“அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற முகமனுக்கு என்ன பொருள்?

“அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற முகமனுக்கு என்ன பொருள்?

என் கேள்விக்கென்ன பதில்?


கேள்வி: இஸ்லாமியர்கள் கூறிக்கொள்ளும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற முகமனுக்கு என்ன பொருள்? அதற்கு எவ்வாறு பதில் கூறுவது ?
(ஜி.வி. சரவணன், ஊத்தங்கரை, தமிழ்நாடு)

பதில்:-
ஸலாம் என்ற வார்த்தைக்கு அமைதி அல்லது சாந்தி என்று பொருள், அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் ‘உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தி உண்டாகட்டும்” என்று பொருள்.

நபித்தோழர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டுக்கு சென்றார். அதன்பின் “அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு” (பொருள்: உங்கள் மீது ஏக இறைவனின் அமைதியும் கருணையும் அருள்வளங்களும் உண்டாகட்டும்.) என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள்  “வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு” (தங்கள் மீதும்  ஏக இறைவனின் அமைதியும் கருணையும் அருள்வளங்களும் உண்டாகட்டும்.) என்று கூறினார்கள்
(நூல் : புகாரி)

இந்த ஸலாமை கேள்வியில் குறிப்பிடப்பட்டவாறு அஸ்ஸலாமு அலைக்கும் என்றும் கூறலாம். ஒருவர் உங்களிடம் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறினால் அவருக்கு பதிலாக “வ அலைக்கும் ஸலாம்” என்றும் கூறலாம்.

கேள்வி: இவ்வாறு சலாம் கூறுவதை முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் கூறலாமா?

பதில்: மாற்றுமத அன்பர்கள் தவறாக எடுத்துக் கொள்பவர்களாக இல்லையெனின் தாராளமாகக் கூறலாம். அது ஒரு பிரார்த்தனைதானே. இறைவன் அதை ஏற்றால் அவர்களுக்கு பயனளிக்கும் விஷயம் அல்லவா? நபி (ஸல்) அவர்கள் தெரிந்தவராக இருந்தாலும் தெரியாதவராக இருந்தாலும் சலாம் சொல்லும்படி கூறியுள்ளார்கள். அறிமுகம் இல்லாதவர் என்கிற போது அவர் முஸ்லிமாகவும் இருக்கலாம் முஸ்லிம் அல்லாதவராகவும் இருக்கலாம். இதனடிப்படையில் மாற்றார்களுக்கு சலாம் கூறுவதில் தவறே இல்லை.

= நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “பசித்தவருக்கு உணவளிப்பதும் உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.
(நூல் : புகாரி)

= மேலும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிற மத மக்களும், முஸ்லிம்களும் கூடியிருந்த ஒரு சபைக்கு வந்தபோது அனைவருக்கும் சேர்த்து சலாம் கூறியுள்ளார்கள். புகாரியில் இடம்பெற்றுள்ள நீண்ட ஹதீஸில் இக்கருத்து இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி) (நூல்:  புகாரி)

 கேள்வி: தமிழர்களாகிய முஸ்லிம்களும் கூட ஏன் தங்களுக்குள் அரபுமொழி முகமனை சொல்லிக் கொள்கிறார்கள்? ஏன் வணக்கம் என்ற தமிழ்ச் சொல்லை பயன்படுத்தக்கூடாது?
(எம். சக்திவேல், கிருஷ்ணகிரி)

அருமையான கேள்வி. இதுபற்றிய தெளிவு பல தவறான புரிதல்களை அகற்றும் – (இறைவன் நாடினால்)

= ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதருக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து ஆகும். அவை,

1. ஸலாமிற்கு பதிலுரைப்பது

2.நோயாளியை நலம் விசாரிப்பது,

3. இறந்தவரின் பிரேதத்தை பின்தொடர்வது  4.விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது,

5. தும்முபவர் அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே)  என்று கூறினால் அவருக்கு யர்ஹமுக்கல்லாஹ் (இறைவன் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது ஆகியவையாகும் என இறைத் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி)

ஆக, இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் பரஸ்பரம் முகமன் கூறிக் கொள்வது கடமையாக வலியுறுத்தப்பட்ட ஒன்று. இருப்பதில் சிறந்த முகமன் எது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அது சலாமுக்கே வந்து நிற்கும்.

