தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வதும் மிக முக்கியமாகக் கருதப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நம் வீட்டில் உள்ள, அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களே போதுமானதாக உள்ளது.
அந்த வகையில் வீட்டில் இருக்கும் கறிவேப்பிலை, துளசி மற்றும் தேனைக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை இது அதிகரிக்க உதவும். கறிவேப்பிலை, துளசி, தேன் பேஸ்டை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை – சிறிதளவு,
துளசி – சிறிதளவு,
தேன் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
வீட்டில் உள்ள இஞ்சி – பூண்டு நசுக்கும் சிறிய குழவி அல்லது அம்மியில் கறிவேப்பிலை, துளசி இலையை வைத்து நன்கு மையலாக அரைக்க வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேன் சேர்த்து கலக்க வேண்டும்.
இந்த பேஸ்டை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பேஸ்டை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். என்றாலும், வெறும் வயிற்றில் சாப்பிடுவது அதிக பலனைத் தரும்.
துளசி மூலிகைச் செடியாகும். இது ரத்த வெள்ளை அணுக்களில் உள்ள டி ஹெல்ப்பர் செல்களை அதிகரிக்கச் செய்கிறது. இயற்கை முறையில் நோய்க் கிருமிகளை அழிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, பி12, இரும்புச் சத்து, கால்சியம் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. இது மிகச் சிறந்த ஆன்டி பாக்டீரியலாகவும், ஆன்டி- இன்ஃபிளமேட்டரியாகவும் செயல்படுகிறது. கறிவேப்பிலை ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேன் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாக உலகம் முழுக்க பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மிகச்சிறந்த நுண்ணுயிர் கொள்ளியாகச் செயல்படுகிறது. ஆன்டி – இன்ஃபிளமேட்டரியாகவும் செயல்படுகிறது. இதில் உள்ள இரண்டு பயோஆக்டிவ் மாலிக்கிள்ஸ் ஆரோக்கிய வாழ்வைத் தூண்டுகிறது.