"நான் இவ்வுலகில் ஏன் பிறந்தேன்?" ஒவ்வொருவர் மனதிலும் எழுகின்ற கேள்வி இது!
நான் பிறந்து விட்டேன். இனிமேல் பிறக்கப்போவதில்லை. ஆனால் இறக்கப்போவது நிச்சயம்!
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலுள்ள பாகமே 'வாழ்க்கை'.
வாழ்க்கையை வாழ்வதும்... அதில் வெற்றி பெறுவதுமே மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள சவாலாகும்!
மனிதன் பிறந்தது மனித இனத்திற்கு ஊழியம் செய்வதற்கே!
மனித இனத்திற்கு சேவை செய்வதற்கு மனிதனுக்கு 'மனம்' வேண்டும்! மனமே எல்லாவித வெற்றிகளையும், மனிதனுக்குப் பெற்றுக்கொடுக்கும் அமுதசுரபியாகும்.
தன்னம்பிக்கை, தைரியம், தளரா முயற்சி என்பவற்றை மனிதனுக்கு அளித்து, வாழ்க்கைப்போரில் அவனை வெற்றி காணச்செய்வது இந்த 'மனம்'தான்.
வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பும் ஒருவன் முதலில் இறைவனையும், இரண்டாவது தன்னையும் நம்பி, தளரா முயற்சியுடனும், தைரியமாகவும் முன்செல்ல வேண்டும்.
"அல்லாஹ்வே நமது இரட்சகன்; அவனே நமக்கு வழிகாட்டி; நாம் அடையும் வெற்றி அவன் நமக்குத்தந்தது; அதனால் ஏற்படும் பெருமைக்கும், புகழுக்குமுரியவன் அவனன்றி நாமல்ல" என்ற எண்ணம் மனிதனிடத்தில் வேரூன்ற வேண்டும். ஏனென்றால், திறமைசாலிகள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டவர்கள், பின்னொரு காலத்தில் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று கருதப்படுவதில்லையா?
அல்லாஹ் வெற்றியையும், தோல்வியையும் மனிதனுக்குக் கொடுத்து, அவனை சோதனை செய்கின்றான்.
வெற்றியின் போதும் அவனைச் சோதனை செய்கின்றான்; அவனது தோல்வியிலும் சோதனை செய்கின்றான்.
வெற்றிக்குப் பின்னர் அவனுக்கு வரும் கர்வத்தையும், தோல்விக்குப் பின்னர் அவன் துவண்டு விடுவதையும் அல்லாஹ் பார்க்காமலில்லை!
இங்கே வெற்றி, தோல்விகளின்போது அவனின் மனநிலையே கவனிக்கப்படுகின்றது!
வெற்றிக்குப்பின்னர் வரும் கர்வத்தை அல்லாஹ் ஒருபோதும் விரும்புவதில்லை! அதேபோல் தோல்வியின்போது, மனிதன் துவண்டுவிடாமல், பொறுமைகாப்பதை அல்லாஹ் வெகுவாக விரும்புகின்றான். அதனால்தான் மனித வாழ்க்கையில் 'மனம்' என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது!
-செம்மைத்துளியான்.
Tags:
ஐ.ஏ.ஸத்தார்