"அஸ்ஸலாமு அலைக்கும்!" என்று சொல்வது ஒரு அழகிய பிரார்த்தனையாகும். "இறைவனின் சாந்தி உங்கள்மீது நிலவட்டுமாக!" என்பது இதன் பொருள்.

பொதுவாக மக்களிடையே புழங்கும் மற்ற வாழ்த்துக்களை அல்லது முகமன்களை ஒப்பீடு செய்யும்போது இதன் அருமை புரியும்.

முக்கியமாக, இது ஒரு வெற்று வார்த்தை கிடையாது. இது ஒரு முகமனாக சொல்லப்பட்டாலும், “இறைவன்பாலிருந்து உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று நான் மனதார பிரார்த்திக்கிறேன்” என்ற கருத்தை வெளிப்படுத்தும் சொற்றொடர். இதைச் சொல்பவரும் இதற்கு பதில் சொல்பவரும் மனதார இந்த முகமனைப் பரிமாறிக் கொண்டால் அது இறைவனால் ஏற்கப்பட்ட ஒரு பிரார்த்தனையாக ஆகிவிட்டால் அதற்கு இணையான செல்வம் ஏதுமுண்டா?

இது தமிழில் இல்லையே என்று சிலர் கவலைப் படலாம். இஸ்லாம் இன, நிற, மொழி, இட வேற்றுமைகளைத் தாண்டி அனைத்துலக அல்லது அனைத்து மனிதகுல சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. அந்த வகையில் இது அனைத்து நாட்டு, மொழி, இன மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக இந்த முகமன் விளங்குவதை நீங்கள் காணலாம்.

வணக்கம் போன்ற முகமன்கள் மனிதனை மனிதன் வணங்கும் நிலையை பிரதிபலிக்கின்றது. ‘வணக்கத்துக்குரியவன் இறைவன் மட்டுமே என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை. படைத்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களையோ, மதகுருமார்களையோ, இறந்த மனிதர்களையோ, இறைத் தூதர்களையோ கூட வணங்குவது பெரும் பாவம் என்று கற்பிக்கிறது இஸ்லாம். மனிதன் மனிதனை வணங்குவதும், சிரவணக்கம் செய்வதும் காலில் விழுவதும் ஏன், மனிதனுக்கு மனிதன் மரியாதை நிமித்தம் எழுந்து நிற்பதையும் கூட இஸ்லாம் தடை செய்கிறது. இறைத் தூதர் இவற்றை தடை செய்துள்ளார்கள் என்பதை ஹதீஸ் நூல்களில் காணலாம். மட்டுமல்ல  பொருளாதாரத்தில் அல்லது வேறு வகையில் தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்களுக்கு கட்டாயம் செய்தாக வேண்டிய ஒன்று என்பதாலும் இவ்வழக்கம் மனிதன் மனிதனுக்கு காலில் விழுந்த வணங்குதல் போன்றவற்றுக்கு இட்டுச்செல்வதாலும் மனிதனின் சுயமரியாதைக்கு இழுக்கு என்பதாலும் இது இஸ்லாமியர்களால் தவிர்க்கப் படுகிறது.

மற்றபடி புழக்கங்களில் உள்ள குட் மார்னிங், குட் நைட்,  இவையெல்லாம் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் சொல்ல முடியாதவை. துக்கத்தில் அல்லது கவலையில் இருப்போரிடம் எல்லாம் குட் மார்னிங், குட் நைட் என்று சொல்ல முடியாது. ஆனால்  ஸலாமை எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் சந்தோஷமாக இருப்பவர்களிடத்திலும் ,துக்கமாக இருப்பவர்களிடத்திலும் சொல்ல முடியும். உதாரணமாக, சாவு வீட்டிலும், திருமண வீட்டிலும் வியாபாரம் மற்றும் தொழில் நடக்கும் இடங்களிலும் கல்விக் கூடங்களிலும் யாரும் யாருக்கும் சலாம் கூறலாம். எனவே ஸலாம் என்பது எல்லா இடங்களிலும் சொல்வதற்கு உரிய அழகிய பிரார்த்தனை ஆகும்.

'உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ, அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! இறைவன் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன்  4:86)
thiruqurannarcheydhimalar


 


Post a Comment

Previous Post Next Post