடங்களுக்கெனத் தனியான நூலகங்கள் அமைவது மிகவும் இன்றியமையாத தேவையாகும். இத்தேவை அரபுக் கல்லூரிகளில் பரவலாகவே காணப்படுகிறது. உடலுறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் இன்றியமையாதது போல, கல்லூரிகளுக்கென  நூலகங்கள் அமைவது முக்கியமானதாகும். மேலும் கல்லூரி நூலகங்களை மனிதனது புத்திக்கு ஒப்பிடலாம்.மனிதனுக்கு எவ்வாறு சிந்தனை தேவையோ அதுபோலவே கல்லூரிகளுக்கும்  நூலகங்கள் தேவை. சிந்தனா சக்தியை  இழந்த மனிதனிடம் எந்த நலவும் கிடையாது என்பது போல, நூலகத்தை இழந்த கல்லூரியும் உடல் இருந்தும் உயிரற்றதாகவும், அர்த்தமற்றதாகவும் ஆகிவிடுகின்றது .

மேற்கூறப்பட்ட சிந்தனைக்கமைய எமது கலாபீட நூலகத்தை கலாபீட உஸ்தாதுமார்கள், மாணவர்கள், ஏனைய உலமாக்கள் அனைவரும் பொதுப் பிரயோசனம் பெறும் வகையில் மேலும் முன்னேற்றுவதற்கான  மிகுந்த தேவை உள்ளது. " மனிதன் மரணித்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன. அவை நிலையான தருமம் ( ஸதகத்துல் ஜாரியா ), பயன் பெறப்படும் கல்வி, அவனுக்காகப் பிரார்த்திக்கும் அவனுடைய நல்ல குழந்தைகள் என்பன" என்று நபி ( ஸல் ) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்) 

ஆகவே அல்லாஹ் அருளியுள்ள அருட் கொடைகள் மூலம் இப்பாரிய நற்காரியத்தில் பங்கு கொண்டு, பல துறைசார்ந்த நூல்களைக் கொண்ட, நாட்டின் தலை சிறந்த நூலகமாக எமது நூலகத்தை மாற்றியமைக்க முன்வருமாறு இஸ்லாமிய உறவுகளை எதிர்பார்க்கிறோம். அல்லாஹ் அவர்களை ஈருலகிலும் பொருந்திக் கொள்வானாக. நாளை மறுமை நாளில் அர்ஷுடைய நிழலை வழங்கி கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் பிரவேசிக்கச் செய்வானாக. மேலும் நேரத்தின் பெறுமதியைக் கருத்திற் கொண்டு 

கலாபீட நூலகத்திலிருந்து இலக்கு வழியில் பிரயோசனம் பெறுவதற்கும், குறுகிய நேரத்தில் நூல்களைத் தேடிப்  பெற்றுக்கொள்வதற்கும்,  பல்வேறுபட்ட பயன்களை விரைவாக அடைந்துகொள்வதற்கும், அது தற்போது கணனிமயப் படுத்தப்பட்டுள்ளது. கணனியில் நூலின் பெயரைப் பதிவு செய்தால் அந்நூலது முழுப்பெயர், தொகுப்பாளர்,பக்கங்களின் எண்ணிக்கை,தலைப்பு, வெளியிட்டோர், நூலகத்தின் அலுமாரிகளில் எவ்விடத்தில் அந்த நூல் உள்ளது போன்ற முழு விவரங்களையும் அவசரமாக எவருக்கும் பெற்றுக்  கொள்ளலாம்.

எமது நூலகத்தில் அனைத்து நூல்களையும் உள்ளடக்கிக்கொண்டதாக ஓரளவு அரபு நூல்கள் இருக்கின்றன.  அல் குர்ஆன் அடிப்படை அறிவு,அல் ஹதீஸ், அல் ஹதீஸ் அடிப்படை அறிவு, அல் ஹதீஸ் புலனாய்வுக் கலை , இஸ்லாமிய சட்டக் கலை, சட்டக் கலை அடிப்படை அறிவு, இஸ்லாமிய வரலாறு, நபி ( ஸல் ) அவர்களின் சரிதை ஏகத்துவக் கொள்கை , சமயங்களும் கொள்கைகளும், சொல்வன்மைக் காலை, அரபு இலக்கணம் , அரபு இலக்கியம்போன்ற பெரும் தலைப்புக்களில் நூல்கள் காணப்படுகின்றன.

