அன்னார் தனது ஆரம்பக்கல்வி முதல் உயர்தரக்கல்வி வரை கல்ஹின்னை அல்மனார் மஹா வித்தியாலயத்தில் கற்றுத்தேர்ந்த பின்னர், அக்காலை கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் இயங்கிவந்த “அல்பியன்” அச்சகத்தில் சேர்ந்து தனது தொழிலை ஆரம்பித்தார்.
பின்னர் கொழும்பு – தெமட்டகொடையில் நிறுவனரீதியாக செயல்படத்தொடங்கிய அச்சகத்தின் நிருவாகியாகி, சிலகாலம் அதில் சிறப்பாகத் தனது ஈடுபாட்டைகாட்டி வந்தார். அங்கிருந்தே “அல்ஹசனாத்” சஞ்சிகை பதிப்பானமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஜப்பான் சென்ற அவர், அங்கு ஐந்து வருடங்கள் பணிபுரிந்துவிட்டு தாய்நாடு வந்து, தனது பிறந்தகமான கல்ஹின்னையில் அச்சகமொன்றை நிறுவி, அதற்கு “Wins Graphics” என்று பெயரிட்டுக்கொண்டார்.
பிரபல எழுத்தாளரும், கல்விமானும், உலமாப்பெருமகனுமான மர்ஹூம் அல்ஹாஜ் எச். ஸலாஹுதீன் அவர்களின் நூல்கள் அனைத்தும் இவ்வச்சகத்தில் அச்சிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது!
எப்பொழுதும் கல்ஹின்னைக் கிராமத்தின் மீது அதிக பற்றுக்கொண்டிருந்த அன்னார், உறவினர்களையும் நண்பர்களையும் அனுசரிப்பதில் அதிக ஈடுபாடு கொண்டவர். தனது ஊரிலிருந்து கொழும்புக்கு எவர் வந்தாலும் தன்னோடு தங்கவைத்து ஆதரித்து உதவி செய்யும் பண்பு கொண்டவர்.
நான் கல்வி கற்கின்ற காலத்தில் எப்பொழுதாவது வானொலி நிகழ்ச்சிகளுக்காக, அல்லது நேர்முகப்பரீட்சைகளுக்காக கொழும்பு சென்றால் தனது அறையில் தங்கவைத்து அனுசரிப்பார். அன்னார் கொழும்பில் தனது குடும்பத்தாருடன் வாழ்ந்துவந்த வேளையிலும் கூட, தனது குடும்பத்தவருடன் சேர்ந்து ஆதரித்து, அனுசரித்தமை என்னால் என்றும் மறந்துவிட முடியாதது!
ஜப்பானில் தனது நண்பர்களுடன்...
அன்னார் ஜப்பானில் இருந்த காலத்தில், தனது ஓய்வு நாட்களில் எப்பொழுதும் நண்பர்களைத் தேடிச்சென்று அவர்களுடன் அன்னியோன்யமாகப் பழகி வரும் பண்பு கொண்டவராக இருந்தார். தனது நண்பர்களுக்கும், தன்னோடு பலகுபவர்களுக்கும் புத்திமதிகள் சொல்வதில் அன்னார் எப்போதும் பின்னிற்பதில்லை!
ஒரு மகன் மூன்று மகள்களுக்குத் தந்தையான அன்னார், தனது அன்பு மனைவியின் பிரிவால் வேதனை மிகக்கொண்டிருந்தார், தனது மகள்களுள் ஒருவரோடு இப்பாகமுவையில் வாழ்ந்துவரும் காலத்தில், அண்மையில் நோய்வாய்ப்பட்டு நேற்று இறையடிசேர்ந்துள்ள அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (26.02.2022) இப்பாகமுவையில் நடைபெறவுள்ளதாக அறிய முடிகின்றது!
அன்னாரை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக! அன்னாருக்கு அல்லாஹ் மறுமையில் நற்பாக்கியத்தை அளித்து சுவர்க்கத்தை நன்மாராயம் செய்வானாக!
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்
Great job Masha Allah
ReplyDelete