அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வபரக்காத்துஹு.
கடந்த 20ம் திகதி பிப்ரவரி மாதம் 2022ல் ஞாயிற்றுக்கிழமை பூதல்கஹா மகளாவைச் சேர்ந்த ஜனாப் ஜெமீல் ஜமால்தீன் (C.T.B) பஸ் சாரதி அவர்கள் மது அருந்திய நிலையில் பூதல்கஹா தைக்கியாப் பள்ளிவாசலுக்குள் சென்று சுயநினைவு அற்றநிலையில் சில சேதங்களை உண்டுபண்ணியது அப்பிரதேச மக்களுக்கு மற்றுமின்றி முஸ்லிம் சமூகத்திற்கே கவலைக்குரிய ஓர் விடயமாகும்.
அதேசமயம் அப்பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவுக்குள்ளாகி இருந்த சம்பவத்தை ஒருநாள் பொழுதுக்குள் விசாரணைகள் எதுவுமின்றி அம்பலப்படுத்தி இருந்தார்கள். இவர்களும் மது போதையில்தான் இருந்தார்களா? இஸ்லாம் மார்க்கம் எந்த இடத்திலாவது ஒரு தனிநபரின் குறைகளையோ, குற்றங்களையோ விசாரனையின்றி வெளிப்படுத்தும் தன்மையை கொண்டதல்ல (இஸ்லாம் மார்க்கம்)
அதே நேரம் அதிக மது அருந்தியதாக தன் சுயநினைவு இழந்திருந்த அவர் 23,ம் திகதி பிப்ரவரி மாதம் 2022,யில் புதன்கிழமை அஷர் தொழுகைக்கு அப்பிரதேச ஜமாத்தார்களுடன் ஓன்று சேர்ந்த தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டதையும் காணக்கூடியதாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்.
ஒரு முஸ்லிமின் சோதனையை எவர் இந்த உலகில் போக்குவாரோ, அவரது துன்பத்தை அல்லாஹ் மறுமையில் நீக்குவான்.
எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைப்பாரோ அல்லாஹ் அவரது குறையை நாளை மறுமையில் மறைப்பான்.
சிறந்தவர் யார்?
எல்லா மனிதர்களும் பாவம் செய்யக்கூடியவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால் , பாவத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கக் கூடாது. செய்த தவறுகளைவிட்டு தூரமாகி அவற்றிற்காக அல்லாஹ்விடத்திலிருந்து ”பாவமன்னிப்புப்” பெற வேண்டும். இதுதான் உண்மையான ஒரு நல்லடியானின் பண்பாகும். ஆகவே , நாம் செய்திருக்கும் பாவங்களுக்காக உடன் பாவமன்னிப்புத் தேடுவது மிக மிக அவசியமாகும். யார் தாங்கள் செய்த பாவங்களுக்காக உடனடியாக ”தவ்பா” செய்கின்றார்களோ அவர்களின் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம் , அறியாமையினால் தீமை செய்துவிட்டு, பின்னர், (அதிலிருந்து) விரைவில் (பாவ மன்னிப்புத் தேடி) தவ்பாச் செய்கிறார்களே அத்ததையவர்களுக்குத்தான் ஆகவே, அத்தகையோரின் ‘ தவ்பாவை’ அல்லாஹ் ஏற்றுக் கொள்வான், மேலும் அல்லாஹ் அறிந்தவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:17)
நாம் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும் நமது பாவங்களை மன்னிப்பதாகவும் வல்லஅல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
தங்கள் மீது (தாங்களே) அளவு கடந்து (பாவங்கள் செய்து) விட்டோராகிய என் அடியார்களே! அல்லாஹ்வின் அருளிலிருந்து (அவன் மன்னிப்பை விட்டும்) நிராசையுற்றோராக நீங்கள் ஆகிவிட வேண்டாம்,நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் யாவையும் (நீங்கள் பிழை பொறுக்கத் தேடினால்) அவன் மன்னித்து விடுவான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிக்கிறவன். மிகக் கிருபையுடையவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. இன்னும் (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னதாக, உங்கள் இரட்சகன் பால் (தவ்பாச் செய்து) நீங்கள் திரும்பிவிடுங்கள், அவனுக்கு (முற்றிலும்) நீங்கள் கீழ்ப்படிந்தும் விடுங்கள், (வேதனை வந்துவிட்டாலோ) பின்னர் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 39:53,54)
தவறு செய்தவர்கள் அதை உணர்ந்து திருந்தும்போது அவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் .அதற்குரிய அவகாசத்தை கொடுத்து உரிய முறையில் கையாள்வதை உத்தமத் தூதர் வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.