இவை தவிர தமிழ், ஆங்கிலம், சிங்களம்,உருது மொழி மூல இஸ்லாமிய மற்றும் பொது அறிவு நூல்களும், அரபு, இஸ்லாமிய நாடுகளில் வெளியாகும் மாதாந்த, வாராந்தச் சஞ்சிகைகளும் , அரபு மொழிப பத்திகைகளும், பல் துறை சார்ந்த நூல்களும் எமது நூலகத்தை அலங்கரிக்கின்றன. நிச்சயமாக நூலகங்கள் கல்வியைப் பரப்புவதில் சமூகம் தேவைக்காணும் ஊடகங்களில் மிக முக்கியமானவையாகும். எமது கலாநிலைய நூலகத்தைப் பயன்படுத்துவோர் தமது வாசிப்பு, ஆய்வு, ஆராய்ச்சித் திறன்களை மென்மேலும் வளர்த்துக்கொள்ளவும் பயனளிக்கும் ஆய்வு நூல்களை இஸ்லாமிய உம்மத்திற்கும், அனைத்து மக்களுக்கும் தொகுத்து வழங்கவும் அதிகமான நூல்கள் எமக்குத் தேவைப் படுகின்றன என்பதை மீண்டும் நினைவு படுத்திக் கொள்கிறோம்.

கலாநிலையத்தின் எதிர்காலத்திட்டங்கள் :

எமது கலாபீடம் ஸ்தாபிக்கப்பட்ட காலத்தைப் பொறுத்து அது பழமைவாய்ந்ததொரு கலாபீடமாகக் காணப்பட்டாலும், அதன் கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் மேலும் முன்னேற்றப் பாதையில் அது பயணிக்க வேண்டியுள்ளது . எனவே கலாபீடத்தின் எதிர்காலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும்  அமுல்படுத்துவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கும் பட்சத்தில் கலாபீடம் அதன் மேலான சேவைகளை பல துறைகளிலும் விஸ்தரிக்கும்.

எமது கலாபீடத்தின் முக்கிய எதிர்காலத் திட்டங்கள் :  

1. கலாபீட நூலகத்தை அரபு, இஸ்லாமிய மற்றும் துறைசார்ந்த நூல்களைக் கொண்டு விஸ்தரித்தல்.

2. தப்ஸீர், ஹதீஸ், இஸ்லாமிய சட்டவாக்கல்  துறை , இஸ்லாமிய ஏகத்துவம் உட்பட நிபுணத்துவம் பெறக்கூடிய கல்வித் பிரிவுகளை அமைத்தல்.

3.நவீன வசதிகளுடன் கூடிய கருத்தரங்கு , மாநாட்டு மண்டபம் ஒன்றை அமைத்தல் 

4. நவீன வசதிகளுடன் கூடிய மொழி ஆய்வுகூடம் ஒன்றை அமைத்தல்.

5. ஆசிரியர்களுக்கான விடுதிகளை அமைத்தல்.

6. பிரத்தியேக மருந்தகம் ஒன்றை அமைத்தல் .

7.பிரத்தியாக பேக்கரி ஒன்றை அமைத்தல்.

எமது இத்திட்டங்களை சதகத்துல் ஜாரிஆ என்னும் நிரந்தர  தர்மத்தின் கீழ்  பங்கு பற்ற தூய்மையான நல்லுள்ளம் படைத்தவர்களை  எமது கலாபீடம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அந்தவகையில் இஸ்லாமிய உறவுகள் யாராயினும் இத்திட்டங்களுள் ஏதாவதொன்றை தீன் மணம் வீசும் இக்கலாபீடத்திற்குச் செய்து கொடுக்க முன்வந்தால் எமது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ள தொடர்பாடல் சாதனங்களில் ஏதேனும் ஒன்றின் மூலம் கலாபீட நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

10-ம் 11-ம் பட்டமளிப்பு விழாக்கள் :

