வையகத்தின் வாழ்க்கையிலே வளம் கண்ட கவிஞன்

வையகத்தின் வாழ்க்கையிலே வளம் கண்ட கவிஞன்

பெருங்கருணைப் பெரியோனின் பெருநாமம் போற்றி 
திருநபியின் ஸலவாத்தைத் திகழ்ந்தோங்க ஏற்றி


புவிக்கனியாய்ப் பொலிவுதரும் புகழ்க்கவிதைப் பேறே! 
கவிக்குலத்துப் பெருமகனாய்க் கவினுஸுபைர் ஏறே!

கவின்மிகுந்த சிறிலங்கா கடலின்கண் முத்து 
புவிவாழும் கவிஞர்களோ புகழ்மணக்கும் சொத்து. 
கொண்டல்தவழ் குறிஞ்சிவளம் கொண்டகல் ஹின்னை
மண்டலத்தின் மாண்பினுக்கு வழிவகுக்கும் முன்னை

ஏற்றமிகு ஹாஜியாராம் ஏ.ஓ.எம். காசிம் 
போற்றவரும் நன்மகவாய்ப் பூவிலுற்றீர் வாசம்.

ஈன்றதினும் பெரிதுவந்தே இனியவன்னை நெகிழ்ந்தார்
சான்றோனாய்க் கேட்டறிந்து சபிபாம்மா மகிழ்ந்தார்.

உடன்பிறந்தோர் எண்மருடன் ஊர்சிறக்க வந்தீர் 
கடன்மடையைத் திறந்தாற்போல் கவிதைகளைத் தந்தீர்.

மாத்தளையின் மாதினியார் மாண்சரீனா நங்கை 
பாத்தளையால் நீர்பிணித்த பண்புடைய நங்கை

சார்ந்துவரும் ஸக்கிஸுல்பி ஸமீக்கெனவே மூவர்
ஊர்ந்துவரும் இல்லறத்தின் உயர்கனிகள் ஆவர்.

சிறந்துயரும் நெறியிஸ்லாம் சீரிலக்கிய மலர்ச்சி

நிறைந்திடுநும் பணிகளெந்தம் நெஞ்சத்தின் கவர்ச்சி 

ஊற்றுக்கோல் வழியாய்ச்சொல் ஓவியங்கள் பலவாம் 
சாற்றிடுவோம். அவையனைத்தும் சாயாத நிலவாம்.

பலாச்சுளையாம் பழம்பாடல் பக்குவமாய் எடுப்பீர் 
நிலாச்சோறாய்ச் சுவைப்பதற்கு நிதியமெனக் கொடுப்பீர்.

மழலைமொழிக் குழவியர்க்கு மணிக்குரலோ சத்து
பழகுதமிழ் எழில்வளர்க்கும் பண்பாட்டின் வித்து 

வானொலியின் கவியரங்கில் வழங்கிவரும் நாதம்
தேனொலியாய்க் காதுறையும் தெவிட்டாத கீதம்

மதிக்கின்ற இலக்கியத்தின் மஞ்சரியோ கானாம்
உதிக்கின்ற மருதமலர் ஒலிக்கின்ற தேனாம் 

நுட்பமுடன் சிறப்படையும் நும் 'மலர்ந்த வாழ்வு"
திட்பமுறப் போக்கிவிடும் தீந்தமிழின் தாழ்வு.

கண்டமிழ்தச் சுவையுடைய 'கண்ணான மச்சி" 
வண்டமிழின் நயந்தெரிந்தோர் வைத்திடுவர் உச்சி

சீறாவின் பதுறுக்குச் சீர்சால்நும் உரையே 
ஆறாகப் பாய்ந்தையம் அகற்றிவிடும் திரையே

பொருத்தமுறும் நற்பணிகள் புரியும்நும் நாட்டம்
திருத்தமுற வனப்புறுத்தும் தீனிஸ்லாம் தோட்டம் 
  
ஆசிரியர் எழுத்தாளர் அவைமன்றம் நிறையும் 
பேசரிய நும்பணியால் பெருமிதமே உறையும் 

நற்கவிஞர் பலர்தோன்ற நல்வழியும் கண்டீர்! 
பொற்கவிதைச் சிறப்பாலே புகழெல்லாம் கொண்டீர்!

பாருலகில் அரிதான பணிவதனைக் கற்றீர்!
சீரோங்கும் பாராட்டைச் சிறப்புடனே பெற்றீர்! 
 
கவின்துணையால் சந்ததியால் கண்குளிரப் பெற்று. 
புவிமீது சிறந்திடுவீர் புகழெல்லாம் உற்று!
 
வல்லவனாம் அல்லாஹ்வின் வானருளே வழிக! 
 நல்லவர்கள் ஆசியெலாம் நயமாகப் பொழிக! 
 
வையகத்தின் வாழ்க்கையிலே வளம்பெற்று வாழ்க! 
மெய்யகமும் உள்ளகமும் மேம்பட்டு வாழ்க!

Post a Comment

Previous Post Next Post