எமது தொடர்பை ஆரம்பமுதல் அறிந்திருந்து, அன்று சமுதாயம் சஞ்சிகையாசிரியராக எனக்கு அறிமுகமான அல்ஹாஜ். எஸ்.எம்.ஹனிபா அவர்கள், என்னுடன் தொடர்பு கொண்டு உங்கள் ஆத்ம நண்பர் கவிமணி ஸுபைர் அவர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தாருங்கள் என்றார். "இன்ஷா அல்லாஹ். பார்ப்போம்" என்றேன். சர்வதேசப் புகழுக்கு உரித்தாகிப் பலராலும் பாராட்டி எழுதப்பட்ட ஒரு கவிமணியைப் பற்றி எழுத்துலகில் என்றுமே பிரவேசிக்காத என்னைப் பலவந்தமாக இழுத்து எனது அறியாமையை அரங்கேற்றப்பார்க்கிறாரே இவர் என்று தயங்கினேன். அவர் என்னை விட்டபாடில்லை. அடிக்கடி தொலைபேசித் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்தார். தட்டிக்கழிக்க முடிய வில்லை. காரணம் ஒன்று, எனக்கும் ஸுபைருக்கும் இருந்த நீண்ட காலத் தொடர்பு. அடுத்தது இந்தத் தொடர்புக்குப் பெரிதும் உதவிய நண்பர் எஸ் எம். ஹனிபா அவர்களின் பங்களிப்பு.
முதல் சந்திப்பு: நானும் ஸுபைரும் 1951ம் ஆண்டு எமது வாலிபப் பருவத்தின் இருபதுகளில் சந்தித்தோம். முதல் சந்திப் பிலேயே நண்பர்களானோம். இது வியப்பாக இருந்தாலும், உண்மை அதுதான். ஆசிரியர் பயிற்சி புகுமுகப்பரீட்சைக்கு அளுத்கமைக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் முதன் முதலில் ஸலாம் கூறிய ஒருவருடன் அறிமுகமானேன். சிறிது நேரம் ஊர், பெயர் களைக் கேட்காமலே அவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். அவரும் அருமையாகக் கதைத்தார். திடீரென அவரை இடைமறித்து "நீங்கள் யாழ்ப்பாணமா? என்றேன். 'இல்லை. கல்ஹின்னை" என்றார். உடனே அதே வினாவை அவர் என்னிடம் கேட்டார். "இல்லை. நான் மாவனல்லயைச் சேர்ந்தவன். யாழ்ப்பாணத்தில் படித்தேன்" என்றேன். கல்ஹின்ன மக்களின் தமிழ் மொழி ஆற்றல் தெற்கில் ஏனைய முஸ்லிம் கிராமங்களின் பேச்சாற்றலுக்கு வித்தியாசமானது என்பதை இந்த உரையாடல் எனக்குணர்த் தியது. எமது நீண்ட காலத் தொடர்புக்கும் தமிழ்மொழித்திறனே அத்திவாரமெனக் கருதலாம்.
எமது முதல் சந்திப்பு. அரை நூற்றாண்டு காலஉறவாக நீடிக்குமென்று அன்று நாம் கற்பனை பண்ணியிருக்க முடியாது. எமது நீண்ட நட்புப் பயணமே அன்று அளுத்கமையிலிருந்து தொடங்கி, கடுகண்ணாவை உச்சிவரை எம்மை இட்டுச் சென்றது. எமது பள்ளி வாழ்க்கை, குடும்பப் பின்னணி நல்லாசிரியர்கள் பொழுது போக்குகள், எதிர்கால இலட்சியங்கள் பற்றிப் பலதும் பத்தும் பேசிக் கொண்டு பல மணிநேரப் புகையிரதப் பிரயாணம் செய்தோம். ஒரு கட்டத்தில் "நீங்கள் ஏன் ஆங்கில எஸ் எஸ் எஸி பரீட்சையை முடித்துக் கொண்டு ஆசிரியர் தொழிலை விரும்பினீர்கள்" என்றார். "நான் சட்டக் கல்லூரிக்குப் போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். எனது தகப்பனாருடன் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்த சோனகர் சங்கத் தலைவர் ராஸீக் துரை அவர்கள் 'எங்கள் சமுதாயத்திற்கு இருக்கின்ற பெரக்கோர்மார் போதும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள்தான் இல்லை. உங்கள் மகனைக் கட்டாயம் ஆசிரியராகச் செய்யுங்கள். பின்னர் வேண்டுமென்றால் சட்டம் படிக்கட்டும்' என்று வற்புறுத்தியதால் இன்று பயிற்சிக் கலாசாலைக்கு வந்தேன்" என்றேன். இதைக் கேட்ட ஸுபைர் "நானும் எமது குடும்பத்தில் ஏனையவர்கள் போல் ஆங்கிலம் படிக்கக் கொழும்பு ஸாஹிறா செல்லவிருந்தேன். ஆனால் எனது மதிப்புக்குரிய ஆசிரியர்கள், எனது வாப்பாவிடம் சொல்லி என்னைத் திசைதிருப்பிவிட்டார்கள்" என்றார். இவ்வாறு வேண்டாவெறுப்பாகத் தள்ளப்பட்ட தொழில் எம்மிருவரையும் எங்குதான் கொண்டுசெல்லப் பார்க்கிறது என்று எமக்குப் புரியாத புதிராக இருந்தது. புகையிரதம் நான் இறங்கும் நிலையத்தில் நின்றது. 'அல்லாஹ் நாடினால், மீண்டும் சந்திப்போம்" என்று விடைபெற்றுக் கொண்டேன்.
