ஐ.ஏ.ஸத்தார் கட்டுரைகள்

ஐ.ஏ.ஸத்தார் கட்டுரைகள்

செம்மைதுளியான் ஆக்கங்கள் 
CLICK 👇👇
================================================================================

இந்தியாவின் முதல் பள்ளிவாயில்!
உலகின் இரண்டாவது  ஜும்ஆ மஸ்ஜித்!
சாந்தி மார்க்கத்திற்காக முடிதுறந்த மன்னரின் நினைவுச் சின்னம்!



'சேரமான் பெருமாள் பாஸ்கர ரவி வர்மா' என்ற மன்னர் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் சேரநாட்டை "கொடுங்கல்லூரை"த் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். "முறிசி" என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்டுவந்த கொடுங்கல்லூர், கேரளாவின் பிரசித்திபெற்ற துறைமுகப்பட்டினமாகும்.

மன்னர் ஒரு நாளிரவு வானில் நிலவு இரண்டாகப் பிளந்து, மறுபடியும் ஒன்று சேர்வதைக் கண்டார்!

அரசவை  ஜோதிடர்களிடம் வினவியபோது, அவர்களிடமிருந்து சரியான விளக்கம் கிடைக்கவில்லை.

அப்போது அரபி வணிகர்கள் சிலர் இலங்கை செல்வதற்கான அரசனின் அனுமதி வேண்டி அரண்மனைக்கு வந்திருந்தனர்.


தான் கண்டது குறித்து அவர்களிடம் விசாரித்தறிய முற்பட்ட அரசருக்கு அராபியர்கள், முகம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றியும், அன்னார் நிலவைப் பிளந்த நிகழ்வு பற்றியும், இஸ்லாத்தைப் பற்றியும் தெரியப்படுத்தினர்.

அரேபிய வியாபாரிகள் கூறிய செய்திகளினால் ஈர்க்கப்பட்ட அரசர்  சேரமான் பெருமாள், இஸ்லாத்தின்  மீது பற்றுவைக்க இந்நிகழ்வே காரணமானது!


அதனால், முகம்மது நபி(ஸல்) அவர்களின் சன்னிதியை அடைந்து, அன்னாரைத் தரிசிக்க சேரமான் பெருமாள் ஆவல் மிகக்கொண்டார்.

அதன் பிறகு அவர், தனது ராஜ்ஜியத்தைப் பாகங்களாக்கி  சிற்றரசர்களிடம் கொடுத்துவிட்டு, மக்காவுக்கான தனது புனித பயணத்தை மேற்கொண்டார்.

அங்கு சென்ற அவர், சில காலம்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன்  தங்கி, இஸ்லாத்தைப் பற்றித்தெளிவுபெற்று, அதனை ஏற்றுக் கொண்டதுடன்,  தான் தனது நாடு திரும்பியதும் மற்ற அரசர்களுக்கும் இஸ்லாத்தின் மகத்தும் பற்றி விளக்கவும்
நினைத்திருந்தார்.

இந்த நல்லெண்ணத்துடன், மாலிக் பின் தீனார் (ரழி)  என்பவரின் தலைமையில் போதகர்கள் சிலரோடு அரசர் நாடு திரும்பிக் கொண்டிருந்தவேளை, ஏமன் நாட்டில் உள்ள 'ஸாபர்' துறைமுகத்தில் வைத்து நோய் வாய்ப்பட்டு, இறந்து விடுகின்றார். அவருடைய உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டுகின்றது!


பின்னர்,  தங்கள் பயணத்தைத் தொடர்ந்த மாலிக் பின் தீனார் (ரழி) அவர்களும், அவர்களது குழுவினரும்  சேரநாட்டை அடைந்து,  மன்னர் குடும்பத்தைச் சந்தித்து சேரமான் பெருமாள் இறப்பதற்கு முன்பு எழுதிய குறிப்பொன்றை மன்னரது குடும்பத்தினரிடம் கொடுத்தனர்.

அதில்  இஸ்லாத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனாருக்கு உதவுமாறும், மசூதிகளைக் கட்டுமாறும் சேரமான் பெருமாள் தங்களது குடும்பத்தாருக்குப்  பணித்திருந்தார்.