இக்கலாபீடத்தின் 10 வது பட்டமளிப்பு விழா 2007-05-01 -ம் திகதியும் 11 வது பட்டமளிப்பு விழா 2008-08-24-ம் திகதியும் நடைபெற்றன . 10-வது பட்டமளிப்பு விழாவில் மூவர் ஆலிம்களாகப் பட்டம் பெற்றனர். தற்போது இவர்கள் மூவரும் எகிப்து அல் அஸ்ஹர் சர்வகலாசாலையில் பட்டதாரிகளாகப் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர். குறித்த விழாவில் 15 மாணவர்கள் ஹாபிழ்களாகப் பட்டம் பெற்றனர். இவர்களில் 12 பேர் கல்ஹின்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவின் சிறப்பம்சம்  பின்வருமாறு:

பிரதம அதிதியாக தென் இந்தியாவின் அல் அஸ்ஹரிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர் அல் ஆலிம்: M .A . முஸ்தபா அவர்களும் , தாருல் உலூம் அரபுக்கல்லூரி ஆசிரியர் : மௌலானா ஷா ஆலம் அவர்களும் , வேறு பல உள்நாட்டு வெளிநாட்டு அறிஞர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

கீழ் குறிப்பிடப்பட்ட மூன்று அரபு நூல்கள் வெளியிடப்பட்டன .

"அஸ்ஸிராஜுல் வஹ்ஹாஜ் பீ  பயானி இஸ்திலாஹாதில் மின்ஹாஜ் " மௌலவி : M .A .M . ரஸான் 

" ழியாபதுல்  அனாம் பிதக்ரீபி மன்ளுமதி அகீததில் அவாம் " அல் ஆலிம்: M .H .M . ரிஸான் 

" அத்துஹுபதுஸ்   ஸனிய்யா பிதக்ரீபி ஜாமிஅதில் பத்தாஹ் அல் அரபிய்யா லித்திராஸாத்தில் இஸ்லாமிய்யா "  ( கலாபீட அறிமுகம் பற்றிய நூல் )

2012-ம்  ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டமை .

2009-ம் ஆண்டுப் பட்டமளிப்பு விழா:

அக்குறணை ஜாமிஆ ரஹ்மானியாவின் முன்னாள் அதிபரும் பௌஸிய்யா அரபுக் கல்லூரியின் தலைவருமான  அல் ஆலிம்: A .C .முஹம்மத் ஜிப்ரி அவர்கள் பிரதம அதிதியாகப் பங்குபற்றிச் சிறப்பித்தார்.  எமது கலாபீடத்தின் 2009-ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவைப் பொறுத்தவரையில் அதில் ஐவர்  ஆலிம்களாகவும், எட்டுப் பேர் ஹாபிழ்களாகவும் பட்டம்பெற்றனர். ஆலிம்களாகப் பட்டம் பெற்றவர்களில் நால்வர் கல்ஹின்னையைச் சேர்ந்தவர்கள் என்பது சிறப்பு அமசமாகும் . ஆலிம்களாகப் பட்டம் பெற்றவர்கள் தற்போது தமது உயர் படிப்பினை முடித்துள்ள நிலையில் மூவர் இக்கலாபீடத்தின் உஸ்தாதுமார்களாகச் சிறப்பாகக் கடமை புரிகின்றனர். மற்ற இருவரும் வெளியூர் மதரஸாக்களில் கடமை புரிகின்றனர். 

இவ்விழாவில் இலங்கைக்கான எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத் தூதுக்கு குழுவின் தலைவர் : அஷ் ஷெய்ஹ் முஹம்மத் ஸலாமா ஹஸன் இமாம் அவர்கள், மர்ஹூம் அல் ஹாஜ் : H . ஸலாஹுதீன் அவர்கள் , திஹாரி அல் ஹசனிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர்  அல் ஆலிம் : A. L .M . ரிழா அவர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அல் ஆலிம்: M .I .M . ரிஸ்வி முப்தி அவர்கள் உட்பட  நாடறிந்த உலமாக்களும் பெரியார்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

குறித்த விழாவில் கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அல் ஆலிம்: M .H .M .ரிஸான் அவர்கள் எழுதிய  " அல்மஸ்லக்குல் பஸீஹ பீ தஃரீபி  மிஷ்காத்தில் மஸாபீஹ் " என்னும் நூல் வெளியிடப்பட்டது விழாவின் முக்கிய அமச்சமாகும் .