மீண்டும் சந்தித்தோம். பயிற்சிக் கலாசாலை வாழ்க்கையில் ஒன்றாகவே இருந்தோம். ஆங்கில அகரவரிசையில் கடைசி இரண்டு எழுத்துக்களும் எமது பெயர்களின் முதலெழுத்துக்கள் ஆகும். அதனால், கலாசாலையின் சகல விடயங்களிலும் நாம் அடுத்தடுத்துத்தானிருந்தோம். ஓய்வு நேரங்களில் அதிகமாகப் புத்தகங்கள் வாசிப்போம். பின்னேரங்களில் கடற்கரைக்கும் கடைத்தெருவுக்கும் ஒன்றாகவே சென்று வருவோம். வீட்டிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு செலவுகளை சமாளித்துக் கொண்டிருப்போம். புலமைப்பரிசில்களுக்குத் தகுதியில்லாத காரணத்தால், வேறுவசதிகள் இருக்கவில்லை. மிகவும் சிக்கனமாகச் செலவு செய்து ஒருவாறு பயிற்சியை முடித்துக் கொண் டோம். பிரியாவிடை பெற்று வீடு சென்றோம்.
மீண்டும் இணைப்பு என்ன ஆச்சரியம்! நானும் ஸுபைரும் மீண்டும் இணைவதற்கு இறைவனின் நாட்டமிருந்தது போலும். கலாசாலை வாழ்க்கையில் ஒரு தடவை நாம் பண்டாரவளைக்கு உல்லாசப் பிரயாணம் செய்தோம். அப்போது இந்த அருமையான இயற்கைச் சூழலில் மனோரம்மியமான சுவாத்தியத்தில் இருக்கக் கிடைத்தால் என மனக்கோட்டை கட்டினோம். எமது கனவு நனவாகி நாம் இருவரும் பண்டாரவளை ஸாஹிராவில் அதிபராகவும் உப அதிபராகவும் பணிபுரிய வேண்டிய நிலைக்காளானோம். ஆசிரியர்களாகப் பயிற்சிபெற்ற நாம் அதிபர்களாகப் பதவி யேற்றோம். இங்குதான் எமது பொறுப்புகளின் சுமை இலேசானது அல்ல என்பதை உணர்ந்தோம். எமது வயதிற்கும் அனுபவத் திற்கும் அப்பால் எமது பொறுப்புக்கள் இருந்தன. வளர்ந்துவரும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் பெரும்பணி எம்மீது சுமத்தப் பட்டிருந்தது. தேங்கியிருக்கும் ஒரு சமுதாயத்தை விழித்திருந்து பாதுகாக்க வேண்டிய காவலாளிகள் போன்று நாம் செயல்பட வேண்டியிருந்தது. இந்த இன்பமான இயற்கைச் சூழலில் ஆரம்பிக் கப்பட்டிருந்த இந்த ஆரம்பப் பாடசாலையில் தொழில் ஆரம்பித்த நாம், பல சவால்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது.எமது இளமையின் சுகங்களை மறந்து இளம் சமுதாயத்தின் சேம நலன்களைக் கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட் டிருந்தோம். ஒரு தாபனத்தின் முன்னேற்றம், நல்ல பாரம்பரியங் களிலும் தங்கியிருக்கிறது என்ற யதார்த்தத்தை உணர்ந்து செயல்பட்டோம். பொறுப்புக்களைப் பகிர்ந்து கொண்டோம். நான் நிர்வாகப் பொறுப்புகளுடன் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும், நண்பர் ஸுபைர் ஒரு கல்விச்சூழலில் பண்பாட்டுப் பயிற்சிகளை, நல்ல