REUTERS
தேதி ஜனவரி 2 , நாள் வெள்ளிக்கிழமை. ஜப்பானில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு கனே என்று பெயர் சூட்டப்பட்டது.
இது நடந்தது 1903 ஆம் ஆண்டு. கனே தனாகா 119 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2022 ஏப்ரலில் காலமானார். அவர் அதிகாரப்பூர்வமாக உலகின் மிகவும் வயதான நபர் ஆவார்.
அவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை நர்ஸிங் ஹோமில் கழித்தார். காலை ஆறு மணிக்கு எழுவார். கணித கேள்விகளுக்கு விடை காண்பார். போர்ட் கேம்களை விளையாடுவார். சாக்லேட் சாப்பிடுவார். காபி மற்றும் சோடா குடிப்பார்.
நூறு ஆண்டுகள் வாழ பெரியவர்கள் ஆசிர்வதித்தாலும், இந்த எண்ணம் உண்மையாவது சாத்தியமில்லை என்று கருதப்பட்டது, ஆனால் இப்போது அப்படி இல்லை.
எனவே நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க, பிபிசி நான்கு நிபுணர்களிடம் பேசியது.
GETTY IMAGES
மறு பிறவி
ஜப்பானின் அறிவியல் கவுன்சிலின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ஹிரோகோ அகியாமா, "இப்போது நூறு ஆண்டுகள் வரை வாழ்வதில் அசாதாரணம் எதுவுமில்லை" என்கிறார். 'ஸ்டடி ஆஃப் ஏஜிங்' எனப்படும் முதுமையடைதல் குறித்த ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவர் ஹிரோகோ அகியாமா.
ஜப்பானின் மக்கள் தொகைக்கு வேகமாக வயதாகி வருவதாக அவர் கூறுகிறார். ஜப்பானில் இப்போது பெண்களின் சராசரி வயது 88 ஆகவும், ஆண்களின் சராசரி வயது 82 ஆகவும் உள்ளது. ஜப்பானின் மக்கள் தொகையில் 29 சதவிகிதம் பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
சராசரி வயதைப் பொருத்தவரை, ஹாங்காங், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் மட்டுமே ஜப்பானுக்கு அருகில் வருகின்றன. கடந்த ஆண்டு நாட்டின் 86 ஆயிரத்து 510 குடிமக்களின் வயது, நூறாக இருக்கும் அல்லது அதற்கு மேலும் இருக்கும் என்று ஜப்பானின் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.
"ஜப்பானில் மக்களின் நீண்ட ஆயுளுக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று 'யுனிவர்சல் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் சிஸ்டம்'. நாங்கள் 1960 களில் இதைத் தொடங்கினோம். மக்கள் இங்கு சுகாதார வசதிகளை எளிதாகப் பெறுகிறார்கள். மற்றொரு காரணம். ஜப்பான் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ளது மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை ஆரோக்கியமானது."என்று கூறுகிறார் டாக்டர் ஹிரோகோ .
ஜப்பானியர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறார்கள். ஜப்பான் மக்கள் உணவில் கவனம் செலுத்துகிறார்கள். குறைந்த கொழுப்பு உட்கொள்கிறார்கள். மீன், காய்கறிகள் மற்றும் கிரீன் டீ போன்றவற்றை அதிகம் உட்கொள்கிறார்கள். ஜப்பானில் மக்களின் சராசரி வயது அதிகரித்து வருகிறது ஆனால் மொத்த மக்கள் தொகை குறைந்து வருகிறது. உண்மையில், பிறப்பு விகிதம் சில காலமாக குறைந்து வருகிறது.
மேலும் வேலை செய்யக்கூடிய வயதுடையவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது என்று டாக்டர் ஹிரோகோ கூறுகிறார்.
முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முதியவர்களின் தேவைகள் வேறுபட்டவை என்ற புரிதலும் உருவானது.
