இன்று கல்ஹின்னையில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விடயமென்றால் அது கல்ஹின்னை பள்ளி நிர்வாக சபை தெரிவைப்பற்றித்தான்.
திரும்புகின்ற பக்கமெல்லாம் இதே கதைதான் .
இந்த நிர்வாகசபை தேர்வு கல்ஹின்னையில் ஒற்றுமையை சீர்குலைந்து விடுமோ என்ற அச்சமும் நிலவுகின்றது.
பதவி மோகம் எப்படி கல்ஹின்னை பாடசாலையை சின்னாபின்னப் படுத்தியதோ அதே நிலைமை அல்லாஹ்வின் மாளிகைக்கும் வந்துவிடக்கூடாது.
ஒற்றுமையில்லாத ஒரு சமூகம் உருக்குலைந்து போகும்.
ஒற்றுமை எனப்படுவது இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களிற்கும் அவசி்யமான ஒன்றாகும். ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தார்கள்.
கூட்டமாக வாழ்ந்து வருதல் அவர்களிற்கு பாதுகாப்பைத் தந்ததோடு, குழுவாக வேட்டையாடி அதன் மூலம் கிடைக்கின்ற உணவை பகிர்ந்துண்டு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.
இதனையே முன்னோர்கள் “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” என்று குறிப்பிட்டு ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தியுள்ளனர்.
மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாக வாழ்தலை விரும்புவதோடு, அவை பெரும்பாலும் கூட்டாகவே வாழ்கின்றன.
இவ்வாறு விலங்குகளும் பறவைகளும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து கூட்டாகச் செயற்படுகின்றன!!!!
ஆனால்....
குறிப்பாக கல்ஹின்னையில் ஏதேனும் ஒரு காரியம், நடாத்தப்படப் போவதாக இருந்தால் ஒற்றுமை சீர்குலையும் நிலைக்கு ஆளாகின்றனர் ஏன் ?
1)நான்தான் என்கின்ற அகம்பாவம்
2)பொது அறிவில்லாத ,சிந்திக்கும் திறன் இல்லாமை
இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு சிறு கதை சொல்லுகின்றேன் .
ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
பொதுப்பணிகள் என்று வரும்போது இளையவன் முன்னின்று செய்வான்.
மக்களுக்கு தேவையான பல உதவிகளையும் செய்து வந்தான் .தனிப்பட்ட முறையிலும் அரசியல் ஆதரவுடனும் ஊர் மக்களுக்கு உதவுதால் அந்த ஊர் மக்கள் அவனிடம் மிகவும் அன்பாகவும் ,ஆதரவாகவும் இருந்தார்கள்.மக்களிடையே இளையவனுக்கு மிகுந்த ஆதரவு இருந்தது.
போகின்ற இடமெல்லாம் இளையவனுக்கு இருக்கின்ற மக்கள் ஆதரவைப்பார்த்து மூத்தவனுக்கு சற்று பொறாமையாக இருந்தது.
அனைத்து விஷேஷங்களுக்கும் இவனை மட்டும் மக்கள் ஏன் அழைக்கின்றார்கள் என்ற பொறாமை அவனுள் தோன்ற ஆரம்பித்தது.
இப்படியே போனால் ஊரில் எவனும் என்னை மதிக்க மாட்டார்கள்.ஆகவே இளையவன் போகின்ற இடமெல்லாம் செல்லவேண்டும் .இளையவனைப் போன்று புகழ்பெற வேண்டும் அவனுடைய செயல்களை தானும் பின்பற்றவேண்டும் என்று மனதில் எரிந்துகொண்டிருந்தான் மூத்தவன்.
சந்தர்ப்பத்தை எதிர்பார்துக்கொண்டிருந்தவனுக்கு நல்லதொரு செய்தி கிடைத்தது.
ஊரில் முக்கியமான ஒரு நபரின் தாயார் இறந்த செய்தி கிடைத்தவுடன் மகிழ்ந்தான் .அங்கு இளையவனையும் அழைத்துக்கொண்டு போகலாம் .இது நல்லதொரு சந்தர்ப்பம்.அங்குள்ள மக்களோடு எப்படி நடந்துகொள்கின்றான்,எப்படிப் பேசுகின்றான் போன்றவற்றை அவதானிக்கலாம் என்றெண்ணி இளையவனோடு சென்றான்.