அதனை ஏற்ற மன்னர் குடும்பம், இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும், மசூதிகளைக் கட்டுவதற்கும் மாலிக் பின் தீனாருக்கு உதவியது!

அதன்பேரில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் மலபார் கடற்கரையில் பெரியாற்றின் கரையிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொடுங்கல்லூர்  நகரில்,        மாலிக் பின் தீனார் (ரழி) அவர்கள், கி.பி 629-ல் மஸ்ஜிதைக் கட்டினார்கள். இது இந்தியாவில்  முதலாவது கட்டப்பட்ட மஸ்ஜித் மட்டுமன்றி, உலகின் இரண்டாவது  ஜும்ஆ மஸ்ஜிதுமாகும்!

ஒரு மாபெரும் மதத்தை நெஞ்சிலே சுமந்து, அதன் அருஞ்சுவையை நுகர்வதற்காகத் தனது சிம்மாசனத்தைத் துறந்த ஒரு மன்னரின் நினைவுச் சின்னமாக உருவான இது,  "சேரமான் ஜும்மா மஸ்ஜித்" என்று அழைக்கப்படுகின்றது!

முகலாயரின் இந்திய வருகை கி.பி. 1206ம் ஆண்டு, நிகழ்ந்தபோதிலும்,  முகலாயர்கள் தமிழகம் மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளை ஆட்சி செய்யாத நிலையில், சேரமான் பெருமாள் அவர்களின் ஆணையின்பேரில் கி.பி. 629ல் கட்டப்பட்ட இந்த மஸ்ஜித் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கருதப்படுகின்றது!

பழ‌ங்கால தமிழர்களில் அடையாளமான கோயில் தோற்றத்திலிருக்கும் இம்மஸ்ஜித், உருவச்சிற்பம் தவிர்க்கப்பட்டு, தமிழ் மற்றும் இஸ்லாமியக் கலாசாரத்தோடு  கட்டப்பட்டுள்ளமை அபூர்வமானதாகும்.

சேரநாட்டில் கேரளாவை ஆண்ட தமிழ் மன்னரான சேரமான் பெருமாள் இஸ்லாத்தை ஏற்றதற்கு, இந்த "ஜும்ஆ மஸ்ஜித்" ஒரு  தெளிவான சான்றாகும்!

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கி.பி. 571ல்  அதாவது, "ஐயாமுல் பீல்" வருடத்தில்  பிறந்தார்கள். இஸ்லாமியப் பிரசாரம் அரேபியாவெங்கும் கி.பி. 610ம் ஆண்டு இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களாலும், நபித்தோழர்களாலும் முன்னெடுக்கப்பட்டது.

மாலிக் பின் தீனார் (ரழி) அவர்களால்கி.பி. 629ல்  கட்டப்பட்ட ஆரம்ப மஸ்ஜித், 1504ம் ஆண்டு போர்த்துக்கேயரின் படையெடுப்புக் காரணமாக சிதைவடைந்து, ப்புனர்னிர்மானம் பெற்றது. 1905ல்  மறுபடி புனர்நிர்மாணிக்கப்பட்டு,  அதன்  தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் பல இடங்களிலிருந்தும் இம்மஸ்ஜிதைத் தரிசிக்க மக்கள் வருகை அதிகரித்ததால், மஸ்ஜிதின் முன் பகுதி 1984ல்  விரிவாக்கப்பட்டுள்ளது.

மரத்தினால் வடிவமைக்கப்பட்ட  சேரமான் மஸ்ஜிதின் பழைய உருவம்,  அங்கிருக்கும்  அருங்காட்சியகத்தின் மத்தியில் வைக்கப்பட்டுள்ளது.

மஸ்ஜிதின் உட்பகுதியில் பெரிய நெய்விளக்கொன்று வைக்கப்பட்டுள்ளதுடன், ‘மிஹ்ராப்’ மற்றும் 1393 ஆண்டு காலம் பழமையான பேச்சுமேடையும், சுவரெழுத்துகளும் இன்றுவரையும் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.


 




நேர்வழி நோக்கிய வரலாற்றுப் பாதை

 



Post a Comment

Previous Post Next Post