எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த ஆசிரியர் மர்ஹூமா ஹலீமதுஸ் ஸஹ்தியா

எனக்குப் பிடித்த, என்னைப் பிடித்த ஆசிரியர் மர்ஹூமா ஹலீமதுஸ் ஸஹ்தியா

இன்றும் கூட இவரை நினைத்த மாத்திரத்தில் என் ஆசிரியரின் உற்சாகமான வார்த்தைகளின் சத்தங்கள் மௌன கீதமாக என் காதுகளில்     ஒலிக்கும்.

இந்த மண்னை விட்டு மறைந்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டாலும் இழப்பின் ஈரம் இன்னும் காயவே இல்லை.

எனக்கு பிடித்த,  என்னைப் பிடித்த ஆசிரியர் மர்ஹூமா ஹலீமதுஸ் ஸஹ்தியா

1955இல் முஹம்மது ஹாஸீம், ஆஷியா உம்மா தம்பதிகளுக்கு மகளாக மாவனல்ல உயன்வத்தையில் பிறந்தார்.

சிறந்த கல்விப் பின்னணி உடைய குடும்பத்தில் பிறந்த இவர் தனது பாடசாலை கல்வியை முடித்து 1983இல் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் புவியியல் சிறப்பு பட்டதாரியாக வெளியேறினார்.

1985 இல் ஆசிரியராக புளுகொஹதென்ன ஸாஹிரா மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெற்றார்.

2006ஆம் ஆண்டு இலங்கை ஆசிரிய சேவையில் முதலாம் தரத்திற்கு தரமுயர்த்தப்பட்ட இவர்,    1997ஆம் ஆண்டு தனது கல்வியியல் முதுகலை டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்தார்.

இவர் தனது சேவைக் காலத்தில் வலய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் சிறந்த ஆசிரியருக்கான சான்றிதழ்களைப் பெற்றுள்ளதுடன், க.பொ.த சாதாரன தர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் புவியியல்.தமிழ் மொழி, சமூகக் கல்வி போன்ற பாடங்களில 100% சித்தியைப் பெற்றதற்காக உலக ஆசிரியர் தின விழாக்களில் 2001,2003,2004,2007,2008 ஆம் வருடங்களில் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

கல்ஹின்னை உப தபால் அதிபராக கடமையாற்றிய மர்ஹூம் M.C.M.ஷஹாப்தீன் தம்பதிகளின் மகனான எஸ். எம். இம்தியாஸ் அவர்களை மணந்தார்.அவர்கள் இல்லறத்தில் ஐந்து மலர்கள் மலர்ந்து மணம் வீசின.

1986 இல் கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலைக்கு இடமாற்றலாகி வந்தது முதல் மரணிக்கும் வரை அல் மனாரை தனது வாழ்வின்  ஒரு பாகமாகவே மனதில் கொண்டு வாழ்ந்தார். 

நான் ஒரு தமிழ் கற்பிக்கும் ஆசிரியையாக, அதன் பின் இன்று ஒரு அதிபராக இருப்பதற்கு இவரின் வழிகாட்டலும், ஆலோசனைகளும் மிகப் பெரும் உந்து சக்தியாக இருந்து என்பதை மிகவும் நன்றியுடன் இப்பொழுதும் நினைவு கூறுகிறேன். 

கல்வித் துறையில் நீண்ட அனுபவத்தைக் கொண்ட இவர் கடமையில் இருக்கும் அதிபர்களுடன் மிகவும் நல்லுறவைப் பேணி தனது கடமைகளைச் செய்வதனால் அதிபர்களும் இவரது ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். பிரதி அதிபராகவும் கடமையாற்றிய இவர் நிர்வாக விடயங்களிலும், மாணவர்களின் ஒழுக்க மேம்பாட்டின் வளர்ச்சிக்கும் மிகுந்த பங்களிப்பினைச் செலுத்தினார்.

மாணவர்களின் திறமையையும் அவர்களது ஆளுமையையும் வளர்க்கும் பாடத்திட்டத்திற்கு மேலதிகமான செயல்பாடுகளான தமிழ் மொழித் தின விழா, மீலாத் விழா , மற்றும் போட்டி களுக்கு மாணவர்களைத் தயார் படுத்தி பாடசாலை, வலய, மாகாண மட்டத்தில் மட்டுமன்றி தேசிய மட்டத்திலும் பல்வேறு பரிசில்களையும், கேடயங்களையும் பெற்று பாடசாலையின் பெருமையையும், கௌரவத்தையம் உயர்த்துவதற்கு இவர் ஆற்றிய பணி மறக்க இயலாதது.

அவர் வழிகாட்டலில் உயர்ந்த மாணவர்கள் பல நூறு. இலை மறை காயாய் இருந்த எத்தனையோ மாணவர்களின் திறமைகளை உலகறியச் செய்த ஒரு சிறந்த ஆசிரியராக வாழ்ந்தவர். தொழிலாக இல்லாமல் ஆசிரியப் பணியை ஒரு பெரும் சமூக சேவையாகவே கருதி வாழ்ந்தவர் இவர். ஓய்வு பெறும் நாள் வரை புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியரைப் போன்ற இளமைத் துடிப்புடன் ஆர்வமும் ஆசையும் கொண்டவராகவே தனது கடமைகளை ஆற்றினார். சமூகத்திற்கான அவரின் பணி அளப்பரியது.கற்பிக்கும் பாடங்களுக்கு அப்பால் மாணவர்களின் தனித் திறமைகளை இனங்கண்டு அவற்றை வளர்த்து சமூகத்திற்கு பயனளிக்கும் நற் பிரஜைகளாக அவர்களை உருவாக்குவதில் இவர் காட்டிய ஆர்வம் ஏனைய ஆசிரியர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

அவர் மறைந்தாலும் அவரின் வழிகாட்டலில் உயர்ந்து வாழும் மாணவ மனங்களில் அவர் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

அல்லாஹ் அவருக்கு நற்சுவனத்தை வழங்குவானாக என்பதே இவரிடம் கல்வி பயின்ற அனைத்து மாணவர்களினதும் பிரார்த்தனையாகும்.

திருமதி. சிபானா சனூன்
அதிபர்
ஹிஜ்ரா முஸ்லிம் மகா வித்தியாலயம்
தம்பதெனிய


 


Post a Comment

Previous Post Next Post