முஹம்மத் அலிபாவாவும் மூஸாமுனையின் வரலாறும்

முஹம்மத் அலிபாவாவும் மூஸாமுனையின் வரலாறும்



ஹாரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் பழம்பெரும் இஸ்லாமியக் கிராமமான கல்ஹின்னை - ஹல்கொல்லை, மிஹிரிஎல, பட்டகொள்ளாதெனிய, பூதல்கஹ, தென்னை(கோவில முந்தின), அசதுமலை, செட்டித்தோட்டம், பெபிலகொல்லை, கட்டாப்பு, பள்ளியக்கொட்டுவ ஆகிய சிற்றூர்கள் உள்வாங்கப்பட்டுள்ள விசாலமான குடியிருப்புப் பகுதியாகும்.

1881ம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி முழு இலங்கையிலும் 1,85,000 முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ள நிலையில், கண்டி மாவட்டத்தில்  மட்டும் 12,628 பேர் வாழ்ந்துள்ளனர். இக்காலப்பகுதியில் கல்ஹின்னையில் வாழ்ந்தவகள் 80 பேர்கள் மட்டுமே.

அக்குரணை - மல்வானஹின்னை கிராமத்தில் வாழ்ந்த  அரேபிய வர்த்தக வம்சாவளியில் தோன்றிய  உமறு மரிக்கார் அடப்பனாரின் குடும்பத்தவர்களே இங்கு முதலாவது குடியேறியோராவர். அவரின் குடும்பத்தைத் தொடர்ந்து  மாத்தளை, உள்பத்தப்பிட்டிய முஹாந்திரம் ஆதம் பிள்ளையின் குடும்பத்தவர்கள் குடியேறியுள்ளனர்.

முஹாந்திரம், அடப்பேலாகெதர, கம்மஹலேகெதர, வைத்தியர்லாகெதர என்ற அடைமொழி கொண்டழைக்கப்படும் குடும்பத்தவர்களின் சந்ததியினரே இன்று கல்ஹின்னையில் வாழ்ந்து வருகின்றனர்.

முஹம்மத் அலிபாவா

இன்றைய “மூஸாமுனை” என்றழைக்கப் படும், முஹம்மத் அலிபாவா என்பவருக்குச் சொந்தமான பெரும் நிலப்பகுதி, அன்னாரின் மகனான ஹபீபு முஹம்மது லெப்பை அவர்களுக்கு வழங்கப்பட்டதால், ஹபீபு முஹம்மது லெப்பை அவர்கள், கல்ஹின்னை யில் ஒரு பெரும் நிலச்சுவாந்தராக வாழ்ந்திருக்கின்றார்.

அன்னாருக்குச் சொந்தமான நிலங்கள் பல “பணியாரப் பெட்டி”க்காகத் தானம் செய்யப் பட்டுள்ளதாக செவிவழிச் செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.

முஹம்மது அலிபாவா அவர்களின் மகனான ஹபீபு முஹம்மது லெப்பை, தனது மகள்  ஸல்ஹா பீபியை, ஹபீபு முஹம்மது என்பவருக்கு மணமுடித்து வைத்துள்ளார். “மூஸாமுனை” என்ற இடப்பெயர்  இவரை அடிப்படையாகக் கொண்டே உருவானது.1967க்கு முன்னர் இவ்விடம் “பள்ளியகொடுவ” என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளது!

ஹபீபு முஹம்மது லெப்பை அவர்களின் சந்ததியினர்களின் பெயர்களுக்கு முன்னால் “வைத்தியர்லாகெதர” என்ற அடைமொழி அண்மைக்காலம் வரை பாவனையில் இருந்துள்ளது! 1966ம் ஆண்டுவரை எழுதப் பட்டுள்ள நிலவுரிமைப் பத்திரங்கள், உறுதிகள், அறிமுக அட்டைகள், பயணச்சீட்டுக்கள் போன்றவற்றில் அநேகர்களது பெயர்களுக்கு முன்னால் இவ்வடைமொழி பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அரசர்கள் காலமுதல், இலங்கையில் எப்பாகத்திலேனும் அரசர்களுக்கு வைத்தியம் பார்க்கும் பரம்பரையில் வந்தவர்கள் “வைத்தியர்லாகெதர” என்ற அடைமொழி கொண்டு அழைக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்கள் அரசனின் மதிப்புக்கும்,  மரியாதைக்கும் உரியோராகக் கணிக்கப்பட்டு வந்துள்ளதோடு, பட்டயத்தின் மூலம் அவர்களுக்கு நிலங்களும்  வழங்கப்பட்டு வந்துள்ளமை  வரலாறாகும்!

குறிப்பிட்ட கல்ஹின்னை பற்றிய வரலாற்று நூலில் தற்பொழுது பள்ளிவாசல் அமைந்திருக்கும் பகுதியின் தென் பகுதி, மேற்குப் பகுதியில் தோரயாய குடும்பத்தினர் வாழ்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வாப்புக்கண்டுவின் பேரன்கள் தவிர, மகன்மார்கள் பற்றிய எந்தக் குறிப்பும் அங்கு காணப்படவில்லை. அதனால், வாப்புக்கண்டுவுக்கு பெண்பிள்ளைகளே  இருந்திருக்கலாம்; அவர்கள் உள்பத்துப்பிட்டிய, அக்குரணை, பரகஹதெனிய, தோரயாய போன்ற இடங்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப் பட்டிருக்கலாம். அவர்கள் வழி வந்தவர்களே பேரன்களாகக் கொள்ளப்பட வாய்ப்புண்டு! 
அதுமட்டுமன்றி, நாகூரிலிருந்து வந்த அப்துல் ஜப்பார் என்பவர் வாப்புக்கண்டுவின் மகள்களில் ஒருவரை மணந்துள்ளதாகவும், இவர் 'சாவன்னா முதலாளி'யின் பாட்டனார் என்றும் வரலாற்று நூல் குறிப்பிடுவதனால், இவர் முகம்மது அலி பாவாவின்  சகோதரர் என்று கூட ஊகிக்க முடிகின்றது!

