இலக்கிய முன்னோடி எம்.சீ.எம்.சுபைர்

இலக்கிய முன்னோடி எம்.சீ.எம்.சுபைர்

மஞ்சுதொடு மலைகள் சூழ் மலையகத் தில் பிறந்து இஸ்லாமிய இலக்கியச் சோலை யிலே கூவித்திரிந்த குறிஞ்சிக்குயில், இளம் எழுத்தாளர்கட்குக் களம் அமைத்தும், மூத்த எழுத்தாளர்களால் வழிகாட்டித் தளம் அமைத்தும் ஒலித்த மணிக்குரல் தன்னோடொத்தவர்களையும் இணைத்து இஸ்லாமிய இலக்கியக் கதவுகளைத் திறந்து, ஒளிபாய்ச்சிய குறிஞ்சிநாடன்,அனைவரது உள்ளங்களையும் கவர்ந்திழுத்த ஆஷா, ரோஜா மலரிதயம் படைத்துத் தானும் மணந்து, அடுத்தவரையும் மணக்கச் செய்த ரோஷன், குரலழகால் குவலயத்தோரைக் கவர்ந்திழுத்த குழலழகி, கவிதா வானத்திலே கண்சிமிட்டி வழிகாட்டியாய்த் திகழ்ந்த கவித்தாரகையாம் நஜ்முஷ்ஷுஆரா, இவரைப் பெற்றதால் நாம் பெருமையடைந்தோம் என இலங்கை முஸ்லிம் சமூகம் பெருமையடையச் செய்த எங்கள் கவிமணி எம்.ஸி.எம். சுபைர் இன்று எம் மத்தியில் இல்லை. 

ஆனால், அவர் பேனா வழியாய் வந்த எழுத்துக்கள். வாய் வழியாய் வந்த கவிதைகள், அவரால் தட்டி எழுப்பப்பட்ட படைப்பாளிகளின் ஆக்கங்கள் ஆகியன அவரை எம் இதயங்களில் என்றும் வாழச் செய்து கொண்டிருக்கின்றன. 

எழில்மிகு மலையகத்தின் திருமிகு கண்டி மாநகருக்கு அணித்தாய் அமைத்துள்ள கவின்மிகு கல்ஹின்னையில் பிறந்து வளர்ந்தவர் சுபைர். தந்தை வழி இரத்தத்தில் ஊறிய இஸ்லாமிய இலக்கியப்புற்றும் நற்றமிழாசிரியர் களால் தூண்டி விடப்பட்டு நெறிப் படுத்தப்பட்ட இலக்கிய ஆர்வமும் சிறுவன் சுபைர், கவிமணி சுபைராக வளர்வதற்கான செழுமைமிகு விளை நிலமாய் அமைந்தன. சிறு வயதிலேயே 'தினகரன்" பத்திரிகையின் எங்கள் கழகத்துக்கு அவரால் அனுப்பிவைக்கப்பட்ட ஆக்கங்கள் அவரைக் கருவிலே திருவுடையோராய் எடுத்துக் காட்டின. நல்லாசிரியர்கள். தந்தை ஆகியோரோடு, கல்ஹின்னையின் இன்னொரு புகழ் மிகு மைந்தனாகிய தமிழ் மன்றம் அமைத்தும், பெருந்தொகையான நூல்களைப் பதிப்பித்தும், சொந்தமாக நூலாக்கியும் தமிழ்ப்பணி புரியும் அல்ஹாஜ். எஸ்.எம்.ஹனிபா அவர்களும் சுபைரின் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் தூண்டுகோலாய் இருந்தவராவார். சாகி ராக் கல்லூரி நூலகத்தில் காணப்பட்ட இஸ்லாமிய இலக்கிய நூல்கள் அல்ஹாஜ் ஹனிபா மூலம் சுபைருக்குக் கிட்டின. இதனால் இஸ்லாமிய இலக்கியப் பரப்பைத் தெளிவாய் அறியக்கூடிய வாய்ப்பும் சுபைருக்குக் கிடைத்தது.

இஸ்லாமிய இலக்கியத்துக்கு ஓர் உந்துகோலாய் அமைவதற்கான நீண்ட கவிதைத் தொடரொன்றைத் தமது இளவயதிலேயே கவிஞர் சுபைர் எழுதி முடித்தார். 

1956ம் ஆண்டு 'மலர்ந்த வாழ்வு" என்னும் பெயரில் இது நூலுருப்பெற்றது. ஆசிரியத் தொழிலை, சமூகப்பணியாகக் கருதி பண்டாரவளை சாகிராவில் கடமையாற்றிய காலத்திலேயே, அவரது இலக்கியப்பணிகளும் ஆரம்பமாகின. இங்கு, கற்பிக்கத் தொடங் கிய காலத்திலேயே பேராசிரியர் உவைஸ் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ஈழத்து இஸ்லாமியக் கவிஞர்கள் எனும் பேச்சுத் தொடரை வானொலியில் நிகழ்த்தினார். 

