துயரிலும் துணிவாண்மை கொண்ட கவிஞர்

துயரிலும் துணிவாண்மை கொண்ட கவிஞர்


தன்னில் தானாய் தனியானதொருகொள் கையை வகுத்துக் கொண்டு வாழ்ந்தவர்தான் கவிமணி. கலாபூஷண் எம்.ஸி.எம். ஸுபைர். இவரது கலை, இலக்கிய, சமூக, கலாச்சாரப் பணிகளின் பின்னணியை மீட்டிப்பார்க்கும் போது இந்த உண்மை நன்கு புலனாகும். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அன்னாருடன் இத்துறையில் அடிக்கடி ஈடுபாடு கொள் ளக் கிடைத்தமையால் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. தனக்கு, எது சரியெனத் தென்பட்டதோ அதனை இறுதிவரை துணிவுடன் செயலாற்றும் உறுதிவாய்க்கப்பெற்றவர். எத்தகைய சவால்களையும் ஏற்கும் சக்தி அவரது இதயத்திற் புதைந்து கிடந்தது. அவர் மேற்கொள்ளும் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் தீவிர ஆற்றல் படைத்தவர். சமூகத்தின் சிந்தனை, செயற்பாடுகளில் சீர்திருத்தக் கருத்துக் கொண்டவர். இத்தகைய துணிவாண்மை நல்லியற் கவிஞர்களிடத்துக் காணப்படுவது இயல்பானதே. உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், இறுதிவரை அவரது உள்ளத்து உறுதி பாதிக்கப்படவில்லை.

கவிஞர்கள் கற்பனைவாதிகள் ஆகாயக் கோட்டை கட்டுபவர்கள் இருக்கும் உலகை மறந்து வாழ்பவர்கள். என்று கவிஞர்களைப் பற்றிக் குறிப்பிடுபவர்களும் உண்டு. குறிப் பாக முஸ்லிம் கவிஞர்கள் முன்வைக்கும் சீர்திருத்தக் கருத்துக் களையும் கலை இலக்கிய ரசனைகளையும் இஸ்லாமிய தீவிர வாதக் கருத்துக் கொண்டவர்களும் இவ்வாறே குறிப்பிட்டுக் கூறிய காலமொன்றிருந்தது. தீர்க்க தரிசனத்தோடு கூடிய சிந்தனை யாளர்களையும் கவிஞர்களையும் கூட இவர்கள் நிராகரித்து வந் துள்ளனர். இஸ்லாமிய சன்மார்க்கக் கருத்துக்களை மாத்திரமே அவர்கள் மரபு வழியாக ஏற்றுக் கொண்டனர். கவிஞர்களின் உள்ளக்கிடக்கையில் தோன்றிய சீர்திருத்தத்துக்கான கற்பனை, உருவ அமைப்புக்களின் தன்மைகளை ஏற்க மறுத்தனர். அதே நேரத்தில் தமிழ் பேசும் முஸ்லிம் அல்லாதோரும் இஸ்லாமிய அறிஞர்களினதும் சிந்தனையாளர்களினதும் கவிஞர்களினதும் படைப்புக்களைக் கணக்கிற் கொள்ளவில்லை. இந்த நிலை இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் 19ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு ஆரம்பகாலம் வரை. இஸ்லாமிய இலக்கியத்தைப் பொறுத்தவரை நிலை பெற்று வந்துள்ளது.

இஸ்லாமிய சித்தாந்தத்தின் உள்ளார்த்த நவீனத்துவத்தை காலத்துக்கேற்ப எடுத்துக் காட்டிய மலையகத்தைச் சேர்ந்த அறிஞர் சித்திலெப்பை, கசாவத்தை ஆலிம், அருள்வாக்கி அப் துல் காதிர் புலவர் போன்றவர்களும் இதில் அடங்குகின்றனர். இதே போன்று சம காலத்திற் தோன்றிய அல்லாமா இக்பால், ஸர் செய்யத் அஹ்மத்கான் போன்றவர்களின் சிந்தனைகளும் தேக்க நிலையிலே இருந்து வந்தன. எனினும், கடந்த ஐம்பது ஆண்டு களில், இந்நிலை மாற்றமடையத் தொடங்கிவிட்டது. காலத்துக் கொப்ப, ஏற்பட்ட முஸ்லிம்களின் கல்விவளர்ச்சி இதற்கு முக்கிய காரணமாகும். இதன் பயனாக புதிய சிந்தனை விழிப்புணர்வொன்று முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் ஏற்படத் தொடங்கியது. அதனால் இலங்கையின் பல பாகங்களில் வாழ்ந்து வந்த மூதறிஞர்களின் ஆக்கங்களை வெளிக்கொணரும் முயற்சிகளும் ஆரம்பித்தன. இன்று நம் மத்தியிலே தோன்றியுள்ள புதிய தலை முறையினரின் ஆய்வுகளும் ஆக்கங்களும் இதற்கோர் அத்தாட்சியாகத் திகழ்கின்றன.