அரசின் முக்கிய கவனம் சுகாதார அமைப்பு மற்றும் ஓய்வூதிய முறை மீது உள்ளது. வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து அமைப்புகள் மீதும் கவனம் செலுத்தப்படுகின்றன. ஆனால் சமூகத்தின் அடிப்படை உள்கட்டமைப்பு மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்கிறார் டாக்டர் ஹிரோகோ.
தனது குழுவுடன் சேர்ந்து அவர், வயதானவர்கள் யாரையும் சார்ந்திருக்காமல் வாழக்கூடிய வழிகளைக் கண்டறிய பல சமூகப் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
"வயதான சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும்விதமாக நாங்கள் சமூகங்களை மறுகட்டமைக்க முயற்சிக்கிறோம். 100 வயது வரை மக்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டும், பாதுகாப்பாகவும் உணரும் சமூகத்தை உருவாக்க விரும்புகிறோம். நாங்கள் முதியவர்களுக்காக மட்டுமல்ல, எல்லா வயதினருக்காகவும் வேலை செய்கிறோம்." என்று டாக்டர் ஹிரோகோ கூறுகிறார்.
ஜப்பானில் மக்கள் ஓய்வு பெற்ற பிறகு புதிய வேலைகளைத் தொடங்குகிறார்கள். அவர்கள் தங்கள் இரண்டாவது தொழில் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். இது தினசரி பழக்கவழக்கத்தை பராமரிக்கிறது மற்றும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
டாக்டர் ஹிரோகோ அகியாமாவுக்கு 78 வயதாகிறது. அவர் தனது இரண்டாவது தொழில் வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.
"பல ஆண்டுகள் பல்கலைகழகத்தில் பேராசிரியராக நான் இருந்தேன். 70 வயதில் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். நான் உட்பட பல்வேறு திறமைகள் கொண்ட நான்கு பேர் சேர்ந்து ஒரு நிறுவனம் அமைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். நான் விவசாயியாக ஆக வேண்டும் என்பது என் சிறுவயது கனவு." என்றார் அவர்.
அவர் நூறு வயது வரை வாழ விரும்புகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த டாக்டர் ஹிரோகோ அகியாமா, தனது தாயார் இறந்தபோது அவருக்கு 98 வயது என்று கூறுகிறார். நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் போதும் என்கிறார் அவர். ஆனால் அவருக்கு நூறு வருடங்களுக்கு மேல் வாழ வேண்டும் என்ற விருப்பம் இல்லை.
SCIENCE PHOTO LIBRARY
முதுமை என்றால் என்ன?
"முதுமை என்பது மிகவும் தனிப்பட்ட செயல்முறையாகும். எந்த இரண்டு பேரின் முதுமையடையும் செயல்முறையும் ஒரே போல இருக்காது," என்கிறார் பர்மிங்காமின் ஹெல்தி ஏஜிங்கிற்கான ஆஸ்டன் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விரிவுரையாளர் கேத்தி ஸ்லாக்.
நமக்கு ஏன் வயதாகிறது? இந்த உயிரியல் செயல்முறையை மெதுவாக்க முடியுமா, கேத்தியின் ஆய்வகம் இந்தக் கேள்விக்கான பதில்களைத் தேடுகிறது.
முதுமையின் வெளிப்புற அறிகுறிகள் அனைவருக்கும் தெரியும். தோல் சுருக்கங்கள் மற்றும் முடி நரைப்பது போல. ஆனால் நம் உடலிலும் நிறைய நடக்கிறது. வயதானதன் விளைவு உடலின் அனைத்து திசுக்களிலும் தெரியும் என்று கேத்தி விளக்குகிறார். அதன் விளைவு மூளை முதல் கருவுறுதல் வரை இருக்கும். இந்த மாற்றங்கள் முதுமையின் முக்கிய அடையாளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
"இதில் பல செயல்முறைகள் இருக்கலாம். செல்லுக்குள் புரதத் தரக் கட்டுப்பாடு இழப்பு, மைட்டோகாண்ட்ரியா செயலிழத்தல் போன்றவை. மைட்டோகாண்ட்ரியா, ஆற்றலை உற்பத்தி செய்யும் செல்லின் ஒரு பகுதியாகும். வயது அதிகரிக்கும்போது அது வேலை செய்வதை நிறுத்தலாம்."என்கிறார் அவர்.