அப்படியில்லாமல் ஊரெல்லாம் பறை அடித்து அவமானப் படுத்துவது ஒரு இழி செயளே அல்லாமல் வேறொன்றில்லை.
ஒரு மனிதனை அவமானப் படுத்துவது என்பது தனிப்பட்ட ஒருவருக்கு கொடுக்கும் தண்டனை அல்ல .அந்தக் குடும்பத்தையே அவமானப் படுத்துவதற்குச் சமசமனாகவே கருதவேண்டியுள்ளது,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண் முன்னே நடந்த ஒரு சம்பவத்தை எவ்வளவு அழகிய முறையில் கையாண்டார்கள் என்பதைப் பாருங்கள்
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கள் தொழும் பள்ளிவாசல் முன்நின்று கொண்டு சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த அவர்களது தோழர்கள், ''நிறுத்து, நிறுத்து'' என்று கூறி, தடுக்க முற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களைப் பார்த்து, ''அவர் சிறுநீர் கழிக்க இடையூறாக இருக்காதீர்கள். அவரை விட்டு விடுங்கள்.
அவர் சிறுநீர் கழித்து முடிக்கட்டும்'' என்று கூறி விட்டு, ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து அவர் சிறுநீர் கழித்த இடத்தில் ஊற்றும்படி கட்டளையிட்டார்கள். அந்தக் கிராமவாசி சிறுநீர் கழித்த பின்பு நபியவர்கள் அவரை அழைத்து ''பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்யக் கூடாது. இங்கு இறைவனை நினைக்க வேண்டும். தொழ வேண்டும். குர்ஆன் ஓத வேண்டும்'' என்று கூறி உபதேசம் செய்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாக்(ரலி) நூல்: முஸ்லிம் (429
தவறு செய்தவரை அழைத்து நல் உபதேசங்களை சொல்லுங்கள்.மது அருந்துபவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளைப் பற்றிய விளக்கங்களை சொல்லுங்கள்.மதுவின் கொடூர பாதிப்புக்களைபற்றிய ஒரு விழிப்புணர்வை சொல்லிக்கொடுங்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், மதுக்குடி பாவம் அனைத்திற்கும் தாயகமாகும்.ஆழ்ந்த கருத்துடைய இந்த மேன்மைமிக்க ஹதீஸுக்கினங்க ஒரு சம்பவம் தத்துவார்த்தமான உதாரணமாக இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது:-
ஒரு கோட்டைக்கு 4 வாசல்கள் இருந்தன. கோட்டைக்குள் நூழைவதற்கு ஒரு மனிதன் முதலாவது வாசலில் வந்த போது அங்கு நின்ற காவல் காரன் இங்கேயிருக்கும் விக்ரஹங்களை வணங்கினால் உள்ளே விடுவதாக கூறினான். அம்மனிதன் அவனை விட்டுவிட்டு இரண்டாவது வாசலுக்கு சென்றான். அங்கிருந்தவன் முடிந்தால் என்னை கொலை செய்துவிட்டு உள்ளே போ என சவால் விட்டான். அதையும் விட்டுவிட்டு மூன்றவது வாசலுக்கு சென்றான். அங்கிருந்தவன் விபச்சாரம் செய்தால் உள்ளே விடுவதாக கூறினான். அதையும் விட்டு விட்டுநான்காவது வாசலுக்கு சென்றான். அவன் மது குடித்தால் விட்டு விடுவதாக கூறினான்.
இவற்றை கேட்ட அம்மனிதன் அதில் எது இலகு என்பதை யோசித்து மதுவே இலகுவானது என முடிவு செய்து மது அருந்தினான். பின்னர் மதி மயங்கி விபச்சாரம் செய்தான், கொலையும் செய்தான், விக்ரஹத்தையும் வணங்கினான். ஆக எல்லாப்பாவங்கள்யும் செய்து காபீராக மரணித்தான்
ஆகவே போதையில் சகோதரர் செய்தது தவறு என்று அனைவரும் அறிந்ததே.ஆனால் போதையில்லாமல் இருந்தவர்களின் அறிவு எங்கே போனது?
cctv ஆதாரங்களை வெளியிட்டு அவமானப் படுத்தும் தரம்கெட்ட வேலைகளை செய்யாதீர்கள்.
எனவே அப்பள்ளியில் இருக்கும் நிர்வாக சபை அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயந்தவர்களாக இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்
Great job
ReplyDelete