கவிஞர் சுபைரின் பன்முக நோக்கு

கவிஞர் சுபைரின் பன்முக நோக்கு


இன்று இந்துவாகிய நான். இஸ்லாமியக் கவிஞர் சுபைர் அவர்களுக்குப் பட்டமளிப்பது, அன்று எட்டயபுரத்து இந்து அரசர், சீறாப்புராணம் தந்த உமறுப் புலவரின் புலமைக்குப் பெருமதிப்பு அளித்து சமஸ்தான வித்துவானாக வைத்திருந்தமையை நினைவூட்டுகிறது. 

குலாம் காதிறு நாவலர் இயற்றிய ஆரிபு நாயகம் அரங்கேற்றம், யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் நடை பெற்றது. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலாரின் மருமகனும் மாணாக்கருமாகிய வித்துவசிரோமணி ச. பொன்னம்பலம்பிள்ளையின் தலைமையிலேயே இஸ்லாமியப் படைப்பாகிய "ஆரிபு நாயகம்" அரங்கேற்றம் இனிது நடைபெற்றது. 
இன்றைய பட்டமளிப்பு விழாவும் மேலே கூறிய நிகழ்ச்சிகளைப் போல மத, இன வேறுபாடுகளைக் கடந்து அறிஞர்களை மதிக்கும் தமிழ்ப் பெரும் பண்பைக் காட்டுகின்றது.

மக்கள் யாவரும் ஒரே சகோதரர் போல் ஒன்றாக வாழ வேண்டுமென்பதே இஸ்லாத்தின் அனுட்டானக் கொள்கையின் அடிப்படை நோக்கம், இஸ்லாத்தின் அனுட்டானக் கொள்கைகள் ஐந்தாகும். அல்லாஹுத் தஆலாவை ஏகதெய்வமாக ஏற்றுக் கொள்ளுதல், நாள்தோறும் ஐந்து வேளை தொழுதல், சகாத் என்னும் ஏழை வரி கொடுத்தல், ரமழான் மாதத்தில் நோன்பு நோற்றல், ஹஜ்ஜுக்குச் செல்லுதல் என்பனவே இவை. இந்த ஐந்து கடமைகளில் மக்களிடையே சகோதரத்துவத்தை வழக்கிற் கொண்டு வந்து விருத்திசெய்வதற்கே முதல் நான்கு கடமைகளும் விதிக்கப்பட்டுள்ளன. 
அந்தச் சகோதரத்துவத்தை இன்னும் அதிக விசாலமாக விருத்திசெய்வதற்கு ஐந்தாவது கடமையாகிய திருமக்கா யாத்திரை அமைக்கப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரையின் முக்கிய நோக்கம் சகோதர ஒற்றுமையே ஒருவரின் நிலையினால் ஏற்படும் மேன்மை தாழ்மை நிறத்தினால் உண்டாகும் சாதி வேற்றுமை குலப்பெருமையினால் முழைக்கும் இறுமாப்பு முதலியவற்றை இந்த யாத்திரை அடியோடு அகற்றி விடுகின்றது. 

இறைவனது சந்நிதானத்தில் வந்து நிற்கும் பாவனையாக அந்த அறபாத்தில் வந்து குழுமியுள்ள இலட்சக் கோடி முஸ்லிம்களும் எந்தத் தேசத்திலிருந்து வந்தபோதும் ஒருவரோடொருவர் தோள்முட்ட உறவு பாராட்டி ஒரே சகோதரத்துவத்தில் எடுபட்டு நிற்கின்றனர். 

உலகிலுள்ள மக்கள் யாவரும் ஒரே தன்மையுடைய ஒரே சாதியினரே என்னும் உண்மையை அந்த அற்புதம் வாய்ந்த அறபாத் மைதானம் வற்புறுத்துகின்றது. 

இத்தகைய சிறந்த சகோதரத்துவத் தன்மையையே இன்று கவிஞர் சுபைர் அவர்களின் பாராட்டு விழாவும் எடுத்துக்காட்டுகின்றது. மதத்தாலும், இனத்தாலும் வேறுபட்ட மக்கள், இன்று இச்சபையிலே சகோதரத் தன்மையுடன் கவிஞர் பெருந்தகையைக் கௌரவிக்க முன்வந்துள்ளனர்.
சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையுயும் தேவாரத்தை யும்,கம்பராமாயணத்தையும் தேம்பாவணியையும் படித்து உணர்ந்து சுவைக்கும் நான் சீறாப்புராணம், நூறுமசாலா. காசிம் படைப் போர், மஸ்தான் சாஹிபு பாடல்கள் ஆகியவற்றையும் படித்துச் சுவைக்கின்றேன். 

