மலையகத்தின் தமிழகம் கல்ஹின்னையின் ஒளிச்சுடர்கள்

மலையகத்தின் தமிழகம் கல்ஹின்னையின் ஒளிச்சுடர்கள்


இலங்கையின் இலக்கியப் பிரதேசங்களில் ஒன்று கல்ஹின்னை என்று கலாநிதி. துரை.மனோகரன் அவர்களாலும், மலையகத்தின் தமிழகம் என்று பேராசிரியர்.வித்தியானந்தன் அவர்களாலும் போற்றிப் புகழப்பட்ட கல்ஹின்னை மண்ணுக்கு பெருமை சேர்த்த இலக்கிய ஆளுமைகளில் கவிமணி. ஸுபைருக்கு தனியிடம் உண்டு. 

கல்ஹின்னை எனும் பட்டாடையில் தனது கவிதைகளை முத்துக்களாக பதித்து இலங்கையிலும் மற்றும் தமிழகத்திலும், மலேசியாவிலும் தனது பிறந்த மண்ணின் பெருமையை பிரகாசிக்கச் செய்தவர் கவிமணி . ஸுபைர் அவர்கள்.

தமிழகத்தில் இறையருட்கவிமணி. பேராசிரியர்.கா.அப்துல் கபூர் சாஹிப், தமிழக் முஸ்லிம் லீக் தலைவரும், சிறந்த இஸ்லாமிய அறிஞருமான ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் சாஹிப், தமிழகத்தின் தலைசிறந்த குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா, தமிழகத்திலும், மலேசியாவிலும் புகழ்பெற்ற இஸ்லாமிய எழுத்தாளர் ஜே. எம். சாலி, பிறை ஆசிரியரும், ஆலிம் பெருந்தகையுமான அப்துல். வஹ்ஹாப் சாஹிப் போன்றவர்களுடனும், இலங்கையில் பேராசிரியர். சு. வித்தியானந்தன், பேராசிரியர்.தில்லைநாதன், பேராசிரியர்.எம்.எம். உவைஸ் மற்றும் பல்வேறு துறைகளில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர்களுடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தவர். 
இதன் மூலம் தனது பிறந்த மண்ணின் பெருமையையும், கீர்த்தியையும் பார் புகழச் செய்தவர் தான் நமது கவிமணி ஸுபைர்.

இவரது திருமணத்தில் பேராசிரியர்.வித்தியானந்தன், பேராசிரியர்.எம்.எம். உவைஸ் போன்ற பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டது இவரது சிறப்பையும், அறிஞர்கள் மத்தியில் நமது கவிமணிக்கு இருந்த செல்வாக்கையும், நன்மதிப்பையும் எடுத்துக்காட்ட போதுமானது.

இவரைப் போன்ற இன்னும் பல ஆளுமைகள் எமதூர் வரலாற்றில் நிறையவே உண்டு. மண்ணின் மாண்பு காத்து, மணம் பரப்பிய இவர்களை மறந்து விட்டு ஒரு புதிய தலைமுறை உருவாகும் நிலைமை இன்று எமதூரில் உள்ளது. 

உள்ளது உள்ளபடி பெருமையும், கீர்த்தியும் உள்ள எமது வரலாறு விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் இளைய தலைமுறைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதில் சுயநலம் இல்லாமல், திரிவுபடுத்தாமல், இருட்டடிப்புச் செய்யப்படாமல் வரலாறுகள் ஒப்புவிக்கப்பட வேண்டும். 

இதில் நாம் தவறிழைப்பது இளைய தலைமுறைக்கு நாம் செய்யும் பெரும் துரோகமாகும். 

முன்னவர்களின் அடிச் சுவட்டை பின்பற்றியே, முன்னுதாரணமாகக் கொண்டே இளைய தலை முறையினர் பயணிக்கின்றனர். 

எனவே அவர்களது பாதைகளுக்கு ஒளியூட்டி புது வரலாறு படைக்க தூண்டும் வகையில், எமது ஊருக்கு ஒளிவிளக்குகளை ஏற்றி நல்வழி காட்டிய நன்மக்களின் வரலாறுகளை தொடர்ந்து தர எண்ணியுள்ளோம். 

சர்வதேச தரத்திலான இணையதள சஞ்சிகையான 'வேட்டை'(கல்ஹின்னை டுடே)யில் புதுயுகம் படைக்கப் புறப்படும் எமது ஊரின் வருங்கால சிற்பிகளுக்கு கல்ஹின்னையின் உண்மை சிறப்புகளை கூறும் மகோன்னத பணியில் கவிமணி ஸுபைர் எனும் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் முக்கியமானவற்றை 'வேட்டை'யில் பிரசுரிக்க எண்ணியுள்ளோம். அதனைத் தொடர்ந்து கல்ஹின்னை நினைவுகள், எங்கள் ஊர் கல்ஹின்னை, கல்ஹின்னையின் இலக்கியப் பணி, மற்றும் பல சர்வதேச தரத்திலான நூல்களிலும், சஞ்சிகைகளிலும் எமது மாண்புமிகு மண்ணின் பெருமைகளை கூறும் கட்டுரைகளும் தொடந்து வெளிவரும்.

இளைஞர்களே ........!
பயணிக்க தயாராகுங்கள்!


Post a Comment

Previous Post Next Post