2013 -ம் ஆண்டு பட்டமளிப்பு விழா:

கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கல்லூரியின் 12 வது பட்டமளிப்பு விழா 2013-09-01-ம் திகதி கல்ஹின்னை ஜும்ஆப் பள்ளிவாயிலில் நடைபெற்றது. பிரதம அதிதியாக திஹாரி அல் ஹஸனிய்யா அரபுக் கல்லூரி அதிபர் : A .L .M . ரிழா அவர்களும், விசேட அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அல் ஆலிம்:       M .I .M . ரிஸ்வி முப்தி  அவர்களும், விஷேட சொற்பொழிவாளராக தென் இந்தியா மதுரை ஜாமிஆ ரைஹான் அரபுக் கல்லூரியின் முதல்வர் அல் ஆலிம்: M .A .முஸ்தபா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவில் 19 உலமாக்களுக்கும் , 37 ஹாபிழாக்களுக்கும் பட்டம் வழங்கப் பட்டது. பின்வரும் அரபு மொழி மூலமான நூல்கள், கலாபீடத்தின்  மார்க்கத் தீர்ப்பு மற்றும் இஸ்லாமிய ஆய்வு, ஆராய்ச்சிக்கான மையத்தினால் வெளியிடப்பட்டன. 

" கஷ்புல் கவாமிழ் அன் துரூஸில் பராயிழ் " அல் ஆலிம் : H .M .அன்பாஸ் 

" வஸீலதுர்ருமாத் இலா இஃராபி மத்னி ஸபீனத்தின் நஜாத் பில்பிக்ஹிஷ் ஷாபீஈ  " ( 2010-ம் ஆண்டு மூன்றாம் வகுப்பு மாணவர்கள் ).

" மன்ளுமது மதனி ஸபீனத்தின் நஜாத் " அல் ஆலிம் : M .N .M .நஸ் ரீன் 

" பத்ஹுல் அலிய் பிதல்கீஸி ஷர்ஹில் மஹல்லி " ( அல் ஆலிம் : A .L .M .யாஸிர் , 
அல் ஆலிம் ; M .N .M . முஸம்மில் )

அல் ஆலிம்:  M .N .M .நஸ் ரீன் , 

அல்லாஹ் இந்த ஜாமிஅதுல் பத்தாஹ் என்னும் எங்கள் கண்ணிலும் மேலான அரபுக் கல்லூரியின் மூலம் முழு உலகிலும் வாழும் மக்கள் ஹிதாயத்தைப் பெற்றுக்    கொள்ளவும் , இஸ்லாத்தின் ஜோதியை உலகெங்கும் பரவவும் வழி செய்யவானாக . அனைத்து தீனுடைய கருமங்களையும் உலகம் உள்ள அளவும் மனித சமுதாயத்துக்கு வழங்கும் தலமாக இதனை ஆக்கி அருள்வானாக . இதற்காக உழைத்தவர்களுக்கும், இக்கலாபீடத்துக்காகத் தம் சொத்துக்களையும், பணத்தையும் சதகா செய்தவர்களுக்கும், இதன் மேன்மைக்காக அயராது பாடுபட்டவர்களுக்கும், இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் இம்மையில் உயர்ந்த அந்தஸ்தையும், மறுமையில் ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் சுவனபதியையும்  வழங்கி அருள்வானாக. ஆமீன்.

இக் கட்டுரை கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ் ஷெய்ஹ் : M .S .M . ரஸ்ஸான்  அவற்களினால் 2013-ம் ஆண்டு அறிவுச்சுடர் சஞ்சிகைக்கு எழுதப்பட்ட கட்டுரையிலிருந்தும், வேறு பல நூல்களிலிருந்தும் தொகுத்து எடுக்கப்பட்டதாகும்.  

மத்ரஸதுல் பத்தாஹ் அரபுக் கல்லூரித்  திறப்புவிழா அழைப்பிதழ்

Galhinna Young Men’s Muslim Association                                                                                                                                 

786

கல்ஹின்னை அரபி மத்ரஸா திறப்பு விழா அன்புடையீர் !எங்கும் நிறைந்திலங்கும் அல்லாஹ்வின் திருவருளை  முன்னிட்டு  ஹிஜ்ரி 1369-ம் ஆண்டு முஹர்றம் மீ  28 ந்  திகதி ( 20 - 11 - 49 ) ஞாயிற்றுக்கிழமை பி.ப. 2-30 மணியளவில் 

வெலிகம அல் ஹாஜ் மௌலானா மௌலவி  சகரிய்யா ஆலிம் சாஹிப்   அவர்களின் தலைமையின் கீழ் 
ஓர் விழா மத்ரஸா மண்டபத்தில் நடைபெறும்.

