அரங்கேறும் ஆடம்பர திருமணங்களும் பட்டினியால் வீதிக்கு வரும் குடும்பங்களும்

அரங்கேறும் ஆடம்பர திருமணங்களும் பட்டினியால் வீதிக்கு வரும் குடும்பங்களும்

மனதை  உருக்கிய உண்மை சம்பவம் 


கடந்த 1 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி இருக்கும் புறக்கோட்டை சமங்கோட்டு பள்ளிக்கு முன்னாள் நடந்து சென்று கொண்டிருந்தேன்.

வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு தாய் சுமார் 65- 70 வயது இருக்கும் என நினைக்கிறேன். என் காதருகே வந்து "மகன் ஏதும் உதவி ஒன்று செய்து விட்டு போங்க மகன் " என அமைதியான தாழ்ந்த குரலில் வேண்டினார்

திரும்பிப் பார்த்தேன், ஒரு தாய் சுமார் 65-70 வயதை நிரம்பியவர். பக்கத்தில் இரு  ஆண்  பிள்ளைகள், 8 வயது,10 வயது இருக்கும். தாயின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர்.
உற்று நோக்கினேன். அந்த  தாயின் முகத்தில் வறுமையின் வாட்டம் தென்படவில்லை. புதுப் புடவை கட்டியிருந்தார். கையில் ஒரு ஹேண்ட் பேக் காணப்பட்டது.

பக்கத்திலிருந்த சிறுவர்களை நோக்கினேன். பெருமதியான புது உடை அணிந்திருந்தனர். அவர்களின் திடகாத்திரமான, ஆரோக்கியமான உடற் கட்டமைப்பு, இதற்கு முதல் இவர்கள் வறுமையின் கொடுமைக்கு ஆளானவர்கள் அல்ல என்பதை அறிந்து கொள்ள சில செக்கன்கள் போதுமாயின.

இவர்களின் நிலை கண்டு வியப்படைந்தேன்.  அந்த தாயை அணுகி சில விடயங்களை அறிந்து கொள்ள முற்பட்டேன்.

தாய் மீது சில கேள்விக்கு மேல் கேள்விகளை முன்வைத்தேன்.

உம்மா நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர் ?  ஏன் இங்கு வந்தீர்கள் ? யாரைத் தேடி வந்தீர்கள் ? எதற்காக வந்தீர்கள் ? இந்த சிறுவர்கள் யார் ? இப்படி வீதியோரத்தில் நின்று உங்களால் என்ன தான் சேர்க்க முடியும் ? என கேள்விகளை தொடுத்தேன்.

அப்போது அந்தத் தாய் சில விடயங்களை கூறி கண்கலங்கினார்.
 
" மகனே எனது ஊர் அம்பாறை . இந்த சிறுவர்கள் எனது பேரப்பிள்ளைகள்.  எனக்கும் இன்னும் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த இரு பிள்ளைகளுக்கும் தகப்பன்  இல்லை. இவர்களுக்கு இரு தங்கைகளும் உள்ளனர். 

தகப்பன் இல்லை. தகப்பன் இல்லாத கஷ்டம் இதுவரையில் விளங்கவில்லை. குடும்பத்தினரின் உதவி ,மற்ற இரு பெண் பிள்ளைகளின் தொழில் காரணமாக இதுவரை குடும்பம் பிரச்சினைகள் இன்றி ஓடியது .  

தற்போது நாட்டின் பிரச்சினை காரணமாக பெண் பிள்ளைகள் தொழிலை இழந்து விட்டனர். குடும்ப உதவிகள் இருந்த போதிலும் அவர்களுக்கும் தொழில் பிரச்சினை காரணமாக வருமானம் குறைந்து விட்டது. அவர்களின் நிலமையும் கவலையான நிலமையில், தற்போது அவர்களுக்கு நாமும் ஒரு சுமையாக இருப்பது போன்று விளங்குகின்றது. தொடர்ந்தும் அவர்களுக்கும் நாம் பாரமாக இருக்கக் கூடாது அல்லவா எனக் கூறினார். 

கடந்த சில நாட்களாக சிலவேளைகளில் சாப்பாட்டுக்கு கூட வசதியின்றி போய்விட்டது. 

