கல்ஹின்னை டுடே 06,ம் திகதி ஜூலை 2022,யில் வெளிவந்திருந்த தலைப்பு ஒரு தனிமனிதனின் கெளரவம் பாதிப்பு அடையாத நிலையில் தர்மம் செய்வதே இஸ்லாத்தின் அழகிய பண்புகளாகும் என மிகச் சுருக்கமாக கல்ஹின்னை M.M பாரூக் அவர்கள் எழுதியிருந்தார்
அத்தோடு ஒரு பெண்மணி கவலை தெரிவிக்கும் ஒளிநாடா ஒன்றும் இணைக்கப்பட்டதை கேட்கும்போது ஏதோவொரு புதிதாக இலங்கையில் எம் சமூகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஒருவேளை உணவுத்திட்டத்தின் ஊடாக ஒரு சிலர் முறைகேடாக நடந்துகொள்வதை சுற்றிக்காட்டி கவலை தெரிவித்துள்ளார்.
முதலில் என்மனமார்ந்த வாழ்த்துக்களைத் அவருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆம் இன்று நம் சமூகம்மீது பாரியளவில் குற்றச்சாட்டுகள் பலவழிகளில் தோன்றிக்கொண்டே இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளன ஏன்? உரியவர் தாங்கள் ஏற்கும் பொறுப்புக்களை தான்தோன்றித்தனமாக கையாள்வதே ஆகும்
அல்லாஹ் நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக ஆமீன்.
எனவே அல்லாஹ்வின் திருமறையில் தர்மத்தையும், இஸ்லாமியர்களின் பண்புகளையும் பற்றி நான் படித்தறிந்த ஆவணங்களை அறியத்தருகிறேன் அன்பர்களே படித்தரிந்தாவது மனிதப்பண்புகளுடன் உலகில் வாழ்ந்து கொள்ளுங்கள் இதோ.........
இஸ்லாம் கூறும் தர்ம சிந்தனைகள் வித்தியாசமானவை. அதன் வழிகள் விசாலமானவை. பணம் மற்றும் உணவுகள் தானம் கொடுப்பது மட்டும் தர்மம் அல்ல. இதையும் கடந்து சின்னச்சின்ன நற்கருமங்களும் இஸ்லாத்தின் பார்வையில் தர்மங்களே. வசதி படைத்தவர் தங்களிடம் உள்ள செல்வங்களை தர்மம் செய்கிறார்கள். வசதியற்றவர்கள், தாங்கள் செய்யும் நற்கருமங்களின் வழியே தர்மம் செய்கிறார்கள். இவ்வாறு ஏழை–பணக்காரன் இருவருக்கும் தர்மம் செய்யும் வாய்ப்பினை இஸ்லாம் வெவ்வேறு வழிகளில் வழங்கி இருவரையும் சமநிலைப்படுத்துகிறது. ‘இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’ என்பது திருக்குர்ஆன் (28:77) வசனமாகும். ‘உங்களுடைய சகோதரரைப் பார்த்து நீங்கள் புன்னகை புரிவதும் தர்மம். நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதும் தர்மம். வழி தவறியவருக்கு வழிகாட்டுவதும் தர்மம். பார்வையற்றோருக்கு வழிகாட்டுவதும் தர்மம். கல், முள், எலும்பு போன்றவற்றை நடைபாதையிலிருந்து அகற்றுவதும் தர்மம். உங்களது வாளியிலிருந்து உங்களது சகோதரனின் வாளியில் தண்ணீர் நிரப்புவதும் தர்மமே’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூதர் (ரலி), நூல் : திர்மிதி)
தர்மம் என்றால் இஸ்லாத்தின் பார்வையில் பொருளுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. அது பரந்த மனப்பான்மையுடன் தொடர்புடையது என்பதை இதன் மூலம் அறியலாம். உணவை தானம் செய்வதும் தர்மமே ‘ஒரு பெண், வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விடமுடியாது’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)
ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தர்மமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி) ‘‘நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபியவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே, வசதி படைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால் அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தான தர்மம் செய்கின்றனர் (அவ்வாறு தான தர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே)’ என்று கூறினர். ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது) தர்ம மாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு (அல்லாஹூ அக்பர்) சொல்லும் தர்மமாகும். ஒவ்வொரு புகழ் மாலையும் (அல்ஹம்துலில்லாஹ்) தர்மமாகும். ஒவ்வொரு ஓரிறை உறுதிமொழியும் (லாஇலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே; உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு’என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் அபூதர் (ரலி), நூல்: புகாரி)
தர்மம் கொடுக்கின்ற வழிமுறைகளையும் இஸ்லாம் அழகிய முறையில் காட்டியுள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமை நாளில் ஏழு பேருக்கு நிழலே இல்லாத மஹ்ஷர் மைதானத்தில் தன்னுடைய நிழலான (அர்ஷின் நிழலை) அளிக்கிறான். அதில் ஒரு நபர் அவருடைய வலக்கை அவர் தர்மம் செய்ததை இடக்கை அறிந்து கொள்ளவில்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
இந்த ஹதீஸ் ஒன்றே போதும்.
பிறரறியாமல் கொடுப்பதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அழகான இந்த ஹதீஸில் கூறியுள்ளார் .இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் .
இதுபோன்ற தர்ம சிந்தனைகளை இஸ்லாம் அதிகம் விதைத்திருக்கிறது. தேவையுடையவர்களை வைத்து தர்மத்தின் நிலைகளும் மாறிவிடுகிறது. அதை செல்வத்துடன் மட்டும் இஸ்லாம் சுருக்கி மட்டுப்படுத்தவில்லை.
எனவே தேவையானவர்களுக்கு தேவையான சமயத்தில் வழங்கும் சின்ன சின்ன நற்கருமங்களும் தர்மங்களே. இத்தகைய விசாலமான தர்மசிந்தனைகளை வாழ்வில் கடைப்பிடித்து தர்மசீலர்களாக வாழ வல்லோன் அல்லாஹ் கிருபை செய்வானாக, ஆமின்.
galhinnatoday@gmail.com
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்