கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள விசாலமான கல்ஹின்னைக் கிராமம் சுமார் இரண்டரை நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்ததாகும்.
“வேட்டை” மின்னிதழின் முதல் வருகையானது கல்ஹின்னைக் கிராமத்தை மேலும் ஒருபடி உலகறிய வைத்துள்ளது!
1880ல் 80 பேர்கள் மாத்திரமே குடிகொண்டிருந்த இக்கிராமம், இன்று பல்லாயிரம் பேர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
1934 ல் “கமாலியா” என்ற பெயரில் உருவான தமிழ்மொழிப் பாடசாலை கல்ஹின்னையின் கல்வி வரலாற்றின் தொடக்கமாகக் கொள்ளப்பட வேண்டிய காலப்பகுதியாகும். பின்னாளில் இது முஸ்லிம் வித்தியாலயமாக மாறி, அதன் பின்னர் அல்மானார் மகா வித்தியாலயமாக உருவெடுத்து, தற்போது அல்மனார் தேசியக்கல்லுரி என்ற பெயர் வடிவில் வளர்ச்சிகண்டு, இன்றுவரை பல நூறு கல்விமான்களும், தொழில்சார் நிபுணர்களும் உருவாகக் காரணமாவிருந்துள்ளது.
இப்பாடசாலையில் தனது மகனின் ஆரம்பக்கல்வியை ஒரு வருடம் மட்டுமே தொடரவைத்த தந்தை ஜனாப் S. M. செய்னுதீன், அக்காலத்தில் கண்டிப்பிரதேசத்தில் போக்குவரத்துத் துறையில் தடம் பதித்திருந்த - பிரசித்திபெற்ற Silver line Bus Companyயின் பங்காளர்களுள் ஒருவராவார்.
அங்கு தனது கல்விப்பயணத்தை தொடர்ந்த இம்மாணவன் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல், இயற்பியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றபோதிலும், வைத்தியத்துறைக் கற்கைநெறிக்கான பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை! இதனால், தன் மகன் வைத்தியராக வேண்டுமென்ற மாணவனின் பெற்றோரது எதிர்பார்ப்பு வெறும் கனவாகவே முடிந்து போனது!
அந்த மாணவனே பிற்காலத்தில் இரசாயனவியல் துறையில் “கலாநிதிப் பட்டம்” பெற்று, தனது பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடித்தந்த மொஹமட் அமீர் செய்னுதீன் ஆவர்.
மொஹமட் அமீர் உயர்தரப் பரீட்சை சித்தியெய்திய பின்னர் இலங்கை வங்கியில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே தனது பெற்றோரின் எதிர்பார்ப்பு வெறும் கனவாக முடிந்துவிடக்கூடாது என்று நினைத்தார். இரசாயனப் பொறியியலில் தனக்கிருந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வைத்து, கலாநிதிப் பட்டத்தை இலக்காகக் கொண்டு தனது எண்ணங்களைச் சிதறவிடலானார்! அச்சிந்தனைச் சிதறலே அவரது உயர் கல்விக்கான வெளிநாட்டுப் பயணத்திற்கு வித்திட்டது!
1967, செப்தெம்பர் மாதம் ஐக்கிய இராஜியம் நோக்கிப் பயணித்த மொஹமட் அமீர், அக்காலை கல்ஹின்னைக் கிராமத்திலிருந்து உயர் கல்விக்காக ஐக்கிய இராஜியம் சென்ற விரல்விட்டெண்ணக் கூடியவர்களுள் ஒருவராயிருந்தார்!
இரசாயனம் மற்றும் கணித பாடங்களில் தனக்கிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடே, அவர் பெர்க்கென்ஹட் தொழில் நுட்பவியல் கல்லூரி (Birkenhead College of Technology)யில் சேர்ந்து தனது கற்கை நெறியைத் தொடர வைத்தது!
1971, ஜூலை மாதத்தில் அவர் இரசாயனப் பொறியியலில் திறமைச் சித்தியடைந்து இரசாயனப்பொறியியலாளர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம் மொஹமட் அமீர் அவர்கள் கல்ஹின்னையில் உருவான முதலாவது இரசாயனப்பொறியியலாளர் என்ற இடத்தை அடைந்தார்!
