டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி 7 ஓவரில் நிர்ணயிக்கப்பட்ட 64 ரன்களை விரட்டிய தென்னாப்பிரிக்க அணி 3 ஓவரில் 51 ரன்களை குவித்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் முடிவில்லாமல் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
உலக கோப்பை என்றாலே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரணிகளைவிட, மழை தான் பெரிய எதிரி. மழையால் பாதிக்கப்பட்ட போட்டிகளால் துரதிர்ஷ்டவசமாக தென்னாப்பிரிக்க அணி பலமுறை பாதிப்புகளை சந்தித்திருக்கிறது.
அந்தவரிசையில், டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய போட்டியும் அதே மாதிரி ஆனது. க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று ஹோபர்ட்டில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால் போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 9 ஓவரில் ஜிம்பாப்வே அணி 79 ரன்கள் அடித்தது. சகாப்வா(8), எர்வின்(2), சிக்கந்தர் ராசா(0) ஆகியோர் ஏமாற்றிய நிலையில், மாதவெர் அதிரடியாக ஆடி 18 பந்தில் 35 ரன்கள் அடிக்க, 9 ஓவரில் 79 ரன்கள் அடித்தது ஜிம்பாப்வே.
டி.எல்.எஸ் முறைப்படி 7 ஓவரில் 64 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் மழை குறுக்கிட வாய்ப்பிருந்ததால் வேகமாக இலக்கை அடித்து வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார் குயிண்டன் டி காக். முதல் ஓவரில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசிய டி காக், 2வது ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்தார். டி காக்கின் அதிரடியால் 3 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி51 ரன்களை அடித்துவிட்டது. வெறும் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.
அதனால் போட்டி முடிவில்லாமல் முடிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. அதனால் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு புள்ளியும் கிடைக்காமல் போயிற்று. உலக கோப்பை என்றாலே தென்னாப்பிரிக்காவுக்கு மட்டும் இப்படி நடப்பது துரதிர்ஷ்டவசமானது.
SOURCE;asianetnews