அங்கே லதா தனது இருக்கையில் அமர்ந்து எதோ “டைப்” செய்வதில் ஈடுபட்டிருந்தாள்.
கையெழுத்திடுவதற்காக வெள்ளிக்கிழமை பூர்த்தி செய்து வைத்திருந்த சில கடிதங்கள் மேசையில் அப்படியே கிடந்தன. அவற்றை மேலோட்டமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு கையொப்பங்களை இடுகின்றான். இன்று அனுப்ப வேண்டிய சில கடிதங்களை லதாவிடம் ‘டிக்டேட்’ பண்ணிவிட்டு டேபல் பேனை வெகு வேகமாகச் சுழற்றி விட்டான். அறை முழுவதும் தென்றல் தவழ்ந்தது. அவனிதயத்தில் மட்டும் எண்ணச் சுழற்சி,பேனின் வேகத்தையும் முந்திக் கொள்ள முற்பட்டது.
‘சுமித்ரா காலையில் போன் பண்ணுவதாகக் கூறினாளே?... ஹும்… இன்னும் காணமே…? ஒரு வேளை அவள் போன் பண்ணாமலே இருந்து விடுவாளோ?அப்படியானால்…?’ இதுவே அவனது எண்ணத்தில் சுழன்று கொண்டிருந்தது. அவனது கை, அருகேயிருந்த ‘பைல்’ ஒன்றைப் புரட்டியது. கண்கள் மாத்திரம் பைலில், ஆனால் இதமோ வேறேங்கோ!
‘டைப்’ செய்து கொண்டிருந்த லதா அவனை அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். சிலவேளை அவனது தடுமாற்றத்தை அவள் உணர்ந்து கொண்டாளோ?
இருக்காது… அவனின் மனநிலை அவளுக்கு எப்படித் தெரியப்போகின்றது? அதை எப்படியும் அவளுக்குக் காட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக வெறுமனே புரட்டிக் கொண்டிருந்த பைலை உன்னிப்பாக நோட்டம் விடுவதுபோல் பாசாங்கு செய்தான்.
அறையின் அமைதிக்குத் தடைபோட்டது டெலிபோன் அலறல்!
அதைத்தானே அவனும் வெகு நேரமாக எதிர் பார்த்துக் காத்திருக்கின்றான்.
பாலை வனத்தில் கடுந்தாகத்தினால் அல்லற்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு ஒரு குவளை நீர் கிடைத்துவிட்டால் எவ்வளவு மகிழ்ச்சியடைவானோ அவ்வாறே அவன் மகிழ்ந்து போனான்.
அபார அவசரத்தோடு - ஆனால் அதனை லதாவுக்குக் காட்டிக் கொள்ளாதவாறு ரிஸீவரை எடுத்துப் பேசினான்.
மறு முனையிலிருந்து சுமித்ராதான் பேசினாள். கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலல்லவா இருக்கின்றது அவளது குரல்.
‘ஹலோ… குமார் ஹியர்… யார் சுமியா…?’
‘யேஸ்’
‘ஆ… நானும் உன்னைத்தான் நீண்ட நேரமாக எதிர் பார்த்திருந்தேன்.’
‘….’ அவள் பேசவில்லை.
‘என்ன சுமி… இரவெல்லாம் யோசித்திருப்பாயே?... நன்றாக யோசித்தாயா…? என்ன முடிவெடுத்தாய்?’
‘நீங்க ‘வேஸ்ட் பார்க்’கிற்கு வாங்க... உங்களோடு நிறையச் பேசணும்…’ அவள் ரிசீவரை வைத்தாள். அவனது மறுமொழியை அவள் எதிர்பார்க்கவில்லை. ‘னங்’ என்று ரிசீவர் வைக்கும் சத்தம் மட்டும் கேட்டது.
சுகுமாரின் யமஹா தெப்பக்குளத்தைத் தாண்டி, ‘வேஸ்ட் பார்க்’ நோக்கி விரைந்தது!
ஓர் அபூர்வமான சந்திப்பின்போதுதான் அவன் சுமித்ராவோடு அறிமுகமானான்.
கம்பளை வர்த்தக நண்பர் ஒருவரின் பார்ட்டி ஒன்றில் கலந்துவிட்டு, வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்தான்.
வழியில் மழை…. சுகுமார் ‘சட்டர்’களை மூடிவிட்டான்.