அவ்வமயம் மார்க்க அறிஞர்கள் அரிய பெரிய பிரசங்கங்கள் நிகழ்த்துவார்கள். முஸ்லிம் சகோதரர்கள் யாவரும்  தவறாது சமுகம் தந்து, எமது விழாவைச் சிறப்பித்து ஏகுமாறு அன்புடன் வேண்டுகிறோம் .

மத்ரஸாவில் ஆரம்பமுதல் " தஹ்சீல் " வரை  கல்வி போதிக்கப்படும். அன்று முதல் உள்ளூர் மாணவர்களும் ,    ஓர் குறிப்பிட்ட அளவான வெளியூர் மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் .

அஸ்ஸலாமு அலைக்கும். 
இங்ஙனம் 
M .H .M . ஜலால்தீன் 
கௌரவ காரியதரிசி
சித்துமின- கண்டி

1950-02-05-ம் திகதியிடப்பட்ட  6081 இலக்க வக்ப்  ஒப்பினை 

1950-02-05-ம் திகதி கண்டி பிரசித்த நொத்தாரிஸ் M .A .S . மரிக்காரினால் உறுதி செய்யப்பட்ட 6081-ம் இலக்க  வக்ப் ஒப்பினை எமது ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தின் பிறப்புச்சாட்சிப் பாத்திரம் என்றே கூறவேண்டும். எமது கலாபீடம்           1949-11-20-ம் திகதி உருவாகி மூன்றே மாதத்துக்குள் அதன் பிறப்பைப் பதிவு செய்வதைப் போன்று அக் கலாபீடத்தின் விவரங்களைக் கொண்ட மேற்படி வக்ப் ஒப்பனையை உறுதிசெய்து காணிப்பதிவுக் காரியாலயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவரின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தைக்  கச்சேரியில் பிறப்பு இறப்புப் பதிவுக் காரியாலயத்தில்  எப்படிப் பெற்றுக்கொள்ள முடியுமோ அதேபோன்று மேற்படி வக்ப் ஒப்பினையையும் எவரும் கண்டிக் கச்சேரியில் காணிப் பதிவுக்கு காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

அனைத்துப் பிறப்புச் சாட்சிப் பத்திரத்திலும் ஒவ்வொருவரினதும் தாய், தந்தையர் யார் எனும் விபரம் குறிக்கப்பட்டுள்ளதுபோல ஜாமிஅதுல் பத்தாஹ் கலாபீடத்தின் தாய் தந்தையர் யார் என்பது மேற்குறிப்பிடப்பட்ட வக்ப் ஒப்பினையைப் பார்க்கும்போது  தெட்டத்தெளிவாக விளங்கும். அவ்வொப்பினையின்படி  ஜாமிஅத்துல் பத்தாஹ்  கலாபீடத்தின் தாய் தந்தையர் அனைத்து கல்ஹின்னை மக்களுமே ஆவர். இது எங்கள் அனைவருக்குமே சொந்தமான பொதுச் சொத்து என்பதே உண்மை.

மேற்படி ஒப்பினையில் நான்கு அட்டவனைகள் உள்ளன. தனவந்தர்களும்,குடும்பங்களும் தனித்தனியாக இக்கலாபீடத்திற்கு அன்பளிப்புச் செய்த சொத்துக்கள் இவ்வட்டவனைகளில் அடங்கியுள்ளன . முதல் அட்டவணையில் விபரிக்கப்பட்டுள்ள சொத்து ஊர் மக்களால் கலாபீடத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட கண்டி மாநகரசபைச்  சந்தியில்  அமைந்துள்ள சொத்தாகும். இச் சொத்தை  A .O . அப்துல் ஹமீத் ஆலிம் அவர்கள் ஊர் மக்களால் அன்பளிப்புச் செய்த பணத்தைக் கொண்டு வாங்கி, ஊர் மக்களின் வேண்டுகோளின்படி இக்கலாபீடத்திற்கு வக்ப் செய்யப்பட்டுள்ளதாக மேற்படி வக்ப் ஒப்பினை  தெளிவாக்க கூறுகிறது. அது மட்டுமின்றி ஊர் மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதல் அட்டவனையிலேயே  ஊர்மக்களால் அன்பளிப்புச் செய்த சொத்து விபரிக்கப்பட்டுள்ளது.