எனினும், இதற்கான ஆரம்பப்பணிகளை மேற்கொண்ட பலரை, இன்றைய புத்திஜீவிகள் நினைவிற் கொள்ளுதல் அவசியம். ஏனெனில் அவர்கள்தான் தேங்கிக் கிடந்த சிந்தனைகளைத் துலங்கச் செய்தனர். அத்தகையோர்களால் தூண்டப்பட்ட ஆர்வம் இன்றைய பட்டப்படிப்பை மேற்கொண்டுள்ள முஸ்லிம்களிடம் ஒரு புரட்சிகரமான மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் மறைந்த மூதறிஞர்கள் கலைஞர்கள், கவிஞர்களின் படைப்புக்கள் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. எனவேதான். சிதைந்து மறைந்துவரும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியச் செல்வங்களை புதுப்பித்துப் பதிப்பிக்கும் புதிய முயற்சிகளும் ஆரம்பமாகியுள்ளன.

இத்தகைய பணியில். மர்ஹூம் பேராசிரியர் ம.மு. உவைஸ் அவர்களின் தனிமுயற்சியும் கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் சேவையும் வரலாற்று ரீதியானவை. கலாபூஷண் அல்ஹாஜ் எஸ். எம்.ஹனிபா தமிழ் மன்றத்தை ஆரம்பித்து கடந்த ஐம்பதாண்டு காலத்துக்குள் 93 நூல்கள் வெளியிட்டுள்ளமை ஒரு மாபெரும் சாதனையென்றே கொள்ள வேண்டும். இப்பணியில், கல்ஹின்னை யைச் சேர்ந்த கவிஞர்கள், எழுத்தாளர்களின் பங்களிப்புக்களும் மகத்தானதாகும்.

இதன்மூலம் மர்ஹும் கலாபூஷண் எம்.ஸி.எம்.ஸுபைர் அவர்களின் பல நூல்கள் வெளிவந்தன. ஆனால், அவர் தமது அந்திம காலத்தில் நூறாண்டு காலத்துப் படைப்பான அருள் வாக்கி அப்துல் காதிர்புலவரின் அடைக்கலமாலைக்கு பொழிப்புரை எழுதியதில் ஓர் அற்புதமே தென்படுகிறது. அடைக்கலமாலைக்கு பொழிப்புரை. அரும்பதவுரை எழுதியவர் கவிமணி சுபைர். ஆனால், நூல் அச்சாகி வெளிவரும் முன்னரே கவிமணி விரும்பியவாறோ, என்னவோ அவரும் அல்லாஹ்விடம் அடைக்கலமாகிவிட்டார். அரும்பதங்கள் கொண்ட அடைக்கலமாலைப்பாடல்களுக்கு அவர் தந்துள்ள விளக்கமே வியப்பையளிக்கிறது. இது அவரது கடைசி முயற்சி, எனினும், இதனால் இறைவன் அன்னாருக்கு ஒரு நற்பாக்கியத்தை வழங்கி விட்டான் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களை முன் வைத்து ஒவ்வொரு பாடற் தொகுதியிலும் தமது குறைகளை நினைத்து, இறைவனிடம் "தௌபா "வென்னும் பாவமன்னிப்புப் பெறத்தக்க வகையில் இலகுவான நடையில் தரப்பட்டுள்ள அருள்வாக்கியின் அடைக்கலமாலையின் 50 பாடல்கள் மக் களுக்குப் பெரும்பயன் தரத்தக்க வகையில் அமைந்துள்ளன.

இந்நூலை அச்சிட்டு வெளியிடுவோருக்கு அடைக் கலம் தந்தருளவும் கல்ஹின்னைத் தமிழ் மன்றம் இத்தகைய நூல்களை மறுபிரசுரம் செய்து புரியும் பணி மேலும் தழைத்துப் பயன்தந்து சிறக்கவும் அருள்முதல்வனை அகமார் வேண்டிக் கொள்வோம்...." என்று கவிமணி இந்நூலில் கடைசி வேண்டுகோளாக விடுத்துள்ளதையும் நோக்கத்தக்கது.