மஸ்ஜித் நிலவுறுதி தேடி...
கிடைக்கப்பெற்ற தகவல்களிலிருந்து 1864 முதல் ஓலைக் கொட்டிலாக இருந்து, 1923ம் ஆண்டு கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்ட கல்ஹின்னை ஜும்ஆ மஸ்ஜித், முகம்மது அலிபாபாவினதோ, வைத்தியர் ஸுபைர் அவர்களின் பாட்டனாரினதோ அல்லது இந்த இருவரினதுமோ  நிலத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்வதற்கு, மிக அண்மைக்காலத்தில்  மஸ்ஜித் "நிலவுறுதி" தேடி, செய்யது முஹம்மது லெப்பை மற்றும் வைத்தியர் ஸுபைர் குடும்பத்தினரிடம் சில பல குழுக்கள் சென்றுவந்ததைக் குறிப்பிடலாம். அக்காலை மஸ்ஜித் நிர்மாணிப்பதற்காக உடைத் தெடுக்கப்பட்ட கருங்கற்களும்   ஹபீபு முஹம்மது லெப்பை அவர்கள் தனது மகளான ஸல்ஹா உம்மா அவர்களுக்கு வழங்கப்பட்ட  நிலத்திலிருந்தே பெறப்பட்டிருக்கின்றது! கருங்கற்கள் பெறப்பட்ட அந்நிலத்தில், இன்று பூஜாபிட்டிய பிரதேச சபையில் அங்கத்துவம் வகிக்கும் உவைஸ் ரஸானின் வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

செட்டித்தோட்டம்

கல்ஹின்னையில் உள்வாங்கப்பட்டுள்ள சிற்றூர்களுள் 'செட்டித்தோட்டம்' மற்றும்  'பள்ளியக்கொட்டுவ' என்பன, மன்னராட்சி நிலவிய காலப்பகுதியில், 'செட்டியார்' ஒருவருக்குச் சொந்தமாக இருந்திருக்கின்றது.  இவர் இந்திய வம்சாவளி சார்ந்தவர் என்றும்,  பட்டயத்தின் மூலம்  இந்நிலப்பகுதிகள் இவரை அடைந்திருக்கலாம் என்றும் செவிவழிச்  செய்திகள் பேசப்படுகின்றன.

பள்ளியக்கொட்டுவப் பிரதேசத்தை அக்காலத்துப் பெரும் செல்வந்தராக விளங்கிய முஹம்மத் அலிபாவாவும், செட்டித்தோட்டத்தை இன்னொரு தனவந்தரும் வாங்கியுள்ளதாக அறிய முடிகின்றது. 

கட்டாப்பு, அலவத்தை, மூக்குலாந்தெனிய  ஆகிய  இடங்கள் செட்டித்தோட்டத்தின் எல்லைகளாகும்.  இந்நிலப்பகுதி  செட்டியாருக்குச் சொந்தமானதாக   இருந்தமையால், இது 'செட்டித்தோட்டம்' என்றழைக்கப்பட்டு வந்துள்ளது!

செட்டித்தோட்டத்தில், செட்டியார்  நிர்மாணித்த 'வழிபாட்டுத்தளம்'  ஒன்று கூட இருந்திருந்ததாகவும், அனேகமாக அது பெரியகல்லின்  கீழ்நிலப்பகுதியில் இருந்திருக்கலாம் என்றும் ஹேஷ்யம் கூறப்படுகின்றது!

ஐம்பது வருடங்களுக்கு முன்னர், விறகு திரட்டி வருவதற்காக மூஸாமுனை, கட்டாப்பு போன்ற சிற்றூர்ப் பெண்கள் பெரியகல்லின் கீழ்நிலப்பக்குதியினூடாக 'இருணூரேக்கர்' வரை சென்று வருவது வழக்கமாக இருந்து வந்தது.

அவ்வாறு சென்ற பெண்களிலொருவர் பெரிய கல்லின் அடிவாரத்தில் விறகு திரட்டிக் கொண்டிருந்த வேளை, பாம்பொன்றைத் தாக்கியதும், அது தீண்டியதால் மயக்கமடைந்துவிட்டார். விறகு திரட்டச்சென்ற ஏனையவர்கள் ஒன்றிணைந்து அப்பெண்ணைத் தூக்கிச் சென்று வீட்டில் சேர்த்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏழு  நாட்களாக அந்த வீட்டை நாடி பாம்புகள் வந்துள்ளன. இது அந்த இடத்தில் அமைந்திருந்து சிதைந்துபோன செட்டியாரின் வழிபாட்டுத்தளத்திலிருந்து வந்த பாம்புகளாக  இருக்கலாமென்று அக்காலத்தைய மூத்தோர் பேசிக் கொண்டனர்.

பூஜாபிடிய பிராதேசிய சபையில் அங்கம் வகிக்கும் உவைஸ் ரஸானின் பாட்டன் பாட்டிகளின் திருமணப் போக்குவரத்தும் "இருநூறேக்கர்" நடைபாதை ஊடாகவே நடந்துள்ளதாக செவிவழிச் செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.  ரஸானின் பாட்டன்  'பரகஹதெனி'யைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!

'செட்டியார்' என்போர், இலங்கையின் இறுதி அரசன் ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் காலத்தில் இந்தியாவிலிருந்து வந்து,  வியாபாரிகளாகவும், வங்கியாளர் களாகவும்  தொழில் புரிந்துள்ளதோடு, இவர்கள் அரசமாளிகையுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும், அரசருக்கு நிதியுதவி செய்தவர்களாகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். சிங்களமொழிப் பாடல்களுள் ஒன்றான  "அத்துறு மித்துறு ராஜக் கப்புறு..."  என்ற பாடல் வரிகளில் கூட 'செட்டியார்' பற்றி விவரிக்கப்படுகின்றது!

