ரோஹித் சர்மாவின் மோசமான ஐபிஎல் தொடர்

ரோஹித் சர்மாவின் மோசமான ஐபிஎல் தொடர்


விராட் கோலி கோல்டன் டக், பார்ம் என்றெல்லாம் விமர்சனம் செய்தவர்கள் ரோஹித் சர்மாவின் மோசமான ஐபிஎல் பேட்டிங்கை பற்றி வாய் திறவாமல் இருக்கின்றனர். ரோஹித் சர்மாவின் ஐபிஎல் தொடர் ஆட்டத்திலேயே மிகவும் மோசமான தொடராக அமைந்தது ஐபிஎல் 2022 தொடர். 14 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட இல்லாமல் முடிந்தார்.

அதுவும் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் ஒரு ஓவர் முழுக்க ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தில் முழுதும் பீட்டன் ஆகி செம தடவு தடவியதையும் அவரது அசட்டுச் சிரிப்பையும் பார்க்க முடிந்தது. நேற்று 13 பந்துகள் ஆடி வெறும் 2 ரன்கள் எடுத்து கடைசியில் நார்ட்யே வீசிய ஆஃப் வாலி பந்து, நேராக பவுண்டரி விளாசப்பட வேண்டிய பந்து, ரோஹித் சர்மாவின் மட்டையில் பட்டு மிட் ஆனில் கேட்ச் ஆனது, படுமோசமான ஆட்டம். இந்தியாவின் கேப்டனாக இருந்து கொண்டு இத்தகைய ஒரு ஆட்டத்தை அவரிடமிருந்து பார்க்க ஏமாற்றமாகவே இருந்தது.

இந்த ஐபிஎல் தொடரில் இருமுறை 40 ரன்களைக் கடந்தார் ஒன்று முதல் போட்டியில் அடித்த 41 பிறகு ஒரு 48 அவ்வளவுதான். 14 இன்னிங்ஸ்களில் 6 ஒற்றை இலக்க ஸ்கோர்கள். ரோஹித் சர்மாவின் 2022 ஐபிஎல் தொடரின் ஸ்கோர் இதோ: 41, 10, 3, 26, 28, 6, 0, 39, 2, 43, 2, 18, 48, 2

மொத்தம் 14 போட்டிகளில் 268 ரன்களுடன் முடிந்தார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் மட்டுமல்ல, இந்திய கேப்டனுமாகிய ரோஹித் சர்மா. 2018 சீசனில் 286 ரன்கள் எடுத்த மோசமான சீசனுக்குப் பிறகு இப்போது 268 ரன்கள், ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை.

இதோடு இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியையே சந்தேகிக்கும் விதமாக நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 3-ல் மட்டுமே வென்றுள்ளார்.

இவர்தான் டி20 உலகக்கோப்பை 2022, 2023 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர்களில் இந்திய அணியை வழிநடத்தப் போகிறாரா?

இந்திய அணியில் லெவனில் இடம்பெறும் வீரர்களில் நட்சத்திரங்களான ரோஹித் சர்மா, கோலி, ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், , ஜடேஜா, பாண்டியா என்று அனைவரும் இந்த ஐபிஎல் தொடரில் செம சொதப்பல். ஷிகர் தவான், ராகுல் அடுத்ததாக ரன்கள் அடிப்படையில் இஷான் கிஷன் ஆகியோர் மட்டுமே தேறுவார்கள்.

மாறாக விளிம்பில் இருக்கும் வீரர்களான ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, திலக் வர்மா, அபிஷேக் சர்மா, ஓரளவுக்கு ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், படிக்கல் போன்றோர் தேறியுள்ளனர்.

கல்ஹின்னை டுடே galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post