பெற்றோரின் வைத்தியத்துறைக் கனவு நிறைவேறாத ஆதங்கமும், கல்வித்துறையில் தனக்கிருந்த ஆர்வமும், மொஹமட் அமீர் அவர்களைத் தனது இலக்கு நோக்கி நகர வைத்தது. பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் (University of Birmingham) அவர் தனது உயர் கல்விப் பயணத்தைத் தொடர்ந்ததன் மூலம், 1972ல் உயிரியல் இரசாயனத்தில் (MSc. In Bio-Chemical Engineering) முதுமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்!
அதன் பின்னர் தனது இலக்கை அடையும் நோக்கில், மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் (University of Manchester Institute of Technology- UMIST) இணைந்து, ஈராண்டுகால கடுமையான ஆய்வில் ஈடுபட்டார். அவரது அந்தக் கடும்முயற்சியே அவரை 1974, திஸம்பர் மாதத்தில் பொறியியல்துறையில் (PhD -Doctor of Philosophy) “கலாநிதி”ப் பட்டம் பெறவைத்ததெனலாம்! இதன் மூலம் அவர் கல்ஹின்னையின் முதலாவது “கலாநிதி”யானார்!
தனது பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடித்தந்த கலாநிதி மொஹமட் அமீர் செய்னுதீன் அவர்களை, அந்நாட்களில் கல்ஹின்னைக் கிராமம் கண்டுகொள்ளாதிருந்த நிலையில், “வேட்டை” மூலமாக அவரது கல்விப்பயணத்தின் வெற்றி இலக்கை நினைவு கூர்வதில் களிப்படைகின்றேன்!
ஐக்கிய இராஜியத்தில் தனது கல்விப்பயணத்தை முடித்துக்கொண்ட கலாநிதி அவர்கள், ஐக்கிய இராஜியம், பஹாமாஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகளிலுள்ள பல்தேசிய மருந்து தயாரிப்புக் கம்பனிகள் பலவற்றில் ஆய்வு மற்றும் அபிவிருத்தித் துறைகளில் முகாமைத்துவ நிலையில் பணிபுரிந்தார். அவரது தூரதிருஷ்டியான கல்விப்பயணம், நீண்டகால துறைசார் அனுபவம், அர்ப்பணிப்புடனான தொழில்சார் பங்களிப்பு காரணமாக 2000ம் ஆண்டில் அவர் ஐக்கிய இராஜியத்தின் இரசாயனப் பொறியியல் நிறுவகத்தில் (FIChemE) கௌரவப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சில மாதங்களின் பின்னர் இவர் இலங்கைப் பொறியியலாளர் நிறுவனத்தில் கௌரவ உறுப்பினராக (FIE)த் தெரிவானார்.
தனது முப்பத்தினான்கு வருடகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பின்னர், 2001ல் தாய்நாடு திரும்பிய கலாநிதி மொஹமட் அமீர் அவர்கள், ஐக்கிய அமெரிக்காவின் பல்தேசிய நிறுவனமான Honeywell மருந்தகப்பிரிவின் நிபுணத்துவ ஆலோசகராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது!
2002, நவம்பர் மாதத்தில் கலாநிதியவர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினராக, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக அம்மையாரால் நியமனம் பெற்றார். 2006ம் ஆண்டுவரை அப்பணியைத் தொடர்ந்த இவர், குறிப்பிட்ட காலகட்டத்தில் தனது சக ஆணையாளராகவிருந்த திருவாளர். என். செல்வகுமாரன் அவர்களுடன் இணைந்து சிறுபான்மையினர்களது பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது கலாநிதி அமீர் அவர்கள் இந்தியா, நைஜீரியா, வட அயர்லாந்து, தாய்லாந்து, பீஜி போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தான் இங்கிலாந்தில் வாழ்ந்த காலத்தில் 1988ல் Lions Clubல் இணைந்துகொண்டதுடன், பஹாமாஸ் நாட்டில் வாழ்ந்த காலத்தில், “பஹாமாஸ் பிரீபோர்ட் அரிமா சங்க”த்தின் (Bahamas Freeport –Lions Club) தலைவராகவும் (1997-1998) பணிபுரிந்துள்ளார். அந்நாட்டில் நாடு தழுவிய ரீதியாக பதினெட்டு அரிமா சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவைகளுக்கு மத்தியில் இவர் தலைமைப்பதவி வகித்த காலப்பகுதியில், Bahamas Freeport –Lions Club சர்வதேச விருதினைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது!