இரவு எட்டு மணியிருக்கலாம். … அமாவாசை… கும்மிருட்டு… அடைமழை… இடி இடித்து மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது!
முன் கண்ணாடி வைப்பர் வேகமாக வேளை செய்து கொண்டிருந்தன. பாதை அவ்வளவாகத் தெரியாத அளவிற்கு நீர்த்துளிகள் மிகவேகமாகக் கண்ணடியில் படிந்துகொண்டிருந்தன. .
கார் பேராதனைப் பாலத்தைத் தாண்டியது. பாதையில் தண்ணீர் ஆறங்குலத்திற்கும் மேல் வழிந்தோடிக் கொண்டிருந்ததால்,காரை வழமைபோல் விரைவாகச் செலுத்த முடியாதிருந்தது. ‘டயர்’ பாதையோடு வழுக்கினாற்போல் சென்று கொண்டிருந்தன.
பூங்காவனம் தாண்டி ‘கெட்டம்பே’ தொடங்கியபோது அவனது பார்வை பாதையின் இடது புறத்தே ஓங்கி வளர்ந்திருந்த மரத்திற்குக் கீழாகப் பதிந்தது.
அங்கே… !
முற்றும் நனைந்த கோலத்தில் ஓர் உருவம்! அடை மழையும் காரிருளும்... உருவம் ஆணா பெண்ணா என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமற் செய்தன.
அதனைத் தாண்டி சிறிது தூரம் சென்றுவிட்ட காரை, ‘சடன் பிரேக்' போட்டு ‘ரிவர்ஸ்’ பண்ணிக் கொண்டே வந்து மரத்தடியில் நிறுத்தினான்!
ஒரு பெண் … இருபது வயதிருக்கலாம். கையில் ஒரு பைல் கட்டோடு மழையில் தனது உடம்பு, உடையோடு... நனைந்த நிலையில் நடுநடுங்கியவாறே நின்று கொண்டிருந்தாள். நெற்றிப் பொட்டு நனைந்து… அழிந்து அடையாளம் தெரியாது போயிருந்தது.
அவனது ‘சீக்கோ’ மணி எட்டுப் பதினைந்தைக் காட்டியது.
ஒரு பெண் …. காரிருள்… இடியோசை… அடை மழைக்கிடையே… அதுவும் தன்னந்தனியே இங்கே நின்று கொண்டிருப்பதென்றால்…!
பாவம்… குறிப்பிட்ட நேரத்துக்கு வரவேண்டிய பஸ்ஸைத் தவற விட்டிருப்பாள் போலும்!
காரின் கதவைத் திறந்து விட்டு, நனைந்து கிடந்த அவளை ஏறிக் கொள்ளுமாறு சைகை காட்டினான். அவளோ ஏறிக் கொள்ள முயற்சிக்கவில்லை. நனைந்தபடியே புன்னகைத்து நின்றாள்!
வேதனையிலும் ஒரு புன்னகையா? அது எப்படி அவளால் முடிந்தது…? அவனோ அவளை விடவில்லை. மேலும் நனைத்து அவளைத் துன்புறுவதை அவனது மென்மையான உள்ளம் இடந்தரவில்லை. மீண்டும் அவனே வற்புறுத்துவதுபோல் முகபாவனை செய்ததும் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அவசர அவசரமாக தனது சேலையின் முந்தானைப் பகுதியை முறுக்கிப் பிழிந்து அதிலே கிடந்த நீரை நிலத்தில் படியவிட்டுவிட்டு, காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
தனக்கு முன்னிருந்த கண்ணாடியை அவன் சரி செய்து கொண்டான்.
பிழிந்த நிலையிலிருந்த சேலைத்தலைப்பை காருக்குள் இருந்த படியே அவள் உதறிவிடும்போது… அவளது ‘புரோபைலை’க் கண்ணாடியினூடாகப் பார்த்து ஒரு கணம்… ரசித்துக் கொண்டான். உதறிவிட்ட முன்தானையால் முற்றும் நனைந்திருந்த முகத்தை அவள் ஒருமுறை துடைத்துக் கொண்டாள்.
‘எங்க போகணும்… நீங்க..?’கண்ணாடியினூடாக ஊடுருவிய அவனது கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டே ஆங்கிலத்தில் அவன் கேட்டான்.