இந்த சிறுவர்கள் பட்டினி கிடப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

ஊரில் கேட்க வெட்கமாக உள்ளது. இதற்கு முன் எனது வாழ்க்கையில் இவ்வாறாக எங்கும்  உதவிக்காக நின்றது கிடையாது. என் கணவர் என்னை நன்றாக வைத்திருந்தார்.  இவர்கள் பட்டினி கிடப்பதால்
இவர்களின் உணவுத் தேவைக்காக  ஏதும் வசதிபடைத்த மக்களிடம் சேர்த்துச் செல்வதற்காக வந்தேன். இவ்விடத்திற்கு வசதி படைத்த மக்கள் வந்து செல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அல்லாஹ் நாலு இரக்கமுள்ள மக்களை என்னிடம் அனுப்பி வைப்பான் அல்லவா என கண்கலங்க கூறினார்.

அந்தத் தாயின் கதையைக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அவர்களின் தோற்றங்களை உற்றுநோக்கும் போது இதற்க்கு முதல் அவர்கள் எங்கும் கை நீட்டியவர்கள் அல்ல என்பதை விளங்க முடிந்தது.

அந்தத் தாய்க்கு உரிய ஆறுதல்கள் கூறினேன்.

உம்மா நீங்கள் இவ்வாறு வரவேண்டாம். உங்கள் கஷ்டங்களை அல்லாஹ்விடம் முறையிட்டு பிரார்த்தனை செய்யுங்கள். அல்லாஹ்வும் உரிய உதவிகளை உங்கள் கைகளில் கொண்டு வந்து சேர்ப்பான். நீங்கள் இவ்வாறு செய்யும் போது இந்த சிறுவர்களின் வாழ்க்கை நாசமாய் விடக்கூடாது. இதைக் கண்டு நாளை சமூகத்தில் இவர்கள் கை நீட்டுபவர்களாக மாறிவிடக்கூடாது. என ஆலோசனை வழங்கி ஆறுதல் கூறினேன்.  அந்த  சிறுவர்களிடம் இந்த விடயங்களை விளங்கப்படுத்தி நன்றாக படிக்கணும் மகனே என  தலையை தடவி விட்டேன் ஒன்றும் அறியாத அந்த பிஞ்சு உள்ளங்கள் சொன்ன அறிவுரைகளை தாழ்மையுடன் உள்வாங்கி தலையை ஆட்டினார்கள். அந்த சந்தர்ப்பம் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

தான்  இரவு பஸ்ஸில் அம்பாறையில் இருந்து அதிகாலையில் கொழும்பு வந்ததாகவும். சிறுவர்களுக்கு பாடசாலை உள்ளதால்  இரவு பஸ்ஸில் அம்பாறை செல்வதாகவும்  கூறினார்.

வறிய மக்கள் ஒரு சாராரின் நிலைமை இவ்வாறு இருக்க.
வசதிபடைத்த சிலரின் நிலைமை தலைகீழாகவே காணப்படுகின்றது.
அல்லாஹ் வசதியை கொடுத்திருக்கும் சிலரின் நிலைமை சமூகத்தில் வறுமையில் வாடும் மக்களின் நிலை பற்றி எந்தக் கவலையும் இன்றியயே கழிகின்றது .

கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஆடம்பர திருமணங்கள். ஒரு திருமண விருந்திற்காக பல கோடிகள் அள்ளிக் கொட்டப்படுகின்றன. 

இன்று ஐந்து நட்சத்திர  ஹேட்டலில் ஒரு விருந்திற்காக ஒரு தலைக்கு கொடுக்கும் காசில் ஒரு சிறிய குடும்பம் உண்டு வாழலாம். இவர்களால் செலவழிக்கப்படும் பணத்தில்    மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படும் உணவு கஷ்டங்கள், வறிய மக்களின் நிலைமை தொடர்பாக எந்தக் கவலையும் இவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை.

இவ்வாறு கோலாகலமாக கொண்டாட்டத்துடன் நடந்தேறிய அஹம்பாவமான திருமணங்கள் அனைத்தும் முக்கிய உமாக்களுடன் மிக நெருக்கமான மக்களின் திருமணங்களே என்பதும் கவலைக்குறிய விடயமே .