இதனைத் தொடர்ந்து வானொலி முஸ்லிம் சேவை அவரை நன்கு பயன்படுத்திக் கொண்டது. இதன் முதலாவது கவிதை நிகழ்ச்சியான 'அண்ணல் நபி பிறந்தார் என்பது கவிஞர் சுபைரின் ஆக்கமாகும். இதனைத் தொடர்ந்து அவரால் இயற்றப்பட்ட பாடல்கள், எழுதப்பட்ட நாடகங்கள், இலக்கிய மஞ்சரி நிகழ்ச்சி. இலக்கிய உரைகள். மருதமலர் தொடர் நிகழ்ச்சி, இசைச் சித்திரங்கள் என அவர் கைவைக்காத துறையே இல்லை என்னும் அளவுக்கு முஸ்லிம் சேவையில் இவரது நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின.

அவரால் பயிற்றப்பட்ட, உருவாக்கப்பட்ட பலர் இன்று முன்னோடிக் கலைஞர்களாக புகழ் பெற்றுத் திகழ்கின்றனர். மாணவர்கட்கு உதவும் நோக்கோடு பண்டாரவளையில் இருந்து 1960ம் ஆண்டு கவிஞரால் வெளியிடப்பட்ட "மணிக்குரல்" சஞ்சிகை பின்பு தனது தளத்தை விரிவுபடுத்தி சிறந்த இளங் கலைஞர்களை உருவாக்கவும். மூத்த படைப்பாளிகளின் ஆக்கங்கட்கு இடமளிக்கவும் தொடங்கித் தன்னை ஓர் களமான இலக்கிய சஞ்சிகையாக மாற்றிக் கொண்டது. 

மணிக்குரலோடு இணைந்த முயற்சியாகவே. கவிஞர் ஸுபைர் எழுத்துலகில் ஒதுங்கி இருந்த கவிஞர் அப்துல் காதர் லெப்பை ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நிகழ்ந்தது. 

சுபைர் கொடுத்த உற்சாகத்தினால் மீண்டும் பேனாவைத் தூக்கினார் கவிஞர் அப்துல் காதர் லெப்பை. அதன் பலனாய் இன்று நாம் பெருமைப் படும் இலக்கியங்களான இக்பால் இதயம், ரூபாய்யத் செய்னம்பு நாச்சியார் மான்மியம், இரசூல் சதகம் மெய்நெறி, ஜாவீது நாமா, முறையீடும் தேற்றமும், கார்வான் கீதம், தஸ்தகீர் சதகம், நான் பாத்தும்மா சரிதை ஆகிய நூல்கள் வெளியாகின. 

அவற்றுள் பெரும்பாலானவை மணிக்குரல் பதிப்பகத்தாலும், சுபைர் தலைமை தாங்கிய இயக்கங்களாலும் மற்றும் அவரது ஆளுமையினாலும் வெளியிடப்பட்டன என்பதைக் கவனத்திற் கொள்ளும் போது கவிஞர் அப்துல் காதர் லெப்பையை மீண்டும் எழுதத் தூண்டிய அவர் ஒரு செயல் கூட சுபைரின் புகழைத் துலங்கச் செய்வதற்கும் போதுமானதாகும்.

 அத்தோடு அவரது ஆக்கங்களான "மலர்ந்த வாழ்வு". "கண்ணான மச்சி", "இலக்கிய மலர்கள்", "காலத்தின் குரல்கள்", எங்கள் தாய்நாடு' ஆகியவற்றோடு அவரால் தொகுத்து வெளியிடப்பட்ட 'பிறைத்தேன் ஆகியனவும் அவருக்குப் பெருமை சேர்ப்பனவாகும்.

கட்டுரையாளராகவும் பாடநூல் அபிவிருத்திக் குழுவின் உறுப்பினராகவும். இஸ்லாமிய ஆசிரியார் சங்க மத்திய குழுவிலும் அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியனவாகும், அவரால் எழுதப்பட்ட ஆக்கங்கள் இலங்கையில் மாத்திரமன்றி இந்திய, மலேசியச் சஞ்சிகைகளிலும் வெளிவந்தன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சுபைரின் நாமம் வாழ்க! "ஒரு விஷயத்தின் ஒரு மூலையை நான் காட்ட, மற்ற மூன்று மூலைகளையும் சுயமாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாத மாணவர்களுக்கு நான் தொடர்ந்து பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை" - சீன ஞானி கன்பூசியஸ்  

 


Post a Comment

Previous Post Next Post