‘அம்பிட்டி’ ஒற்றையடியில் அவள் பதில் சொன்னாள்.
‘எங்கே போயிட்டு வாறீங்க….? எப்படி இந்த நேரத்தில் மழையில் மாட்டிக் கொண்டீங்க…?” வந்து கொண்டிருந்த எண்ணெய் பவுசருக்கு வழிவிட்டவாறே அவன் கிளறினான்.
‘நான் இங்கே கம்பனி ஒன்றில் வேர்க் பண்றேன்… இன்று ஏழு மணிவரை ஓவர் டைம். அதன் பிறகு ஹோல்ட் வந்த வேளை மழை தொடங்கிடிச்சி… அந்த மரத்தடிய விட்டு அசைய முடியல…’ என்றாள் அவள்,பைல்களில் படிந்த நீரைத் தனது மெல்லிய நீண்ட விரல்களால் துடைத்து விட்டபடியே.
‘ஓ அப்படியா…?’ என்றான் அவன்... மெல்லியதொரு புன்னகையுடன்.
‘நீங்க யாரென்று சொல்லலியே…இந்த நேரத்துல உங்கட உதவிக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியல…!” என்றாள் அவள்.
கார் ‘வெம்பிலி ‘ தியேட்டரைத் தாண்டிக் கொண்டிருந்தது.
“நான் …சுகுமார்…. ஸீஏஸீயில் மனேஜராக இருக்கின்றேன்”
காரும் மணிக்கூட்டை அண்மித்தது.
‘ஓ… அப்படியா..? என்றவள், ‘என்னை அம்பிட்டிய ஹோல்ட்டில் இறக்கிவிட்டாள் போதும். பஸ் வரும் போயிடலாம்..’ என்றாள். அதற்குள் கார் ‘இம்பாலா’வைத் தாண்டிவிட்டது.
‘பரவாயில்லை… இப்பவே நல்லா நனைஞ்சிட்டீங்க…இன்னும் நனைந்தா சிரமப்பட்டுப் போயிடுவீங்க… உங்க வீட்லயே ட்ரொப் பண்ணி விட்றேன்.’ என்றவனாகக் காரை குளக்கரையினூடாக ‘வேஸ்ட் பார்க்’கையும் தாண்டி 'அம்பிட்டிய' நோக்கிச் செலுத்தினான்.
கார்அம்பிட்டிய எல்லைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில்,
‘நிறுத்துங்க… இதுதான் என் வீடு…” என்று வலது புறமாக இருந்த வீட்டைக் காட்டினாள். கார் நின்றது. மழை தூறிக் கொண்டிருந்தது. பாதையை விட்டும் சிறிது தள்ளியிருந்த அந்த வீட்டில் பிரகாசமான ‘பல்ப்’கள் எரிந்து கொண்டிருந்ததால் வீட்டை முழுமையாகப் பார்க்க முடிந்தது. வீட்டுக்குள்ளிருந்து மெல்லிய மேல்நாட்டிசை… திறந்திருந்த கார்க் கதவினூடாக அவனது காதுகளில் நுழைந்தது.
அவள் அவனை இறங்கி வருமாறு அழைத்தாள். அவன் மறுத்தான்.
“தேங்ஸ்… உங்க வீட்டைத்தான் இப்பத் தெரியுமே… இனி எப்பொழுதும் வரலாமே!” என்றவன்,
“அது சரி, உங்க பெயரைக் கூடக் கூறலியே?” என்றான்.
“ஓ… நானும் மறந்துட்டேன்…. சுமித்ரா….மிஸ் சுமித்ரா…” என்றாள்.
“ஓ வரி பியூடிபுள் நேம்… ஐ லைக் இட் ... வித் மிஸ்” என்றான் ஓரப் பார்வையோடு!
அவள் சிரித்தாள்…. கார் மறுபடியும் கண்டி நோக்கிப் பறந்தது.
இந்த சந்திப்புத்தான் அவர்களிருவரையும் சுமார் ஆறு மாதங்கள் நண்பர்களாக்கி வைத்தது. வெறும் நண்பர்களாகத்தான். அவளின் அன்பு மொழி, பழகும் பண்பு என்பன அவளது உடலழகையும் மீறி அவனது உள்ளத்தைக் கவர்ந்ததது. அதுவே கடந்த சில நாட்களாக அவளிடத்தில் ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அவனைத் தூண்டியது.
