தொழில் நிறுவனங்கள் வட்டி கட்டுவதற்காகப் பொருட்களின் விலையைப் பன்மடங்காகப் பெருக்குகின்றன. சாதாரண மனிதனும் வட்டியின் வலையில் இருந்து மீள முடியாதுள்ளான். வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் அழிவையே சந்திக்கும் என்பது அல்லாஹ்வின் முடிவாகும்.
இந்த வசனத்தில் அல்லாஹ் வட்டியை அழிப்பான் என்று கூறுகின்றான். வட்டி கொடுத்தவனுக்கு பொருளாதாரம் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும். தர்மம் செய்பவனின் பொருளாதாரம் தேய்ந்து கொண்டே செல்ல வேண்டும். ஆனால், வட்டி அழிவைத் தரும் என்று அல்லாஹ் இங்கே கூறுகின்றான்.
நாய்கள் ஒரே தடவையில் பல குட்டிகளை ஈனுகின்றன. ஆடுகள் பெரும்பாலும் அதிகபட்சமாக ஒரே தடவையில் இரு குட்டிகளைத்தான் ஈனுகின்றன. தினமும் இலட்சோப இலட்சம் ஆடுகள் உணவுக்காக அறுக்கப்படுகின்றன, கொல்லப்படுகின்றன. பொதுவாக கணக்கிட்டுப் பார்த்தால் களத்தில் ஆடுகளை விட நாய்களே அதிகம் இருக்க வேண்டும். ஆனால், உலகில் நாய்களை விட ஆடுகளே அதிகம் உள்ளன. எதை வளர்க்க வேண்டும், எதை அழிக்க வேண்டும் என்று அவன்தான் முடிவு செய்கின்றான். அவன் முடிவு செய்துவிட்டால் உலகின் நியதிகளுக்கு மாற்றமாக அது இருந்தாலும் அல்லாஹ்வின் முடிவில் மாற்றம் இருக்காது.
தொடர்ந்து வரும் வசனங்களும் வட்டியை வன்மையாகக் கண்டிக்கின்றன.
‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், வட்டியில் எஞ்சியுள்ளதை விட்டு விடுங்கள்.’
‘(அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியை விட்டு தௌபாச் செய்து) மீண்டு விட்டால் உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்குரியதாகும். (இதன் மூலம்) நீங்கள் அநியாயம் செய்யவும் மாட்டீர்கள்; அநியாயம் செய்யப்படவும் மாட்டீர்கள்.’ (2:278-279)
அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போரிடும் சமூகம் அழிவைத்தானே சந்திக்கும். எனவே, வட்டி அழிவைத்தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வட்டி ஒழிய வேண்டும் என்றால் ஸதகா, ஸகாத் என்பன ஊக்குவிக்கப்பட வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் கடன் வழங்குவது ஊக்குவிக்கப்பட வேண்டும். கடனைத் திருப்பித் தர முடியாத கஷ்ட நிலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வட்டி அழிக்கப்பட்டால் அது அனைவருக்கும் நலமாக அமையும். எனவேதான் வட்டியைத் தடை செய்வதற்கு முன்புள்ள வசனங்கள் தான தர்மங்களை ஊக்குவிக்கின்றன. வட்டியைத் தடுத்ததன் பின்னுள்ள வசனங்கள் கடன் பற்றிப் பேசுகின்றன.
SOURCE;islamkalvi