நந்தவனத்துள் ஒரு நறுமலர் அப்துர் ரஹீம் ஆலிம் அவர்கள்.

நந்தவனத்துள் ஒரு நறுமலர் அப்துர் ரஹீம் ஆலிம் அவர்கள்.


பூத்துக் குலுங்கி, நறுமணம் வீசும் மலர்களினால் நந்தவனத்துக்குப் பெருமை, கற்றாய்ந்து பாரினில் சாதனை படைக்கும் மாணவர்களினால் கல்வி நிலையங்களுக்குப் பெருமை, பிறந்து வளர்ந்து சான்றோனாய் பிரகாசிக்கும் நன்மக்களால் ஊருக்குப் பெருமை. 

அவர் எமது ஊர்க்காரர் என்று பெருமையாக ஊர் மக்கள் பேசும் அளவிற்கு ஊர்ப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் வாழ்வது ஒரு சாதாரண விடயமல்ல! இவ்வாறு வாழும், வாழ்ந்து மறைந்த நல்லோர்களைத் தன்னகத்தே கொண்ட ஊர்கள்தான் பலதிக்குகளிலும் பிரசித்தம் பெறுகின்றன.

மத்திய மாகாணத்தில், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய இயற்கை வளம் செழிந்த ஊர்தான் "மலையகத்தின் தமிழகம்" என சான்றோர்களால் போற்றப்படும் கல்ஹின்னை. இங்கு பல தரப்பட்ட அறிஞர்களும், கவிஞர்களும், உலமாக்களும், வைத்தியர்களும், எழுத்தாளர்களும் தோன்றி இவ்வூரின் மகிமையை எம் தாய்த் திருநாடாம் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பரப்பியுள்ளனர். 

இத்தகைய சான்றோர்களால். ஆன்மீக லெளகீக கல்விகளினால் தேர்ச்சி பெற்ற நன்மக்களால் உருவாக்கப்பட்ட ஊர்தான் கல்ஹின்னை.

இத்தகைய சிறப்பு மிக்க கல்ஹின்னையின் அபிவிருத்தியிலும், சமூகப் புனரமைப்பிலும், முன்னோடியாகக் கருதப்படுபவர்தான் “மலையகப் பெருமகன்” என்று போற்றப்படும் புரக்டர் ஹுசைன் அவர்கள். 
அவரது சகோதரர் அப்துல் ஹமீத் ஆலிமின் மூத்தமகனாக  1937ம் ஆண்டு பிறந்தவர்தான் மர்ஹும் அப்துர் ரஹீம் ஆலிம் (பஹ்ஜி) அவர்கள்.

அவர்களுக்கு சகோதரர்களும் சகோதரிகளும் உடன் பிறப்புகளாவர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர்கள். 

“கடேஆலிம் குடும்பம் என்று சிறப்புடன் ஊராரால் அழைக்கப்படும் அளவிற்கு மார்க்கத் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டது இக் குடும்பம். வாழ்வாதாரத்திற்காக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் மற்றும் அரசாங்க தொழில் புரிபவர்களும் இக்குடும்பத்தில் உள்ளனர்.

அல்ஹாஜ் அப்துர்ரஹீம் ஆலிம் அவர்கள் தமது ஆரம்பக் கல்வியை அன்றைய கமாலியா முஸ்லிம் பாடசாலை (இன்றைய அல்மனார் தேசிய பாடசாலை) யில் கற்றார். பின்னர் மார்க்கக் கல்வியைக் கற்கும் நோக்குடன் வெலிகம மத்ரஸதுல் பாரி அரபுக் கலாசாலையிலும் பின் காலி கோட்டையில் உள்ள பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா எனும் பிரசித்தி பெற்ற அரபுக் கல்லூரியிலும் இணைந்தார். 