முதுமை தொடங்கும் போது, நீரிழிவு போன்ற நிரந்தர நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது என்று கேத்தி கூறுகிறார். செல்கள் செயல்பட ஊட்டச்சத்துக்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம். பிரச்னை ஏற்படும் போது, ஸ்டெம் செல்கள் அழிகின்றன. ஸ்டெம் செல்கள், செல்களை சரிசெய்யும் பணியை செய்கின்றன. மனதிலும் மாற்றங்கள் வரும்.
"சிலருக்கு வயதாகும்போது மூளையின் அளவு குறையலாம். இதனால் பல முதியவர்களின் நினைவாற்றல் பலவீனமடைகிறது. ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது. அவர்களின் நடத்தையிலும் மாற்றங்கள் வரும். ஒன்று மிகவும் கவலையாக இருப்பது அல்லது மனச்சோர்வுக்கு ஆளாவது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், எல்லா முதியவர்களிடமும் இவை எல்லாம் ஒரே மாதிரியாக இருக்காது. நபருக்கு நபர் மாறுபடும்," என்று கேத்தி ஸ்லாக் விளக்குகிறார்,.
நூறு வருடங்கள் வாழ்வதற்கான நமது எதிர்பார்ப்புகளை எப்படி அதிகரிப்பது என்ற கேள்விக்கும் கேத்தி பதிலளிக்கிறார்.
"இன்று மிகவும் வயதானவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் உடல்நிலை நன்றாக இல்லை. இது தொடர்பாக வேலை செய்யும் அவசியம் உள்ளது. இது ஒரு பழமையான அறிவுரையாகத் தோன்றலாம். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் பின்பற்ற வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். வயதாகும்போது உங்கள் செயல்பாடுகளைத் தொடர முயற்சி செய்யுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள். அதிகமாக வேண்டாம். மிகக் குறைவாகவும் வேண்டாம். புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள்." என்று கேத்தி ஸ்லாக் குறிப்பிட்டார்.
முதுமை பற்றி நாம் அறியாத பல விஷயங்கள் இன்னும் உள்ளன. வரலாற்று ரீதியாக நாம் நோய் செயல்பாடு மீது அதிக கவனம் செலுத்தியுள்ளோம் என்று கேத்தி ஸ்லாக் கூறுகிறார்.
புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் பலர் உள்ளனர். ஆனால் நோய்களை, வயதுடன் தொடர்புடைய நோய்களாகப் பார்க்கும் ஒரு குழுவினரும் இப்போது உள்ளனர்.
இந்த வழியில் பல நோய்களுக்கான சிகிச்சையின் புதிய முறைகளை உருவாக்க முடியும்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
சுவாரசியமான பரிசோதனை
"சில முயற்சிகள் மூலமாக, முதுமையடையும் செயல்முறையை மெதுவாக்கமுடியும் என்று எங்களது ஆய்வகத்தில் காட்டுகிறோம். சில சமயங்களில் அதை நிறுத்தவும், அதன் போக்கை திருப்பவும் முடியும். இதை செய்வது சாத்தியம்தான்,"என்கிறார் நியூயார்க் நகரத்தில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக்கல்லூரியின், முதுமையடையல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் நீர் பார்சிலாய்.
உலகில் எத்தனை பேர் 100 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்று மதிப்பிடுவது கடினம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை, 2021 ஆம் ஆண்டில், இதுபோல 5 லட்சத்து 73 ஆயிரம் பேர் இருந்ததாக மதிப்பிடுகிறது.
