மீடியா லிங்க்.. கடந்து வந்த பாதையின் நினைவலைகள்..!!

மீடியா லிங்க்.. கடந்து வந்த பாதையின் நினைவலைகள்..!!

2003ம் வருடம் அன்றைய காலகட்டத்தில் சமுர்த்5தி அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த கல்ஹின்னை எம்.எச்.எம். நியாஸ் அவர்களின் எண்ணக்கருவு மற்றும் கடின முயற்சியின் காரணமாக சமூக அபிவிருத்திக்கான தொடர்பாடல் மையம் எனும் கருப்பொருளை முன்வைத்து மீடியா லிங்க் குழுமம் ஆரம்பமானது. இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் தாய்நாட்டின் சுபீட்சம் போன்றவற்றுக்காக எதிர்பார்ப்புகள் இன்றி அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது எமது குழுவின் திடமான இலக்காக இருந்தது. அந்த நோக்கத்தை அடைந்து கொள்ளும் வகையில் குறுகிய காலப்பகுதிக்குள் கலந்துரையாடல்கள், பல்வேறு குழுக்களுக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்புகள், மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்புகளும்- தெளிவுபடுத்தல்களும், ஊடக அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் தயார்படுத்தல் போன்ற செயற்பாடுகள் ஆரம்ப காலங்களில் முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்ப கட்டத்திலேயே இக்குழுமத்தின் தலைவராக எம்.எச்.எம்.நியாஸ் அவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டதுடன், நிறைவேற்றுப் பணிப்பாளராக அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், துறைமுக அபிவிருத்தி அமைச்சு, நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு போன்ற பல்வேறு அமைச்சுகளில் ஊடக செயலாளராக கடமையாற்றியவருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் மல்வானை ஏ. ஹில்மி முஹம்மத் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.


கிழக்கு மாகாணத்தின் முன்னணி சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவரும், ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கத்துக்காக அயராது பாடுபட்டவர்களில் ஒருவருமான மறைந்த எம்.எல்.ஏ.அஹமத் பசீர் அவர்கள் எமது ஆலோசகராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கல்ஹின்னை கலைப்புயல் என்ற பெயரில் இலக்கிய, ஊடக துறையில் பரவலாக  அறியப்பட்டிருந்த எம்.எச்.எம். றியாஸ் முஹம்மத் எமது குழுமத்தின் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்தக் குறிப்புகளை தொகுக்கும் நான் நிர்வாக செயலாளராக நியமிக்கப்பட்டேன்.அதன் பின்னர் பல்லின சமூகமொன்றில் வாழும் முஸ்லிம்களின் கலாசாரப்பாரம்பரியங்கள் என்ற தலைப்பில் எம்மால் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. 2004ம் ஆண்டு கொழும்பு-03, கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த ரண்முத்து ஹோட்டலில் குறித்த கருத்தரங்கம் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் அதற்காக ரண்முத்து ஹோட்டல் நிர்வாகி ஏ.டப்.அமீர், கருத்தரங்கின் நிதிச் செலவினங்களுக்கு கைகொடுத்த கடிலாக் ஆடைத் தொழிற்சாலையின் உரிமையாளர் எம். வசீர் மற்றும் கிரசண்ட் பூட் நிறுவனத்தின் உரிமையாளர் எம்.ஜெய்னுதீன் ஆகியோரை இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

 
கருத்தரங்கின் பிரதான சொற்பொழிவாளராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பிரதம அதிதியாக அன்றைய கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், விசேட சொற்பொழிவாளராக களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திரசிறி பள்ளியகுரு, ஆய்வு அறிக்கை தயாரிப்பில் கல்வி அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் லெப்பைத் தம்பி போன்றோர் தங்கள் அறிவாற்றல் மற்றும் ஏனைய வழிகளிலும் எமது கருத்தரங்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு வழங்கிய புலமைசார் பங்களிப்புகள் குறித்து இச்சந்தர்ப்பத்தில் நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ‌
கருத்தரங்கத்தின் ஓர் அங்கமாக வெளியிடப்பட்ட விசேட நினைவு மலரில் மறைந்த கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, விரிவுரையாளர் ஏ.சி. அகார் முஹம்மது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ், சிரேஷ்ட எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி, இலங்கை முஸ்லிம் ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஏ.எல்.எம். றாசிக், நீதிமன்ற முதலியார் ஏ.சி.நஜ்முத்தீன், ஊடகவியலாளர் மொயின் சமீம் போன்றோர் தயாரித்த ஆய்வுசார் அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதன் போது சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் வழங்கிய பரந்தளவிலான ஒத்துழைப்புகள் குறித்தும் நன்றியுடன் குறிப்பிட்டுக் கொள்கின்றோம்.