பாரம்பரியங்களை ஏற்படுத்துவதிலும் ஒத்துழைத்தார். பொறுப்புணர்வு வாய்ந்த நல்லாசிரியர்கள் பலர், சாதிமத பேத மின்றி எமக்கு ஒத்துழைப்பு நல்கினர். பண்டாரவவளை நகரிலிருந்தும், வெளியிடங்களிலிருந்தும் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஸாஹிராவில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
ஒருநாள் வட்டாரக்கல்வி அதிகாரி திரு. சந்திரசேகரம்பிள்ளை பாடசாலையைத் தரிசித்தார். உத்தியோகத் தோரணை யில் அல்லாது, அவரது மகனை பள்ளியில் சேர்க்கவே அன்று வந்ததாகக் கூறினார். "எவ்வளவோ நல்ல பாடசாலைகள் இருக்க ஏன் தங்கள் பிள்ளையை இங்கு சேர்க்க விரும்புகிறீர்கள்?" என்றேன். 'பண்டாரவளையில் நல்ல பாடசாலைகள் இருப்பதை நானறிவேன். என்றாலும் உமது உப அதிபர் ஸுபைரின் பாலர் வகுப்பில் எனது பிள்ளை படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்றார். சிறிது காலத்தின் பின்னர் பண்டாரவளை கல்வியதிகாரியாயிருந்த திரு. கனகசபை - திரு. கைலாசபதியின் உறவால் தனது மருமகளை ஜி. ஸீ. ஈ வகுப்பில் சேர்க்க வேண்டு மென்று நின்றார். நான் முன்பு கூறியது போலவே கூறினேன். "உமது தம்பிக்கும் ஸுபைரின் தம்பிக்கும் ஏன் உங்கள் உறவினர்களுக்கும் கல்வி கற்க பண்டாரவளை ஸாஹிராவின் தரம் நல்லதென் றால், எனது மருமகளுக்கும் இது போதுமானதே" என்றார். ஸாஹிராவில் முதல் முதலாக ஜி. ஸீ. ஈ வகுப்பில் சித்தியெய்திய மாணவர்களில் இந்த மாணவியும் ஒருவராவார். பின்னர் அவர் ஸாஹிராவின் ஆசிரியையாகவும் பணிபுரிந்தார். இக் காலகட் டத்தில் தான், அன்று "தினகரன்" பத்திரிகையின் உதவி ஆசிரிய ராகிய எஸ்.எம்.ஹனிபா அவர்களின் ஒத்துழைப்பு எமக்குக் கிடைத்தது. நண்பர் ஸுபைரின் உறவினரான அவர், ஸாஹிரா வின் சின்னத்தை (Logo) "Enter to learn, go forth to serve" என்று கொள்ளும்படி ஆலோசனை கூறினார். கவிமணி ஸுபைரின் மொழிபெயர்ப்பில் இது 'புகுமின் கல்வி கற்க. புறப்படுமின் சேவைபுரிய" என்று வடிவமைத்து வளரும் ஸாஹிராவின் இலட் சியத்திற்கு அத்திவாரமாய்த் திகழ்ந்தது. மாணவர்களது கல்வி, கலாச்சார. விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு பலவழிகளிலும் ஆலோசனை வழங்கியதுடன் தினகரன் பத்திரிகையிலும் ஏனைய தொடர்பு சாதனங்களிலும் எமது மாணவர்களின் செய்திகள், ஆக்கங்கள் இடம்பெறச் செய்து உதவினார். அத்துடன் நண்பன் ஸுபைரின் ஆக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் பெரும்பணியையும் மேற்கொண்டார்.