டாக்டர் நீர் பார்சிலாய் தனது ஆராய்ச்சியைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். அதிகமான மக்கள் நூறு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் வாழ்வதற்காக தாங்கள் பரிசோதனைகளை செய்வதாகவும், வழிகளைத்தேடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். நூறு வயதை நிறைவுசெய்துள்ள எழுநூற்று ஐம்பது பேரிடமும் அவர்களது குடும்பத்தினரிடமும் அவர் உதவி பெற்று வருகிறார்.
முதுமையின் வேகத்தை குறைக்கக்கூடிய மரபணுக்களை அவர் தேடிவருகிறார். இந்த தகவலை மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தலாம்.
அவரது குழு முதுமை தொடர்பான மூன்று சாத்தியக்கூறுகளில் வேலை செய்கிறது. இவற்றில் முதல் நோக்கம் செயல்முறையை மெதுவாக்குவதாகும். வயதால் பாதிக்கப்படாத ஆனால் இந்த விளைவு ஒளிந்திருக்கின்ற அவரது ஓவியத்தில் தெரியக்கூடிய, 'டோரியன் கிரே' என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் பெயர் அதற்கு சூட்டப்பட்டுள்ளது.
"இரண்டாவது கட்டத்தை 'இளமையின் நீரூற்று'(Fountain of youth) என்று அழைக்கிறோம். இதில் அனைவரையும் இளமையாக்குவது பற்றி பேசப்படுகிறது. அதை செய்துகாட்டுவது மிகவும் கடினம். மூன்றாவது மிகவும் சுவாரசியமானது. இதற்கு Peter Pan என்று பெயரிடப்பட்டது. இந்த கற்பனைக் கதாபாத்திரத்தின் வயது கூடுவதில்லை. இருபது அல்லது முப்பது வயதிற்குட்பட்டவர்களை இதில் தேர்வு செய்ய திட்டமிடுகிறோம். சில மாதங்களுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், மேலும் முதுமையடையும் செயல்முறையை நிறுத்தவேண்டும் அல்லது வேகத்தைக் மிகவும் குறைக்க வேண்டும்."
பயோமார்கர்ஸ் என்பது இதய நோய், கொலஸ்ட்ரால் போன்ற உள் நோய்களைக் குறிக்கும் மூலக்கூறுகள். ஆனால் முதுமையை அடையாளம் காண இத்தகைய குறிப்பான்களைக் கண்டுபிடிப்பது எளிதல்ல.
"நமக்கு நிறைய பயோமார்கர்கள் தேவை. நாங்கள் இரண்டு தகவல்களைத் தரக்கூடிய பயோமார்கர்களை தேடுகிறோம். உண்மையான வயதுக்கும் உயிரியல் வயதுக்கும் உள்ள வித்தியாசத்தை அது சொல்லவேண்டும். சிலர் தங்கள் வயதைக்காட்டிலும் அதிகமாக அல்லது குறைவாகத்தெரிவார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டாவதாக, வயதாவதை மெதுவாக்க நாம் தயாரிக்கும் மருந்துகளை பயன்படுத்தும்போது, பயோமார்கர்களில் மாற்றம் தெரியவேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்," என்கிறார் டாக்டர் நீர் பார்சிலாய்.
முதுமையைத் தடுக்கும் நோக்கில் தயாரிக்கப்படும் சில மருந்துகள், கட்டுப்பாட்டாளர்களிண் ஒப்புதல் பெறப்பட்டு, தயாரிக்கப்பட்டும் வருகின்றன. அவை மற்ற சூழ்நிலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்த உடல் உறுப்பு நிராகரிக்கப்படாமல் இருப்பதற்காக இந்த மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் 'மெட்ஃபோர்மின்' என்ற மருந்தின், 'இரண்டாவது நோக்கத்திற்கான மருத்துவப் பரிசோதனைகள் இயக்கத்தை' டாக்டர் நீர் பார்சிலாய் வழிநடத்துகிறார்.