இலங்கையின் முன்னாள்  ஜனாதிபதிகளுள் ஒருவரான 
ஜே. ஆர். ஜயவர்தன, செட்டியார் குலத்தவர்களோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர்  என்பதுவும், கொழும்பிலுள்ள தங்கநகை வியாபாரத்தில் பிரசித்திபெற்ற வீதியொன்று இன்றுவரையும்  'செட்டியார் தெரு' என்றே அழைக்கப்பட்டு வருவதுவும் குறிப்பிடத்தக்கது!

பள்ளியக்கொட்டுவ
கல்ஹின்னையின், இப்பிரதேசத்து நிலப்பகுதியிலேயே பள்ளிவாயில் கட்டப்பட்டதால், இது  ஓலைக்கொட்டில் பள்ளிவாயில் தொடங்கப்பட்ட காலமுதலே  'பள்ளியக்கொட்டுவ' என்று அழைக்கப்படலானது.
 
"எங்கள் ஊர் கல்ஹின்னை"  வரலாற்று நூல் தரும்  தகவல்படி,  அக்காலத்தில் கிராமத்தில் வாழ்ந்துவந்த  தனவந்தர்களுள் ஒரேயொருவர் மட்டும் இரண்டு ரூபாய்களும், எழுவர் தலா ஒரு ரூபாயும், இருவர் ஐம்பது சதங்களும், நால்வர் தலா இருபத்தைந்து சதங்களுமாக சந்தாப்பணம்  செலுத்தி வந்துள்ளனர்.

குறிப்பிட்ட வரலாற்று நூலின் தகவற்படி, பெரும் நிலச்சுவந்தாரான முஹம்மத் அலிபாவா ஹபீப் முஹம்மத் லெப்பை என்பவரிடமிருந்து இருபத்தைந்து சதங்கள் மட்டுமே சந்தாப்பணமாக அறவிட்டமைக்குக் காரணமாக,  அன்னாரின் நிலப்பகுதியில் பள்ளிவாயில் கட்டப்பட்டமை கொள்ளப்படுகின்றது!

இன்னொரு  வாய்மொழித் தகவலின்படி முஹம்மத் அலிபாவா அவர்கள், தன்னிடம் 'கணக்குப் பிள்ளை'யாயிருந்தவருக்கு அன்பளிப்பாக வழங்கிய நிலத்தின் ஒரு பகுதியை அவர் தனது உறவினர் ஒருவருக்கும், இன்னொரு பகுதியை பள்ளிவாசல் கட்டுவதற்காகவும் வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

முஹம்மத் அலிபாவாவின் கணக்குப் பிள்ளையாக இருந்தவர், வைத்தியக் கலாநிதி M.C.M. ஸுபைர் அவர்களின் முப்பாட்டன் என்பது குறிப்பிடத்தக்கது!

“வைத்தியர்லாகெதர” 
ஹபீபு முஹம்மது லெப்பை அவர்களின் சந்ததியினர்களின் பெயர்களுக்கு முன்னால் “வைத்தியர்லாகெதர” என்ற அடைமொழி அண்மைக்காலம் வரை பாவனையிலிருந்துள்ளது!

1966ம் ஆண்டுவரை எழுதப்பட்டுள்ள நிலவுரிமைப் பத்திரங்கள், உறுதிகள், அறிமுக அட்டைகள், பயணச்சீட்டுக்கள் போன்றவற்றில் அநேகர்களது பெயர்களுக்கு முன்னால் இவ்வடைமொழி பிரயோகிக்கப்பட்டு  வந்துள்ளது. 

மன்னராட்சிக் காலத்திலிருந்து இலங்கையில் எப்பாகத்திலேனும் அரசர்களுக்கு வைத்தியம் பார்க்கும் பரம்பரையில் வந்தவர்கள் “வைத்தியர்லா கெதர” என்ற கௌரவப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வந்துள்ளனர். இவர்கள் அரசனின் மதிப்புக்கும், மரியாதைக்கு முரியோராகக் கணிக்கப்பட்டனர்.

பிரசித்தி பெற்ற நான்கு குடும்பங்கள் பற்றிக் குறிப்பிடும் கல்ஹின்னை பற்றிய வரலாற்று நூல், வரலாற்றுக்கு ஏற்புடையதல்லாத “வாத்தியார் குடும்பம்” என்ற ஒன்றைப்புகுத்தி, “வைத்தியர்லா கெதர” குடும்பம் அல்லது பரம்பரை பற்றிய தகவல் திரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது!

நிலவுறுதிப்பத்திரம்

1924ம் ஆண்டு  நவம்பர் மாதம் 19ம் திகதி, வைத்தியர்லாகெதர ஹபீபு முஹம்மது லெப்பை அவர்களால்  தனது மகளான ஸல்ஹா பீபிக்கு நிலவுறுதிப்பத்திரமொன்று எழுதப்பட்டுள்ளது.
 
(ஸஹர்வான் பீபியின் நிலவுறுதி
Pr.Deed No.360 dated 19.11.1924)

அந்நிலவுறுதிப்பத்திரத்தினை அடிப்படையாகக் கொண்டே, ஸல்ஹா பீபி தனக்குச் சொந்தமான நிலங்களை 1966ம் ஆண்டில், தனது பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு இறையடி சேர்ந்துள்ளார்.

இன்னா  லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்! அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!