பிறையன்பன் என்ற புனைபெயரில் இஸ்லாமியக்கலையும் பண்பும் பற்றி எழுதிய நான் பல்கலைக்கழக மாணவர் களுக்குத் தமிழ் இலக்கிய வரலாற்று வகுப்பில் முஸ்லில்களின் தமிழ்த்தொண்டு பற்றியும் விரிவாக விளக்கியுள்ளேன். 

எனவே, சுபைர் அவர்களின் தமிழ்த்தொண்டிற்காக அவரைக் கௌரவிக்கும் தகைமை உரிமை எனக்குண்டு.

 முப்பது ஆண்டு காலத் தொடர்பு :  கவிஞர் சுபைர் அவர்கள் இன்று நேற்று எனக்கு அறிமுகமானவர் அல்லர். கடந்த 30 ஆண்டு காலமாகத் தொடர்பு கொண்டவர். பண்டாரவளையில் ஆசிரியராகக் கடமையாற்றிய போது நான் உலகச் சுற்றுப்பிரயாணம் முடித்து வந்தபின் அங்கு அழைத்து என் அனுபவங்கள் பற்றிப் பேச வைத்தவர். 

ஏன், நான் பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக நியமனம் பெற்றபோது இஸ்லாமிய எழுத்தாளர் சங்கத்தினைக் கொண்டு என்னைப் பாராட்டினார்.

மேலும், அவரின் பிறப்பிடமாகிய கல்ஹின்னைக்கும் எனக்கும். தொடர்புண்டு. அங்கு எனது மாணவன் அறிஞர் எஸ். எம். ஹனிபா அவர்களின் திருமணச் சடங்கிற்குச் சென்றிருக்கின்றேன். 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி அங்கு மீலாத் விழாவில் பேசியிருக்கின்றேன். கல்ஹின்னை மக்கள், சுபைர் அவர்களின் பலதுறைத் தொண்டுகள் பற்றிப் பாராட்டிப் பேசுவதை அங்கு கேட்டிருக்கின்றேன். எனவேதான் நட்பு மனப்பான்மையுடன் நன்றாகத் தெரிந்த ஒருவரைக் கௌரவிக்கும் இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன்.

இஸ்லாமிய இலக்கியங்கள் உருது மொழியிலேதான் அதிகமாக இருக்கின்றன. அதற்கு அடுத்தாற்போலத் தமிழிலே அதிகமாகக் காணப்படுகின்றன. பாரசீகப் பெருங்கவிஞர் உமர்கய்யாமின் பாடல்களிலிருந்து அரபுநாட்டுப் பெருங்கதையான "அல்பு லைலா வலைவாவரை, திருக்குர்ஆனின் திருவாசகங்களிலிருந்து தித்திக்கும் இக்பால் பாடல்கள்வரை உயர்ந்த முறையிலே சிறந்த அமைப்பிலே தமிழிலே தான் உருது மொழிக்கு அடுத்தாற்போல் இஸ்லாமிய இலக்கியங்கள் அதிகம் காணப்படுகின்றன. 

முஸ்லிம் கவிஞருள் ஒருவரான சாரண. பாஸ்கரன், தனது கவிதை ஒன்றில்,

பசுங்கிளியே பசுங்கிளியே 
பசுங்கிளியே உனக்கு நான்
பசும் பாலில் பழம் பிசைந்து 
பரிந்தளிக்கப் போகின்றேன்
 நிசமாகச் சொல்லுகிறேன்
நீயே ஒரு பாட்டைத் தான் 
நிகழ்த்திடுவாய் என் தமிழில்
 நெஞ்சில் இன்பம் பூக்கவே.

எனப் பாடுகின்றார். சாரணபாஸ்கரன் வழியிலே கவிஞர் சுபைரும், எம் தமிழிலே நெஞ்சில் இன்பம் பூக்க, ஓசையும் இனிமையும், கருத்தாழமும்மிக்க கவிதைகளைப் பாடியுள்ளார்.

சுபைர் அவர்கள் கண்டிக்கு அருகாமையில் வாழ்பவர். கண்டிக் கவிஞர் பரம்பரையிலே வந்தவர். யாழ்ப்பாணத்தவரால் மதிக்கப்பட்டு வித்வதீபம் என்ற பட்டத்தைப் பெற்றவர். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த அருள்வாக்கி அப்துல்காதர் புலவர். இவர் யாழ்ப்பாணத்து அசனாலெப்பைப் புலவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். இவருடைய பல கவிதைகள் பிரபந்த புஞ்சம் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன நபிகள் பெருமானார் பேரில் சந்தத் திருப்புகழ் பாடியுள்ளார். முஸ்லிம்களின் திருத்தலங்களில் ஒன்றாகிய கண்டியிலே கல்லறையில் அடங்கியுள்ள ஞானியைப் பாட்டுடைத் தலைவராக வைத்து இதே புலவர் கலம்பக உறுப்புக ளமைந்த "கண்டிக் கலம்பகம்" என்னும் நூலைப் பாடியுள்ளார். 

