ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் 187 ரன்கள் என்ற சவாலான இலக்கை கடைசி ஓவரில் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என தொடரை வென்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என தொடர் சமனில் இருந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
ஆஸ்திரேலிய அணி:
ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), கேமரூன் க்ரீன், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஜோஷ் இங்லிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டேனியல் சாம்ஸ், பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு கேமரூன் க்ரீன் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். புவனேஷ்வர் குமார், பும்ரா, அக்ஸர் படேல் ஆகியோரின் பவுலிங்கை பவர்ப்ளேயில் அடித்து நொறுக்கிய கேமரூன் க்ரீன் 19 பந்தில் அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேமரூன் க்ரீன் 21 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களை விளாசி புவனேஷ்வர் குமாரின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார்.
கேமரூன் க்ரீனின் அதிரடியான பேட்டிங்கால் ஆஸ்திரேலிய அணி பவர்ப்ளேயில் 66 ரன்களை குவித்தது. ஆனால் மிடில் ஓவர்களில் யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகியோர் கட்டுக்கோப்புடன் வீச ரன்வேகம் குறைந்ததுடன் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளும் விழுந்தன.
ஸ்மித் (9), மேக்ஸ்வெல்(6), மேத்யூ வேட்(1) ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஜோஷ் இங்லிஸ் ஓரளவிற்கு நன்றாக ஆடி 24 ரன்கள் பங்களிப்பு செய்தார். டிம் டேவிட் டெத் ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் ஆடி 25 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் டிம் டேவிட்டின் முதல் அரைசதம் இது. டேனியல் சாம்ஸும் 20 பந்தில் 28 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் 186 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.
187 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, ரோஹித்தும் 17 ரன்களுக்கு நடையை கட்டினார். 30 ரன்களுக்கே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 3வது விக்கெட்டுக்கு விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி ஸ்கோர் செய்தனர். சூர்யகுமார் யாதவ் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 29 பந்தில் அரைசதம் அடித்தார். 36 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 69 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். கோலியும் சூர்யகுமாரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 104 ரன்களை குவித்தனர்.
விராட் கோலியும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட, முதல் பந்தில் சிக்ஸர் அடித்த விராட் கோலி 2வது பந்தில் ஆட்டமிழந்தார். 48 பந்தில் 63 ரன்களுக்கு கோலி ஆட்டமிழந்தார். கடைசி 4 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட, 3வது பந்தில் தினேஷ் கார்த்திக் சிங்கிள் அடித்தார். 4வது பந்தில் ரன் அடிக்காத ஹர்திக் பாண்டியா, 5வது பந்தில் பவுண்டரி அடித்து போட்டியை முடித்து கொடுத்தார்.
6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என டி20 தொடரை வென்றது. இந்திய மண்ணில் தொடர்ச்சியாக 10வது டி20 தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
SOURCE;asianetnews
Tags:
விளையாட்டு