தாய்நாடு திரும்பிய பின், Colombo (Host) Lions Clubல் செயற்பாட்டாளராக இணைந்துகொண்ட கலாநிதி மொஹமட் அமீர் அவர்கள், 2008/2009 காலப்பகுதியில் அதன் தலைவராகவும், 2013-2015 காலப்பகுதிகளில் அதன் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளதுடன், 2020 ஜூலை முதல் அதன் பொருளாளராகப் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது!
தாய்நாட்டில் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய கலாநிதி மொஹமட் அமீர் அவர்கள் சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முற்பட்டவேளை, தனது பிறந்த மண்ணுக்கு அவர் முன்னுரிமை கொடுத்து, பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில், தமது சங்கத்தின் மூலம் கல்ஹின்னையில் தான் மேற்கொண்ட இரண்டு பாரிய வைத்திய முகாம்களில் (2004,2009) சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயன்களைப் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்தில் வாழும் தனது நீண்டகால நண்பர் போல் டின்னிங் அவர்களது நிதிஈட்டத்தினூடாக 2014ல் களுத்துறை மாவட்டத்தில் பன்னல – ஆரச்சிகொடக் கிராமத்திலும் 2017ல் “சோபிதகம” கிராமத்திலும் குடிநீர்த்திட்டங்களை Colombo (Host) Lions Club இனூடாக மேற்கொண்டார்.
தனித்தனியாக சுமார் 2.6 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ள இத்திட்டங்களினால் 55 குடும்பங்கள் பயன்களைப் பெற்றுக்கொண்டன.
இன - மத பாரபட்சமின்றி சகல சமூகங்களுக்கும் உதவி வருகின்ற Lions Club இனூடாக இவ்வாறான மனிதாபிமான செயற்திட்டங்களை கலாநிதி மொஹமட் அமீர் அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார்!
1957ல் தொடங்கப்பட்ட இலங்கை பைத்துல்மால் நிறுவனம் கலாநிதி மொஹமட் அமீர் அவர்களைத் தமது முகாமைத்துவக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததை முழுமனதோடு ஏற்றுக் கொண்ட கலாநிதியவர்கள், 2008 ஒக்டோபர் முதல் அக்குழுவில் இணைந்து கொண்டார்.
1976ம் ஆண்டைய ஒன்பதாம் இலக்க சட்டத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டு, இலங்கைப் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இந்நிதியம், “ஸக்காத்” வரியை வசூலித்து, சமூகத்தில் வறிய நிலையில் உள்ளோருக்குப் பகிர்ந்தளித்து வருகின்றது. உதவி தேவைப்படும் இலங்கையின் சகல பகுதி முஸ்லிம் மக்களை இனங்கண்டு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு செயற்திட்டங்களையும் இந்நிதியம் முன்னெடுத்து வருகின்றது.
இந்நிதியத்தின் மூலம், சுயதொழில் முயற்சியில் ஈடுபடத் தயார் நிலையிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு தையல் இயந்திரங்களை இலவசமாக வழங்கும் செயற்திட்டமொன்றை கலாநிதி மொஹமட் அமீர் செய்னுதீன் அவர்கள் கடந்த பத்து வருடங்களாக செயற்படுத்தி வருகின்றார். ஒவ்வொரு ஆண்டும் நிதியத்திற்குக் கிடைக்கும் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை மீளாய்வு செய்தும், தேவை ஏற்படின் தொலைபேசியினூடாக தொடர்புகளை ஏற்படுத்தி உண்மை நிலையறிந்தும், பொருத்தமான 100-150 பேர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்குவது இச்செயற்திட்டத்தின் இலக்காகும். சமூகத்தின் வறுமை நிலைகண்டு மனம் வருந்தும் கலாநிதியவர்கள், வறுமைக் கோட்டிலுள்ள பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் இத்திட்டம் தனக்கு மகிழ்ச்சி நிரம்பியதாகவும், மனத்திருப்தியைத் தருவதாகவும் கூறுகின்றார்!
