
கல்ஹின்னையில் 1907.01.05 திகதி மர்ஹூம் அல்ஹாஜ் A.0.M ஹுசைன் சட்டத்தரணி அவர்கள் பிறந்தார்கள். இவரின் தந்தை கல்ஹின்னையில் 'கடே முதலாளி' என ஊர் மக்களால் போற்றிப் புகழப்பட்ட ஆ. ஓமர்லெவ்வை ஹாஜியார் ஆவார். அருமைத்தாய் மரியம் பீபீ அவர்களாவார்கள். இவர்களின் அருமைக் கடைசி மகன்தான் ஹுசைன் பெருக்கதோர் மஹத்தயா" என சிங்கள மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட சட்டத்தரணி ஹுஸைன் அவர்கள்.
பெற்றோரின் கண்காணிப்பிலும், வழிகாட்டலிளும், அரவணைப்பிலும் வளர்ந்து வாலிப வயதில் நூருள் ஹபீபா எனும் மங்கை நல்லாளை மணந்து கொண்டார்.இவர் சிங்கள அறிவு நிரம்பியவராகத் திகழ்ந்தார். இவர் சிங்கள மக்கள் மத்தியில் பிரசித்திபெற்று விளங்கினார்.
பொது மக்களின் கல்விப்பிரச்சினை, காணிக்கொடுக்கல் வாங்கல் போன்ற பிரச்சினைகளை தீர்த்து வைப்பவராகவும் மற்றும் பல்வேறுபட்ட சமூக பிரச்சினைகளில் ஆலோசனை கூறுபவராகவும் திகழ்ந்ததனால் எமது கிராமத்தின் முக்கியஸ்தராக கருதப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
சுயநலமின்றி நாட்டுக்கும் சமூகத்திற்கும் பணிபுரிந்து தம்மையும் தமது பிள்ளைகளையும் சமூக சேவைகளுக்கு அர்ப்பணித்தார்.
சகலருடனும் வேற்றுமையின்றி சகஜமாக உரையாடுவதற்கு சிறந்தவராக விளங்கினார்.
ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடின்றி பண்பாகப் பழகி பெருமை சேர்த்த பண்பாளராகவும் திகழ்ந்தார்.
கண்டியின் தலைவராக இருந்த பி.பி நுகவெல 1935 நவம்பர் 30ம் திகதி வழங்கிய சான்றிதழில் ஜனாப் A.O.M ஹூசைன் தூய்மையான நடத்தையும் நேர்மையுமுடையவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவரது தகப்பனார் கண்டியைச் சேர்ந்த பல்வேறு சமூகத்தவராலும் மதிக்கப்பட்டவர். மலையகத்தின் தமிழகம் எனப்போற்றிப் புகழப்படும் இக்கிராமத்திற்கும் சூழவுள்ள சிங்கள கிராமங்களுக்கும் சேவை செய்யும் ஒரு சிறந்த புத்திரனாக காணப்பட்டார்.
தனது 7ம் வயதில் அரபுமொழியை கற்று அதனை எழுதவும் வாசிக்கவும் ஆரம்பித்தார். அவரது மூத்த சகோதரர் மர்ஹும் காஸிம் ஹாஜியாரிடம் தமிழைக் கற்றுக் கொண்டார்.
அங்கும்புர அரசினர் சிங்களப்பாடசாலையில் சேர்ந்து, சிரமப்பட்டு படித்து எல்லோரினதும் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுக் கொண்டார். நல்ல மாணவராகவும் சிரேஷ்டமாணவராகவும் திகழ்ந்து. 1921 செப்டம்பர் செப்டம்பர் 12 ம் திகதி ஆங்கிலம் படிப்பதற்காக புனித தோமஸ் ஆண்கள் ஆங்கிலப் பாடசாலையில் சேர்ந்து கொண்டார்.
தகப்பனாரின் அன்பான வேண்டுகோளையும் ஆலோசனைகளையும் பெருமனத்துடன் ஏற்றுக்கொண்டமை இக்கால இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது.
பின் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் சேர்ந்து கொண்டார். இவரது கல்வி வளர்ச்சியினால் தான் பிறந்த கிராமமும் அவரது சமூகமும் வளர்ச்சியடைந்தது. பல இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு அவரது ஆலோசனையும் பேருதவியும் காரணமாக அமைந்தது.
தனது இளமைப்பருவத்திலிருந்தே பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு பல சாதனைகளை படைத்த சாதனையாளராகத் திகழ்ந்தார். தான் படித்த பாடசாலையில்பற்றுடையவராகத் திகழ்ந்தமை இக்கால இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அக்கல்லூரியில் உயர்த் தரத்தைக்கற்று 1928 ல் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார். தான் பிறந்தமண்ணுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் எழுந்தது.