வைத்தியர்லாகெதர ஹபீபு முஹம்மது (மூஸா) - ஸல்ஹா பீபி தம்பதியினரின்  இறுதி வாரிசாக வாழ்ந்து கொண்டிருந்த அவர்களது புதல்விகளுள் ஒருவரான “ஸஹர்வான் பீபி”, கடந்த 26. 09. 2018  ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் தனது 93வது வயதில் இறையடி சேர்ந்தார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்இலைஹி ராஜிஊன்.  அல்லாஹ் அன்னாரையும் பொருந்திக் கொண்டு, 'பிர்தௌஸ்' என்கின்ற சுவர்க்கத்தை அன்னாருக்களிப்பானாக!

ஸஹர்வான் பீபியின்
வழித்தோன்றல்!
 
(வைத்தியர்லாகெதர ஹபீபு முஹம்மது - ஸல்ஹா பீபி தம்பதியினரின் மூன்று புதல்விகள்)

கல்ஹின்னையில் பாடசாலைக் கல்வி “கமாலிய்யா பாடசாலை” என்ற பெயரில் 1934ல் தொடங்கியுள்ளது. 


1925ம் ஆண்டு பிறந்த ஸஹர்வான் பீபி அவர்களுக்கு பாடசாலை செல்லும் பாக்கியம் கிட்டவில்லை. இக்கால கட்டத்தில் 'இலங்கையில் பெண் கல்விக்கான விழிப்புணர்ச்சி' ஏற்படாமையும் கிராமத்தில் பாடசாலை உருவாக்கப் படாமையுமே இதற்கான காரணங்களாகக் கொள்ளப்பட இடமுண்டு!

ஆறு பிள்ளைகளுக்குத் தாயாரான இவர், தனது மூன்று பிள்ளைகளை அவர்களது சிறு பிராயத்திலேயே இழந்த நிலையில், தற்போது மூன்று பிள்ளைகளே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மூத்த மகன் 1962ல் கல்ஹின்னை அல்மனா ரில் சேர்க்கப்பட்டு, அங்கு   க. பொ. த. உயர்தரம் வரை கற்றுத் தேர்ச்சி பெற்றார். 

கல்ஹின்னை அல்-மனாரில் உயர்தர வர்த்தகப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டவேளை, இப்பிரிவில் இணைந்து கொண்ட ஆரம்பகால மாணவர்களுள் இவரும் ஒருவராவார்.

பின்னர் அக்காலை இலங்கை மத்திய வங்கியில் ஏழாம் மாடியில் இயங்கிக் கொண்டிருந்த திட்ட அமுலாக்கல் அமைச்சில்  சிலகாலம் பணிபுரிந்து, தனது  பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு, புகழ்பெற்ற பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின், இஸ்லாமிய வெளியீட்டுப் பணியகத்தில் பணியைத் தொடர்ந்தார்! 

தற்போது தொழில்ரீதியாக அச்சகத்துறை, மருந்தகத்துறைகளில் ஈடுபட்டு வருக்கின்றார். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான இவரின் மூத்த இரு ஆண் பிள்ளைகளும் சிறு பிராயத்திலேயே இறையடி சேர்ந்தனர்!

மூத்த மகன் 'ரஷாத்'  குவைத் 'ஸுலைபிகாத்' மையவாடியிலும், இரண்டாவது மகன் 'மிஷால்' கல்ஹின்னைப் பெரிய பள்ளிவாயில் மையவாடியிலும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

தற்போது வாழ்ந்துவரும், மகள் கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் ஐந்தாம்தரப் புலமைப்பரீட்சை தேர்ச்சியடைந்த பின்னர், கண்டி பெண்கள் உயர்தரக் கல்லூரியில்  க. பொ. த. உயர்தரம் வரை கற்றார். பின்னர், கண்டி Redding சர்வதேச பாடசாலையில் ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்தபோதே, பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தொழில்சார் ஆங்கிலமொழிக் கற்கைநெறியில் தேர்வடைந்ததோடு, கண்டி First Friends வளாகத்தில்  (Dip. in Preschool Edu.) இணைந்து கற்று, 

பேராசிரியர் அசோகா ஜயசேன அவர்களிடமிருந்து 12. 09. 2020 அன்று வைபவரீதியாக சான்றிதழ்  பெற்றுக்கொண்டார்  இவர்,   18. 09. 2021ல் திருமண பந்தத்தில் இணைந்து வைத்தியர் வஸீர் அலி அவர்களை மணந்துகொண்டார்.

தனதும், தனது தந்தையினதும் பிறப்பிடமான உக்குவளையில் வாழ்ந்து வரும்  ஸஹர்வான் பீபி அவர்களது  இரண்டாவது மகன் முகம்மது மௌஜூத், மாபேரிய பள்ளிவாசல் நிர்வாகஸ்தர்களில் ஒருவராக சேவைபுரிந்து வருவதுடன், புடைவைத்துணி மொத்த வியாபாரத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றார்.

இவர்  கரம்பிடித்தவர், உக்குவளை அஜ்மீர் மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய பின்னர், தற்போது குருவிலை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகின்றார்.

இவரது மூத்த மகன் ஸும்ரி  கட்டடவரைபட,  மதிப்பீட்டுத்துறையில் தேர்ச்சி பெற்றுள்ள கட்டடக்கலை வரைஞராவார். தற்போது ஜப்பானில் பணிபுரிந்துவரும் இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டதாரினி ஒருவரை மணந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

மழைக்கேனும் பாடசாலைப் பக்கம் ஒதுங்கியிராத காலஞ்சென்ற “ஸஹர்வான் பீபி” அவர்களது ஒரே மகளது மகன்மார்களான, அன்னாரின் பேரன்களில் இருவரும்  பல்கலைக்கழகம் சென்று கற்ற கணக்காளர்களாவர். 
 
பேத்திகளில் ஒருவர் பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறையில் பட்டம் பெற்று, கடந்த  26. 08. 2020ல்  பிரதம நீதியரசர் முன்னிலையில் சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்து, தற்போது கல்ஹின்னையிலேயே பணிபுரிந்து வருகின்றார். 