"அல்லாஹ்வே நான் உன்னிடம் தஞ்சம் புகுந்துவிட்டேன். அருளாளனே நான் உன்னிடம் தஞ்சம் புகுந்துவிட்டேன். அன்பு டையோனே நான் உன்னிடம் தஞ்சம் புகுந்து விட்டேன்...." என்று ஒவ்வொரு பாடலின் இறுதி அடிகளுக்கும் பொழிப்புரை கூறிக் கொண்டே அருள்வாக்கியின் அடைக்கல மாலையைக் கைப் பிடித்தவாறே அவரும் இறைவனிடம் அடைக்கலமாகி விட்டார்.

"நான் மரணமடையும் காலத்தில் (உயிர்பிரியும் நேரத் தில்) என்னுடைய உள்ளத்திலே எவ்விதக் குற்றமும் இல்லாமல். தீமையான கடுஞ்சூது நீங்கக் "கலீமா’ எனும் பரிசுத்த நீரை நன்மைதர உரிமையாக்கி என்னுயிர் பிரியச் செய்வாயாக! அதன்வழியே உனது ஞானத் தலமாம் (சுவனத்தைத்) தந்து அருள்வாயாக. அகங்காரமற்ற அருள். முதல்வனே 'முத்தகப்பிர்" பெருமையுள்ளவனே! நான் உன்னிடம் தஞ்சம் புகுந்து விட்டேன்.சாங்கால மென்னகத் துட்பமான சுழக்கமற்றுத் தீங்கான வெப்ப மரக்கலி மாவின் றிருப்புனலைப் பாங்கா வெனாவி நடத்தியுன் போதப் பதிதருவா யாங்கார மற்றமுத் தக்கப் பிறுவுன் னடைக்கலமே.

இவ்வாறே இன்னுமோர் பாடலுக்கு,

'வழிந்தோடாமல் (அளவோடு) அருள்மழை பெய்யும் கருணைமிக்க அழகிய மேகமே. எவ்விதக்குற்றமும் நெருங்காத பேரின்பப் பாடல்கள் தரும், நலம்தரும்' வழியான அழகிய கடலே, பற்றறுத்த பெரும் வணக்கவாளர் மனத்திலே வாழும் அழியாவரம் கொண்டவளே (வாஹிதே) நான் உன்னிடம் தஞ்சம் புகுந்து விட்டேன். 

பொழியாம லேபொழி யுங்கரு ணாகரப் பொன்முகிலே பழியான தென்று மணுகாத பேரின்பப் பானத்தின் வழியான தேங்கட லேதவத் தோர்கண் மனத்துறைந்த வழியாத வாஹிது வேயடி யேனுன் னடைக்கலமே!

இவ்வாறாக மெஞ்ஞான முத்துக்கள் போன்றே அடைக்கல மாலையின் ஐம்பது பாடல்கள் அவரது இறுதி ஆக்கத்துக்கும் நோக்கத்துக்கும் வழி சமைத்துள்ளதை நோக்கலாம்.

இஸ்லாமியத் தமிழ் கவிதை உலகில் புதிய சகாப்தமொன்றை உருவாக்குவதில் மூத்த கவிஞர்கள் பலரை நாம் நினைவுகூர்தல் அவசியம். மர்ஹூம்களான கவிஞர் அப்துல்காதிர் லெப்பை, புரட்சிக்கமால், யுவன். போன்றோர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து இவருடன் இணைந்து ஆற்றியுள்ள பணிகளுடன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த கவிஞர்களான கவிமணி புலவர் ஆ.மு.சரிபுத்தீன். கவிஞர் ஏ.இக்பால் போன்றவர்களும் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களனைவரும் மலையக முஸ்லிம்களின் மத்தியில் குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள். இதன் காரணமாக புரட்சிக்கமால் கவிதைகள், ஜாவித் நாமா போன்ற ஆக்கங்கள் மலையகத்தில் பதிக்கப்பட்டன. இவற்றிற்குக் காரணமாக விளங் கியவரும் கவிமணி ஸுபைர் என்பதை நாம் மறந்து விடலாகாது. அல்லாமா இக்பாலைத் தொடர்ந்து கவிதைத் துறையில் தோற்று விக்கப்பட்ட புதிய சிந்தனைகள் இவர்களை ஆட்கொண்டதில் வியப்பில்லை.