1925 இல் மூன்று தனித்தனியாக இயங்கிய குர்ஆன்பாடசாலைகளையும் இணைத்து கல்ஹின்னைக்கு ஒரு முழுமையான பாடசாலையை உருவாக்க எண்ணி அரும் பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். சமய அறிவுடன் கூடிய தமிழ்மொழியும் கணிதத்தையும் கற்பிக்க பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் கஷ்டங்களைப் போக்க நடவடிக்கை எடுத்தார்.
போக்குவரத்து வசதிகருதி பாதைவசதி ஒரு குடிசை வைத்தியசாலை உபதபாற்கந்தோர் என்பவற்றை அமைக்க திட்டமிட்டு அமுல்படுத்தி கல்ஹின்னையில் சாதனைபடைத்த மலையகப் பெருமகனாகத் திகழ்ந்தார்.
முஸ்லிம் வாலிபர் சங்கம் அமைத்து வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். ஒரு மாணவனாக இருந்து கொண்டே சமூக சேவையில் ஈடுபட்டமை இன்றைய மாணவர்களுக்கு நல்லதொரு முன்மாதிரியாகும்.
சட்டகல்லூரியில் படித்து, 1932இல் உயர் நீதிமன் வழக்கறிஞராக பதவிப்பிரமாணம் செய்து ஆங்கில மொழியில் கடமையாற்ற அனுமதி பெற்றுக்கொண்டார். 1933 இல் மார்ச் இல் கண்டியில் வழக்கறிஞராக கடமை ஏற்றார்.
சமூக அந்தஸ்து நிரம்பிய இவரை எல்லா இனமக்களும் வரவேற்று கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் வாலிப சங்கத்தினூடாக பாடசாலையின் முகாமையாளர் என்ற வகையில் அதனை விருத்திசெய்ய நடவடிக்கை எடுத்தார்.1934 கல்ஹின்ன கமாலியா முஸ்லிம் பாடசாலையை அமைத்தார்.
இச்சங்கத்தின் செயலாளராக திகழ்ந்த மர்ஹும் அல்ஹாஜ் ஜலால்டீன் அவர்கள் பாடசாலைக் கட்டிடத்தைப்பெறவும் அதனை தரமுயர்த்தவும் தோளோடு தோள்கொடுத்து உதவினார்.
ஆறுபேரைக் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. 70 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று 1500 மாணவர்களையும் சுமார் 60 ஆசிரியர்களையும் உள்ளடக்கி குன்றிலிட்ட தீபம்போல அல்மனார் தேசியப் பாடசாலையாக மிளிர்ந்து கொண்டுள்ளது.
ஜெனரல். ஸேர் ஜோன் கொத்தலாவல, ஈ.ஏ.நுகவெல ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். பூஜாப்பிடிய அங்கும்புர வீதியை அமைக்க தன்னாலியன்ற உதவிகளை செய்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுத்தார்.
நாட்டிபல பாகங்களிலும் கல்வி சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.பாடசாலைகளையும் பள்ளிகளையும் அமைக்கவும் பாடவிதானத்தில் அரபுமொழி யை சேர்ப்பதற்கும் வழியுறுத்தினார்.
1940 ல் உள்ளூர் ஆலோசனை கமிட்டியில் நியமிக்கப்பட்டார்.
இதனால் முழு நாடும் பயனடைந்தது. அவர் 1985 இல் தனது சொந்த செலவில் கல்ஹின்னையில் ஹுசைனியா தக்கியாவையும் தனது அருமை மனைவியின் பெயரில் ஹுசைனியா குர்ஆன் மத்ரசாவையும் தாபித்தமை கல்ஹின்னை வரலாற்றில் பொன்னெழுத்துக்கலால் பொறிக்கப்பட வேண்டியதாகும். தனக்கு செல்வம்
வந்தவிடத்து நிலையான தர்மத்தை செய்து தன் மறுமைவாழ்வுக்கு நன்மையை தேடிச் சென்றார்.
ஒரு மனிதன் விட்டுச்செல்ல வேண்டிய பயனுள்ள கல்வி நிலையான தர்மம். தமக்காக பிரார்த்தனை செய்யும் பிள்ளைகள் மூன்றையும் எதிர்கால சமூகத்தினருக்காக விட்டு 1990 ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். அன்னாருக்கு ஜென்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயரிய சுவர்க்கம் கிடைக்க நாம் பிரார்த்திப்போமாக ... மாணவப் பருவத்திலேயே பொதுவேலைகளில் ஈடுபட்டு இன்றைய இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழ்ந்த அன்னார் எம்மைவிட்டு பிரிந்தாலும் அவரது சேவைகள் என்றுமே வாழ்ந்துகொண்டுடிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மர்ஹூமா.திருமதி. ஸஹ்தியா இம்தியாஸ்
B.A (Geog. )Dip. In Education
