செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கருதப்படுவதால், இந்த கிரகத்தை ஆய்வு செய்வதில் உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையில், இந்தாண்டு பிப்ரவரியில் அமெரி்க்காவின் பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அது, செவ்வாயின் பரப்புகளை பல்வேறு கோணங்களி்ல் படம் பிடித்து அனுப்பி வருகிறது. ஆனால், இந்த ரோவரின் முக்கிய பணியே, செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை, மண் துகள்களை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதுதான். இந்நிலையில், பாறைகளை துளையிட்டு அதில் இருந்து துகள்களை சேகரிக்கும் அதன் முதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெர்சவரன்ஸ் ரோவரில் இணைக்கப்பட்டுள்ள ரோபோ கரத்தில், தரையை துளையிடுவதற்கான கருவியும், துகள்களை சேகரிப்பதற்கான கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும், இவ்வாறு சேகரிக்கப்பட்ட மண், பாறை துகள்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க 43 டைட்டானியம் குழாய்களும் உள்ளன.
பாறையை துளையிட்டு துகள்களை சேகரிக்கும் பெர்சவரன்சின் முதல் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. பாறையை வெற்றிகரமாக துளையிட்ட அது, துகள்களை சேகரித்து குழாய்களில் அடைக்கும் முயற்சியில் தோல்வி அடைந்தது. இந்த பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.
Tags:
தகவல் தொழில்நுட்பம்