ஊர் மக்களால் செய்யப்பட்ட  அன்பளிப்புக்களைக் கொண்டு வாங்கப்பட்ட சொத்து என்று கூறும்போது ஊர்மக்கள் அனைவரும் அதில் பங்குகொண்டுள்ளனர் என்பது தெளிவு. எமது ஊரில் இப்படி ஒரு விடயத்திற்கு பள்ளியிலே உண்டியல் வைத்துப் பணம் சேர்ப்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. உண்டியலைப் பள்ளியிலே வைத்து அது சம்பந்தமாகப் பள்ளியில் அறிவித்தல் கொடுத்ததைத் தொடர்ந்து மிக்க கஷ்டத்தில்  வாழ்ந்த  ஏழை எளிய மக்களும் கூட ஐந்து சதமேனும் உண்டியலில் இட்டு எமது  கலாபீடச் சொத்தை வாங்குவதில் பங்குகொண்டனர். எனவே இது எங்கள் அனைவரினதும், முழு ஊர் மக்களினதும் சொத்தாகும். இது எங்கள் கண்கள். இதைப் பார்ப்பதும்,பாதுகாப்பதும் , வளர்ப்பதும் எங்கள் கடமை மட்டுமல்லாது, அது எங்கள் உரிமையும் கூட.

எமதூர்ப் பெரியார்களான A .O . அப்துல் ஹமீத் ஆலிம், A .O.M . ஸாலிஹ் ஹாஜியார், சட்டத்தரணி    A .O .M . ஹுஸைன் , S .M . ஷரீப் ஹாஜியார், ஸைனுதீன் லெப்பை ஆகியோர் உட்பட கல்ஹின்னையின் கடந்தகால வளர்ச்சிக்கு வலுவூட்டியவர்களுள் ஒருவரும்,  கல்ஹின்னையின் அல்பத்தாஹ் அரபுக் கல்லூரியை உருவாக்கியவர்களுள் மிக முக்கியமானவருமான M .A .M . காஸீம் ஹாஜியார் அவர்களும், இந்த சரித்திர முக்கியத்துவம்வாய்ந்த வக்ப் ஒப்பினையில் கையொபபமிட்டுள்ளார்கள்.  அதுமட்டுமன்றி எங்கள் ஊருடனும், எங்கள் கலாபீடத்துடனும் மிக நெருங்கிய தொடர்புகொண்டிருந்த வெலிகமை மத்ரஸதுல் பாரி அரபுக் கல்லூரியின் அதிபரான அல் ஹாஜ் : A .R.M . ஸகரிய்யா அவர்கள் இந்த வக்ப் ஒப்பினையில் முதற் சாட்சியாகக் கையொப்பமிட்டு, இவொப்பினையை அலங்கரித்து, அதைச் சரித்திர முக்கியத்துவம் பெற்றதொன்றாக ஆக்கியுள்ளார்.

அனைத்து ஊர் மக்களினதும் சொத்தான இந்தக் கலாபீடத்தைப்  பரிபாலிப்பதற்காக    M .A .M . காஸீம் ஹாஜியார், S .M . ஷரீப் ஹாஜியார் , A .O .M. ஸாலிஹ் ஹாஜியார் ஆகிய மூவரைக்கொண்ட முதற் பரிபாலன சபையும் ஊர் மக்களாலேயே நியமிக்கப்பட்டதாக மேற்படி வக்ப் ஒப்பினையில் காட்டப்பட்டுள்ளது. ஆகவே இக்கலாபீடம் அனைத்து ஊர் மக்களினதும் சொத்தாகும்.இதனைக் கட்டிக்காப்பது நம் அனைவரினதும் கடமையாகும்.