கலாநிதி மொஹமட் அமீர் செய்னுதீன் அவர்கள், கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் கண்டியைச் சேர்ந்த பாத்திமா ஜமீலா என்பவரை மணந்துகொண்டார். இவர், 1989 களில் கட்டிடப் பொறியியலாளராகச் செயல்பட்டு, கல்ஹின்னைப் பெரிய பள்ளிவாசல் புனரமைக்கப்புப் பணியைச் செவ்வனே முடித்து வைத்த மர்ஹூம் M. இஸ்மாயீல் அவர்களின் மகளாவார். மர்ஹூம் M. இஸ்மாயீல் அவர்கள் தனது சேவையை இலவசமாக வழங்கியமை இங்கு குறிப்பிட்டுக் கூறப்படவேண்டிய விடயமாகும். அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக்கொள்வானாக!
கலாநிதியவர்களின் மூத்த மகள் சட்டத்துறையில் (LLB, LLM – University of London) தேர்ச்சியடைந்தவராவார். இரண்டாவது மகள் பொருளாதாரத்துறையில் (BSc. - London School of Economics) பட்டம் பெற்றவர். இறுதி மகள் கட்டடக்கலை நிர்மாணத்துறையில் (BArch, MArch – University of Western England) பட்டம் பெற்றுள்ளார் என்பதை அவருடனான நேர்காணலின் போது அறிந்துகொள்ள முடிந்தது!
தற்போது கொழும்பில் வாழ்ந்து வரும் கலாநிதியவர்கள், தான் தாய்நாடு திரும்பிய பின்னர் அவ்வப்போது தனது பிறந்த மண்ணுக்கு விஜயம் செய்து வருவதாகவும், வருடந்தோரும் அங்கு வந்து தனது குடும்பத்தினரோடிணைந்து “மீலாதுன்னபி கந்தூரி” வைபவத்தில் கலந்து கொள்வது தனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருவதாகவும் குறிப்பிடுகின்றார்!
தனது இளமைக் காலத்தில்... நண்பர்களுடன் இணைந்து கல்ஹின்னைக் கிராமத்தில் கிரிக்கட் விளையாடியது மட்டுமல்லாது, அண்மித்த கிராமங்களோடு கிரிக்கட் போட்டிகளில் பங்கு கொண்ட நினைவுகளையும், கிராமத்திற்குப் பொலிவைத் தந்துகொண்டிருக்கும் கல்ஹின்னையின் இலட்சினையான “பெரிய கல்லி”ல் தான் பொழுது போக்கிய சம்பவங்களையும், “பேரக்காடு”களில் அலைந்து திரிந்து மரங்களில் ஏறி பழங்கள் பறித்துண்ட அனுபவங்களையும் அவர் என்னோடு பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை!
கலாநிதி மொஹமட் அமீர் அவர்கள் தனது வாழ்நாளில் அரைவாசிப்பகுதியை மேற்கு நாடுகளில் கழித்துவிட்டபோதிலும், தனது இளமைக் காலத்தை களிப்புடன் கழித்து வந்ததும் - தனது மூதாதையர் உழைத்து உருவாக்கியதுமான கல்ஹின்னைக் கிராமத்தினுடனான இறுக்கமான தனது பிணைப்பு என்றுமே மாறாது என்று பெருமையாகக் கூறிக்கொள்கின்றார்!
அவரது சமூகப்பணி மேலும் தொடர “வேட்டை”யினூடாக வாழ்த்துகின்றேன்!
SOURCE;வேட்டை