1973ல் தமிழ் நாட்டின் திருச்சி நகரில் நடந்தேறிய அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டின் போது, அங்கு நடந்த கவிதை அரங்கிலே இலங்கைக் கவிஞர்கள் பங்கு கொள்ளும் வாய்ப்பளிக்கப்படாத பெருங்குறையொன்றிருந்தது. அங்கு, ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பதற்காக என்னுடன். மர்ஹூம்களான பேராசிரியர் எம்.எம்.உவைஸ். கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தோம். ஈழத்து இஸ்லாமியப் புலவர் என்ற தலைப்பில் நானும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் காப்பியங்கள் என்ற தலைப்பில் மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எம். உவைஸ், இலங்கையில் அறபுத் தமிழ் என்ற தலைப்பில் கலாநிதி ஏ.எம்.ஏ. அசீஸ் அவர்களும் உரையாற்றிய போதும், இலங்கைக் கவிஞர்களுக்கு வாய்ப்பளிக்காமை குறித்து எமது அதிருப்தியை தெரிவித்தோம். அதன்பயனாக சென்னையில் நடந்த இரண்டாவது ஆய்வு மாநாட்டுக்கு புலவர்மணி ஆ.மு.சரிபுதீனும் கவிமணி எம்.எஸி.எம்.சுபைர் ஆகியோரும் அழைக்கப்பட்டு, கவிதைப் பொழிவில் பங்கு கொள்ளவுஞ் செய்தனர். அங்கு அவர்கள் பாராட்டப் பட்டமை இலங்கைக் கவிதைத் துறைக்குக் கிடைத்த பாராட்டெ னவே கருதினோம். சென்னையில் இருந்தபோது கவிமணிஸுபைருடன் ஆ.கா.அ.அப்துல் ஸமத், எம்.ஆர்.எம்.அப்துல் ரஹீம், மௌலவி.

அப்துல்வஹாப் சாஹிப் ஆகியோரின் விருந்தினர்களாகத் தங்கி யிருந்த இன்ப நினைவுகள் என்னில் இன்னும் நிலைத்துள்ளன.

1981ம் ஆண்டு கவிமணி ஸுபைருக்கு கொழும்பு சாஹிராக் கல்லூரியில் ஒரு பாராட்டு விழா நடந்தேறியது. அக் காலகட்டத்தில் நான் கொழும்பு மாவட்ட தமிழ்மொழி மூலம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான கல்வி அதிகாரியாகக் கடமையாற்றினேன். இவ் விழா ஏற்பாட்டுக்கு மூலகர்த்தாவாக விளங்கியவர் மர்ஹும் எஸ். எம். சஹாப்தீன் அவர்களாகும்.

மர்ஹும் சஹாப்தீன் இலக்கியவாதிகளின் அபிமானியாக விளங்கியவர் கொழும்பு குமாரவீதியில் இவரது வாசஸ்தலத்தில் அடிக்கடி இலக்கியவாதிகளின் சந்திப்புகள் இடம் பெறுவதுண்டு. இலக்கியவாதிகளின் தேவைகளை உணர்ந்து, தேவையான உதவிகளையும் பெற்றுத் தருபவர். நல்ல சிந்தனையாளர், தமிழக முஸ்லிம் எழுத்தாளர்களையும் அறிஞர்களையும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு அறிமுகஞ் செய்து வைப்பதில் முன்னின்றவர். கவிஞர் ஸுபைரின் தன்னலமற்ற சேவையை மதித்துப் போற்றினார். இக்குழுவில் என்னையும் இணைத்துக் கொண்டனர். கவிஞரைப் பற்றி தினகரன் வீரகேசரி, பத்திரிகை களுக்கு கட்டுரைகள் எழுதும் பொறுப்பும், விழாவன்று கவிஞரை அறிமுகஞ் செய்து வைக்கும் பொறுப்பும் எனக்குத் தரப்பட்டன. மர்ஹூம் சஹாப்தீன், எஸ்.எம்.ஹனிபா ஆகியோர் கவிஞருக்குப் பொற்கிழி வழங்கும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டனர்.

அவர் ஆசிரியராகக் கடமையாற்றிய பாடசாலைகளில் மாத்திரமின்றி ஏனைய பல கல்லூரிகளிலும் அவரால் இயற்றப்பட்ட காலைக் கீதங்கள் இன்றும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களால் இசைக்கப்படுகின்றன. இலங்கை வானொலியில் நூற்றுக்கணக்கான இவரது பாடல்கள் இசையமைக்கப்பட்டு வானொலிக் கலைஞர்களால் பாடப்பட்டுள்ளமையும் நினைவு கூரத்தக்கது. முஸ்லிம் வரலாற்றுச் சம்பவத்துடன் கூடிய நாடகங்கள் பலவும் அவரால் அரங்கேற்றப்பட்டுள்ளன.