அங்கு அப்துல் ஹமீத் ஆலிம், அப்துஸ் ஸமத் ஆலிம் மற்றும் அஜ்வத் ஆலிம் போன்ற பிரபலமான ஆலிம் பெருமக்களின் சீரிய வழிகாட்டலில் தனது மார்க்கக் கல்வியைப் பூர்த்தி செய்த அவர்கள் 1956ம் ஆண்டில் மெளலவி பட்டம் பெற்று வெளியேறினார். 

நாடறிந்த பிரபல மார்க்க அறிஞரும் உடுகொடை அல்ஹஸனிய்யா அரபுக் கலாசாலையின் முன்னாள் அதிபருமான மர்ஹும் அல்ஆலிம் எம்.ஐ. அப்துல் லதீப் (பஹ்ஜி) ஹழ்ரத் அவர்கள் இவரது சகமாணவரும். நெருங்கிய நண்பருமாவார்.

மௌலவி பட்டம் பெற்ற அப்துர்ரஹீம் ஆலிம் அவர்கள் 1960-70 களில் கல்ஹின்னை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராக கடமையாற்றினார்.சிறந்த சமூக, மார்க்கப் பற்றுமிக்க அறிஞரான இவர் தனது குறுகிய கால ஆசிரிய சேவையை திறம்பட நிறைவேற்றினார்.

1960ஆம் ஆண்டு தனது 23ஆவது வயதில் கூமியாங் கொடையைச் சேர்ந்த பாத்திமா பீபியைத் தனது வாழ்க்கைத் துணைவியாக கரம் பிடித்து இல்லறத்தில் நுழைந்தார். ஒரு நல்ல முன்மாதிரியான குடும்பத் தலைவனாக வாழ்ந்து காட்டிய அப்துர்ரஹீம் ஆலிம் அவர்களுக்கு 6 ஆண் மக்களும், 2 பெண் மக்களும் உள்ளனர். 
தன்னைப் போன்றே தனது மக்களும் மார்க்கக் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் 3வது ஆலிம் பரம்பரை என்ற தூர நோக்கில் தனது மகன் அப்துஸ் ஸமீஹ் அவர்களை ஒரு ஆலிமாக்கிய இவர் ஏனைய புத்திரர்களை வியாபாரத்தில் ஈடுபடச் செய்து அவர்களது வாழ்வில் ஒளியேற்றினார்.

இவ்வாறாக தனது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்த அப்துர்ரஹீம் ஆலிம் அவர்கள் படிப்படியாக தனது சொந்த ஊரின் அபிவிருத்தியிலும், சமூக முன்னேற்றத்திலும் ஆர்வம் காட்டினார். இவரது சிறந்த குடும்பப் பின்னணியும் இவரது தனிப்பட்ட ஆளுமையும், ஊர் மக்கள் மத்தியில் இவருக்கு சிறந்த செல்வாக்கை ஏற்படுத்தியது. அனைவருடனும் இனிமையாகவும், பண்புடனும் பழகும் இவரை கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கல்லூரியின் நிர்வாக சபையின் அங்கத்தவராக ஊர்மக்கள் தெரிவு செய்தனர்.

இக்காலப் பகுதியில் மத்ரஸாவின் அபிவிருத்திக்கு மர்ஹும் அல்ஹாஜ் ஓ.எல்.எம். ஹனிபா, மர்ஹும் அல்ஹாஜ் காலித், அல்ஹாஜ் எஸ்.எம். ஜிப்ரி, அல்ஹாஜ் எம்.எச்.எம். பஷீர் போன்றோருடன் இணைந்து, அவர்கள் சிறந்த பல செயல் திட்டங்களை வடிவமைத்து அமுல்படுத்தினார். 

