முன்னோடியாகத் திகழ்ந்து பெருமை ஈட்டியவர்

முன்னோடியாகத் திகழ்ந்து பெருமை ஈட்டியவர்


நஜீமுஷ்ஷுஅரா கவிமணி.எம்.ஸி.எம்.சுபைர் அவர்கள் மலையகத்தின் தமிழகமாம் கல்ஹின்னையில் பிறந்து அந்த ஊருக்கே சிறப்பைத் தேடித் தந்தவர். 

கௌரவம்மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்."விளையும் பயிரை முளையிலே தெரியும்" என்னும் கூற்றும் கிணங்க. சிறு வயதிலேயே கல்விக் கடலில் நீந்தப் பழகியவர். 

எதிர் நீச்சில் வெற்றி பெற்றவர். கற்பதைக் கசடறக் கற்றுக் கரை காண முயற்சித்தவர்.

முன்மாதிரியான நல்லாசிரியராகத் திகழ்ந்தவர். பண்டாரவளை சாஹிராக் கல்லூரியில் திறமையாகப் பணிபுரிந்தவர். அந்தக் காலகட்டத்தில் மணிக்குரல் என்னும் மாத இதழைப் பதிப் பித்து வெளியிட்டவர். 

எனது முதல் தமிழ் நூலான இஸ்லாமியத் தென்றலைப் பதிப்பித்தவர். உமறுப் புலவர் இயற்றிய சீறாப் புராணத்திலிருந்து அதன் பதுறுப் படலம் பாடநூலில் சேர்க்கப் பட்ட பொழுது, அதற்குச் சிறந்த ஓர் உரை எழுதி மாணவருக்கு உதவி புரிந்தவர்.

கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சாதாரணதர) பரீட்சைக்குத் தமிழ் இலக்கியம் 'ஆ' பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம் அதனை நடைமுறைப்படுத்தற்குத் தம்மா லான அனைத்தையும் பிரதி பலன் கருதாது செய்து முடித்தவர்.

மலர்ந்த வாழ்வு, காலத்தின் குரல்கள் போன்ற கவிதை நூல்களால் பாமரர் முதல் பண்டிதர் வரையிலான அனைவரினதும் உள்ளங்களைக் கவர்ந்தவர். 

பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளி லும் தொடர்ந்து கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தவர். வானொலியில் மாத்திரம் அல்லாது அகில உலக ரீதியில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளில் இடம் பெற்ற கவியரங் குகளில் பங்கு பற்றி தனக்கு மட்டுமல்லாது தமது பிறந்தகத்துக்கும் பெருமதிப்பைத் தேடிக் கொடுத்தவர்.

வானொலிக் கவியரங்குகளிலும் கவிதா நிகழ்ச்சிகளிலும் தமது பங்களிப்பைப் பெருமளவில் வழங்கியவர்.

குழந்தைக் கவிஞராகத் திகழ்ந்து வெற்றி ஈட்டியவர். 

அவர் நடத்திய மணிக்குரல் சஞ்சிகையே அதற்கான களத்தை அவ ருக்கு ஆரம்பத்தில் அமைத்துக் கொடுத்தது. இத்துறையில் அளப்பரிய பணிபுரிந்தவர்.

முஸ்லிம் மகளிரின் நாக்களில் தவழும் நாட்டுப் பாடல்களைக் கூட அவர் விட்டு விடவில்லை. 

நாட்டுப் பாடல்களை அடிப்படையாக வைத்துச் சொற் சித்திரங்கள் தீட்டுவதில் சிறந்து விளங்கினார். அவருடைய "கண்ணான மச்சி" இதற்கான சிறந்த ஓர் எடுத்துக் காட்டாகும்.

கொழும்பில் தடைபெற்ற நான்காவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் போது பல நூல்கள் வெளியிடப் பட்டன. இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வானிலே சுடர்விட்டுப் பிரகாசிக்கும் காப்பியங்களுள் ஒன்றான புதுகுஷ்ஷாம் புது மெருகூட்டப்பட்டு உரையுடன் மாநாட்டின் போது வெளியிடப்பட்டது. பிறைக் கொழுந்து, பிறைப் பூக்கள், பிறைத்தேன் என்பனவும் அப்பொழுது பிரசுரமாயின. மாநாட்டுச் சிறப்பு மலராக வெளிவந்தது பிறைக்கொழுந்து. இலங்கை எழுத்தாளர்களின் சிறுகதைகளைத்
தாங்கி சிறுகதை ஆசிரியர் தாஜுல் அதீப் அ.ஸ.அப்துல் ஸமத் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பிறைப் பூக்கள் என்னும் சிறுகதைத் தொகுதி அச்சிடப்பட்டது. 

அதே போன்று நஜ்முஷ் ஷுஅரா கவிமணி எம்.சி.எம்.சுபைர் அவர்கள் இலங்கைக் கவிஞரின் கவிதைகளைப் பிறைத்தேன் என்னும் பெயரில் மகாநாட்டுக்காகப் பதிப்பித்தார். மாநாட்டின் வெற்றிக்காகவும் அயராது உழைத்தார்.

இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கத் தலைவராக இருந்ததோடு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தவர். 

கவிஞர் சுபைர் அவர்கள் கவிஞர் அப்துல் காதிர் லெப்பை அவர்களின் ஆக்கப் பணிகளில் அவருக்கு ஊன்று கோலாகவும் உந்துசக்தியாகவும் இருந்தவர். 

பாராட்டு விழாக்கள் பலவற்றை நடத்துவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். கவிஞர் அப்துல்காதிர் பாராட்டு விழா, பேராசிரியர் சு. வித்தியானந்தன் பாராட்டுவிழா, அறிஞர் சித்திலெப்பை முத்திரை வெளியீட்டு விழாநடாத்திப் பெருமை ஈட்டியவர்.

இலங்கையில் மலையகத்தின் தலைநகராம் கண்டியில் அமைந்துள்ள ஒறாபிபாஷா நிலையத்தின் தலைவர் கன்சுல் உலும் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹஸன் அவர்களுடன் ஒத்துழைத்துப் பல நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் வெற்றி கண்டவர். 

இங்ஙனம் எந்தெந்தத் துறைகளில் தமக்கு ஈடுபாடும் ஆர்வமும் அக்கறையும் உள்ளதோ அந்தத் துறைகளிலெல்லாம் சலியாது உழைத்தவர்.

இத்தகைய பெருமகனாரின் வாழ்க்கையையும் அவர் தம் சாதனைகளையும் பல்வேறு பணிகளையும் உலகறியச் செய்தல் இன்றியமையாததொன்றாகும்.

Post a Comment

Previous Post Next Post