அவன் நேற்று அவளைச் சந்தித்தபோது, தன்னிதயத்தில் நீண்ட நாட்களாகத் தேக்கி வைத்திருந்த அந்த எண்ணத்தை வெளியிட்டான். அவள் மௌனமானாள். அந்த நிமிடம் வரை மகிழ்ச்சியால் பூரித்துப் போயிருந்த அவளின் முகம் திடீரென சோகமாகி விட்டதை அவன் உணர்ந்தான். அதன் பிறகு அவள் அதிகம் பேசவில்லை. அவளது கண்களிலே நீர் திரையிட்டிருந்ததை அவன் கண்டான்.
அவனது கேள்வி அவளிடத்தில் இவ்வளவு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டதா?அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. சில வேளைகளில் வெறும் நண்பர்களாகவே மாத்திரம் இருக்க விரும்பும் பெண்களைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கின்றான். இவளும் அப்படிப்பட்டவளோ? நீண்ட நேரம் வரை இருவருமே மௌனமாக இருந்தனர். முதலில் மௌத்தைக் கலைத்தது அவன்தான்.
“சுமி நீ இப்பொழுதே எனக்குப் பதில் கூறவேண்டுமென்பதல்ல. உனது வசதிப்படி நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வரலாம்.”
அவள் எழுந்து கொண்டாள். தனது உடைகளைச் சரி செய்து கொண்டவள்,கைப் பையைத் தோலில் மாட்டிக் கொண்டாள்.
“குமார் எனக்கிப்போ மனசே சரியில்லை… காலயில உங்களுக்குப் போன் பன்றன்…” என்றவள் ‘விர்’ரென்று அந்த இடத்தை விட்டும் நகர்ந்தாள்.
‘யமஹா’ வேஸ்ட் பார்க்கை அடைந்தது. கேட்டருகே ஓர் ஓரமாக அதனை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் சுகுமார். பார்க் வெறிச்சோடிக் கிடந்தது.
ஒரு தோட்டக்காரன் தூங்கி வழிந்தபடிவேண்டாவெறுப்புடன் வளரத் துடித்துக் கொண்டிருக்கும் மலர்க்கன்றுகளுக்குத் தண்ணீர்விட்டுக் கொண்டிருந்தான். பகல் உணவைச் சுமந்து கொண்டு வருபவர்கள் தின்று தீர்த்துவிட்டு வீசி எறியும் எச்சில்களுக்காக இப்போதிருந்தே காக்கைகள் அங்கு வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஒரு மூலையில் இரண்டு சொறி நாய்கள் புரண்டு கிடந்தன. இவற்றைத் தவிர அங்கே தென்றல் தவழ்ந்து சூடான காலை வெய்யிலைத் தணித்துக் கொண்டிருந்தது.
நிழல் மரங்களுக்கருகிலிருந்த மரக்குற்றியொன்றில் சுமித்ரா உட்கார்ந்திருந்தாள். சுற்றியிருந்த ஏனைய மரக்குற்றிகள் வெறுமையாகக் கிடந்தன.
ஏன் அவள் இப்படி அதிர்ந்து போய்க் காணப்படுகின்றாள்? அவனை இன்னும் காணவில்லையோ? அல்லது கண்டும் காணாதவள்போல் இருக்கின்றாளோ?
கண்டு விட்டாள்!
அவனை அப்பொழுதுதான் கண்டதுபோல் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்.
‘அவள் முகத்தில் ஏன் இந்தக் களை? வழமையான துடிப்பு அவளிடமிருந்து எங்கே போய் ஒழிந்து கொண்டது? அவளது முகத்தை சதா அலங்கரித்துக் கொண்டிருந்த ஒளிக்கதிர்கள் எங்கே? எப்பொழுதும் அவள் கண்களில் தெரிந்த காந்த சக்தி எங்கே?
நேற்றைய அவனது கேள்விதான் அவளை இப்படி ஆக்கிவிட்டதோ?