அங்கு சென்றவுடன் இறந்த தாயாரின் மகனைக் கட்டிப்பிடித்து 'உங்கள் தாயார் உங்களுக்கு மட்டும் தாயல்ல .இந்த ஊருக்கே ஒரு தாயாக இருந்துள்ளார் ."என்று இளையவன் ஆறுதல் சொல்வதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் மூத்தவன்.
ஆஹா...இப்படியெல்லாம் வசனம் பேசித்தான் இந்த மக்களின் ஆதரவை பெற்றாயா..?
அதற்குப்பிறகு அந்த ஊரில் ஒரு மாதத்தில் மீண்டும் ஒரு மரணம்...
தெரிந்தவரின் மனைவி என்பதால் இளையவனையும் அழைத்துச் சென்றான்.
இந்த முறை முதலில் சென்று இறந்த பெண்ணின் கணவனை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லவேண்டும் .என்று மனதில் நினைத்துக்கொண்டான் .
அதன்படி அங்கு சென்றவுடன் அந்தப் பெண்ணின் கணவனை கட்டிப்பிடித்து'கவலைப்படவேண்டாம் ...உங்கள் மனைவி இந்த ஊரில் அத்தனைபேருக்கும் மனைவியாக இருந்தவர்தான் .என்ன செய்ய இப்படியாகிவிட்டதே..?"என்று அறுதல் வார்த்தைகளை சொன்னவனின் கன்னத்தில் பளாரென அடி விழுந்தது.
இந்தக் கதை இன்றைய கல்ஹின்னையின் சூழ்நிலைக்குப் பொருந்தும் என்று நினைக்கின்றேன்.
இன்று எமதூரில் புகழுக்காக பல வழிகளிலும் முயற்சி செய்கின்றவர்களுக்கு இது பொருந்தும்.
பள்ளி நிர்வாகசபைக்குள் நுழைந்து பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு ஒவ்வொருவரும் வெவ்வேறு தந்திரங்களை செய்து எப்படியாவது அதிகாரத்தை பெறவேண்டும் என்று முயற்சி செய்கின்றார்கள் .
இவர்கள் முதலில் இவர்களுக்கு அந்தத் தகுதி இருக்கின்றதா என்று சற்று சிந்திக்கவேண்டும்.படிப்பு மட்டும் இந்தப்பதவிக்கு முக்கியமில்லை .பண்புகள் மிகவும் முக்கியம் .ஊர் மக்களை அரவணைத்துச் செல்லும் பண்பு வேண்டும் .தைரியம் வேண்டும் .எதற்கும் துணிந்து முடிவெடுக்கும் வீரம் வேண்டும் .இப்படிப்பட்டவர்கள் நிர்வாக சபை தலைவராக வரலாம் .
அத்தோடு நிர்வாக சபை தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வெறுமனே வாய்ப்பேச்சில் மட்டுமில்லாமல் ,அந்தப் பதவிக்கு ஒரு விண்ணப்பத்தை தயார் பண்ணி கட்டணமாக ஒரு லட்சம் பணம் அறவிட்டால் பள்ளிவாயிளின் புனரமைப்புத் தேவைகளுக்காவது உதவும் என்று நினைக்கின்றேன்.
பதவிக்காக அலைகின்றவர்கள்,தங்களைப் பற்றிய சுய விபரங்களையும் கொஞ்சம் பணத்தையும் ஊர் மக்களின் முன் சமர்ப்பித்தால் நன்றாயிருக்கும் என்று நினைக்கின்றேன் .
ஒற்றுமையாக உருப்படியான நிர்வாகசபையை தெரிவு செய்யவேண்டும்.குடும்பம் கோத்திரம் என்று பார்க்காமல் தகுதியானவர்களை நியமிக்கவும்.
கோமணத்தை கொழும்பில் வாங்கினாலும் ஊர் குளத்தில்தான் கட்டி குளிக்க வேண்டும்.
எம்.எம்.பாரூக்(WC)
கல்ஹின்னை
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்