கண்டி மாநகருக்கு அணித்தாயுள்ள கசாவத்தை என்னும் ஊரில் வாழ்ந்தவர் செய்கு முஹம்மது லெப்பை ஆலிம் புலவர். இஸ்லாத்தின் பல்வேறு அம்சங்களை விவரித்துக் கூறும் "தீன் மாலை" என்னும் நூலை இயற்றியவர் இவரே. எனவே புலவர் பலர் வாழ்ந்த இஸ்லாமியத் திருத்தலமாகிய கண்டிக்கு அண்மையிலுள்ள கல்ஹின்னையைச் சேர்ந்த சுபைர் அவர்கள் கவிஞராக விளங்குவதில் வியப்பொன்றுமில்லை.

 என்னென்று போற்றுவது:-*  

கவிஞர். சுபைர் அவர்கள் சிறந்த பண்பாளர், தமக்குத் தமிழ்ப் பாடசாலையிலே தமிழ்க் கல்வியூட்டிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூருபவர். தனக்குத் தமிழ் கற்றுக் கொடுத்த யாழ்ப்பாணத் தமிழாசிரியர்களே தனக்கு நல்ல அத்திவாரம் இட்டுக் கொடுத்தனரென அவர் என்னிடம் கூறியதை, தான் பாராட்டுகிறேன். எழுத்துத் துறையிலே தான் ஈடுபட்டு உயரப் பெருந்துணை புரிந்தது கல்ஹின்னை மாணவர் சங்கமும் அதன் ஆரம்பகாலச் செயவளர் ஜனாப், எஸ்.எம்.ஹனியா அவர்களுமே என்று அவர் கூறும் அடக்கத்தினை என்னென்று போற்றுவது.

இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சியிலும், இஸ்லாமிய சமூகத் தின் உரிமையையும் பெருமையையும் காக்கும் முயற்சியிலும் அவர் அயராது உழைத்து வருவதை நான் சொல்லி நீங்கள் அறியத் தேவையில்லை.

1960-64 வரை மாணவர்களுக்காக 'மணிக்குரல்' என்னும் சஞ்சிகையை வெளியிட்ட இவர் "மணிக்குரல்' பதிப்பகம் என்ற நிறுவனத்தின் மூலம் தரமான பல நூல்களை வெளியிட்டு வந்திருக்கிறார்.

இவர் படைத்த நூல்களாகிய "மலர்ந்த வாழ்வு', 'மலரும் மனம்" "கண்ணாண மச்சி" என்பன பலரின் நன்மதிப்பைப் பெற்றுள்ளன.

பத்திரிகைகளில், வானொலியில் இவர் வழங்கிய கவிதைகளும் பேச்சுக்களும் பல. 

இவர் படைப்புக்கள் பற்றிப் பலரும் பாராட்டிப் பேசியுள்ளார்கள். நான் கூறுவதற்கு அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

மஸ்தான் ஸாஹிபு தமிழ்பேசும் மக்கள் அறிந்த முஸ்லிம் புலவர் சித்தர். முஸ்லிம் புலவராகிய இவரின் சிறந்த சீஷர் ஓர் இந்து. அவர் சரவணப் பெருமாள் ஐயர், மஸ்தான் சாகிபு பாடல்களுக்கு நான்மணிமாலை பாடினார் சரவணப்பெருமாள் ஐயர்.அதில் மஸ்தான் சாகிபின் பாடல்களைக் காத்து வளர்த்து உலகமெலாம் பரவச் செய்யத் தனது கடவுளாகிய விநாயகரை இறைஞ்சுகின்றார். 

தமிழ்மொழியின் அமர நிலை இது, இதேபோன்று கவிஞர் சுபைர் அவர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு என்றும் அருள் செய்ய வேண்டுமென கலைகளுக்கெல்லாம் தெய்வமாகிய எனது இறைவன் ஆடவல்லானை இறைஞ்கின்றேன்.

பல்கலைக் கழகங்களில் கௌரவப் பட்டங்கள் வழங்குவது மரபு. அம்மரபுக்கமைய. இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக விளங்கவிருக்கும் ஸாஹிராக் கல்லூரியில் பல்கலைக்கழகத் துணைவேந்தராகிய நான். கவிஞர் சுபைர் அவர்களுக்கு. இச்சபையின் வேண்டுகோட்கிணங்க. 'ஈழத்துக் கவிமணி என்ற கௌரவப் பட்டத்தினை அளிக்கின்றேன்.

(11.11.1981ல் மாண்புமிகு சபாநாயகர் அல்ஹாஜ் எம். ஏ. பாகிர் மாகர் தலைமையில் கவிஞர். ஸுபைருக்கு நடந்த பாராட்டு விழாவிலே பேராசிரியர் கலாநிதி . வித்தியானந்தன் நிகழ்த்திய பேருரை)

Post a Comment

Previous Post Next Post