கவிமணி ஸுபைர் வகுப்பறையில் பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டிருந்த கவிதைகளுக்கு நிகரான தமது சொந்தக் கவிதைகள் இயற்றி, அரங்கேற்றினார். கவிஞனும். குழந்தை களும் கவிதைகளும் ஒன்றாகத் திரளக்கூடிய சூழ்நிலையில், குழந்தைகட்க்கும் ஒரு பத்திரிகை வேண்டும் என்ற ஆசை அவரை ஆட்கொண்டது தமது கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங் களை தமது உள்ளத்தில் நிரம்பி வழிந்த இலக்கியத்திறன்களை வெளிக்கொணர அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.
"மணிக்குரல்'' வந்த கதை நாமிருவரும் அஸர் தொழுகையின் பின்னர் உலாவச் செல்வது வழக்கம். இதற்கு பண்டாரவளை நகரில் ஒரு மலையைச் சுற்றி மூன்று மைல் தூரமான ஒரு பாதை இருந்தது. இதனை "Three Miles Walk" "மூன்று மைல் உலா" பாதை என்று அழைப்பார்கள். அழகான இயற்கைக் காட்சிகளை யும் அந்திசாயும் நேரத்தின் மென்மையான தென்றல் காற்றினையும் அனுபவிக்கக் கூடியதாக இந்த ஓய்வு நடை எமக்கு இருந்தது. எமது தனிப்பட்ட கருத்துப் பரிமாறல்களுக்கும் எமது பொறுப்புக் களின் தன்மைகளை எடை போடுவதற்கும் இச்சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொண்டோம். ஒருநாள் அவர் கருத்தில் கொண்டிருந்த சிறுவர் பிரசுரத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்தோம். நடைபாதையோரத்தில் சிறிது தூரத்தில் அமைந்திருந்த (Little Flower Convent) - ஸுபைரின் மொழி. பெயர்ப்பில் "சின்னமலர் கன்னி மடம்" மகளிர் கல்லூரியின் மணி யோசை கேட்டது. நீங்கள் பிரசுரிக்கப்போகும் பத்திரிகையை "மணி" என்று தொடங்கினால் நல்லதென்றேன். சிறிது நேரம் முனு முணுத்துக் கொண்டு நடந்தவர். அகமகிழ்ந்து முகம் மலர்ந்து இப் பத்திரிகையை "மணிக்குரல்" என்று பெயரிடுவோம்" என்றார்.
ஒரு பத்திரிகை அல்லது நூலைக் கருக்கொள்வதும் பெயரிடுவதும் இலகுவான காரியம், அதனை பிரசுரித்து வெளியிடு வது ஒரு தாய் தன் குழந்தையை பிரசவிப்பது போன்ற வேதனை யாகும். ஆனால், அது பிரசுரிக்கப்பட்டு வெளிவந்தவுடன் மீண்டும் பிரசவத்தின் பின்னர் கணவன் நாடும் மனைவியைப் போல, அடுத்த பிரசுரத்தை அல்லது பிரதியை வெளிக்கொணர மகிழ்ச்சியுடன் முகம் மலர்ந்து செயல்படும் எழுத்தாளர்களைப் பார்க்கிறோம். நண்பன் ஸுபைர் தமது சொந்தச்செலவில் மணிக்குரலை நடாத்திச் சென்றார். அவர் அப்போது அனுபவித்த கஷ்ட நஷ்டங்களை பொறுமையுடன் தாங்கிக் கொண்டார். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சான்றோர் வாக்கிற்கமைய தாம் சுவைத்த இலக்கியச் செல்வங்களை அனைவரும் அனுபவிக்க வழிசெய்தார். அவரது ஆக்கங்களை அச்சிட்டு வெளியிட பதிப்பகங்கள் முண்டியடித்துக் கொண்டு முன்வந்தன. உள்நாட் டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் அவரது கவிதைகள், கட்டுரைகளைத் தேடிப் பிரசுரித்தார்கள்.. அவரது படைப்புக்களின் தரத்தை எடுத்துக்காட்டுவதற்கு இதுவே போதுமானதாகும்.
அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த காலம் முழுவதும் தமிழ் இலக்கிய இலக்கணத்தில் அவருக்கிருந்த ஆழமான அறிவையும் அனுபவத்தையும் அவரது மாணவர்கள் மத்தியில் ஒரு ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தினார். பரீட்சைகளில்
மாத்திரமல்ல பத்திரிகைகளிலும், வானொலியிலும் இந்த மாணவர்களின் திறமைகள் வெளிவரத் தொடங்கின் அவரது பழைய மாணவர்களில் நெருங்கிப் பழகிய நண்பர்கள் பலர், இன்று எழுத்தாளர்களாக தொடர்பு சாதனத் துறைகளில் பிரபல்யமானவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் தம்மோடு தொடர்பு வைத்திருந்த யேறிஞர்கள் கவிஞர்கள்,கல்விமான்கள், எழுத் தாளர்களை தமது மாணவர்களுக்கு அறிமுகஞ் செய்து வைக்கக் கிடைத்த சந்தர்ப்பங்களை என்றும் தவற விட்டதில்லை. மேடைப் பேச்சுக்கள், கவிதையரங்குகள், இலக்கிய விழாக்கள் மூலம் பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேரறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் கலாநிதி.
எம்.எம்உவைஸ், சில்லையூர் செல்வராஜன், கவிஞர் அப்துல் காதர் லெப்பை போன்ற பெரியார்களே, பண்டாரவளை ஸாஹிரா மேடையை அலங்கரித்த சிலராவர். இளம் தலைமுறை: யினர்களான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி முன்னாள் கல்விப் பணிப்பாளர், ஏ.எம்.ஸமீம், முன்னாள் ராஜங்க அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் முன்னாள் அதிபர் உவைஸ் அஹமட் கலாநிதி அமீரலி போன்றோர் கூட அன்னாரின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை.
அரிய சந்திப்பு: கல்வி, கலாச்சாரத்துறைகளிலும், குறிப்பாக இஸ்லாமிய இலக்கியத்துறையிலும் பழையன பேணி புதிய அனுபவங்களைப் பெறுவதில் ஸுபைரின் ஆர்வம் நிறைந்து காணப்பட்டது. ஷேக்ஸ்பியரின் 'ஜுலியஸ் ஸீஸர்" நாடகத்தை ஆங்கில மொழி மூலம் விளக்கப்பெற்று வரிகளுக்கிடையிலான கருத்துக்களையும் அபிநயங்களையும் அறிந்து கொள்வதில் அதிக விருப்பம் கொண்டார் மார்டின் விக்ரமசிங்ஹவின் 'கம்பெரலிய' எனும் நாவலைச் சிங்கள மொழிமூலமே படித்தும் சுவைத்தார், பண்டாரவளைக்கு ஓய்வெடுக்கவரும் அவரை நேரடியாகக் கண்டு கதைக்க வேண்டுமென ஆசைப்பட்டார். ஒரு நாள் நாமிருவரும் மூன்று மைல் நடை பாதையில் சென்று கொண்டிருந்தோம். ஒரு மலைக்குன்றின் முனையில் ஒரு மெல்லிய உருவம் தெரிந்தது. மெதுவாக அவரை நோக்கி நடந்தோம். நரைத்த தலைமயிர்கள் காற்றில் பறந்து கொண்டிருந்தன. அவரது பார்வை பள்ளத்தை நோக்கிய வண்ணம் இருந்தது. அவரது சிந்தனை மிக ஆழமான ஒன்றை அவதானிப்பது போல் தென்பட்டது. மிக நெருங்கி போனதும், அந்த மனிதர் எம்மை நோக்கினார். நாமும் நோக்தினோம். அவர்தான் நாவலாசிரியர் மார்டின் விக்ரமசிங்ஹ என்பதை அறிந்து கொண்டோம். நண்பர் சுபைர் அவருடன் தமக்குத் தெரிந்த மட்டில், சிங்களத்தில் அளவளலாவினார். அரைமணிநேரம் இந்த சம்பாஷணை நடந்தது. நண்பரின் நீண்டநாள் ஆசையும் நிறைவெய்தியது.