இவர்கள் யாவரின் கூட்டு முயற்சியனால் மத்ரஸாவிலும் பள்ளியிலும் ஊரிலும் பெரும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் மலரத் தொடங்கின. குறிப்பாக ஆலிம் அவர்களும் அல்ஹாஜ் ஓ.எல்.எம். ஹனீபா அவர்களும் ஒன்று சேர்ந்து கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ்வுக்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியன. மத்ரஸாவைப் பொருத்தவரையில் தகுதி வாய்ந்த மார்க்க அறிஞர்களை மத்ரஸாவின் அதிபர்களாக நியமித்து அதன் கல்வி வளர்ச்சிக்கு அருந் தொண்டாற்றினார். 
இவரது காலப் பகுதியிலேயே வானவியல் அறிஞர் பெருந்தகை எம்.ஐ. அப்துஸ் ஸமத் ஆலிம். மௌலவி எம்.ஏ.ஸி. திக்ருல்லாஹ் (பத்தாஹித் எம்.ஓ. பத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) மற்றும் மௌலவி எம்.எம். இஸ்ஹாக் (பஹ்ஜி) போன்ற அறிஞர்கள் இக்கலாசாலையின் அதிபர்களாக கடமையாற்றினர். 

1980களில் மத்ரஸாவீற்கான புதிய கட்டிடம் இவரது முயற்சியின் காரணமாக, ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் மிகவும் அழகிய முறையில் அமைக்கப்பட்டது. 

அத்துடன் மத்ரஸாவின் வருமானத்தைப் பெருக்குவதற்கு நடவடிக்கைகளையும் ஆலிம் அவர்கள் மேற்கொண்டார். முக்கியமாக அங்கும்புர தபாற் கந்தோர் கட்டிடம், மாத்தளை தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள இரு கடைத் தொகுதிகள் என்பன இவரது பெருமுயற்சியால் நிர்மாணிக்கப்பட்டு மத்ரஸாவிற்கான முக்கிய வருமானம் ஈட்டக்கூடிய சொத்துகளாக அமைக்கப்பட்டன.

ஏற்கனவே இருந்த கல்ஹின்னை ஜும்ஆப் பள்ளியை இட நெருக்கடி காரணமாகவும், எதிர்கால தேவையை மையமாக வைத்தும் விஸ்தரிக்க வேண்டிய தேவை மக்களால் உணரப்பட்டது. இப் பாரிய தேவையை சிறப்புடன் பூர்த்தி செய்ய பல்துறைசார்ந்தவர்களைக் கொண்ட ஓர் கமிட்டியை ஊர் ஜமாஅத்தார் ஏற்படுத்தினர். இதன் தலைவராக அப்துர்ரஹீம் ஆலிம் அவர்களையே சகலரும் ஏகமனதாக தெரிவு செய்தனர். இதிலிருந்தே இவது திறமையிலும் ஆற்றலிலும் ஊர் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை புலனாகிறது. ஊர்மக்கள் தம்மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு இம்மியளவும் மாறுசெய்யாது தனது கடமையை சிறப்புடன் ஆற்றினார்.

ஊர் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்பையும் பெற்று சகல வளங்களையும் ஒன்று திரட்டி
 புதிய ஜும்ஆப் பள்ளிஅழகிய முறையில் உருவாக நன்கு உழைத்தார்.

1984ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று தொடக்கம் கட்டிட வேலைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு  தலைவரினதும், ஏனைய உறுப்பினர்களினதும், ஊர் மக்களினதும் ஒத்துழைப்புடன் கடும் உழைப்புக்கு மத்தியில் நிறைவுபெற்றது.