நீங்கள் இருக்கும்போதே இந்த திசையில் ஏதேனும் பெரிய வெற்றி ஏற்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்ற கேள்வியை பிபிசி அவரிடம் கேட்டது.
"ஆமாம், நிச்சயமாக. நாம் இரண்டு ஆண்டுகளில் என்ன செய்ய முடியும் என்பதை மிகைப்படுத்தி ஊகிக்கிறோம். ஆனால் ஐந்து அல்லது 10 வருடங்களில் என்ன செய்யமுடியும் என்பது பற்றி குறைத்தே மதிப்பிடுகிறோம். இந்தத் துறையில் மிகப்பெரிய அலை காணப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களும் இதில் முதலீடு செய்கிறார்கள், அது நிச்சயமாக வேகமெடுக்கப் போகிறது,"என்று அவர் பதில் அளித்தார்.
பட மூலாதாரம்,THINKSTOCK
வயதைக்கூட்டும் நண்பர்கள்
"மற்றவர்களுடன் நன்றாகப் பழகுபவர்கள் மற்றும் அன்பான உறவைக் கொண்டவர்கள், அப்படி இல்லாதவர்களை விட நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்கின்றனர்," என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் மனநலப் பேராசிரியரான ராபர்ட் வால்டிங்கர் கூறுகிறார்.
ராபர்ட் வால்டிங்கர், ஹார்வர்ட் ஸ்டடி ஆஃப் அடல்ட் டெவலப்மென்ட்டின் (வயது வந்தோர் குறித்த ஆராய்ச்சி) இயக்குநராகவும் உள்ளார்.
"இது எங்கள் ஆய்வின் 84 வது ஆண்டு. எங்களுக்குத் தெரிந்தவரை, ஒரே மக்கள் குழுவின் மீது நடத்தப்பட்ட மிக நீண்ட ஆய்வு இது. அவர்கள் டீன் ஏஜ் பருவத்தில் இருந்தபோது இது தொடங்கியது. இது அவர்கள் முதுமை அடைந்தபிறகும் தொடர்கிறது. இப்போது நாங்கள் அவர்களின் குழந்தைகளைப் பற்றிய ஒரு ஆய்வைத் தொடங்கியுள்ளோம். மனித வாழ்க்கையில் என்ன தவறு நடந்துள்ளது என்பதைக் கண்டறிய முயற்சித்தோம். வாழ்க்கை சரியான பாதையில் செல்வதற்கான ஆய்வுக்கும் இது உதவும்."
இந்த ஆய்வு 1938 இல் தொடங்கியது.
ஆரம்பத்தில் 724 பங்கேற்பாளர்கள் இருந்ததாக ராபர்ட் விளக்குகிறார். அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்துவிட்டனர். ஆனால் தொண்ணூறு, நூறு வயதைக் கடந்த சிலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.
இந்த ஆய்வில் நமக்க்கு ஏற்கனவே தெரிந்த சில விஷயங்கள் வெளிவந்ததாக அவர் கூறுகிறார். அவை, சத்தான உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்புடைய பழக்கவழக்கங்கள். இவை நீண்ட ஆயுளுக்கு உதவும்.
மற்றவர்களுடன் அதிக உறவு வைத்திருப்பது, தன்னைச் சுற்றியுள்ளவர்களுடன் அதிகம் இணைந்திருப்பது மற்றும் அன்பு, அரவணைப்பைக் காட்டுவது ஆகியவை மக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவியது என்பதை இந்த ஆய்வு காட்டியது என்கிறார் ராபர்ட்.
"இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. இந்த விஷயத்தில் சிறந்த கருதுகோள், மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிப்பது பற்றியது. பகலில் நடக்கும் ஏதோ ஒன்று உங்களை வருத்தப்படுத்தியது அல்லது யாருடனாவது சண்டை ஏற்பட்டதால் உங்கள் உடலில் இறுக்கத்தை உணர்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் வீட்டிற்கு வரும்போது, உங்கள் பேச்சை செவிமடுக்கும் நம்பகமான நபர் இருந்தால், உங்கள் சோர்வு தணிவதாக நீங்கள் உணருவீர்கள். தனியாக இருப்பவர்களின் கோபம் ஒருபோதும் முற்றிலும் மறையாது என்று நாங்கள் நம்புகிறோம். உடலில் லேசான அழுத்தம் எப்போதும் இருக்கும். அது உடலின் அமைப்பைக் கெடுக்கத் தொடங்குகிறது. நல்ல உறவுகள் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கு உதவுகின்றன என்ற தகவலை ஆராய்ச்சியின் மூலம் பெறுகிறோம்,"என்று ராபர்ட் வால்டிங்கர் கூறுகிறார்.
நீண்ட ஆயுளுக்கு உறவுகள் முக்கியம். ஆனால் தனிமையை விரும்பும் சிலர் இருக்கிறார்கள்.
அவர்களிடம், "இது ஒரு முக்கியமான விஷயம். நாம் அனைவரும் நல்ல மனிதர்களுடன் தொடர்பில் இருக்க விரும்புகிறோம். நம்மில் சிலர் உள்முக சிந்தனையாளர்கள்(Introvert). அது ஒரு பிரச்னையல்ல. உள்முக சிந்தனையாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்தில் இருப்பதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு. ஒன்று அல்லது இரண்டு நெருங்கிய நபர்கள் மட்டுமே தேவை. அவர்களுக்கு அதுவே போதும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நீங்கள் எத்தனை உறவுகளுடன் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரே ஃபார்முலா அனைவருக்கும் பொருந்தாது. செல்லப்பிராணிகளும் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதோடு நமது மன அழுத்தத்தையும் குறைக்கும்." என்கிறார் ராபர்ட் வால்டிங்கர்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
வாழ்க்கையில் முதல்முறையாக உறவுகொள்ள முயற்சித்த எழுபது அல்லது எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும் தாங்கள் ஆய்வு செய்துள்ளதாக ராபர்ட் விளக்குகிறார். சிலர் முதல் முறையாக காதலித்துள்ளனர். எனவே மிகவும் தாமதமாகிவிட்டது என்று எதுவுமே இல்லை என்று சொல்லலாம்.
மீண்டும் அதே கேள்விக்கு வருகிறோம். நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு என்ன ஃபார்முலா?
அத்தகைய செய்முறையை உத்தரவாதத்துடன் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களைச் செய்தால் அது உதவக்கூடும்.
உங்கள் உணவை சரியாக வைக்கவும். உடல் செயல்பாடுகளை பராமரிக்கவும். நீங்கள் பேசக்கூடிய நண்பர் அல்லது செல்லப்பிராணியைக் கண்டறியவும். இளைஞர்களை விட வயதானவர்கள் அதிகமாக இருக்கும் நாட்டில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையின் மாலை, பிரகாசமாகவும் நிதானமாகவும் இருக்கும் மாற்றங்கள் நிகழலாம்.
முதுமையடையும் செயல்முறையை மெதுவாக்கும் அல்லது முழு செயல்முறையையும் மாற்றுவதற்கான சூத்திரம் இன்னும் கிடைப்பதற்கு இல்லை. ஆனால் விஞ்ஞானிகள் இந்த திசையில் பணியாற்றுகிறார்கள்.
ஆனால் இது நடக்கும் வரை, உங்கள் உடலை நூறு ஆண்டுகளுக்கு தேவைப்படும் வகையில் கவனித்துக்கொள்வதற்கு ராபர்ட் வால்டிங்கரின் இந்த அறிவுரை பயனுள்ளதாக இருக்கும்.
SOURCE;bbcTamil
Tags:
ஆரோக்கியம்