" யா அல்லாஹ் எங்கள் ஊரின், எங்கள் அனைவரினதும் சொத்தான ஜாமிஅத்துல் பத்தாஹ்வை பெரும் புகழ் பெற்ற கலாபீடமாக ஆக்கியருள்வாயாக"

கலாபீடத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைகள் :

சுமார் ஏழு தசாப்தங்களுக்கு முன் உறுதிசெய்யப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 6081-ம் இலக்க வக்ப் ஒப்பினையின்படி பெருந்தகைகளான :M .A .M . காஸீம் ஹாஜியார், S .M .ஷரீப் ஹாஜியார், A.O.M . சாலிஹ் ஹாஜியார் ஆகிய மூவரும் " மத்ரஸதுல் பத்தாஹ் " வக்ப் சொத்துக்களைப் பரிபாலிக்கவும், கலாபீடத்தை நிர்வகிக்கவும் ஊர் மக்களால் ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டனர். இதுவே இக் கலாபீடத்தின் முதலாவது நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை ஆகும். கூறப்பட்ட குறித்த வக்ப் ஒப்பினையின் மூலம் Y .L . சாலி லெப்பை, A .L.M .ஷரீப், S .M .M.ஜுனைத் ஆலிம்   H .L .M .ஷாஹுல் ஹமீத், Y .L .M .காஸீம், H .L .M .ஷரீப் ஆலிம், S .M .ஜமால்தீன்,  M .L .S .M .அப்துல் காதர்,Y .Lசெய்னுலாப்தீன் ஆலிம், A .C .L .M .காஸீம், P .L .ஜெமால்தீன் லெப்பை ஆகிய 11 பேரைக் கொண்ட " ஆலோசனை சபை " ஒன்று ஊர் மக்களால் தெரிவு செய்யப்பட்டது.

1953-12-06-ம் திகதி பெருந்தகை M .A .M .காஸீம் ஹாஜியார் அவர்கள் வபாத்தானார்கள். அதன் பின் கலாபீட நிர்வாகப் பொறுப்பை A .O .M .சாலிஹ் அவர்களும், S .M . ஷரீப் அவர்களும் கண்ணும் கருத்துமாகச் செய்தனர். மேலும் சிறிது காலத்தின் பின் S .M . ஷரீப் அவர்கள் வயோதிபம் காரணமாக நிர்வாகத்தில் ஈடுபட முடியாமல் போயிற்று. எனினும் அல் ஹாஜ் : A .O .M . சாலிஹ் அவர்கள் 1968-ம் ஆண்டுவரைத் தனியாகவே நிர்வாகப் பணிகளை முன்னெடுத்துச் சென்றார். மேற்கூறிய இருவரும் காலமான பின்பு A .O .M . சாலிஹ் அவர்கள் தனியாகவே கலாபீடத்தின் இயக்கத்திற்கு ஈடு கொடுத்து நின்றது பாராட்டப் படவேண்ண்டிய ஒன்றாகும். பின்னர் A .O .M . சாலிஹ் அவர்கள் தனக்கு உதவிக்காக S .M .M . ஜுனைத் ஆலிம், S .M .M .இஸ்மாயில் ஆலிம், O .L .M .ஹனிபா ஆகிய மூவரையும் தன்னோடு இணைத்துக் கொண்டு 1971-ம் ஆண்டுவரைக் கலாபீடத்தின் நிர்வாகத்தைச் சிறப்பாகச் செய்தார். 1971-ம் ஆண்டு அவர் தனது வயது முதிர்ச்சி காரணமாக பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.

அதன்பின் அல் ஹாஜ்: S.M.M.ஜுனைத் ஆலிம், A.H.அப்துல் ரஹீம் ஆலிம், அல் ஹாஜ்: J.L.M .அப்துல் ரஹீம் ஆலிம், அல்ஹாஜ் S .M .M .இஸ்மாயில் ஆலிம் , அல்ஹாஜ் : O.L.M .ஹனிபா, அல்ஹாஜ் : I.L.M . காலித், அல்ஹாஜ் : J.L.M .ஹனிபா , S .M .ஜிப்ரி ,   M .H .M .ஜலால்தீன், அல்ஹாஜ் :S .M .தாஜுதீன்,  அல்ஹாஜ் : H .M .ஜவுபர் ஆகியோர் நம்பிக்கைப் பொறுப்பாளர்களாக மக்களால் தெரிவு செய்யப்பட்டனர். 

இவர்களில்  S.M.M.ஜுனைத் ஆலிம் தலைவராகவும், அல்ஹாஜ் : S.M.தாஜுதீன், H.M .ஜவுபர் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் , அல்ஹாஜ் : O .L .M . ஹனிபா தானாதிகாரியாகவும், அல்ஹாஜ் : I .L .M . காலித், S.M. ஜிப்ரி உப தானாதிகாரிகளாகவும் பணியாற்றினர்.1971 முதல் 1998 வரைக் கடைமையாற்றிய நிர்வாக சபை நீண்ட கால சேவையின் பின் ஓய்வு பெறுவதாக அறிவித்தது . பலரது கடும் முயற்சியால் 1998-02-20-ம் திகதி புதிய நிர்வாக சபை மக்களால் ஏகமானதாகத் தெருவுசெய்யப் பட்டது.