அழகிய முறையில் கட்டி முடிக்கப்பட்ட ஜும்ஆப் பள்ளி கட்டிடம் 28.06.1989ஆம் ஆண்டு கல்ஹின்னையில் கம்பீரமாக காட்சி தந்தது. கல்ஹின்னை மக்களின் கீர்த்தியின் சின்னமாக, இறை பக்தியின் வெளிப்பாடாக  இறை இல்லம் கல்ஹின்னை கிராமத்தின் மத்தியில் நிமிர்ந்து நின்று இன்றும் பிரகாசித்துக் கொண்டுள்ளது. 
அத்துடன் பள்ளிக்கு நிரந்தர வருமானத்தைத் தேடித்தரும் திட்டங்களை வகுப்பதிலும் அப்துர் ரஹீம் ஆலிம்அவர்கள் தீவிரமாக ஈடுபட்டார்கள். அதன் பயனாக பள்ளிக்கு அருகாமையில் உள்ள கடைத் தொகுதி வீட்டுத்தொகுதி என்பன இவரது முயற்சியால் அமைக்கப்பட்டன.
இக்காலப் பகுதியிலேயே தனது சாச்சாவும் கல்ஹின்னையின் சீர்திருத்த முன்னோடியுமான புரக்டர் ஹுசைனின் நீண்ட கால கனவினை நனவாக்கும் முயற்சியிலும் முழு மூச்சுடன் ஈடுபட்டார். புரக்டர் ஹுசைனுக்கு சொந்தமான கண்டி வீதியில் அமைந்துள்ள ஒரு காணித் துண்டில் தக்கியா ஒன்றை அமைக்கும் எண்ணத்தை தனத குடும்பத்தவர்கள் மத்தியில் புரக்டர் ஹுசைன் முன்வைத்தார். இதனை ஆர்வத்துடன் அங்கீகரித்த குடும்பத்தவர்கள் இவ்வேலையை சிறப்புடன் செய்ய தகுதியானவராக அப்துர்ரஹீம் ஆலிம் அவர்களையே தெரிவு செய்து சதல பொறுப்புக்களையும் அவரிடமே ஒப்படைத்தனர். 

குடும்பத்தவர்களின் வேண்டுகோளை சிரமேற்கொண்டு தனது பணியை ஆரம்பித்த அப்துரஹீம் ஆலிம் அவர்கள் இரவு பகல் பாராது செயற்பட்டு தனது சாச்சாவின் கனவை நனவாக்கினார். அந்தக் கனவுதான் இன்று 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல்மஸ்ஜிதுல் ஹுஸைனீ என்ற பெயரில் கண்டி வீதியில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டுள்ளது.

இவ்வாறாக தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை ஊர் வேலை. பள்ளி வேலை என்று பொதுப் பணியில் செலவளித்த அப்துர்ரஹீம் ஆலிம் அவர்கள் தனது சேவைக் காலத்தில் ஒரு நல்ல நிர்வாகியாகவும் பண்பாளராகவும் தன்னை ஊரில் அடையாளப்படுத்தினார்.

நல்லறிஞர்களான உலமாக்களின் தொடர்பு, ஊர் முக்கியஸ்தர்களின் நெருக்கமான உறவு. எல்லா தரப்பினரையும் ஆதரித்து செயலாற்றும் விவேகம் முதலான அவருக்கே சிறப்பாயமைந்த பண்புகள் அப்துர்ரஹீம் ஆலிம் அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக அமைந்தன.

தன் வாழ்கையின் பெரும் பகுதியை ஊர் பொதுப் பணியில் தியாகம் செய்து ஊர் மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துக் கொண்ட அப்துர்ரஹீம் ஆலிம் அவர்கள் தனது வாழ்நாளில் இறுதிப் பகுதியில் சுகயீனமுற்று 1999ஆம் ஆண்டு வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்) 

கல்ஹின்னை எனும் நந்தவனத்தில் பூத்துக் குலுங்கி மணம் பரப்பிக் கொண்டிருந்த ரோஜா காலத்தின் கோலத்தால் உதிர்ந்துவிட்டாலும் இன்றும் மணம் கமழ்ந்து கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை! அப்துர்ரஹீம் ஆலிம் அவர்களதும் அவர்களுடன் நற்பணிகளில் பங்கெடுத்துக் கொண்ட யாவர்களினதும் நற்செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்கள் அனைவருக்கும் மறுமை வாழ்வின் 

நற்பாக்கியங்களையும் அருள இரு கரமேந்தி பிரார்த்திப்போமாக!

Post a Comment

Previous Post Next Post