தனது பேரன்மார்களில் மூத்தவர் கல்ஹின்னையின் முதுபெரும் மார்க்க அறிஞரான இஸ்மாயில் ஆலிம் அவர்களது பேத்திகளுள் ஒருவரான கொழும்பு பல்கலைக் கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரினியையும்
இளையபேரன் - ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர் ஜனாப் முஹம்மது இல்யாஸ் அவர்களது இரண்டாவது மகளான பேராதனைப் பல்கலைக்கழக கலைத்துறைப்பட்டம் பெற்றவரையும் மணமுடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலஞ்சென்ற ஸஹர்வான் பீபி அவர்களது கணவர் மர்ஹும் முஹம்மது காஸீம் இப்றாஹீம் அவர்கள்  உக்குவளை - மாபேரியைப் பிறப்பிடமாக் கொண்டவராவார். அக்குரணை - குருகொடையைப் பூர்வீகமாகக் கொண்ட அன்னாரின் உறவுக்காரர்கள் தற்போதும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

காலஞ்சென்ற முன்னாள் 
வெளிவுறவுத்துறை அமைச்சர் கலாநிதி 
ஏ. ஸீ. எஸ். ஹமீத் அவர்கள்   முஹம்மது காஸீம் இப்றாஹீம் அவர்களது  தூரத்து உறவினராவார். மர்ஹும் இப்றாஹீம் அவர்களது  தந்தையின் மரணச்சடங்கின் போது  அன்னார்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது! 

மர்ஹும் M. C. இப்றாஹீம் அவர்கள், 1953 முதல் நீண்ட காலமாக மாத்தளையில் இயங்கிக் கொண்டிருந்த “மொரவக” மென்பானங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் விநியோகித்தர்களுள்  ஒருவராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். 

உக்குவளை- மாபேரியில் வாழ்ந்துகொண்டிருந்த அன்னாரது குடும்பம்,  மூத்த மகனைப் பாடசாலையில் சேர்க்க வேண்டுமென்ற நோக்கில் 1962ல் தனது குடும்பம் சகிதம் கல்ஹின்னைக்கு வந்துள்ளது.

அக்காலை “முஸ்லிம் மகா வித்தியாலயம்” என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த தற்போதைய அல்மனாரில் மகன் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனது மகன் கல்விப்பொதுத்தராதர சாதாரணப் பரீட்சை எடுக்கும் வரை, அன்னார்  உறவுக்காரரும், அனுராதபுரத்தில் பெரும் வர்த்தகருமாகவிருந்த காலஞ்சென்ற ஸெய்யத் முஹம்மத் நிஸாம்தீன் அவர்களது நிறுவனத்தில் தொழில் புரிந்தார்.

அதன் பின்னர், தனது மகன் திட்ட அமுலாக்கல் அமைச்சில் தொழில் பெற்றதும்,  தான் தொழில் செய்வதிலிருந்தும் நீங்கி குடும்பத்திற்குத் துணையாக இருந்துவிட்டார்!

“சாவன்னா முதலாளி” 
குறிப்பிட்ட கல்ஹின்னை பற்றிய வரலாற்றுக் குறிப்பில் “சாவன்னா முதலாளி” பற்றிக் குறிப்பிடப்பட்டு, வரலாறு  நழுவிச் செல்லப்பட்டுள்ளது!

“சாவன்னா முதலாளி” என்றழைக்கப்பட்ட
சாஹுல் ஹமீத் அவர்கள், நாம் முன்பு குறிப்பிட்ட 'ஸல்ஹா பீபி' அவர்களது சகோதரர்களுள்  ஒருவராவார். அதாவது அண்மையில் காலஞ்சென்ற 'ஸஹர்வான் பீபி' அவர்களின் தாய்மாமனாராவார்.

'சாவன்னா முதலாளி' என்பவர் கல்ஹின்னையில் மாத்திரமன்றி பிற இடங்களிலும் - குறிப்பாக மாத்தளைப் பகுதியில் அநேக பெருந்தோட்டங்களுக்குச் சொந்தக்காராக இருந்து வந்துள்ளார். மாத்தளையில் அக்காலை ஆறு கார்களுக்குச் சொந்தக்காரராக இருந்துள்ள இவரது நான்கு கார்கள் சிவப்புநிற இலக்கத்தகட்டில் மாத்தளை நகரில் வாடகைக்கார்களாகச் செயல்பட்டுவந்துள்ளன.

தவிர, கல்ஹின்னைக்குள் முதலாவது வாகனம் கொண்டு வந்த பெருமையும் இவரையே சாரும். A40 ரகத்திலான CN1219 இலக்கத் தகட்டைக் கொண்ட சாம்பல் நிறத்தைக் கொண்ட காரே கல்ஹின்னைக்குள் நுழைந்த முதலாவது வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது!

கல்ஹின்னைக்குள் முதலாவது நுழைந்த இக்காரின் சாரதி  “பேலீஸ்” என்ற சாவன்னா முதலாளியிடம் ஓட்டுனராகப் பணிபுரிந்தவராவார்!

'சாவன்னா முதலாளி',  தனது மனைவியின் தம்பியான (மச்சான்) வைத்தியர் ஜுனைதீன் அவர்களை மணமுடித்து வைப்பதற்காக வைபவ ரீதியாகத் திருமணப் பேச்சு நடந்து கொண்டிருந்த வேளை, “மணப்பெண் உண்டு, காரும் உண்டு. ஆனால் மணப்பெண்ணின் வீட்டிற்கு காரில் செல்ல முடியாதுள்ளதே!” என்றவாறாக “கடே அப்பச்சி” என்று கல்ஹின்னை மக்களால் அழைக்கப்பட்டுவந்த சாவன்னா முதலாளியின் உற்ற நண்பரால் நையாண்டி செய்யப்பட்டுள்ளார்.

