கடைக்கு முன்னாள் துண்டு விரித்து தர்மம் செய்வது ஒரு போதும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை

கடைக்கு முன்னாள் துண்டு விரித்து தர்மம் செய்வது ஒரு போதும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை


கல்ஹின்னை டுடேயில்  சகோதரர் ஜனாப் பாரூக் (WC) அவர்கள் எழுதியிருந்த 'ஒரு தனிமனிதனின் கௌரவம் பாதிப்பு அடையாத நிலையில் தர்மம் செய்வதே  இஸ்லாத்தின் அழகிய பண்புகளாகும்.'என்ற கட்டுரையைப் படித்தேன் .

அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் யாவும் உண்மையே.

தர்மம் கொடுப்பது இஸ்லாத்தில் மிகப் புனிதமான ஒரு செயலாக இருக்கின்ற நிலையில் சம்பந்தப்பட்ட சகோதரர்கள் ஏன்  எதற்காக கடைக்கு முன்னாள் துண்டு விரித்து அத்தனை மக்களும் பார்க்கும் வண்ணம் தர்மம் செய்கின்றார்கள் என்று புரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான செயலை கல்ஹின்னை பள்ளி நிர்வாகம் எப்படி அனுமதியளித்தார்கள்?.

ஏழைகளுக்கு கொடுப்பது வசதியுள்ள அனைவருக்கும் தலையாய கடமை என்று தெரியும் .அதைக் கொடுக்கின்ற முறைகளையும் அழகிய முறையில் இஸ்லாம் எங்களுக்கு கற்றுத் தந்துள்ளது.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் மனிதர்களுக்கு காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும் நோவினைகள் செய்தும் உங்கள் ஸதகாவை (தான தர்மங்களை) பாழாக்கி விடாதீர்கள். (அப்படிச் செய்பவனுக்கு ) உவமையாவது ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த (தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். (2:264)

வசதி படைத்தவர் தங்களிடம் உள்ள செல்வங்களை தர்மம் செய்கிறார்கள். வசதியற்றவர்கள், தாங்கள் செய்யும் நற்கருமங்களின் வழியே தர்மம் செய்கிறார்கள். இவ்வாறு ஏழை–பணக்காரன் இருவருக்கும் தர்மம் செய்யும் வாய்ப்பினை இஸ்லாம் வெவ்வேறு வழிகளில் வழங்கி  இருவரையும் சமநிலைப்படுத்துகிறது. 

‘இறைவன் உனக்கு நல்லதைச் செய்திருப்பது போன்றே நீயும் நல்லதை செய்’ என்பது திருக்குர்ஆன் (28:77) வசனமாகும்.

‘தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியதும் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால் ....?’ எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) ‘ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன்மூலம் பலனடைந்து, தர்மம் செய்ய வேண்டும்’ என்றார்கள். தோழர்கள் ‘அதுவும் முடியவில்லையாயின்...’ எனக் கேட்டதற்கு, ‘தேவையுடைய, உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவவேண்டும்’ என பதிலளித்தார்கள். தோழர்கள், ‘அதுவும் இயலாவிடின்’ என்றதும் நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்’ எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூமூஸா (ரலி), நூல்:புகாரி)

செய்த உதவியை சொல்லிக்காட்டுபவனை நபி (ஸல்) அவர்கள் மறுமை நாளில் இறைவன் அவர்களை பார்க்கவும் மாட்டான் தூய்மைப்படுத்தவும் மாட்டான் அவனே நஷ்டவாளி என்றார்கள். ஆதாரம்: முஸ்லிம். அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

செய்யும் தான தர்மங்களை பிறருக்கு தெரியாமல் இரகசியமாக வைத்திருந்தால் அதனின் நன்மையை பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மறுமை நாளில் ஏழு பேருக்கு நிழலே இல்லாத மஹ்ஷர் மைதானத்தில் தன்னுடைய நிழலான (அர்ஷின் நிழலை) அளிக்கிறான். அதில் ஒரு நபர் அவருடைய வலக்கை அவர் தர்மம் செய்ததை இடக்கை அறிந்து கொள்ளவில்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

அவர்களுக்கு எவ்வித அச்சமும் துக்கமும் கிடையாது என்று இறைவன் கூறுகிறான்.

இப்படியாக இஸ்லாம் காட்டியுள்ள அழகிய முறைகளைப் பின் பற்றாமல் கடைக்கு முன்னாள் துண்டு விரித்து தர்மம் செய்யும் சகோதரர்கள் தயவு செய்து நன்றாக சிந்தித்து செயல்படுங்கள்.

இன்றைய சூழ் நிலையில் வறுமையில் வாடும் மக்களுக்கு கைகொடுக்க முன் வந்துள்ள உங்கள் முயற்சியை பாராட்டுகின்ற அதேவேளை நீங்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை தவறு என்று நினைக்கின்றேன்.

கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post