ரகசியமாக ஹஜ்ஜை நிறைவேற்றிய கலீஃபா!

ரகசியமாக ஹஜ்ஜை நிறைவேற்றிய கலீஃபா!


உஸ்மானிய்யா பேரரசின் ஆட்சி காலத்தில் மக்கா மற்றும் மதீனாவிற்கு வருகைத் தரும் ஹாஜிகளுக்கு வழிகாட்டியாக ஒருவர் பணி புரிந்து வந்தார்.

அவரது வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு, இதோ 

அவரது வார்த்தைகளில்:வழக்கமாக, உலகின் பல திசைகளிலிருந்து மக்காவை நோக்கி படையெடுக்கும் ஹாஜிகளுக்கு வழிகாட்டியாக பணி புரிவதற்காக சென்றிருந்தேன்.இந்த முறை சற்றுத் தாமதமாக சென்றுவிட்டேன்.ஆதலால் எனக்கு எந்த ஹாஜிகளும் கிடைக்கவில்லை.

மனம்வருந்தி நின்றுக் கொண்டிருந்தபோது ஒரு துருக்கி நாட்டு மனிதர் என்னை அழைத்தார்.பார்ப்பதற்கு சாதாரணமான மனிதராக இருந்தார்.

அவர் அணிந்திருந்த தொப்பியை வைத்தே அவர் செல்வந்தர் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

அந்த மனிதர் என்னிடம் எனக்கு ஹஜ் புரிவதற்கு வழிகாட்டியாக தங்களால் பணி புரிய இயலுமா என்று கேட்டார். எனக்கு இந்த சாதாரண மனிதரிடமிருந்து என்ன கூலி‌ கிடைத்து  விடும்   என்று எண்ணிக் கொண்டு எனக்கு இப்போதைக்கு பிழைப்பதற்கு வேறு வழி இல்லை என்பதால் இப்படிப்பட்ட மனிதருக்கு வழிகாட்டியாக பணிப் புரிய  ஒப்புக் கொண்டேன். 

அவர்  ஹஜ்ஜை நிறைவேற்றி முடிக்கும் வரை  அவருக்கான வழிகாட்டியாக இருந்தேன்.

கடைசியாக ஹஜ்நிறைவடைந்தது.இருவரும் பிரிய கூடிய நேரமும் வந்தது.ஹஜ் முழுக்க என்னிடம் அதிகமாக பேசாத  நன்நடத்தையுள்ள அந்த நபர் என்னிடம்  ஒரு கடிதத்தை நீட்டிக் கூறினார் 

"இந்த கடிதத்தை வாங்கிக் கொள்ளுமாறும், ஆனால் ஒரு நிபந்தனை நான் உன் பார்வையிலிருந்து  மறைந்தப் பிறகு  மக்காவின் ஆளுநரிடம் சென்று,  அவர் முன்னிலையில் மட்டுமே இதனை‌ திறக்க வேண்டும்" என்றுக் கூறினார்.

அவர் என்னை விட்டு மறைந்ததும், நான் மக்காவின் ஆளுநரிடம் விரைந்தேன். சந்திப்பதற்கு அனுமதி கோரினேன். பிறகு சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. 

நான் நிகழ்ந்ததைக் கூறி  இந்த கடிதத்தைக் குறித்தும் கூறினேன்.நான் கூறிய அனைத்தையும் செவிமடுத்தப் பிறகு அந்த கடிதத்தை திறக்குமாறு கூறினார்.நான் திறந்த கடிதத்தை பார்த்தவுடன் அமர்ந்திருந்த ஆளுநர் தீடீரென்று எழுந்து இது கலீஃபா அப்துல் ஹமீது ஸானீ அவர்களது முத்திரை என்றுக் கூறினார்.

இந்த வார்த்தையைகேட்டதும் ஹஜ் செய்வதற்காக‌ நான் வழிகாட்டிய அந்த  நபர் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின்   கலீஃபாவா? என்று திகைத்து போய் கல் போல நின்றேன்.

அந்த கடிதத்தின் உள்ளே  "எனக்கு ஒரு பெரிய வீட்டை வழங்குமாறும், எனக்கும் எனது குடும்பத்திற்கும் வாழ்கை முழுக்க தேவையான அனைத்தையும் அரசாங்கத்திலிருந்து வழங்கிக் கொண்டே இருக்குமாறும்"  ஆளுநருக்கு வலியுறுத்தப்பட்டிருந்து.

இப்படித்  தனியாக ,இரகசியமாக தாங்கள் ஹஜ் செய்ததற்கு காரணம் என்னவென்று கலீஃபா அப்துல் ஹமீது அவர்களிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறினார்:

"நான் இறைவனது இல்லமான கஅபாவின் முன் நிற்கும் போது  சாதாரண ஒரு அடியான் போல்  நிற்க வேண்டும்.அவனுக்கு ஹஜ்ஜை நிறைவேற்றும் போது நான் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி என்ற‌ எண்ணமில்லாமல், பயத்தோடு, பணிவோடு எதற்கும் சக்தி பெறாத ஒரு அடிமை என்ற உணர்வோடு நிறைவேற்ற வேண்டும்",என்பதற்காகவே  நான் இவ்வாறு செய்தேன் என்று கூறினார்.

தமிழில்:
மௌலவி நியாசுதீன் புகாரி நத்வி

Post a Comment

Previous Post Next Post