அவ்வேளையில் - அதனை ஒரு சவாலாக ஏற்ற “மூஸா” என்றழைக்கப்பட்ட சாவன்னா முதலாளியின் இரத்தவுறவு மச்சானான 'ஹபீபு முஹம்மத்' அவர்கள் - சாவன்னா முதலாளியின் தோட்டங்களில் (மாத்தளை ரொஸ் எஸ்டேட் - கூம்பியான் கொட அன்னாசிக்கந்த தோட்டம்) வேலைசெய்து கொண்டிருந்த 70 தொழிலாளர்களை அழைத்து வந்து, ஊர் மக்களோடு ஒன்றிணைந்து, கல்ஹின்னை சந்தியிலிருந்து அன்னாரது வீடுவரைக்கும் வாகனம் செல்லக் கூடியதாக ஒரே வாரத்தில் பாதை வெட்டி முடிக்கப்பட்டது மல்லாமல்,  மணமக்கள் பள்ளிவாசல் வரை சென்று 'காணிக்கை'யிட்டு வரவேண்டு மென்ற நோக்கை இலக்காகக் கொண்டு, கல்ஹின்னை ஜும்ஆப்பள்ளிவாசல் வரை பாதையை நீடித்ததாகவும் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வைத்தியர்லா கெதர ஸெய்யது முஹம்மது அப்துர்ரஹீம் அவர்கள் உட்பட மேலும் பலரின் செவிவழிச் செய்திகள் மூலமும் அறிய முடிகின்றது. 
அக்காலத்தில் பள்ளிவாசல்களுக்குக் 'காணிக்கை' போடுவதென்பது  ஒரு வழக்காறாக இருந்து வந்துள்ளமை அனைவரும் அறிந்ததே!

“முஹம்மது அலிபாவா”  என்பவர் ஸல்ஹா பீபி அவர்களினதும், சாவன்னா முதலாளியினதும் பாட்டனார் என்பதும் குறிப்பிடத்தக்கது!
 
வர்த்தச்செல்வர் அப்துர்ரஹீம் அவர்களின் தந்தையும் 'சாவன்னா முதலாளி' அவர்களும் உற்ற சகோதரர்களாவார்.

தற்போது உக்குவளையில் வாழ்ந்து கொண்டிருக்கும்
காலஞ்சென்ற எஸ். எச். தாஜிதீன் அவர்களது மகனான 'அமானுள்ளா' என்பவர் சாவன்னா முதலாளியின் பேரரர்களில் ஒருவர்  என்பது குறிப்பிடத்தக்கது!

“கலபல ஹந்திய”
கண்டியிலிருந்து  கல்ஹின்னை நோக்கிவரும் பாதையில் “கொடஹேனை”யை அடுத்து, “கலபல ஹந்திய” என்ற ஒர் இடத்தை கடந்தே வரவேண்டும்.

அக்காலத்தில் அந்த சந்திலிருந்து பட்டகொள்ளாதெனியாவுக்குச் செல்வதற்கான நடைபாதை ஒன்று இருந்துள்ளது. 

அப்பாதை மிக அண்மைக்காலத்தில் செப்பனிடப்பட்டு வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது

இவ்விடத்திலுள்ள நிலங்களில் அதிகமானவை பட்டகொள்ளாதெனியைச் சேர்ந்த “ஒமர் ஸாஹிப் ஹாஜியார்” அவர்களுக்குச் சொந்தமானதாக இருந்துள்ளன. கல்ஹின்னையின் முதலாவது அப்போத்திக்கர் டொக்டர் ஜுனைதீன், பிரபல வழக்கறிஞர் ஸலாஹுதீன் ஹாஜியார், கல்ஹின்னையின் முதலாவது கிராம சேவகர் முஹம்மது ஹனீபா, “கடே சாச்சா” என்று கிராம மக்கள் அனைவராலும் அன்போடழைக்கப்பட்டுவந்த முஹம்மது காஸீம், “அபூ” என்றழைக்கப்பட்ட "அபுல் ஹஸன்" மற்றும் தற்போது  கொழும்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஹலீம்தீன் ஆகியோர் அன்னாரின் புதல்வர்களாவர்.

பிரசித்திபெற்ற “ஹார்கோட்ஸ்” நிறுவனத்தின் உரிமையாளர் அஹ்மத் ரியாஸ் அன்னாரின் பேரப்பிள்ளைகளுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்காலத்தில், தனது முதலாவது மனைவி இறந்த பின்னர், ஒமர் ஸாஹிப் அவர்கள்,  “மூஸா” என்றழைக்கப்பட்ட வைத்தியர்லாகெதர ஹபீபு முஹம்மது - ஸல்ஹாபீபி தம்பதியினரது மகள்களில் ஒருவரான ஹாஜரா உம்மாவை மறுமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

“கலபல ஹந்திய” என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கான வரலாற்றுக் குறிப்பொன்றுள்ளது.

கல்ஹின்னையிலிருந்து கண்டிவரை 'ஸில்வர்லைன்'பஸ் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது.

அக்காலத்திலும் ஊர் மக்களுக்குள்ளேயே பகிடியான சம்பவங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. “மூஸா” என்றழைப்பட்ட ஹபீபு முஹம்மது அவர்கள், கல்ஹின்னைச் சந்தியில் நின்று கண்டி நோக்கிச் செல்வதற்காக பஸ்ஸை 
நிறுத்தியுள்ளார். அவரை வெறுப்பேற்றும் நோக்கில், சாரதி பஸ்ஸை நிறுத்தாமல் சென்றுள்ளார்.  கோபத்தில் துவண்டுவிட்ட மூஸா அவர்கள் உடனேயே தனது மச்சான் சாவன்னா முதலாளியின் காரில் விரைந்து சென்று, குறிப்பிட்ட இடத்தில் வைத்து பஸ்ஸை வழிமறித்தபோது ஏற்பட்ட “கலபல” நிகழ்வைக் கொண்டு,  அந்த இடம் இன்றும் கூட “கலபல ஹந்திய” என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. 
 
