டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரன்! 8 வீரர்களை ஓரங்கட்டி சாம் கரன் விருதை வெல்ல இதுவே காரணம்

டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரன்! 8 வீரர்களை ஓரங்கட்டி சாம் கரன் விருதை வெல்ல இதுவே காரணம்



டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இன்று மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.

மெல்பர்னில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20  ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த தொடர் முழுக்க அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்தின் சாம் கரன், இந்த போட்டியிலும் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, முகமது ரிஸ்வான்(15), ஷான் மசூத் (38) மற்றும் முகமது நவாஸ்(5) ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் சாம் கரன்.





138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ்(1), ஜோஸ் பட்லர் (26), ஹாரி ப்ரூக் (20) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று நிதானத்தை கையாண்டு பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை ஜெயித்து கொடுத்தார். 19வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இதற்கு முன் 2010ல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வென்றது.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய 2 விருதுகளையும் சாம் கரன் வென்றார். இறுதிப்போட்டியில் 4 ஓவரில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானை 137 ரன்களுக்கு கட்டுப்படுத்த காரணமாக இருந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.


தொடர் நாயகன் விருதுக்கு சாம் கரன் உட்பட 9 வீரர்கள் போட்டியிலிருந்தனர். சாம் கரன், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி, வனிந்து ஹசரங்கா, சிக்கந்தர் ராசா ஆகிய 9 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தனர். 

ஃபைனலுக்கு முன் ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டது இந்த பட்டியல். இந்த தொடர் முழுக்க அபாரமாக பந்துவீசி, குறிப்பாக டெத் ஓவர்களில் அபாரமாக பந்துவீசி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சாம் கரன், ஃபைனலிலும் 4 ஒவரில் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஷான் மசூத் (38) மற்றும் நவாஸ் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் டெத் ஓவரில் தான் வீழ்த்தினார். இந்த உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக அபாரமாக பந்துவீசி 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சாம் கரன், கடைசி போட்டியான ஃபைனலில் 12 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

இப்படியாக இந்த தொடர் முழுக்கவே தொடர்ச்சியாக மிகச்சிறப்பாக பந்துவீசி அனைத்து போட்டிகளிலும் அசத்தி, இங்கிலாந்தின் நம்பிக்கையாக திகழ்ந்து, கடைசியில் கோப்பையை வெல்வதற்கும் காரணமாக திகழ்ந்தார் சாம் கரன். இந்த தொடர் முழுக்கவே சிறப்பாக பந்துவீசியதற்காக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
7 போட்டிகளில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். தொடர் முழுக்கவே நிலையான பந்துவீச்சை வீசி இங்கிலாந்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்ததால், இந்த தொடர் நாயகன் விருதுக்கான போட்டியில் இருந்த மற்ற 8 வீரர்களையும் பின்னுக்குத்தள்ளி தொடர் நாயகன் விருதை வென்றார் சாம் கரன். 
asianetnews


Post a Comment

Previous Post Next Post