தியாகத் திருநாள்!

தியாகத் திருநாள்!

 
ஈகைத் திருநாளாம்
இன்பப் பெருநாள்
தியாகத் திருநாளாம்
ஹஜ்ஜுப் பெருநாள்.

இஹ்ராம் கட்டியது முதல்
இஹ்ராமைக் களையும் வரை
இப்றாஹிம் நபிகளாரின்
இதிகாசங்களைப் பேசுகிறது
இறுதிக் கடமை ஹஜ்.

ஒருவனே இறைவன் என்ற
ஒரே தத்துவம் ஓதி
ஒன்றாய் வலம் வரும்
ஒரே இடமது புனித கஃபா.

ஆதமும் ஹவ்வாவும் சந்தித்த திடலில்
அரஃபா தினத்தில் திரளும் ஹாஜிகள்
ஓரிறைக் கொள்கையைத் திடமாய் ஏற்று
ஒற்றுமையாய் அங்கே ஒன்று கூடுவர்.

சாதி பேதங்களும் அங்கில்லை
நிற பேதங்களும் நிச்சயமாய் இல்லை.
வர்க்க பேதங்களும் அங்கில்லை
குல பேதங்களும் இல்லவே இல்லை.

ஈகைத் திருநாளாம்
இன்பப் பெருநாள்
தியாகத் திருநாளாம்
ஹஜ்ஜுப் பெருநாள்.

அன்னை ஹாஜராவின் 
கரம் பற்றிப்பெற்ற  
அன்பு மகன் இஸ்மாயீலின்
கண்ணீர் கதை அது.
நபிகளார் இப்றாஹிம் கண்ட
அற்புதக் கனவு அது.
உலகம் முடியும் வரை நனவாகும்
ஓர் அழகான சரிதம் அது.

உயிரைவிட உயர்ந்ததென
உலகில் ஏதும் உண்டோ...?
அந்த உயிரையே துச்சமாக்கி
அர்ப்பணிக்கத் துணிந்த சரிதம் தான்
உலகில் ஏதும் உண்டோ...?

இறை சோதனையின்
இக்கட்டான நிலைதனிலும்
இறையோனின் உற்ற தோழர்
இப்றாஹீம் நபியவர்கள்
இறுதி வரை உறுதியுடன்....
ஏகன் துணையே போதுமென்றார்
ஏகத்துவமே கொள்கை யென்றார்.

எத்தனையோ சோதனைகள் 
எத்தனையோ வேதனைகள்
எதிலும் மனம் தளராமல்
சாத்தானின் சதிகளையும்
சாதித்தே வென்று நின்றார்.

உலகிலுள்ள நாட்களில்
உயர்வான நாட்கள் என்றால்
துல் ஹஜ்ஜின் முதல் பத்தாம்.
தூய நபிகளாரின் வாக்கு இது. 

பாவக் கறை போக்கி
நற்காரியம் செய்திட
நாடுவோர் எல்லோர்க்கும்
நல்லதொரு தருணமிது

வாழ்வாதாரம் இழந்தோர்கள்
வறுமையில் வாடுவோர்கள்
வசதியாய் வாழ்ந்தோர்கள்
வாய் திறந்து கேட்காதோர்
வாங்கக் கை நீட்டாதோர்
அனைவரையும் கண்டறிந்து
அழகான அறம் செய்வோம்.
வானுயர நன்மை சேர்ப்போம்.

வறியோர்கள் பசித்திருக்க
வசதியுள்ளோர் புசித்து வாழ்ந்தால்
கொடிய நோய்கள் சோதனைகள் 
கொன்று விடும் நிம்மதியை.
கொடுத்தவர் பொருள் குறைவதில்லை
கொடுத்து வாழ்வோர் கெடுவதில்லை.

விருந்தோம்பல் செய்வதில்
நபி இப்றாஹிம் வழி நடப்போம்
ஏழைகளை அரவணைத்து
எங்கள் தாஹா நபி வழி தொடார்வோம்.
 
 

Post a Comment

Previous Post Next Post