நூற்றாண்டு காலமாக இலங்கைப் பிரதேசங்களில்  முஸ்லிம்களை அறிமுகம் செய்வதற்காக பிரயோகிக்கப்பட்ட சொற்களில் “லெப்பை”யும் ஒன்றாகும். கம்பளை - கண்டி இராசதானிகள்  முதல் முஸ்லிம்களிடையே பிரபல்யம் பெற்றிருந்த பெயர்களில் ஒன்றாக முஸ்லிம்களின் இயற்பெயரோடிணைந்து “லெப்பை” புழக்கத்தற்கு வந்திருக்கின்றது. 

சன்மார்க்கக் கல்வி  கற்றுக் கொடுக்கும்  ஆசிரியர்கள், உஸ்தாதுகளை “லெப்பைகள்” என அழைக்கும் வழக்கம்  சமீப காலம்வரை நிகழ்ந்து வந்துள்ளது.  அவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட்டு வந்துள்ளனர். இந்நாட்களில் 'லெப்பை' என்ற சொற்பிரயோகம்  அருகி, ஹழரத், மௌலவி - ஆலிம் போன்ற சொற்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.
 
(மஜீது லெப்பை)
ஆத்மீக மேம்பாட்டிலும் சன்மார்க்கக் கல்விப்போதனையிலும் கல்ஹின்னையில் மாத்திரமன்றி, இலங்கை முழுவதிலும் குர்ஆன் மத்ரஸாக்களே முதன்மை பெற்று விளங்கி வந்துள்ளன.

திண்ணைப்பள்ளிக்கூட வடிவில் கல்ஹின்னையில் குர்ஆன் போதனைக்கூடம் நடாத்தியவர்களுள் அனைவராலும் “மஜீது லெப்பை”  என அன்போடழைக்கப்பட்ட  காலஞ்சென்ற வைத்தியர்லாகெதர ஹபீபு முஹம்மது அப்துல் மஜீது லெப்பை அவர்களையே சாரும். கல்ஹின்னையில் கனிசமானோர் அன்னாரிடம் குர்ஆன் கற்றோராவர். தவிர, அக்காலத்தில்  'மாந்திராவை' போன்ற கிராமங்களிலிருந்து  வந்து அன்னாரது வீட்டில் தங்கியிருந்து குர்ஆன் கற்றோருமுளர். இவர் மூஸா என்ற பெயர்கொண்டு  கிராம மக்களால் அன்போடழைக்கப்பட்டுவந்த ஹபீபு முஹம்மது அவர்களினதும்  ஸல்ஹா பீபி அவர்களினதும் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இளைய சகோதரர் அல்ஹாஜ் ஹபீபு முஹம்மது சலாஹுதீன் அவர்களாவார். 
 
2018ல் புகைப்படப்பிடிப்புத்துறையில் தேர்ச்சிபெற்று, சிறந்த “புகைப்படப் பிடிப்பாளர்” என்று Department of Wildlife & Forest விருது பெற்று, கல்ஹின்னைக்கு பெருமை தேடித்தந்த 'ஸாஜித் ஸவாஹிர்' இவரது பேரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள நிழற் படத்தில் மத்தியில் நிற்பவர் ஸாஜித்தின் தந்தையான எஸ். எம். ஸவாஹிர் ஆவார்.
 
(“பெரியகல்”லில் எடுக்கப்பட்ட நிழற்படம்)

இவரது மூத்த மகனது மூத்த மகளின் மூத்த புதல்வி கல்ஹின்னையின் பிரபல எழுத்தாளரும், இணையத்தளப் பத்திரிகையாளருமான முஹம்மது நயீம் அவர்களது மூத்த மகனோடு, 2019ல் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

“ஸ்போர்ட்ஸ் கிரிக்கட் கிளப்” 
“மூஸாமுனை” என்ற பெயர் 1967ல் பள்ளியகொட்டுவ பகுதியில் “ஸ்போர்ட்ஸ் கிரிக்கட் கிளப்” என்ற பெயரில் அக்காலத்து வாலிபர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இயங்கி வந்த  - கிரிக்கட் விளையாட்டை மையமாகக் கொண்ட குழு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து புழக்கத்திற்கு வந்ததாகும். 

இக்கிரிக்கட் குழுவில் இப்பகுதியைச் சேர்ந்த நியாஸ், ஸவாஹிர், ஸத்தார், ஹபீல், பஸீல், ராஸீக், ரியாய்தீன், 

இல்யாஸ், தற்போது கனடாவில் வசித்துவரும் ஸகரிய்யா போன்ற இளைஞர்களும், பரீன், நஸீர் போன்ற அக்காலை  சிறுவர்களாயிருந்தவர்களும்,காலஞ்சென்ற ஜெபுர்தீன் பாரூக், ஹாஷிம் போன்ற பலரும் அங்கம் வகித்தனர்.

கல்ஹின்னையின் எல்லைக் கிராமங்களுள்  ஒன்றான “ராமாகொட்டுவை” என்ற இடத்தில்  அக்காலை மரம் கிழிக்கும் தொழிற்கூட மொன்றிருந்தது. அங்கிருந்து எடுத்துவரும் கழிவாக வீசப்படுகின்ற “பொரச்சிரா” எனப்படும் பலகைகளைக் கொண்டே, அவரவர்களுக்குத் தனித்தனியே கிரிக்கட் மட்டைகளைச் செய்து கொள்வர்.
கல்ஹின்னைப் பகுதியில் ஆங்காங்கே இயங்கி வந்த கிரிக்கட் விளையாட்டுக் குழுக்களுக்கிடையேயும், மாத்தளை, உக்குவளை, அக்குரணை  போன்ற இடங்களில்  இயங்கி வந்த கிரிக்கட் குழுக்களுக்கிடையேயும் போட்டிகள் நடைபெறுவதுண்டு.