இவ்வாறான மக்களுக்கு அச்சத்தையும் அறிவுரைகளையும் எடுத்துக்கூற சமூகத்தில் நாதியில்லை.

ஐந்து நட்சத்திர ஹேடல்களின் திருமண விருந்துகளில் கலந்து கொள்ள முடியாத சில உலமாக்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆசீர்வதித்துவிட்டு வருவதையும் அறியமுடிகின்றது.

சமூக சீர்திருத்தவாதிகளாக பூமியிலே பிறந்த  இவர்கள்,
மக்களின் முகஸ்த்துதிக்காவும், செல்வந்தர்களிடம் தங்களது  தொடர்பை தக்க வைத்துக் கொள்ள இவ்வாறு செயல்படுகிறார்களா என்பது ஒரு புரியாத விடயமாகவே உள்ளது.

இந்த விடயத்தில் சமூகத்தின் பொறுப்பாளர்கள்,  கடமைப்பட்டவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளும்போது சமூகம் திருந்துமா ?  வேலியே பயிரை மேயும் போது என்ன விளைச்சலை எதிர்பார்க்க முடியும்.

இன்று நாட்டின் நிலை மிகவும் கஷ்டமாக உள்ளது. அநேகமான மக்கள் உணவு வேலைகளை குறைத்துக் கொண்டுள்ளனர்.

கட்டுக்கடங்காத செலவின் காரணமாக பல மாணவ மாணவிகள் தமது படிப்புகளையும் இடையில் நிறுத்திக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான ஒரு நிலையில் நமது முஸ்லிம் சமூகம் ஏன் கண்மூடித்தனமாக நடந்து கொள்கின்றது என்பதுதான் புரியவில்லை.

கல்விக்காகவும் மக்களின் பட்டினிக்காவும் இன்னும் பல வேறு சமூக விடயங்களுக்காகவும் செலவு செய்யும் மக்கள் மிக மிக அற்பமாகவே காணப்படுகின்றனர்.

சமூகத்துக்காக செலவழிக்கும் பணம் படைத்த மக்கள் ஒரு சிறு வட்டம்மாகவே காணப்படுகின்றனர். தொடர்ந்தும் தொடர்ந்தும் சமூக பணிக்காக இவர்களே செலவழிக்க வேண்டியுள்ளது.

பணம் படைத்த ஒரு கூட்டம் ஏனோ தானோ, தானும் தன் குடும்பமும் என்ற நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களுடன் நெருக்கமாக பழகும் ஆன்மிகத் துறைகள் தொடர்ந்தும் மௌனமாகவே உள்ளனர்.

இவ்வாறு சமூகத்தை நிராகரித்து, சமூக கவலைகள் இன்றி வாழும் இம்மக்களுக்கு அறிவுரைகள் எடுத்து கூறப்பட வேண்டும். சமூகத்தைப் பற்றி சிந்திக்கும் மக்களாக இவர்களை மாற்ற வேண்டும்.

அல்லது கட்டுக்கடங்காத இவர்களின் இவ்வாறான வைபவங்களை சமூகம் நிராகரிக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் 

இக்காரியத்தை செய்யும் வாய்ப்பை அல்லாஹ் ஆன்மீதுறையிடம் ஒப்படைத்துள்ளான். அவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட பொறுப்பான காரியத்தை நிறைவேற்றாமல் அல்லாஹ்விடம் எந்த மீட்சியும் இல்லை.

மக்களை துரத்திக் கொண்டிருக்கும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக மக்கள் இவ்வாறு வீதிக்கு வர தலைப் படுவார்களானால் சமூகம் எங்கு செல்லும்?

சமூகத்தில் பொறுப்புக்கூற வேண்டிய  பொறுப்புதாரிகள் இவை பற்றி சிந்திப்பார்களா ?
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்

அங்கே பொன்னகை 
அணிந்த மாளிகைகள்
 
இங்குபுன்னகை
இழந்த மண்குடிசை 

சமூக நிலமை
இதுவென்றால்
வளரும் சந்ததிக்கு 
நிலமை எதுவாகும்
பேருவளை ஹில்மி

 


 


Post a Comment

Previous Post Next Post