குறித்த கலந்துரையாடலில் சிங்கள, தமிழ், முஸ்லிம் கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் -குறிப்பாக வி.ஐ.எஸ். ஜெயபாலன் போன்றோரும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதே வருடத்தில் கலாசார அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் முஸ்லிம்களின் நோன்பு தனி மனித வாழ்வைத் தூய்மைப்படுத்துவதுடன் சமூக வாழ்வை மேம்படுத்தும் என்ற தலைப்பிலான தேசிய நிகழ்வொன்று கொழும்பு-10, மருதானை சாஹிரா பள்ளிவாசலில் கலாசார அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. 

அதில் பௌத்த தேரர்கள், கத்தோலிக்க அருட்தந்தையர், ஹிந்து குருக்கள் மற்றும் இஸ்லாமிய ஆலிம்கள் (மௌலவிமார்) ஆகியோர் ஒன்றிணைந்து நல்லிணக்கம் தொடர்பில் திறந்த கருத்தாடல் ஒன்றை நடத்தியிருந்தனர். அன்றைய மேல் மாகாண ஆளுனர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா,  பேராசிரியர் கலாநிதி சந்திரசிரி பள்ளியகுரு, பிரபோதய சஞ்சிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ்.எம். மன்சூர், அஸ்ஸெய்யித் அலவி சாலிஹ் மௌலானா மௌலவி, ஆகியோருடன் கலாசார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.பீ.ஏ. குணசேகர, கலாசார அமைச்சின் முன்னாள் பணிப்பாளர் சிசிர பிரியதர்சன, அன்றைய கலாசார அமைச்சரின் அந்தரங்க செயலாளரும், பின்னாளில் கலாசார அமைச்சின் பணிப்பாளருமான விஜித கணுகல, அன்றைய கலாசார அமைச்சரின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களான அனில் குணவர்த்தன, ஜீ.சி. பிரசன்ன பெரேரா, சுனில் பண்டார கோரலகே, சரித ஜயசுந்தர, சமிந்த துணுகம, சந்திரசோம கிணிகே,  போன்றோர் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஒத்தாசை நல்கியிருந்தனர்.  

அதன் பின் வந்த காலங்களில் பல்வேறு கருப்பொருளிலான சிற்சிறு கருத்தரங்குகள் மற்றும் விழாக்கள் நடைபெற்றதுடன், 2010ம் ஆண்டின் பின்னர் வலிந்து உருவாக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான முரண்பாட்டு மனோநிலை  பின்புலத்தில் பல்வேறு மதத்தலைவர்கள் மற்றும் கல்விமான்களை சந்தித்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம்.

2018ம் ஆண்டில் கண்டி, திகணை பிரதேசத்தில் இடம்பெற்ற இனவாத வன்முறைகளின்போது அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் விசேட வேண்டுகோளின் பேரில் எமது குழுமத்தின் அங்கத்தவர்களில் சிலர் வன்முறைகள் இடம்பெற்ற கண்டி திகணை பிரதேசத்துக்கு நேரடியாக சென்று, மதத்தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடி, ராணுவ மற்றும் பொலிசார் ஊடாக பொதுமக்கள மத்தியில் நிலவிய அச்சங்களை களைந்து பிரதேசத்தில் அமைதியை மீண்டும் நிலைநிறுத்த அர்ப்பணிப்புடன் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம்.அது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் நன்றி தெரிவிக்கப்பட்டு பாராட்டுக் கடிதம் ஒன்றும் எமக்கு வழங்கப்பட்டுள்ளது.  
அதே போன்று கடந்த 2020ம் ஆண்டு கொரோனா நோய்ப் பரம்பலின் ஆரம்ப கட்டத்தில் எமது குழுவினர் கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறுவோருக்கான நிவாரண சேவையொன்றையும் முன்னெடுத்திருந்தோம். உலர் உணவுப் பொருட்கள், ஆடைகள், கல்வி உபகரணங்கள் போன்ற விடயங்களில் எங்களது சேவைகளை வழங்கியிருந்ததுடன், கொழும்பு கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, தெஹிவளை பொலிஸ் பிரிவுகளிலும், திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் அலுவலகம் ஊடாகவும் எமக்கு விசேட அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தது.

அவ்வாறான நிலையில் நாம் மீண்டும் தேசிய நல்லிணக்கம், சகவாழ்வுக்கான புலமைசார் செயற்பாடுகள் தொடர்பிலான வழிமுறைக்கு மீண்டும் திரும்பியுள்ளோம்.

இச்சந்தர்ப்பத்தில் எங்களுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள, மதத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் இணைந்து இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

எமது செயற்பாடுகள் அனைத்தும் சிறப்பான முறையில் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம் கிட்ட பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.




Post a Comment

Previous Post Next Post