கல்ஹின்னைப் பகுதியில் பல்வேறு நவீன பெயர்களில் கிரிக்கட் விளையாட்டை மையமாகக்கொண்டு பல குழுக்கள் தற்போதும் இயங்கிவருவதுடன், அக்குழுக்களிடையே அவ்வப்போது போட்டிகள் நடைபெற்று வருவதுமுண்டு. 
 
(கல்ஹின்னை அல்மனார் மைதானத்தில் கிரிக்கட் போட்டியொன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது...)

அண்மையில் கத்தாரில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியொன்றின்போது அதிக புள்ளிகள் பெற்றமைக்காக 'மூஸாமுனை'யைச் சேர்ந்த ரஷ்மி ஹபீல் வைபவரீதியாகப்  பாராட்டுதல் பெற்றுக்கொண்டதுடன், இவரது திறமை காரணமாக கத்தார்  கிரிக்கட் அணியிலும் (QCA) அங்கத்துவம் பெற்றுள்ளார்.
 
(ரஷ்மி ஹபீல் வைபவரீதியாகப்  பாராட்டுதல் பெற்றுக்கொள்ளல்)

இவர் 1967ல் “ஸ்போர்ட்ஸ் கிரிக்கட் கிளப்” என்ற பெயரில்  ஆரம்பிக்கப்பட்ட கிரிக்கட்  குழுவில் திறமையாக ஆடிய A.M. ஹபீலின் புதல்வர்களில் ஒருவரும், காலஞ்சென்ற “ஹபீபு முஹம்மது அப்துல் மஜீது லெப்பை”  அவர்களின் பேரப்பிள்ளைகளுள் ஒருவருமாவார். 


ஆரம்ப காலத்தில் மூஸாமுனையில் இயங்கிவந்த கிரிக்கட் குழு, தற்போது அப்துர்ரஹீம் அவர்களின் வீடு அமையப்பெற்றுள்ள தரைப்பகுதி நிலத்தையே தனது விளையாட்டு மைதானமாக  உபயோகப்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது!
  
வர்த்தகச் செல்வர் அப்துர்ரஹீம் அவர்கள் வைத்தியர்லாகெதர ஸெய்யது முஹம்மது என்பவரின் மூத்த மகனாவார். ஸெய்யது முஹம்மது அவர்கள் 'சாவன்னா முதலாளி'யின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபலங்களின் வருகை!
அவ்வப்போது இலங்கைக்கு வரும் பிரபலங்களில் சிலர் கல்ஹின்னைக்கும் விஜயம் செய்யத் தவறுவதில்லை.

(சுயிட்சி ஹிரோசேயின் மூஸாமுனை வருகையின்போது)

கல்ஹின்னை மக்களிடத்தில் ஊறிப்போன விருந்தோம்பல் பண்பே இதற்குக் காரணமாகக் கொள்ளப்படுகின்றது.  அந்த வகையில், குவைத் நாட்டைச் சோந்த ஓய்வுபெற்ற இராணுவத்தளபதி அப்துல்லாஹ் அல்-தார்மி 1983 ல் மூஸாமுனைக்கு வருகை தந்தார். 
 
(1983ல் அல்தார்மியின் மூஸாமுனை  வருகையின்போது,கூடிநின்ற மக்கள்)

(மர்ஹூம் அப்துல்லாஹ் அல்-தார்மியுடன்
மர்ஹூம்கலான  எம்.சீ. இப்ராஹிம்,
முஹம்மது உவைஸ்)
 
(மர்ஹூம் அப்துல்லாஹ் அல்-தார்மியுடன்
மர்ஹூம்களான  எம்.சீ. இப்ராஹிம், 
முஹம்மது உவைஸ் மற்றும் ஜனாப் எஸ்.ஏ.ரஹீம்)

1990 ல் குவைத்தை ஈராக் கைப்பற்றிய வேளை,  ஈராக்கிய இராணுவம் இவரைக் கைதியாகப் பிடித்தபோது, இவர்  கொல்லப்பட்டதாக அறிய முடிகின்றது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!
இவர் கல்ஹின்னை - மூஸாமுனைக்கு வருகை தந்த பொழுது மக்கள்  திரண்டு நின்று இவரை வரவேற்று உபசரித்தமையும்,  பிரபல ஜப்பானிய தொழிலதிபர் சுவிட்சி ஹிரோசே இரண்டு முறைகளில் மூஸாமுனைக்கு விஜயம் செய்துள்ளமையும் இங்கு ஈண்டு  குறிப்பிடத்தக்கது.      
(முற்றும்)

Family tree:
Muhammadu Alibawa.
His Son: Vaiththiyarlagedara Habeebu Muhammadu Lebbe.
His children:-
1. Vaiththiyarlagedara Shahul Hameed
    ( Savanna Mudalali;  Owner of Rockh's
    Estate in Matale and Annasi Kanda Estate in      Koombiyangoda; He only developped the road      from Galhinna junction to Galhinna Jumaa
    Masjid; First car drn in the road is
    A40 number plate: CN1219)

2. Vaiththiyarlagedara Seyyadu Lebbe
    (Abdur Raheem's father)

3. Vaiththiyarlagedara Salha Beebi
   Her husband, Habeebu Mohamed   ("Moosa")

4. Vaiththiyarlagedara Cassim Lebbe
     (103 Appachchi)

5. Vaiththiyarlagedara Balkees Umna
    (Kattappu Peththa)

4,5 Belongs Lands in Kattappu area.

Vaiththiyarlagedara Habeebu Mohamed Lebbe's father  "Mohammadu Ali Bava" natively from somewhere in India; According to "Engal ur Galhinna", his brother Abdul Jabbar came from Nagoor.
ஐ.ஏ.ஸத்தார்










Post a Comment

Previous Post Next Post