கௌரவத் தலைவராக அல் ஹாஜ் : A .H .M .ஹனிபா அவர்களும், கௌரவக் காரியதரிசியாக் அல் ஹாஜ் : M .H .M .ஆரித் அவர்களும் , இணைத் தனாதிகாரிளாக அல் ஹாஜ் : M .H .M . நஸ்றுள்ளா , அல் ஹாஜ் : F .M . அஸ்லம் ஆகிய இருவரும், உறுப்பினர்களாக, அல் ஹாஜ் : S .H .M . ஜுனைதீன், அல் ஹாஜ் : M .ஹிலாலி மஜீத்  அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 

1998-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டுவரை 14 வருடங்கள் சிறப்பாகக் கலாபீடத்தை நிர்வாகம் செய்த மேற்படி நிர்வாகசபையின் உறுப்பினர்கள் சிலர் காலப்போக்கில் விலகிக்கொண்டதாலும், அல் ஹாஜ்  : S .H .M . ஜுனைதீன் அவர்கள் காலஞ் சென்றதாலும், நிருவாக சபையினை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதன்படி      அல் ஹாஜ் : A .H .M .ஹனிபா அவர்களைத் தலைவராகவும், அல் ஹாஜ் : A .R .M . ரஸ்மி அவர்களை உபதலைவராவும்,  அல் ஹாஜ் : A .R . அப்துஸ்ஸமீஹ், அல் ஹாஜ் : A .A .M . ரிப்கான  ஆகியோரை இணைச் செயலாளர்களாகவும், அல் ஹாஜ் : M .H .M . பாயிஸ் அவர்களை உதவிச் செயலாளராகவும், அல் ஹாஜ் : M .S .M .நளீம், அல் ஹாஜ் : M .S .அப்துல் சகூர் ஆகியோரை இணைத்த தானாதிகாரிகளாகவும் , அல் ஹாஜ் : M .S .அப்துல் ஜப்பார் அவர்களை உதவித் தனாதிகாரியாகவும், ஹாஜிகளான M .H .M .நஸ்றுள்ளா,F .M . அஸ்லம்,   M .H .M .தஸ்லீம், A .A .M . மன்சூர், S.H .M .ரிஸ்வான் ஆகியோரை உறுப்பினர்களாகவும்  கொண்ட புதிய நிர்வாக சபை அமைக்கப்பட்டது. மேலும் சிறிது காலத்தில் ஹாஜிகளான : M .H .M .நஸ்றுள்ளா, F .M . அஸ்லம் ஆகியோர் பதவியிலிருந்து விலகிக் கொண்ட போதும் எஞ்சிய உறுப்பினர்களைக்  கொண்டு நிர்வாக சபை சிறப்பாகச் செயல்பட்டு வந்தது.

ஜாமிஅத்துல் பத்தாஹ் கலாபீடத்தின் தற்போதைய                நம்பிக்கைப் பொறுப்பாளர் சபை 

தலைவர் 

உப தலைவர் 
அல் ஹாஜ் : A .R .M . ரஸ்மி 
இணைச் செயலாளர்கள் 
அல் ஹாஜ் : A .R . அப்துஸ்ஸமீஹ் 
அல் ஹாஜ் : A .A .M .ரிப்கான்  
உதவிச் செயலாளர் 
அல் ஹாஜ் : M .H .M .பாயிஸ் 
பொருளாளர் 
அல் ஹாஜ் : M .S .M .நளீம் 
உதவிப் பொருளாளர் 
அல் ஹாஜ் : M .S .M . ஜப்பார் 
உறுப்பினர்கள் 
அல் ஹாஜ் : M .H .M . தஸ்லீம்
அல் ஹாஜ் : A .A .M . மன்சூர் 
அல் ஹாஜ் : S .H .M . ரிஸ்வான்

தொகுப்பு;எம்.எம்.பாரூக்(W.C)


 


Post a Comment

Previous Post Next Post