நன்றி;தினகரன் (Friday, December 6, 2019)
அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி)
மஸ்ஜிதுகள் அல்லாஹ்வின் இல்லங்கள். அவை உயிர்ப்பிக்கப்பட வேண்டும். மக்கள் மஸ்ஜிதுகளுடன் அழகான உறவைப் பேணி வர வேண்டும். ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் வரும் இடங்களாக பள்ளிவாசல்கள் மாற வேண்டும்.
மஸ்ஜித் பரிபாலனம் என்பது இலகுவானதொரு காரியமன்று. நினைத்தவர்கள் எல்லாம் அந்தப் பொறுப்பை ஏற்கவும் முடியாது. ஆசை வைப்பவர்களுக்கு எல்லாம் அப்பொறுப்பைக் கொடுக்கவும் முடியாது. மாற்றமாக அல்லாஹ்விடத்தில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்புக்களில் இப்பொறுப்பும் முக்கியமானது. ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் ஊர் நிர்வாக முறைமையிலும் அதனை மேற்கொள்வோரிடமும் தங்கியிருக்கிறது.
பேஷ் இமாம், முஅத்தின் ஆகியோருக்கு மாதாந்தக் கொடுப்பனவைக் கொடுத்தல், பள்ளிவாசலின் மின்சார, நீர்க் கட்டணங்களைச் செலுத்துதல், மஸ்ஜிதுக்கான வருமான வழிகளை ஏற்படுத்தல் போன்றவையே மஸ்ஜித் நிர்வாகிகளின் பணிகளாக அதிகமான இடங்களில் காணப்படுகின்றன. இத்துடன் சேர்ந்ததாக ரமழான் மாதத்துக்கான விஷேட அமல்களான தராவீஹ் தொழுகையை ஏற்பாடு செய்தல், ஸகாதுல் பித்ரை சேர்த்து விநியோகித்தல், இரு பெருநாள் தொழுகைகளை ஏற்பாடு செய்தல், குர்பானி விடயத்தை அழகாகச் செய்து முடித்தல் போன்ற விடயங்களிலும் நிர்வாகிகள் ஈடுபடுகின்றார்கள்.
இவை செய்யப்பட வேண்டிய அம்சங்களாகும். ஆனால் இதனையும் தாண்டி பள்ளிவாசல் நிர்வாகிகளின் பணி பாரியது, விசாலமானது. இது பற்றிய சில ஆலோசனைகளை இங்கு முன்வைக்கின்றோம்.
நிர்வாகிகள் பேண வேண்டிய தகவல்கள்
பள்ளிவாசல் நிர்வாகிகள் என்போர் ஒரு ஊரின் பொறுப்பாளர்கள். ஊர் பற்றிய அனைத்து வகையான தேவையான தகவல்களையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். உதாரணமாக,
# ஊரின் சனத்தொகை – பால், வயது அடிப்படையில் குடும்பங்களின் எண்ணிக்கை (தனிக் குடும்பம், கூட்டுக் குடும்பம்)
# கல்வி நிலை – பாடசாலை செல்லும் பிள்ளைகள், பாடசாலைக் கல்வியை இடையில் விட்டோர் (அதற்கான காரணங்கள்)
# மக்களின் பொருளாதார நிலை – வாழ்க்கைத் தரம், தொழிலின் தன்மை, தொழிலற்றவர்கள், சொந்த வீடு உள்ளோர், கூலி வீட்டில் வாழ்பவர்கள், வீடற்றோர்
# ஊரில் காணப்படும் மனித வளம் – துறை வாரியாக
# பௌதீக வளம்
# மக்களது ஆன்மீகம் – மஸ்ஜிதுடன் தொடர்பு குறைந்தவர்கள், தொடர்பற்றவர்கள்
# பண்பாட்டு நிலைமைகள் – மக்களுக்கு மத்தியில் காணப்படும் பெரும்பாவங்கள்
# திருமணம் – திருமணம் முடித்தோர், முடிக்க இருப்போர், இவர்களில் திருமண வயதை அடைந்தும் பல காரணங்களுக்காக திருமணம் செய்யாமல் இருப்போர் இவற்றுடன் பள்ளிவாசலுக்கான யாப்பு ஒன்று வரையப்படுதல் அவசியமாகும். இதுவே நிர்வாகத்துக்கு வழிகாட்டி நெறிப்படுத்த வேண்டும். பிரச்சினைகளின் போது முடிவெடுப்பதற்கு இது உதவியாக அமையும். இதனை நிர்வாகிகள் உட்பட ஊர் மக்களும் அறிந்திருப்பது சிறந்தது. மஸ்ஜிதை பதிவு செய்தல், அது பற்றிய சட்ட திட்டங்கள் என்பவற்றோடு நாட்டுச் சட்டங்களையும் அறிந்திருத்தல் அவசியமானது.
பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் காணப்பட வேண்டிய திறன்கள்
கூட்ட முகாமை – ஊரின் நிர்வாகிகள் என்ற வகையில் இவர்கள் முழு ஜமாஅத்தையும் நிர்வகிப்பவர்கள். எனவே இவர்களிடம் நிர்வாகத் திறன் இருப்பது அவசியமாகும். கூட்டங்களை எப்படி நிர்வகிப்பது, கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை எப்படித் தயாரிப்பது, முடிவுகளை உரிய முறையில் எப்படி எடுப்பது, எடுக்கப்படும் முடிவுகளை எவ்வாறு பதிவது, அவற்றை ஆவணப்படுத்துவது, அவற்றை எவ்வாறு அமுல்படுத்துவது, அவற்றின் பின்னூட்டலை எவ்வாறு பெற்றுக் கொள்வது போன்ற முக்கிய அம்சங்களில் நிர்வாகிகளின் திறன் வளர்க்கப்பட வேண்டும்.
மக்களை நிர்வகித்தல் - மக்களை நிர்வகிப்பது ஒரு முக்கியமான கலை. மக்களின் இயல்புகள், மனோ நிலைகள் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவற்றுக்கிடையில் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அனைவரையும் ஒரே மாதிரி அணுக முடியாது. அணுகுமுறை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். எனவே மக்களுடன் உறவாடுவது பற்றிய அறிவு மற்றும் திறனை வளர்த்துக் கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.
இந்த அறிவு இல்லாத போது எமது அணுகுமுறைகளினால் நாங்கள் மக்களை இழக்க நேரிடலாம். அவர்களின் ஒத்துழைப்பினைப் பெறுவது கடினமாக மாறலாம். இது ஆரோக்கியமானதல்ல. ஊர் ஜமாஅத்தார்களின் உள்ளங்களை வென்று அவர்களையும் இணைத்துக் கொண்டு எவ்வாறு முழு ஊரையும் வெற்றி நிலை நோக்கி அழைத்துச் செல்வது என்ற பார்வை உள்ள நிர்வாகிகளால் தான் வெற்றி பெற முடியும்.
பிரச்சினைகளைத் தீர்த்தல் – மக்கள் என்ற வகையில் அவர்களுக்கு மத்தியில் பல பிரச்சினைகள் எழ முடியும். குடும்பப் பிரச்சினை, இயக்கப் பிரச்சினை, குழுப் பிரச்சினை, அண்டை வீட்டாருடனான பிரச்சினை, காணிப் பிரச்சினை, கடன் பிரச்சினை எனப் பல வடிவங்களில் பிரச்சினைகள் வர முடியும். இவற்றைக் கண்டும் காணாதது போல நிர்வாகிகள் இருக்க முடியாது. அவற்றைச் சரியாக அடையாளப்படுத்தி பொருத்தமான வழிமுறைகளைக் கையாண்டு பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். உள்ளங்களுக்கு மத்தியில் பிணைப்பை ஏற்படுத்த வேண்டும்.
ஷூறா பற்றிய தெளிவு – எமது அனைத்து நடவடிக்கைளும் ஷூறா அடிப்படையில் அமைய வேண்டும் என இஸ்லாம் போதிக்கிறது. “அவர்களது (முஃமின்களது) விவகாரங்கள் அவர்களுக்கு மத்தியில் ஷூறா அடிப்படையில் நடைபெறும்” என அல்குர்ஆன் விபரிக்கின்றது. (ஷூறா 38). நபி (ஸல்) அவர்கள் அதிகமாக ஸஹாபாக்களுடன் கலந்தாலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள் என அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கின்றார்கள். (திர்மிதி). நிர்வாகிகள் தமக்கு மத்தியில் கலந்தாலோசனை செய்வது முக்கியமானது. ஊர்த் தலைவர் சுயமாக முடிவெடுக்க முடியுமா, தலைவரின் முடிவா இறுதி முடிவு அல்லது பெரும்பான்மைக் கருத்தை முடிவாக எடுக்க வேண்டுமா என்பது தொடர்பான விடயங்களில் ஷரீஆவின் தெளிவான பார்வையும் அவசியமாகும்.
எந்தச் சந்தர்ப்பங்கள், விவகாரங்களில் ஜமாஅத்தாரிடம் கருத்துக் கேட்க வேண்டும், துறை சார்ந்தவர்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதெப்படி, ஷரீஅத் தொடர்பான மஸ்அலாக்களை எவ்வாறு அணுகுவது போன்றவற்றிலும் நிர்வாகிகள் தெளிவு பெற்றிருப்பது அவசியமாகும். இவை தொடர்பான அறிவு மக்களுக்கும் கிடைக்கின்ற அளவுக்கு நிர்வாகத்தை இலகுவாகச் செய்ய முடியும்.
அஷ்ஷெய்க் ஆஸாத் அப்துல் முஈத் (நளீமி)
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்