“என்ன சுமி என்னோடு கோபமா?. அதனை நான் உன்னிடம் இவ்வளவு கெதியில் கேட்டிருக்கக் கூடாதுதான். எனக்கும் வீட்டார் திருமணப் பேச்செடுத்து விட்டார்கள். அதுவுமல்லாது எவ்வளவு நாளைக்குத்தான் என் உள்ளக் கிடக்கை அடக்கி வைத்திருப்பது? நீயாக இதுபற்றிக் கதைப்பாய் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனா உனக்கு அந்த தைரியம் வரலியே? அதுதான் நானே துணிந்து வலிந்து கேட்டுவிட்டேன். என் கேள்வி உன்னைப் பாதித்திட்டுதோ? சொல் சுமி சொல்?” என்றவனாக அவளருகில் கிடந்த மரக்குற்றியொன்றில் அமர்ந்துகொள்ள முற்பட்டான்.
“ஆமாம் குமார் உங்கள் கேள்விதான் என்னை இப்படியாக்கிவிட்டது. எப்படிப் பதில் சொல்வதென்று புரியாமல் தவிக்கின்றேன். ஈரமான தன் முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே அவள் பேசினாள்.
“….” அவன் மௌனமாக உட்கார்ந்திருந்தான்.
“என் மனசு ஏற்கெனவே ஒருவரை அடைந்து விட்டது!” அவள் பொறுமையாகக் கூறினாள். ஆனால் அவன் அதிர்ந்து விட்டான். உயரத்திலிருந்து விழுந்த கல்லொன்று தன் தலையை வெகு வேகமாகத் தாக்கியதுபோலல்லவா இருந்தது!
“என்ன சுமி சொல்கின்றாய்… உன்னை …. உன் மனசை…. ஏற்கெனவே ஒருத்தருக்குக் கொடுத்திட்டயா? ஆஹ்…ஹ…ஹ்…ஹா…!” அவன் எக்களமிட்டுச் சிரித்தான். “அதை என்னால் நம்ப முடியாது… நீ பொய் சொல்றே! என்னை ஏமாற்றுவதற்காக நீ பொய் சொல்றே…! நான் நம்ப மாட்டேன்... அப்படியானால் இத நீ என்னிடம் முன்னமே சொல்லியிருக்கணுமே…!” அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு ஆச்சரியமாகக் கேட்டான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டுஅவள் மீண்டும் பேசினாள்.
“எனது சொந்தவூர் கரவெட்டி. நான் வேம்படியில் பயில்கின்றபொழுது பேனா நண்பராக என்னிடம் மலைநாட்டைச் சேர்ந்த “ஓவி” என்பவர் தொடர்பு பட்டிருந்தார். எங்களுக்குள் பல வருடங்களாக கடிதப் பரிமாறல்கள் இடம்பெற்று வந்தன. சிறுகதைகள்கவிதைகள் எழுதுவது எங்களுக்குப் பொழுது போக்காக இருந்தது. எதாவதொரு விடயத்தை மையமாகக் கொண்டு ஒரு கதையை ஆரம்பித்து கொஞ்ச தூரம் சென்று நிறுத்திவிட்டுஅதனைத் தொடரும்படி அவர் எனக்கு அனுப்பி வைப்பார். அந்தக்கதையை நான் முடித்து வைத்து அவருக்குத் திருப்பியனுப்புவேன். அவ்வாறான கதைகளை அவர் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார். பத்திரிகைகளும் நமது ‘இரட்டையர்’ ஆக்கங்களை போட்டி போட்டுக்கொண்டு பிரசுரித்து வந்தன.
இவ்வாறு கதைகள் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த வேளையில், அவர் என்னைக் காதலித்தாரோ இல்லையோ என்னை அறியாமலேயே நான் அவரை மானசிகமாகக் காதலித்தேன். யுத்தம் எங்களை விரட்டியது. திடீரென நாங்கள் எங்கள் வீட்டை விட்டும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் குடும்பத்தோடு கண்டிப் பகுதிக்கு வந்துவிட்டோம். “ஓவி”யின் முகவரியை நான் தொலைத்துவிட்டேன். நமக்குள்ளிருந்த கடிதப்போக்குவரத்து நின்றுவிட்டது.
என்னை அடையனுமுண்ணு எவ்வளவுக்கு நீங்க துடித்தீங்களோஅதைவிட அதிகம் எனது வாழ்க்கைத் துணையாக உங்களை அணைத்துக் கொள்ளணும் என்று நான் நினைத்தேன். ஆறு மாதங்களாக நீங்கள் என்னனோடு பழகியதை வைத்துப் பார்க்கின்றபோது நீங்கள் ‘ஒரு புனிதமானவர்’ என்பதை என்னால் தீர்மானிக்க முடிந்தது.