அக்குரணை மத்திய கல்லூரியில் அவரால் அரங்கேற்றப் பட்ட மன்னனைக் காத்த முஸ்லிம் மங்கை என்ற கவிதை நாடகத்தைக் காணவந்தோர். கண்ணீர் மல்க கண்டு களித்த காட்சியும் மனத்தைவிட்டு அகலாததொன்றாகும்.

இரண்டாவது இராஜசிங்க மன்னனைப் போர்த்துக்கேயப் படைவீரர்கள் துரத்தி வருகின்றனர். மகியங்கனை பங்கரகம கிராமத்துக்கு மன்னன் வருகின்றான். மன்னனைக் காப்பாற்ற எண்ணிய முஸ்லிம் மங்கை மன்னனைத் தனது வீட்டுக்குப் பின்னால் ஓரிடத்தில் ஒழித்து வைக்கின்றாள். ஒன்றும் தெரியாதவள்போல் தனது பசுவிடம் பால் கறந்த வண்ணம் இருக்கின்றாள். அப்போது துரத்திவந்த போர்த்துக்கேய வீரர் மங்கை அறிய மன்னன் அங்குதான் ஒழித்து வைக்கப்பட்டுள்ளான் என்பதை அறிந்து கொண்டனர். தேடிப் பார்த்தனர். மன்னரைக் காணமுடியவில்லை. வந்த கோபத்தில் மங்கையை வாளால் வெட்டி இரத்த வெள்ளத்தில் கிடக்கவிட்டுச் செல்கின்றனர். வீரர்கள் சென்ற பின் மன்னன் மெதுவாக வெளியே வந்தான். மங்கை இரத்த வெள்ளத்தில் கிடப் பதைக் கண்டான் மன்னனுக்கோ தாங்கொணாத் துயரம். தன் னைக்காத்த மங்கையின் இரத்தத்தைக் தொட்டு நெற்றியிலே திலகமிட்டுக் கொள்கிறான். அதன் நினைவாக பங்கரகம கிராமத்தை மன்னன் மங்கையின் உறவினர்களுக்கு அன்பளிப்புச் செய்கிறான். உள்ளத்தை உருக்கும் அந்த வரலாற்றுச் சம்பவத்தை கவிதை நாடகமாக அரங்கேற்றியவர் கவிமணி ஸுபைரவர்கள்.


சமூகத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைக் காணும் போதும், கேட்கும்போதும் தூய்மையான உள்ளம் கொண்ட கவிஞர்களோ அறிஞர்களோ ஆவேசம் கொள்வதும் அவற்றைத் துணிவுடன் எதிர்கொள்ள முனைவதும் இயல்பானதே. கவிஞர் ஸுபைர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டவராக இருந்தபோதும் சமூக இலட்சியத் துக்காக தன்னை அர்ப்பணிப்பதில் மேற்கொண்ட பணிகள் பல உண்டு குடும்ப நலத்தையும் நோயையும் பொருட்படுத்தாமல் அவர் ஆற்றிய சமூக, கல்வி, இலக்கியப் பணிகள் பல. அவற்றைத் தனித்தனியாக ஆய்வதன் மூலம் மேலும் பல தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். இஸ்லாமிய எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் 25 வருடங்களுக்கு மேலாக எம்முடன் இணைந்து ஆற்றிய பணிகள் சிலதை விட சாதிக்கத் துணிந்தவை இன்னும் உள்ளன. இன்றைய இலக்கிய உலகில் மின்னும் தாரகைகளாக விளங்கும் இளந்தலைமுறையினருக்காக அவை காத்துக் கொண்டிருக்கின்றன.

குறிஞ்சிக் குயிலென
கூவிய கவிஞர் மறைந்த பின்னர்
குயிலிசை கேட்க யாரினி? என்றே
ஏங்கிய வேளை
*தந்தேன் தலைமுறை
என்னிசை தூக்க
என்றும் ஏற்பீர்
என்னிசை கேட்கும்"
என்றே எமக்கு
இன்னிசை வாளர்
இளந்தலைமுறையென
பெற்றளித்த
செம்மல் நீ.
அல்லாஹ் பொருந்திட
நல்லடக்கலமானீர்
சுவனம் சேர்ந்திட
அருள்வாய்! அல்லாஹ்
ஆமீன்! ஆமீன்!

 கலாபூஷண் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ.ஹஸன்


Post a Comment

Previous Post Next Post