இன்னொருநாள் 'மனமே" என்ற நாட்டிய நாடகமொன்றை நாமிருவரும் சென்று பார்த்து விட்டுத் திரும்பிவரும் வழியில், இந்தப் புதிய கலையம்சத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தோம். இப்படியொரு நாட்டிய நாடகமொன்றை எமது மாணவர்களைக் கொண்டு அறிமுகம் செய்ய விரும்பினார் சுபைர் . நானும் இதனைச் செய்ய இசைந்தேன். இதற்கான ஆரம்ப நடவடிக்கைகளைச் செய்யவும் துணிந்து விட்டார். இஸ்லாமிய இலக்கியப் பின்னணியில் இதனை சமைப்பதற்காக 'இஸ்லாமிய வழக்கு மன்றமொன்றையும் நாடகமொன்றையும் தெரிவு செய்து விட்டார். இந்த நாடகத்தை நாட்டியமாக்குவது எமது மாணவர்களுக்கு சிரமமாகவிருக்கும் என்பதை உணர்ந்த அவர், பக்கத்திலிருந்த சிங்களப் பாடசாலை நடன ஆசிரியரை அணுகி, ஆலோசனை பெற்றார். அவர் இது ஒரு இலகுவான காரியமல்லவென்றாலும், ஒரு மூன்று மாதகாலம் கிரமமான பயிற்சி கொடுத்து, இந்த முயற்சியைச் செய்வதற்கு இந்த நடன ஆசிரியரை இணங்க வைத்தார். நடன பாத்திரங் களும் உடைகளும் தயார்படுத்தப்பட்டன. நாள் தோறும் பின்னேரங்களில் நாடகக் குழுவினருக்குப் பயிற்சியும் வழங்கப்பட்டது. பாடசாலை பரிசளிப்பு விழாவில் இந்த நாட்டிய நாடகம் மேடை யேற்றப்பட்டது. அன்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் கல்வி அமைச்சர் கௌரவ PB.G. கலுகல்ல அவர்கள் ஒரு முஸ்லிம் பாடசாலையில் நாட்டிய நாடகமொன்றைக் கண்டு
பெரிதும் மகிழ்ந்ததுடன் இதனை அரங்கேற்றிய ஆசிரியர்களை யும் வெகுவாகப் பாராட்டினார். அத்துடன் எமது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து தருவதாகவும் வாக்களித்தார். என்னே ஸுபைரின் துணிச்சல்,
எனது அன்பிற்கும் மரியாதைக்குமுரிய நண்பன் ஸுபைர் வெறும் ஆசிரியத்தோழன் மாத்திரமல்ல. தனித்தவர்களாக நாம் விடுதி வாழ்க்கையைத் தொடங்கினோம், பின்னர் இருவரும் திருமணமாகியும் ஒரே வீட்டில், இரண்டு குடும்பங்களாக வாழ்ந்தோம். எமது வாழ்க்கைத் துணைவியர்களும் உடன் பிறந்த சகோதரிகளாகவே இருந்து, இனியதான இல்லற வாழ்க்கை நடத்தினர். எமது சமூகக் கலாச்சாரப் பணிகளுக்கு அவர்களால் எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. தனியார்களாகத் தொடங்கிய நட்பு. குடும்ப நட்பாய் மாறியது. எமது பெற்றோர்களும் உறவினர்களும் இரண்டறக் கலந்தனர். எமது குடும்பங்களைச் சேர்ந்த எத்த னையோ உறவினர்கள் அவரவர்களது பிள்ளைகளை பண்டார்வளைக்கு அனுப்பி படிப்பித்தார்கள். எமது நட்பு படிப்படியாக எப்படி வளர்ச்சி கண்டதோ, எமது பாடசாலையும் உயர்ச்சியடைந்து ஒரு கல்லூரியின் அந்தஸ்தைப் பெற்றது. சுமார் பதினைந்தாண்டு களுக்குப் பின்னர் இடமாற்றங்கள் காரணமாக நாம் பிரிய வேண்டியதாயிற்று. என்றாலும் எமது தொடர்பு அறுந்து விடவில்லை. தேசிய மட்டத்தில் கல்வி கலாச்சார விடயங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ள அடிக்கடி சந்திப்போம். இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்திலிருந்து கொண்டு பல ஆக்க பூர்வமான பணிகள் புரிந்தோம். இஸ்லாமிய இலக்கியத்தில் அவருக்கிருந்த ஆர்வத் திற்கு சங்கத்தின் ஒத்துழைப்புப் பரவலாகக் கிடைத்தது. இஸ் லாமிய இலக்கியத்தை (ஆ) பாடத்திட்டமாகக் கொண்டு வருவதிலும், தமிழ் மொழிப் பாடத்தில் எல்லாத் தரங்களிலும் இஸ்லாமிய இலக்கியத்துடன் தொடர்புள்ள பாடங்கள் இடம் பெறுவதற்கும் ஸுபைரின் பங்களிப்பு இருந்ததை யாரும் அறிவர்.