இவ்வளவு காலமும் நாங்கள் நண்பர்களாகப் பழகினோம். வெறும் நண்பர்களாகத்தான். பார்க் சினிமாகளியாட்டங்கள் என்றெல்லாம் ஒன்றாகத்தான் போனோம். அங்கெல்லாம் ஏதேதோவெல்லாம் கதைத்தோம். களித்தோம் சிரித்து மகிழ்ந்தோம்! ஆனா… இன்று வரை என் பெண்மைக்குக் கலங்கம் வரும்படி நீங்கள் நடந்து கொண்டதில்லை. கதைத்ததுமில்லை. ‘எட் லீஸ்ட்’ உங்கள் சுண்டுவிரல் கூட என்னில் பட்டதில்லை. இவ்வளவு புனிதமான ஒருவருக்கா மானசீகமாக யாரோ முகம் தெரியாத ஒருவரைக் காதலித்துவிட்ட நான், என்னைத் தரப்போகின்றேன்? குமார்! உங்கள் புனிதமான கரங்கள் தொடத்தகுதியற்றவள் நான். என்னை நீங்கள் அடையக் கூடாது… என்னை மன்னித்து மறந்து விடுங்கள்!”
அவளது கண்களிலிருந்து வடிந்த நீர்கன்னக் கதும்புகள் வழியே சென்று அவள் மடியில் விழுந்தன!
அவன் மௌனமானான். திடீரென அவன் கண்களில் ஒளிப்பிழம்பொன்று பாய்ந்தது! அவனது கைகளும் கால்களும் அவனையறியாமலேயே ‘ததிக்கனத்துவம்’ ஆடின.
பிரமிப்படைந்தவளாக அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“குமார்! என்ன இது? உங்களுக்கு என்ன நடந்துவிட்டது? ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள்?” மனதிற்குள் ஏற்பட்ட பயத்தை அடக்கிக் கொண்டு அவள் கேட்டாள்.
அவன் பேசவில்லை. ததிக்கனத்துவம்..... ஆடிக் கொண்டேயிருந்தான்.
மீண்டும் அவளே தொடர்ந்தாள்…
“குமார்…. எனக்கும் மனச்சாட்சி என்று ஒன்றிருக்கின்றது. நீங்களே சொல்லுங்கள் மனச்சாட்சியைக் கொன்றுவிட்டு என்னால் எப்படி உங்களோடு வாழ முடீயும்? எவ்வளவு காலந்தான் உங்களோடு சந்தோசமாக இருக்க முடியும்? வாழ்க்கை என்பது நித்திரையில் கண்டு விழித்துக் கொண்டதும் மறந்து போகின்ற கனவு போன்றதல்லவே? நீண்ட எமது வாழ்க்கையில் நெருஞ்சி முள்ளாக… இது எம்மிதயத்தில் உறுத்திக் கொண்டுதானே இருக்கப்போகின்றது? குமார் என்னை நீங்கள் மறந்து விடுவதுதான் சரி!” என்று கூறிவிட்டு அவள் நடையைக் கட்ட முற்பட்டாள்.
அவன் அவளைத் தடுத்து நிறுத்தினான்.
“சுமி…. நீங்கள் ‘கௌரி’ என்ற பெயரில்தானே பேனா நண்பர் தொடர்பு கொண்டிருந்தீர்கள்?”
‘கெளரி’ என்ற பெயரை அவன் சொன்னதும் அவள் திடுக்கிட்டுப் போனாள். இதுவரை யாருக்குமே தெரியாத அந்த ரகசியம் ‘கெளரி’ என்ற புனைப்பெயரில் தானிருந்த விடயம் அவனுக்கு எப்படித் தெரிந்தது? அவள் ஆச்சரியமாக அவனை உற்று நோக்கினாள்!
‘அந்த “ஓவி” நான்தான்!’ என்று அவன் மிகவும் அமைதியாகக் கூறினான்!
அவர்கள் கட்டிப் பிடித்துக் கொள்ளவில்லை - வாரியணைத்துக் கொண்டார்கள்!
( 1981 காலப்பகுதியில் எழுதப்பட்ட கற்பனை கலந்த சிறுகதை)