41வயது உகாண்டா வீரரின் அசத்தல் கேட்ச்

41வயது உகாண்டா வீரரின் அசத்தல் கேட்ச்


41வயதான உகாண்டா கிரிக்கெட் அணியின் வீரர் ஃபிராங்க் நசுபுகா பின்புறமாக ஓடி பிடித்துள்ள கேட்ச் ரசிகர்கள் முதல் வர்ணனையாளர்கள் வரை என அனைவரையும் அதிர்ச்சியிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் ஒருநாள் உலகக் கோப்பை சேலஞ்ச் லீக் குழுநிலை ஆட்டத்தில் கென்யா – உகாண்டா அணிகள் மோதின. கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பாலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கென்யா 220 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து விளையாடிய உகாண்டா 5 ஓவர்கள் மீதமிருக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த அசத்தலான வெற்றியின் மூலம் உகாண்டா அணி தற்போது சேலஞ்ச் லீக் குரூப் பி-ல் 10 போட்டிகளில் 8 வெற்றிகள் மற்றும் 2 தோல்விகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த போட்டிகள் 2023 ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஆகும்.

இந்த ஆட்டத்தில் உகாண்டா கிரிக்கெட் அணியின் மூத்தவீரர் ஃபிராங்க் நசுபுகா (41 வயது), கிரிக்கெட் மைதானத்தில் பார்க்கக்கூடிய மிகச் சிறந்த கேட்சுகளில் ஒன்றை பிடித்து அசத்தினார். அது அங்கிருந்த பார்வையாளர்கள், சக வீரர்கள், எதிரணியினர் மற்றும் வர்ணனையாளர்களை என அனைவரையும் அதிர்ச்சியிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியது.

கென்யா வீரர் இர்பான் கரீம் 18வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ​​அவர் ஸ்கொயர் லெக்கில் பந்தை விரட்ட முயன்றார். அப்போது பந்திற்கு சற்று முன்புறம் நின்றுகொண்டிருந்த ஃபிராங்க் நசுபுகா பந்தின் வேகத்தை கணித்து பின்புறமாக துரத்தி சென்று கேட்ச் பிடித்து அசத்தினார். 1996 ஆம் ஆண்டு கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்களுக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமான நசுபுகா, கேட்ச் பிடித்த பின்னர் அதை உற்சாகத்துடன் ஓடி, குதித்து கொண்டாடினார்.

ஃபிராங்க் நசுபுகா கேட்ச் பிடிக்கும் இந்த வீடியோவை ஐசிசி அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.



கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post