பாரிய பங்களிப்பு: இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் அவரது பங்களிப்பு முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குதவியது. இத்துறையில் பேராசிரியர் எம்.எம் உவைஸ் அவர்களுடன் இணைந்து பல சிரமங்களுக்கு மத்தியில் செயல்பட்டார். அவரது இலக்கியப்பணிகள், இலகுவான பொழுது போக்காக இருக்கவில்லை. இத்துறையில் தூங்கியிருந்த மாணவ சமுதாயத்தை தட்டியெழுப்பப் பாடுபட்டார். சோம்பியிருந்த எழுத் தாளர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தார். ஈழத்துக் குழந்தைச் செல்வங்களுக்கு மணிக்குரல் மூலம் மழலை பேசினார். அவரது படைப்புகளை நூலுருவாக்குவதற்கு பதிப்பகங்கள் தேடி வந்தன. பத்திரிகைகள் அவரது கவிதைகளையும் கட்டுரை களையும் பிரசுரிப்பதற்கு போட்டி போட்டன.
கவிமணி ஸுபைரின் வாழ்வும் பணியும் இலேசானதாக இருக்கவில்லை. தனது சொந்த நலன்களைத் தியாகம் செய்து கொண்டே இப்பணிகளைச் செய்தார். நீண்ட காலமாகச் சுகவீனமுற்ற நிலையிலும், இவரது சமூக சேவை நின்று விடவில்லை. கடைசியாக கொடைவள்ளல் நளீம் ஹாஜியார் பற்றி கவிதை நூலொன்றை எழுத ஆசைப்பட்டார். ஆனால், அது கை கூட வில்லையென்றாலும், கடைசியாக அச்சில் வந்த கவிதை நளீம் ஹாஜியார் பற்றியதாகும். இவ்வளவு நல்ல பயனுள்ள பணிகளை யும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் பிரதியுபகாரம் கருதாது செய்து வந்தார். எவ்வளவு துன்ப துயரங்களிலிருந்தாலும், புன்முறுவல் பூத்த முகத்துடன் எனக்கு ஒரு இனிய நண்பனாகவே இருந்து வந்தார்.
கவிமணி எம்.ஸி.எம்.ஸுபைர் பற்றி ஆசிரியர் ஏ.ஏ.எம்.புவாஜி எழுதிய நூலொன்றை எனக்கு அன்பளிப்புச் செய்துவிட்டு "என் னைப் பற்றிய புத்தகத்தில் உங்களையும் என்னையும் இணைத்து எழுதியிருந்த அத்தியாயமே எனது மனதைத் தொட்டது" என்று கண்ணீர் மல்கக் கூறியதை நான் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறேன். அவரது சிரேஷ்ட புதல்வரின் திருமணத்தின்போது அவரைக் கடைசியாகக் கண்டு கதைக்கும் வாய்ப்புக் கிட்டியது. "எனது நண்பர்கள் எவரையும் இந்தத் திருமண வைபவத்திற்கு அழைக்கவில்லை. எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக உங்களை அழைத்தேன். நண்பர்கள் இல்லாத குறையும் உங்கள் வருகையால் நிவிர்த்தியாகி விட்டது' என்றார்
கடைசியாக, "ஸுபைர் மாஸ்டர் காலமாகி விட்டார்" என்ற வானொலிச் செய்தியை எனது மகள் உரத்த குரலில் கூறக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நல்லடக்கத்தில் கலந்து கொள்ள குடும் பத்துடன் சென்றேன். அவரது பிள்ளைகள், குடும்பத்தவர்கள். நண்பர்கள் அனைவரையும் கண்டு ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்து கொண்டேன் ஜனாஸாத் தொழுகையின் போது "ஒன்றாகவிருந்த நாம் பிரிந்து விட்டோமே! எமது நட்புப் பயணத்தில் அவர் முந்தி விட்டாரே" என்ற எண்ணம் என்னை நிலைகுலையச் செய்ததோ தெரியவில்லை. என்னோடு பக்கத்தில் தொழுது கொண்டிருந்த நண்பன் அ.மு.ராசிக் 'நீங்கள் தொழுகையில் இருந்த போது தான் மிகவும் அவதானமாக இருந்தேன்" என்றார். நண்பர்கள் சேர்வதும் பிரிவதும் அல்லாஹ்வின் ஏற்பாடு. அதனை யாராலும் தவிர்க்கமுடியாது. அன்புடையோன், அருளாளன் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனபதியை நஸீபாக்குவானாக. ஆமீன்.
"இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹிராஜிஹன்",
Tags:
“ஈழத்துக் கவிமணி" சுபைர்