துன்பங்கள் வரும் வேளையில் ஒரு முஃமினுடைய உள்ளம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் உதாரணம் அழகிய சான்றாகும். எல்லா மரங்களுக்கும் கோடை காலத்தில் இலை உதிர் காலம் உண்டு. அந்தக் காலத்தில், தன் இலைகளை உதிரச் செய்கின்றன. ஆனால் பேரீச்ச மரம் மட்டும் எந்தக் காலத்திலும் இலைகளை உதிரச் செய்வதில்லை. இதைப் போன்று தான் எவ்வளவு துன்பமான நேரம் வந்தாலும் துவண்டு விடாமல் மன உறுதியோடு அதை எதிர் கொள்ள வேண்டும்.
*இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர் பயிருக்கு ஒப்பானதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்* என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி), நூல்: *புகாரீ (5643)
அல்லாஹ்வை நம்பியவன் அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அந்த நேரத்தில் கவலை கொள்வான் ஆனால் அதனால் உள்ளம் தளர்ந்து தவறான முடிவை எடுக்க மாட்டான்.
*முஃமினுடைய காரியம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அவனுடைய அனைத்துக் காரியங்களும் நல்லதாகவே அமைகின்றன. இந்த நிலை முஃமினைத் தவிர வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் அவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமையைக் கடைபிடிக்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது* என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஷுஹைப் (ரலி), நூல்: முஸ்லிம் (5318)
*நமக்கு ஏற்படும் சோதனைகள் நமது நன்மைக்கே* என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
*யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்* என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (5645)
மேலும் *நமக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் நமது பாவங்களை அழிக்கிறது* என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
*ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை* என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரீ (5641)
*இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்* என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றது போல் அல்லாஹ் கூலியையும் கொடுக்கிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பணிவோடு) தொட்டேன். அப்போது நான் *தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்ளே!* என்றேன்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் *ஆம் உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்)’ என்றார்கள். நான் ‘(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?* என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் *ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக) மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை* என்றார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி), நூல்: புகாரீ (5667)
எனவே எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் இறைவனைப் பற்றி தவறாக நினைக்காமல் *பொறுமை மேற்கொண்டு துன்பங்களை ஈமானிய வலிமையுடன் எதிர் கொண்டு இறையருளைப் பெறுவோமாக!-nidur.info
galhinnatoday@gmail.com
Tags:
இஸ்லாமிய சிந்தனை